Published:Updated:

பாபாயணம் - 56

பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
பாபாயணம்

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

பாபாயணம் - 56

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில்.

Published:Updated:
பாபாயணம்
பிரீமியம் ஸ்டோரி
பாபாயணம்
மகான்கள் தங்கள் ஸ்தூல உடலை நீக்கும் காலத்தை அறிந்தே இருக்கிறார்கள். ஓர் இலக்கோடு வரும் அவர்கள் தாங்கள் வந்த வேலை முடிந்ததும் ஒரு நிமிடம்கூட இந்த பூமியில் இருக்க மாட்டார்கள். அதை சூசகமாகச் சிலரிடம் தெரிவிக்கவும் செய்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தான் விடைபெறப்போவதை இரண்டு வாரங்களுக்கு முன்பே புவா என்ற பக்தையிடம் தெரிவித்தார் பாபா.

“நீ அடிக்கடி இங்கு வர வேண்டாம். இனி உன் இருப் பிடத்திற்கே நான் வருவேன்” என்றார்.

மதிய ஆரத்தி முடிந்த ஒரு தினம் பாபா தன் பக்தர்களிடம் “நான் உங்களுக்கு ஒரு வாக்கு தருகிறேன். என் ஸ்தூல உடல் மறைந்தாலும், சூட்சும உருவத் துடன் உங்கள் அனைவரிடமும் நான் ஸ்திரமாக இருக்கிறேன்” என்றார்.

1918-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் அவர் தன் பக்தனான காசிம் என்பவரிடம் ஒரு மாலையும் 250 ரூபாய் பணமும் அளித்து “இதை ஔரங்காபாத்தில் பான்னே மியா என்ற பக்கீரிடம் கொடுத்துவிடு. ஒன்பதாவது மாதம் ஒன்பதாவது நாள் அல்லா ஏற்றி வைத்த தீபத்தை அவரே எடுத்துக்கொள்ளப்போகிறார் என்று சொல்” என்று தெரிவித்தார்.

அதேபோல் அந்த பக்கீரிடம் கொடுத்து, அவர் சொல்லியதைக் கூறியதும் பக்கீர் அதிர்ச்சியுடன் வானத்தை நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

இதேபோல் மற்றொரு சம்பவமும் நடக்கப் போவதைத் துல்லியமாக உணர்த்தியது. தன் குரு வேங்குசா அளித்த செங்கல்லை பாபா தன்னுடன் வைத்திருந்தார். அதில்தான் தலை வைத்துத் தூங்குவார்.

பாபாயணம் - 56
ஓவியம்: பாலகிருஷ்ணன்

ஒருநாள் மாதவ் பாஸ்லே என்ற சிறுவன் மசூதியைச் சுத்தம் செய்யும்போது அந்தச் செங்கல்லை எடுத்து உடைத்துவிட்டான். சப்தம் கேட்டு ஓடி வந்த பாபா ‘குருநாதா’ என்று கதறினார். உடைந்த துண்டுகளை எடுத்து நெற்றியில் வைத்தபடி கதறியழுதார். ஓடி வந்த பக்தர்களைக் கண்டதும் சகஜ நிலைக்கு வந்த பாபா கண்ணீருடன்,

“இன்று செங்கல் மட்டும் உடையவில்லை. என் விதியே உடைந்துவிட்டது. இனி நான் இந்த உலகில் நீண்ட காலம் வாழ மாட்டேன். விரைவில் என் மூச்சை நிறுத்திக்கொள்வேன்” என்றார்.

அவர் கூறியதுபோலவே செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அவருக்கு லேசான காய்ச்சல் அடித்து குணமாகி விட்டது. ஆனால் சோர்ந்து, வாட்டத்துடன் காணப்பட்டார் பாபா. லெண்டித் தோட்டத்தில் உலவுவதையும் நிறுத்திவிட்டார். வாகே என்பவர் தொடர்ந்து மூன்று நாள்கள் இரவிலும் பகலிலும் ராம விஜயத்தைப் படித்தார். பிறகு பாபா அதை நிறுத்தச் சொல்லிவிட்டார்.

பக்தர்கள் சூழ பாபா அவர்களுக்கு நடுவே அவர் மௌனமாக இருந்தார். விஜயதசமி அன்று காலை, மாலை ஆரத்தி முடிந்த பிறகு பாபா, லட்சுமி பாயை அழைத்து ஒன்பது ரூபாய் அளித்தார். அதை மிகப் பெரிய பரிசாக லட்சுமிபாய் கருதி மகிழ்ந்தார். அந்த நாணயங்களைத் தன் பொக்கிஷமாகப் பாதுகாத்தார்.

பின்னர் பாகோஜியை அழைத்த அவர் மெதுவாக“கட்டிக்கொண்டிருக்கும் ஆலயத்துக்கு என்னை அழைத்துச்செல். அங்கு நான் சுகமாக இருப்பேன். எல்லோரையும் சுகமாக வைத்துக் கொள்வேன்” என்று சொல்லிவிட்டு அவரின் தோளில் சாய்ந்துவிட்டார்.

