Published:Updated:

பாபாயணம் - 55

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

பாபாயணம் - 55

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

Published:Updated:
பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
பாபாயணம்

க்ர நாராயணா என்னும் போலீஸ் அதிகாரி பாபாவைச் சந்திக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த பக்தர்களில் ஒருவர், “பாபா, இவர் இப்போது கிறிஸ்தவர்” என்று சொல்லி அவரைத் தடுத்தார். அப்போது பாபா, “அதனால் என்ன, இவரும் நம் சகோதரர்தானே?” என்றார். இதுதான் சாயி.

சக்ர நாராயணா முதன்முதலில் பாபாவை பக்தியோடு தரிசிக்க வரவில்லை. ஆங்கில அரசாங்கத்தால் பாபாவைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டவரே சக்ர நாராயணா. பாபாவுக்கு இது தெரியும் என்றபோதும் அவரிடம் அன்புடன் இருந்தார் பாபா. அந்த அன்பிலும் பாசத்திலும் கட்டுப்பட்ட சக்ரநாராயணா, சாயியின் மறைவுக்குப் பிறகும் பக்தி செலுத்தி, சமஸ்தானத்தின் சொத்துகளைக் காப்பாற்றி, அவற்றைப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்தார்.

“பாபா தட்சிணையாகப் பெற்றதைவிடப் பிறருக்கு அளித்ததே அதிகம். பாபாவை எந்த ஒரு மதத்திற்குள்ளும் அடக்கிவிட முடியாது. அவர் மதங்களுக்கெல்லாம் மேலானவர். மனித சமுதாயம். மத வேற்றுமையை மறந்து அன்பும் ஒற்றுமையும் சகோதரத்துவத்துவமும் நிறைந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே நிகழ்ந்தது அவருடைய அவதாரம்” என்றார் சக்ரநாராயணர்.

பாபாயணம் - 55

பாபாவின் மீது பக்திகொண்டு அவரை நம்பியவர் ஜோசப் என்கிற கிறிஸ்தவர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் ஒருமுறை கூட பாபாவைச் சந்தித்ததேயில்லை. ஆனாலும் பாபா அடிக்கடி ஜோசப்பின் கனவில் தரிசனம் கொடுத்ததோடு பல இக்கட்டான தருணங்களில் காப்பாற்றியுமிருக்கிறார்.

“நாம் அனைவரும் பரம்பொருளின் குழந்தைகள். அவர் தன் கருணையை மழைபோல் பாகுபாடின்றி அனைவரின் மேலும் பொழிகிறார். மனிதர்களாகிய நமக்குள் ஏன் இந்தப் பாகுபாடுகள்?” என்பார் பாபா.

எனவேதான் அவரால் அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்ல முடிந்தது, மதநல்லிணக்கம் மனிதர்களிடையே வேண்டும் என்றுதான் பாபா ராமநவமி விழாவில் உரூஸ் என்ற திருவிழாவையும் சேர்த்து நடத்தினார். இந்தத் திருவிழாக்கள் ஷீர்டியில் தொடங்கிய நிகழ்வுகளும் சுவாரஸ்யமானவை.

கோபர்கானில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் கோபால்ராவ் குண்ட். அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. 1897-ம் ஆண்டு பாபாவின் ஆசிக்குப்பின் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், பாபாவுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அவர் பெயரில் ஒரு திருவிழாவைக் கொண்டாட விரும்பினார். ஆனால் இதற்கு பாபாவின் அனுமதி வேண்டுமே... அதிசயமாக பாபா சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் ராமநவமி அன்று அந்த விழாவைக் கொண்டாடும்படி கூறினார்.

இந்த விழாவினை நடத்த கிராமத் தலைவரின் அனுமதி மறுக்கப்பட்டாலும் கலெக்டரின் ஒப்புதல் கிடைத்தது. பாபாவுக்குப் பிடித்தமான மல்யுத்தம், அன்னதானம் போன்றவை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு, பக்கத்து கிராமத்து மக்களும் திரண்டு வந்தனர்.

