மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 7

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால்

நான் அதை முன்பே சென்று நீக்குகிறேன்.

நான் உன்னுடனேயே வந்துகொண்டிருக்கிறேன்

என்பதை மறவாதே.

- பாபா

ஷீர்டியில் சுடர் விடும் தீபமாய் இருந்த பாபா ஒருநாள் காணாமல்போய் அங்கிருந்தவர்களை இருளில் மூழ்கடித்துச் சென்றுவிட்டார். அவரின் மலர்ந்த முகத்தைப் பார்த்து ஆனந்தம் அடைந்த மக்கள் செய்வதறியாது திகைத்திருந்தார்கள். அவர்களைச் சுற்றி நிலவிய ஆனந்தக்காற்று மறைந்து உஷ்ணக் காற்று எங்கும் வீசியது. எல்லையற்ற சக்தியின் வடிவம் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது பாபா என்னும் அன்பின் உருவம் மட்டுமே. அவர்களை வாழ்வின் அனைத்துத் துயரங்கள், வலிகள், வேதனைகளிலிருந்து விடுவிப்பது பாபா என்ற நாமம் மட்டுமே.

பாபாயணம் - 7

பாபா இல்லாத ஓர் இடத்தை அவர்களால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. மகல்சாபதியும், நண்பர்களும் ‘தேவா எங்கே சென்றீர்கள்’ என்று ஏங்கி அழுதார்கள். அவர் எங்கே சென்றார்?

1854 முதல் 1858 வரை அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. பிற்காலத்தில் பாபா தனக்கு நெருங்கியவர்களிடம் சில விவரங்கள் கூறியதை வைத்து அவர் பெல்ஹாம், மகர்கட், மவுண்ட் அபு, அக்கல்கோட் என்று சுற்றித் திரிந்து தியானம் செய்தார் என்று கூறுகிறார்கள்.

இதுகுறித்து, சாயியின் பக்தர்கள், சில ஆங்கில நூலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். பாபாவே தனக்கு நெருங்கிய அடியவர்களிடம் குறிப்பிட்ட நகரங்களுக்குச் சென்று வந்ததைக் கூறியிருக்கிறார். ஆனால் அவற்றுக்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவரின் அடியவர்களால் அது நம்பப்படுகிறது.

பெல்ஹாமில் நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் பாபா தொழிலாளியாய் இருந்தார். அந்த உரிமையாளர், பாபாவின் சுறுசுறுப்பு, திறமையைப் பார்த்து அவருக்கு ஒரு சால்வை, தலைப்பாகை, புத்தாடைகள் ஆகியவற்றை அளித்தார். ஆனால் பாபாவோ அவற்றை மறுத்துவிட்டார். ‘மனிதர்கள் கொடுக்கும் எதுவும் நம்முடன் வராது. இறைவன் அளிப்பவையே எப்போதும் நம்முடன் வரும்’ என்றார்.

பாபாயணம் - 7

அங்கிருந்து கிளம்பியவர் மகர்கட் வந்து அங்குள்ள சக்தி பீடத்தில் பல மாதங்கள் தவம் செய்தார். எனவேதான் அவர் ‘தத்தாத்ரேயரின் அம்சம்’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். அங்கிருந்து கிர்னார் மலைப்பகுதிக்கு வந்து தியானம் செய்கிறார். அங்கு, பல மகான்கள் தவ வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது.

அங்கிருந்து, பாபா அக்கல்கோட் வந்து சேர்கிறார். அக்கல்கோட் மகராஜ் பற்றி சாய் சத் சரித்திரத்தில் பல இடங்களில் கூறப்படுகிறது. ஷீர்டியில் குருஸ்தானத்தில் உள்ள பாதுகை அக்கல்கோட் சுவாமிஜியினு டையது என்று சிலர் கூறுகிறார்கள். பாபாவின் முற்பிறவி அக்கல்கோட் சுவாமிஜி என்றும் கூறுகிறார்கள். பக்தர்கள் குறிப்பிடும்போது, தத்தாத்ரேயர், ஸ்ரீபாத வல்லபர், அக்கல்கோட் மகராஜ், பாபா என்று வரிசை அமைக்கிறார்கள்.

தம்மை நம்பியவருக்கு விசித்திரமான பாணியில் அருள்பாலிப்பவர் அக்கல்கோட் சுவாமிகள். ‘அக்கல்’ என்றால் ‘ஞானம்’ என்று பொருள். பக்தர்கள் தன்னை ஞானவடிவில் தரிசிக்கச் சொல்கிறார் சுவாமிஜி. பாபாவைப் போலவே, ‘குருவை நோக்கித் திரும்பு. நான் உன்னிடம் வருகிறேன்’ என்றவர்.

ஓரிடத்தில் நில்லாமல் சுற்றிக்கொண்டே இருந்ததால் ‘சஞ்சார பாரதி’ என்று அழைக்கப் படும் அவர், 1878-ல் மஹா சமாதி அடைந்தார். இன்றும் அங்குள்ள பாதுகைகளிருந்து அவரது மூச்சுக் காற்று ‘ராம்’, ‘ராம்’ என்று ஒலிக்கிறது என்கிறார்கள் பக்தர்கள். அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் ஆலமரத்தடியைச் சுற்றி சுவாமிகளின் கோயில் அமைந்திருக்கிறது.

பாபாயணம்
பாபாயணம்

அவர் அடிக்கடி கூறுவது

`தியானமூலம் குரோர் மூர்த்தி:

பூஜாமூலம் குரோர் பதம்!

மந்த்ரமூலம் குரோர் வாக்கியம்!

