மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 6

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

“நான் விக்கிரமாக இருக்கிறேன் என்று நினைக்காதே.

நான் உனக்குள் உன்னுடனேயே இருக்கிறேன்.”

- பாபா

‘பாபா எங்கே இருக்கிறார், எப்படி இருப்பார்?’ என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கான பதில், ‘அவர் நமக்குள், நம்முடனேயே இருக்கிறார்’ என்பதுதான். நிகழும் எல்லாவற்றையும் நமக்குள்ளிருந்து வழிநடத்துவது அந்த குருதான்.

“நீங்கள் நேசிப்பது விரும்புவது அனைத்தையும் நீங்கள் அடைந்தே தீர்வீர்கள். நீங்கள் சாதிக்க விரும்பும் அனைத்தையும் நடத்தித்தருவது உங்கள் குருவின் மீதான நம்பிக்கையும் பொறுமையும்தான்” என்றார் பாபா.

பாபாயணம் - 6

தன்னைத்தான் குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாபா ஒருபோதும் சொன்னதே இல்லை. மாறாக, ‘உன் குல குருவை, தெய்வத்தை விடாதே’ என்றுதான் கூறுகிறார்.

“ஒப்புமை கூற இயலாத ஒரு சக்தி இந்தப் பிரபஞ்சம் முழுக்கப் பரவி ஆட்சி செய்கிறது. அந்த சக்தியின் ஓர் அங்கம்தான் நீங்கள்” என்ற பாபாவை, அந்த சக்தியின் ஓர் அங்கமாகவே பார்த்தார்கள் ஷீர்டி மக்கள்.

யாரிடமும் அவர் எதையும் இலவசமாகப் பெற விரும்பவில்லை. வேப்பமரத்துக்கு அருகில் கட்டாந்தரையாக இருந்த இடத்தைச் செப்பனிட்டுப் பூச்செடிகளைப் பயிரிட்டார். ‘வாமன் தாத்யா’ என்ற குயவனிடம் தினமும் இரண்டு பச்சை மண்குடங்கள் வாங்குவார். அதில் நீர் கொண்டு வந்து மண் தரையில் ஊற்றிச் செடிகளைப் பராமரிப்பார். நீர் ஊற்றி முடித்ததும் பச்சை மண்குடம் தானாக உடைந்துவிடும். அவரைப் பின்தொடரும் ஷீர்டி மக்கள், உடைந்த பானையின் சிதறல்களைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று காய வைத்து, பூஜை செய்தார்கள். கட்டாந்தரையில் செடிகள் முளைத்தன. பூக்கள் பூத்தன. அவரைக் கிண்டல் செய்தவர்களே அதிசயிக்கும் விதத்தில் அங்கு ஒரு தோட்டம் செழித்து உருவானது.

எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அளவுகடந்த அன்புடன் சாயிக்கு தினமும் உணவு கொடுத்துவந்தார் ஆமன்பாய். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு அவளுடையது. எந்த உறவும், ஆதரவும் இல்லாத அவள், பால பாபாவின் கருணை நிறைந்த முகத்தைப் பார்த்து ஆறுதல் அடைந்தாள். பாபாவுக்கும் அவள்மேல் ஒரு பரிவு. அவரின் பசி தீர்ப்பது மட்டும்தான் அவள் அறிந்த ஒரே பிரார்த்தனை. நேரத்துக்கு பாபா சாப்பிடாவிட்டால் துடித்துப்போவாள்.

பாபாயணம்
பாபாயணம்

சப்பாத்தி, நறுக்கிய பச்சை வெங்காயம் என எளிய உணவுதான். ஆனால் அதுவே அமிர்தம் என்று விருப்பத்துடன் சாப்பிடுவார் பாபா. உணவின் மீது அவருக்கு ஆர்வம் இல்லையென்றாலும், ஆசையுடன் கொண்டு வரும் பக்தர்களின் உணர்வை அவர் மதித்தார்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

“உன் அன்புக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றார் பாபா. சுயநலமற்ற அவளின் உள்ளம், பிறருக்காக அவரிடம் பிரார்த்தனை செய்யும் அவளின் குணம் அவர் மனதை ஈர்த்தது.

“நீ உன் உதவிக்காக மனதார என்னை அழைத்தால் ஏழ்கடலுக்கு அப்பால் இருந்தாலும் நான் ஓடி வருவேன்” என்கிறார். ஆனால் ஆமன்பாய் பாபாவின் எதிரில் இருந்தும் அவரிடம் எதுவுமே கேட்கவில்லை. அந்தத் தாயுள்ளம் சாயியைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே மகிழ்ச்சி அடைந்தது. அவள் முழுமனதாக அவரை நம்பினாள். அதுதான் அன்பின் பரிமாணத்தையடைகிறது. அன்புடன் கலந்த நம்பிக்கையே இறைவனை நம்மிடம் கொண்டு வருகிறது.

இக்கட்டான சமயங்களில் அவரை நினைத்தாலே போதும். ஏதோ ஒரு வடிவத்தில் அவர் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்பது அனுபவ உண்மை. வனவாசத்தின்போது பாண்டவர்களுக்கு இக்கட்டு நேரும் போதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற கிருஷ்ணன் உடனே அங்கு தோன்றுவார். பாண்டவர்கள் சோர்ந்து, என்ன செய்வது என்று திக்கித்து நிற்கும்போது கிருஷ்ணன் அங்கே வந்துவிடுவான். அவனின் ஒரு புன்னகை அனைத்தையும் சரிசெய்துவிடும்.