உரூஸ் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியன. அப்போது ஷீர்டியில் கடும் தண்ணீர்ப்பஞ்சம். ஒரு கிணற்றில் மட்டும் தண்ணீர் இருந்தது. ஆனால் அது உப்பு நீர். பாபா தன் கையிலிருந்து சில ரோஜா மலர்களைக் கிணற்றுக்குள் தூவ அந்த நீர் நற் சுவையாக மாறியது. அந்தத் திருவிழாவின்போது துவாரகாமாயியின் இருபக்கங்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதே காலத்தில் ஷீர்டியைச் சேர்ந்த அமீர்சக்கர் தலால் என்ற முஸ்லிம் அன்பர் சந்தனக்கூடு திருவிழாவை நடத்த வேண்டும் என்று விரும்பினார். பாபாவிடம் சில முஸ்லிம் அன்பர்களுடன் சேர்ந்து அனுமதி கேட்க, அவர் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக்கொண்டதோடு, உரூஸ் திருவிழா நடத்தப்படும் தினத்தன்று சந்தனக்கூடு ஊர்வலம் நடத்துமாறு உத்தரவிட்டார். அதை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.

சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. ஒருவர் சாம்பிராணி போன்ற நறுமணப் புகையைப் போட்டபடி செல்ல, ஊர்வலம் மசூதியை அடைந்தது. அங்கு சந்தனப் பொடிகளையும் குழம்புகளையும் எடுத்து மசூதியின் சுவர்களில் பூசினார்கள். மீதமாகும் சந்தனப் பொடிகள் மற்றும் சந்தனக் குழம்பை நிம்பா என்னும் குழிகளில் ஊற்றினர். இந்த வைபவம் ஒவ்வோர் ஆண்டும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

பாபாயணம் - 55

ராமநவமி அன்றுதான் உரூஸ் திருவிழா நடைபெறுகிறது. அந்த நாளில் ஏன் ராமநவமி உற்சவத்தைக் கொண்டாடக்கூடாது என்று கிருஷ்ணராவ் ஜாகேஸ்வர் பீஷ்மா என்னும் பக்தருக்குத் தோன்றியது. கிருஷ்ணராவ், சாயி சகுனோபாசனா என்னும் பத்திரிகையின் ஆசிரியர். ராமநவமி நாளில் ராமர் பிறந்த கதையை உபன்யாசம் செய்து, ராம பக்திக் கீர்த்தனைகள் பாடி பிரசாதம் வழங்கலாம் என்பது அவர் ஆசை. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். ஆனால் பாபா இதை ஏற்பாரோ மறுப்பாரோ என்கிற சந்தேகம் இருந்தது.

சாயி கிருஷ்ணாவை அழைத்து, “என்ன நடக்கிறது?” என்று கேட்டார். அவர் தயங்கி “உரூஸ் திருவிழாவின்போது ராமநவமியையும் சேர்த்துக் கொண்டாடிவிடலாமே?” என்றபோது பாபா சிரித்தபடி “நல்லது, நல்லது. சிறப்பாக ஏற்பாடு செய்யுங்கள். நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் நடைபெற வேண்டும்” என்று கூறி ஆசீர்வதித்தார்.

அதன்பின் உரூஸ், ராமநவமி, சந்தனக் கூடு விழா மூன்றும் ஷீர்டியில் கோலாகலமாக நடைபெற்றன. லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாக்களில் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கென்று குதிரைகள், வெள்ளி ரதம், பல்லக்கு போன்றவை பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டன. பாபாவுக்கு அழகான பட்டாடைகள், சால்வைகள் அணிவித்து அழகு பார்க்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும் ஷீர்டியின் மகாராஜாவாக பாவித்து சாயியைக் கொண்டாடினர்.