“தேவா’’ என்று அலறினார் பாகோஜி. நானா ஓடி வந்தார். பக்தர்கள் கதறினர். ‘அழாதே’ என்று ஆறுதல் கூற அங்கு பாபா இல்லை. உயிரும் உணர்வுமாக உலாவிய பாபா மகா சமாதி அடைந்துவிட்டார்.

அவரையே நம்பி வாழ்ந்த ஷீர்டி மக்களை, தன் பக்தர்களை அநாதைகளாக்கிவிட்டுப் பரம்பொருளுடன் கலந்துவிட்டார் பாபா. வாய்விட்டுக் கதறியழுத எந்த பக்தரின் கண்ணீரும் அவரை எழுப்பவில்லை. அமைதியாகக் கண்மூடிக் கிடந்தார்.

அவர் எங்களுக்குச் சொந்தம் என்று இந்துக்களும், எங்களுக்காக அனுப்பப்பட்டவர் என்று இஸ்லாமியரும் கூறினார்கள். ஆனால் பாபா எந்த மத எல்லைக்கும் அடங்கியவரில்லை. விரிந்து பரந்த பிரபஞ்ச சக்தி அவர். அன்பு மட்டுமே அவரின் செங்கோல். இதை அவர் வாழ்நாள் முழுவதும் உபதேசித்துவந்தார். மத துவேஷம் காட்டியவர்கள் அவரிடம் வெட்கப்பட்டுப் போனார்கள். சகல மதங்களையும் அவர் தன்னோடு சேர்த்துக்கொண்டவர். அவரைப் பொறுத்தவரை அன்போடும் ஒற்றுமையோடும் சகோதரத்துவத்தோடும் மக்கள் வாழவேண்டும் என்பது முக்கியம். அதுவே அவரின் அவதார நோக்கமும்.

“என்னை நீங்கள் விரும்பும் வண்ணம் உபாசியுங்கள். ஆனால் என் அடையாளம் என்றும் எளிமை. நான் ஒரு சாதாரண ஏழைப் பக்கிரி” என்றே அடிக்கடி கூறுவார். ஆனால் அவரை எப்படி அடக்கம் செய்வது என்பது குறித்த கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்துமுறைப்படி என்று சிலரும் இஸ்லாமிய முறைப்படி என்று சிலரும் விவாதம் செய்தனர். இந்த விவாதம் ஒருநாள் நீடித்தது. விஷயம் அறிந்து வந்த மாவட்ட கலெக்டர் மக்களிடையே ஓட்டெடுப்பு நடத்தினார். பரபரப்பாக நடந்த அதன் முடிவில் கட்டிக்கொண்டிருக்கும் ஆலயத்திலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்தைத்தான் பாபாவும் குறிப்பிட்டிருந்தார். அடக்கம் செய்வதற்கான வேலைகள் தொடங்கின. பல மணி நேரம் கடந்தும் சாயியின் உடல் விரைத்துப்போகாமல் இருந்த அதிசயத்தைப் பார்த்து பக்தர்கள் வியந்து போயினர். அனைவரும் நெஞ்சு வெடிக்க, கதறியபடி கண்ணீருடன் விடை கொடுக்க பாபா பூட்டிவாடாவில் முரளீதர் சிலை நிறுவுவதற்கான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பாபாயணம் - 56

“சமாதியில் இருந்து என் இதயம் உங்களுடன் பேசும். அன்போடு, ஆத்மார்த்தமாக என்னை நினைப்ப வர்களிடம் நான் ஓடோடி வருவேன்” என்ற அவரின் வார்த்தைகள் உண்மை யாயின. ஷீர்டியில் அவரை நாடிவரும் பக்தர்களின் மனதோடு பேசினார். அவர்களின் கோரிக்கைகளுக்கு விடையளித்தார். அவர்களின் குறைகளைப் போக்கினார். வாதைகளோடு வந்தவர்கள் வரங்களோடு திரும்பிப்போனார்கள். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவரின் மகிமையை அறிந்து ஷீர்டி நோக்கி ஓடிவந்த வண்ணம் இருந்தனர். ஷீர்டி இந்திய ஆன்மிக வரலாற்றில் முக்கியமான ஒரு தலமாக மாறிவிட்டது.

சச்சிதானந்த சத்குரு சாயிநாத் மகராஜ்கீ ஜெய்!

ஸ்ரீ ராஜாதி ராஜ யோகிராஜ் பரப்ரம்மம் சாயிநாத் மகராஜ்கீ ஜெய்!

(நிறைவு)

வாசகர் அனுபவம்

‘`உனக்கு ஷீர்டிக்கு வர மனமிருந்தால், நிச்சயம் உன்னை வரவழைப்பேன்’’ என்கிறார் பாபா. நமக்கு ‘நம்பிக்கையும் பொறுமையும்’ இருந்தால் போதும். அவரை தரிசித்துவிடலாம்.