மோக்ஷமூலம் குரோர் க்ருபா!’ என்பதே.

‘குருவின் திருவடியே தியானத்திற்கு மூலம். குருவின் பாதமே பூஜைக்கு உரியது. குருவின் வாக்கியமே சிறந்த மந்திரம். குருவின் திருவருளே முக்திக்கு வழி’ என்பது இதன் பொருள். அதே வார்த்தைகளையே பாபாவும் கூறுகிறார். இருவரின் உபதேசங்களும் வழிமுறைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

அக்கல்கோட்டில் பல மாதங்கள் தங்கியிருந்த பாபா, தன்னை முழுதாக தியானத்தில் கரைத்துக் கொண்டார். அந்த தியானப்பயிற்சி மூலம் அவருக்குப் பல அற்புத சக்திகள் கிடைக்கின்றன.

பாபாவின் பக்தர்கள் என்றும் எப்போதும் அவரையே தியானிக்கிறார்கள். பிற மகான்களை வணங்குகிறவர்களும் அவரைக் கண்டதும், ‘அவரே தாங்கள் வணங்கும் மகான்’ என்று உணர்கிறார்கள். பிற்காலத்தில் பாபா, அக்கல்கோட் மகராஜின் பக்தர்களுக்கு அவரைப் போலவே காட்சி அளித்தார். அவர்களும் ‘எப்போதும் அவர் பாதமே கதி’ என்று சரணாகதியடைந்தனர்.

‘புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வேண்டும் இவ் வையகத்தே” என்று அப்பர் பெருமான் வேண்டுவதுபோல், எடுக்கும் பிறவிதோறும் பாபாவுடனேயே தாங்கள் இருக்க வேண்டும் என்றுதான் அவரின் பக்தர்கள் வேண்டுகிறார்கள்.

(தரிசனம் தொடரும்)

நானும் எனது மனைவியும் மூத்த குடிமக்கள். கடந்த 10 வருடங்களாக சாயி பாபா ஆராதனை செய்து வருகிறேன். சென்ற அக்டோபர் மாதம் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக மதுரையில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்தில் நாலரை மணி நேரம் பயணித்தோம். எல்லாம் முடிந்து, மீண்டும் மதுரைக்கு பேருந்தில் செல்ல மலைப்பாக இருந்தது. கோவை - சிங்ககாநல்லூரில் மதுரைப் பேருந்திற்காகக் காத்திருந்தபோது, ‘மதுரைக்கு யாரவது செல்கிறீர்களா? பேருந்துக் கட்டணம் மட்டும் கொடுத்தால் போதும்’ என தனியார் வாடகை கார் ஓட்டுநர் கேட்டார். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அந்தக் கார் டேஷ்போர்டில் ஒரு சாயி பாபாவின் சிலை புன்முறுவலுடன் இருக்கக் கண்டேன். எல்லாம் சாயிபாபாவின் கருணை என அப்போதுதான் புரிந்துகொண்டேன்.

- ஜெ. ஜனார்த்தனன்

பாபாவும் நானும்...

“முதல்முறை ஷீர்டி போனபோது அங்கு எனக்கு யாரையும் தெரியாது. மனசுக்குள் ஒரு பயத்தோடுதான் மும்பை ஏர்போர்ட்டில் இருந்தேன். மும்பையிலிருந்து ஷீர்டி ஃபிளைட் ஏறும்போது பார்த்தா, மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் எங்களோடு வர்றார். அவரும் அங்கு ஏதோ ஒரு வேலையாகப் போகிறார். ‘எங்கம்மா இப்படி?’ன்னு அவரே கேட்டார். நான் ‘ஷீர்டி சாயிபாபா கோயிலுக்குப் போறேன்’னு சொன்னேன். அவருடன் வந்த மற்றவர்களுக்கு, ‘இந்தியாவிலேயே ஒரே ஒரு மகிளா பிரசிடென்ட் இவங்கதான் அப்படி’ன்னு சொல்லி என்னை அறிமுகம் செய்துவைத்தார். அப்புறம் சொன்னார். ‘ஷீர்டியில் இறங்கும்போது என்னை வரவேற்கப் போறதே அங்குள்ள எம்.பிதான். கூடவே அவர்கூட முன்னாள் எம்.பியும் அங்க வரப்போறாரு. அவர், அந்தக் கோயில் அறங்காவலர் குழுவில் ஒருவர். அதனால உங்களுக்கு ஒரு பிரச்னையும் இருக்காது. உங்களை நேரா பாபாகிட்டே அழைச்சிட்டுப்போவார்’னு சொன்னார். அப்படியே நடந்தது. நாங்க போனது ஆரத்தி நேரங்கிறதால மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோதுகூட மயிலாப்பூரில் உள்ள பாபா கோயிலுக்குப் போய் பாபாவை வணங்கினேன். அப்படி பாபாவிடம் ஆசீர்வாதம் வாங்கக் கீழே குனிந்து கும்பிட்டபோது ஒரு செவ்வந்திப் பூ வந்து என் தலையில் விழுந்தது.

அங்கிருந்தவர்களெல்லாம் ‘நீங்க தேர்தலில் ஜெயிச்சுடுவீங்க மேடம்’னு சொன்னாங்க. ஜெயிக்கலை. ஆனா, அதைவிட மிகப்பெரிய ஒரு விஷயத்தை பாபா எனக்குத் தந்திருக்கார். இன்றைக்குத் தெலங்கானாவுக்கு ஆளுநரா பதவிவகிக்கிறேன்னா அது பாபாவின் ஆசீர்வாதம்தான்.”

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை உங்கள் புகைப்படத்துடன், ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.