(தரிசனம் தொடரும்)

வாசகர் அனுபவம்


நானும் என் கணவரும் தினமும் அண்ணாநகரில் உள்ள போகன் வில்லா பூங்காவிற்குச் செல்வோம். அன்று என் தங்கையும் அவள் மகளும் ஹைதராபாத்திலிருந்து வந்திருந்தனர். என் மகள்களையும் அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றோம். காரை நிறுத்தும்போது ஒரு பெண்மணி என் கணவரிடம், “உங்கள் வண்டியின்மேல் மரம் விழப் போகிறது, ஜாக்கிரதை” என எச்சரித்தார். என் கணவரும் நானும் நிமிர்ந்து பார்த்தால் அங்கு மரம் எதுவும் இல்லை. பின் சிறிது நேரம் பூங்காவில் அமர்ந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பித் தண்ணீர் எடுத்துக்கொண்டு கடற்கரை செல்லலாம் என்று திட்டமிட்டோம். அதன்படி வீடு திரும்பி வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு அனைவரும் உள்ளே சென்றோம். நாங்கள் வீட்டிற்குள் நுழைந்து 5 நிமிடங்கள் கழித்து ஒரு பெரும் சப்தம். தெருவில் இருந்த ஒரு பெரிய மரம் கார் மீது விழுந்திருந்தது. கண்ணாடியைத் தவிர வண்டிக்கு எந்த சேதமும் இல்லை. இதுவே, 5 நிமிடங்கள் முன்பு விழுந்திருந்தால் எங்கள் நிலைமை என்னவாகியிருக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது. ஒரு பெண் உருவில் வந்து எங்களை எச்சரித்தும் எங்களுக்குப் புரியாததால் நாங்கள் இறங்கிய பின் மரத்தை விழ வைத்தது அந்த சாயியே என்று உறுதியாக நம்புகிறோம். சாயியின் லீலைகளைச் சொல்ல ஒரு ஜன்மம் போதாது.

- பிரியா அரசு

பாபாவும் நானும்

ப்பா வழுவூர் ராமையா பிள்ளை, மயிலாப்பூரில் வசித்துவந்ததால் ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு நான் மட்டுமல்ல, என் குடும்பத்தில் உள்ள அனைவருமே சென்று வருவோம். என்னுடைய இரண்டு மகன்கள், மகள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே ஷீர்டி சாயிபாபாவின் பக்தர்கள். வியாழக்கிழமை என்றால் எங்கள் வீட்டில் இருக்கும் பாபா சிலைக்கு பூஜைகளும், ஆரத்தியும் வெகு விமர்சையாக நடக்கும். ஷீர்டி சாய்பாபா எங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு முக்கிய முடிவுகளையும் சரியான முறையில் எடுக்க வைத்து நல்ல முறையில் ஒரு குருவாக குடும்பத் தலைவராக எங்களை வழிநடத்திவருகிறார்.

பாபாயணம் - 55

ஒருமுறை என் மகள் காயத்ரியின் மகன் காய்ச்சலில் உடல்நலமில்லாமல் ஒரு வாரம் அவதிப்பட்டு வந்தான். அவனை எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தோம். ‘இந்த நிலையில் எங்களிடம் அழைத்து வந்திருக்கிறீர்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்’ என்று கூறிவிட்டார்கள். எங்கள் எல்லோருக்குமே என்ன செய்வதென்று புரியவில்லை. என் மருமகன் எதற்குமே மனம் கலங்க மாட்டார். அன்றைய தினம் அவர் மருத்துவமனையிலேயே அழத் தொடங்கினார் . திடீரென்று எங்களுக்கு ஒரு யோசனை வர ஒரு தனியார் மருத்துவமனையில் என் பேரனைச் சேர்த்துவிட்டு பாபா கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தோம். அவரது உடல்நிலை சரியாக எங்கள் உறவினர்கள் எல்லோரும் ஒரு குழுவாகச் சேர்ந்து ஷீர்டி சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்தோம். எங்களின் பிரார்த்தனை பலித்தது. அதிசயிக்கத்தக்க வகையில் அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நலம் பெற்றான். இன்று அவர் பிளஸ்-1 படித்துவருகிறார். இதை எங்களால் மறக்க முடியாது. பாபாவின் அன்பையும் கருணையையும் எண்ணி எண்ணி நாளும் வியந்துகொண்டிருக்கிறோம்.

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.