பாபாயணம் - 6

‘எப்படிக் கண்ணா, அழைக்காமல் வருகிறாய்’ என்று பாஞ்சாலி கேட்கும்போது அவன் சொல்கிறான், ‘உன் ஆழ்மனதில் உள்ள நம்பிக்கை. கண்ணன் வருவான், காப்பாற்றுவான் என்ற உள்ளொளி என்னை இங்கே இழுத்து வந்தது.’ அந்த ஆழ்ந்த பக்தி மற்றும் நம்பிக்கையே பாபா எதிர்பார்ப்பது. அதேபோல் அவரும் இருந்தார்.

திடீரென்று ஒருநாள் பாபாவை வேப்ப மரத்தடியில் காணவில்லை. இரவில் அவரின் இனிய குரலின் கானமும், நடமிடும் சலங்கை ஒலியும், பகலில் புன்னகை பொழியும் முகமுமாக பக்தர்களுக்குக் கனிவு காட்டிய பாபா, யாரிடமும் சொல்லாமல் காணாமல்போனார். ‘எங்கே சென்றார்’ என்று அவரைக் காணாமல் தவித்த ஷீர்டி மக்கள் உயிர் இழந்த கூடானார்கள்.

எங்கேதான் போனார் பாபா?

சில நூல்கள், அவர் நாலைந்து இடங்களில் சுற்றி அலைந்து தியானம் செய்தார் என்று சில இடங்களைக் குறிப்பிடுகின்றன. சிலர் ‘அவர் ஷீர்டியில்தான் இருந்தார். அவர் குருவோடு சூட்சும உருவில் அங்கே இருந்தார்’ என்று சில ஆதாரங்களைக் காட்டுகிறார்கள்.

ஆனால் சாயி தன் பக்தர்களின் நெஞ்சில் நிறைந்திருந்தார். நினைத்ததும் ஏதோ ஓர் உருவில் வந்து அவர்களின் துன்பங்களுக்குத் தீர்வு தந்தார்.

‘அழைத்தாலும் வருவார் பாபா,

நெஞ்சில் நினைத்தாலும் அருள்வார் பாபா’

(தரிசனம் தொடரும்)

னடா நாட்டுப் பள்ளிகளில் ஆசியக் குழந்தைகளை மற்ற குழந்தைகள் வம்புக்கு இழுப்பது அதிகம். ஒருமுறை என் மகள் ஏதோ தவறுசெய்துவிட்டாள் என, பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. பதற்றத்தோடு பாபாவை வேண்டிக்கொண்டே பள்ளிக்குச் சென்றேன். விஷயம் இதுதான்! கனடா மாணவி ஒருத்தி ஆறு மாதகாலமாக ஆசிய மாணவிகளை வம்புக்கிழுக்க, அதற்கு பதிலளிக்கும்வகையில் கொரிய மாணவி ஒருத்தி, ‘We will finish you’ எனச் சொல்லியிருக்கிறாள். இதற்கு அந்தக் கனடா பெண்ணின் தாயார் என் மகள் உட்பட எல்லார் மீதும் போலீஸில் புகார் கொடுத்துவிட்டார். உண்மைநிலையை அறிந்த கனடிய போலீஸ் அதிகாரி கனடா மாணவியை எச்சரித்துவிட்டுச் சென்றார். அந்த அதிகாரியின் விரலில் பாபா மோதிரம். உலகின் எல்லா மூலையிலும் பாபா பக்தர்கள் இருப்பார்கள் என அன்றுதான் உணர்ந்துகொண்டேன்.

- மதுமதி, கனடா

பாபாவும் நானும்...

“சாயிபாபா சிலை எந்தக் கோயில்ல இருந்தாலும், கண்ணை மூடிக்கிட்டு உங்க பிரச்னையைச் சொல்லி உருக உருக வேண்டிக்கிட்டா உங்க காதுல, ‘நான் இருக்கேன் பயப்படாதே’ங்கிற குரல் ஒலிக்கும். எனக்குப் பிரச்னைகள் வந்த போதெல்லாம் நான் நிறைய முறை இதைச் செய்திருக்கிறேன்.

மனோபாலா
மனோபாலா

மனிதர்களை நம்புறதைவிட பாபாவை நம்புறது எவ்வளவோ மேல். உங்க பிரச்னையை பாபாகிட்ட விட்டுடுங்க. அவர் எல்லாத்தையும் பார்த்துக்குவார். நான் பத்து வருஷமா அதைத்தான் பண்றேன். யாருன்னு ஞாபகம் இல்ல, யாரோ ஒருத்தர்தான் பாபாவைப் பத்தி எனக்குச் சொன்னார். அப்புறம் என் மனைவியும் பாபா பக்தை. அவங்க ஃபிரெண்ட்ஸ் நிறையபேர் பாபா பக்தர்கள். அவங்க மூலமா வந்து இப்போ பாபா எங்க வீட்டுக்குள்ளேயே வந்துட்டார். எங்க வீட்டுல, பாபா படங்கள் சிலைகள் இல்லாத இடமே இருக்காது. ஹால்ல, கார்ல, பூஜையறையிலன்னு எங்க வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்துலயும் பாபா எங்களுடன் பயணம் பண்ணிக்கிட்டே இருக்கார்.

சமீபத்துல ‘சதுரங்க வேட்டை’ படத்தால கோர்ட்டுல கேஸ். அதுக்கெல்லாம் நிறைய அலையவேண்டியதா இருந்துச்சு. ‘இப்படி கோர்ட்டு வரைக்கும் கொண்டு வந்துட்டியே’ன்னு சொல்லிக் கலங்கினேன். அப்புறம் எதிர்த்தரப்புல அவங்களாகவே வந்து கேஸை வாபஸ் வாங்கிட்டுப் பேசித் தீர்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. பாபா அருளால நல்லபடியா முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் சாயிபாபாதான்னு உறுதியா நம்புறேன்.”

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.