என் வாழ்வில் நான் ஷீர்டி சென்றதும் இப்படித்தான். 2009-ல் நான் மதுரையில் பணிபுரிந்த நிறுவனத்தின் குடும்பத்தினர் ஷீர்டி, மந்திராலயம் உட்பட சில திருத்தலங்களுக்குச் செல்ல விரும்பினர். அதற்கான பயணத்திட்டம் ஏற்பாடு செய்து தரும்படி என்னிடம் கூற, நானும் செய்து கொடுத்தேன்.

பாபாயணம் - 56

எனக்கும் பாபா மீது ஈர்ப்பு இருந்தது. பயணத்தில் துணைக்கு ஒருவர் வேண்டும் என்பதால், நிச்சயம் என்னையும் அழைத்துச் செல்வர் என்று நம்பிக்கையோடு இருந்தேன்.

ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. மனதளவில் வெகுவான பாதிப்பைத் தந்தது. ஆனால், ஷீர்டிக்கு எப்படியும் செல்வோம் என்ற நம்பிகை மட்டும் குறையவில்லை.

அடுத்த ஆண்டு, வேறோர் நிறுவனத்தில் சேர்ந்தேன். நானே எதிர்பார்க்காத வேளையில், பணி நிமித்தமாக புனே, ஷீர்டிக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாள்கள் தங்கி, கண்குளிர பாபாவை தரிசித்தேன். அதன்பின், குடும்பத்தினருடன் சென்று தரிசிக்கும் வாய்ப்பையும் அவர் தந்தார்.

அவரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டால் போதும், அவரே உங்களை அவசியம் வரவழைப்பார்.

- மு.ஆதவன், தேனி

***

பாபாவும் நானும்...

‘ஓம் ஸ்ரீ சாய்ராம்’ எனும் மந்திரத்தை உதட்டளவில் உச்சரிப்பதற்கும் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உச்சரிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று, நேற்றல்ல... என் பள்ளிப் பருவத்திலேயே நான் ஷீர்டி சாயிபாபா பக்தனாகிவிட்டேன். என் தந்தையாருடன் கோயம்புத்தூரில் இருந்தபோதே, அப்பா என்னை அடிக்கடி சாயிபாபா கோயிலுக்கு அழைத்துச் செல்வார். இப்போது அந்தக் கோயில் பெரிய கோயிலாகி சாயிபாபா காலனி என்று அந்தப்பகுதியே பெரிய அளவில் வளர்ந்துவிட்டது.

 `கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ முரளி
`கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ முரளி

ஆசை, அன்பு, பக்தி, கருணை என்கிற நிலையில் அன்புமயமான வாழ்விலிருந்து பக்திமயமான நிலையை அடையும்போது அங்கே அற்புதங்கள் நிகழத் தொடங்கிவிடுகின்றன. இதற்கு சந்தேகமே இல்லாத ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. இந்த நம்பிக்கையைப் பெற வேண்டுமென்றால், குருவின் வழிகாட்டுதல் மூலமாகத்தான் இதை நாம் பெற முடியும். அதன் பிறகு நம் வாழ்வில் நிகழ்வதெல்லாமே அற்புதங்களாகத்தான் இருக்கும். அவ்வாறு என்னுடைய வாழ்வின் நிகழ்வுகளை ஷீர்டி சாயிபாபாவே வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்.

ஷீர்டிக்கு இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன். முதல்முறை சென்றபோதே பாபாவின் அருட்பார்வை என்னை அப்படியே கட்டிப்போட்டுவிட்டது. அவரே என்னை அணைத்து ஆசி கூறுவது போன்ற ஒரு பாசத்தையும் நிம்மதியையும் தந்தது. வார்த்தைகளில் விவரிக்கமுடியாத ஒரு பரவச தரிசனம். அந்த தரிசனமே இன்றுவரை எனக்குத் துணை நிற்கிறது.

அவர் கையில் நான் எழுதுகோல்

ஒரு மிகப்பெரிய அற்புதத்தை, மாயாஜாலத்தை பாபா என்வாழ்வில் நடத்தியிருக்கிறார். அவர் கருணை என்மேல் பூமழையாகப் பொழிந்திருக்கிறது. 55 வாரங்கள் அவர் என் கைபிடித்து அழைத்துச் சென்றார். தன்னைப் பற்றித் தானே எழுதிக்கொண்டார். அவர் கையில் நான் எழுதுகோல். அதுதான் உண்மை.

பாபாயணம் - 56

தொடர் எழுத வாய்ப்பு அளித்த ஆனந்த விகடன் நிர்வாகத்திற்கும், சிறப்பாக அமைய அவ்வப்போது கருத்துகள் சொல்லி, அற்புதமான படங்கள் வரைந்து, ஒரு நிறைவான தொடராக அமைய உறுதுணையாக இருந்த ஆசிரியர் குழுவுக்கும், படித்துக் கருத்துகள் கூறி என்னை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் எழுத்துப்பயணத்தில் இது பொன்னால் செய்யப்பட்ட மைல்கல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மனம் முழுதும், பரவசம், பூரிப்புடன், லேசான பிரிவின் வருத்தமுமாக ஆனந்த விகடன் நிர்வாகத்திற்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

ஜி.ஏ.பிரபா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism