Published:Updated:

புதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

பாபா
பிரீமியம் ஸ்டோரி
பாபா

ஜி.ஏ.பிரபா

புதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

ஜி.ஏ.பிரபா

Published:Updated:
பாபா
பிரீமியம் ஸ்டோரி
பாபா

பத்துத் திசையெங்கும் நின்புகழ்

துந்துபி ஓசையாய் நிறைந்ததே.

கருணாமூர்த்தியைக் கண்ணாரக் காணவே

மக்கள் ஷீர்டி வருகின்றனரே.

பேரருள்மிகு திருவாக்கமுதம் யாம்தினமும்

பருகி மெய்ம்மறந்தோமே!

- ஷீர்டி காலை ஆரத்தி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பிரபஞ்சம் புரிந்துகொள்ள முடியாத ஓர் அழகான மாயை. அதில், இந்த பூமி ஒரு புண்ணிய தலம். அதனால்தான் இதில் வந்து பிறக்க தேவர்களும், அவதாரம் எடுக்க தெய்வங்களும் விரும்புகின்றனர். ஆனால், இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் மாயை என்ற சக்தியின் பகடைக் காய்.

புதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

நமக்குள்ளேயே இருக்கும் மாயையின் சக்தியால் நாம் ஆட்டுவிக்கப்படுகிறோம். அந்த மாயை நம்மை ஆட்டுவித்துக்கொண்டே இருக்கிறது, அதில் கட்டுண்டு நாம் நித்திய போராட்டத்தில் இருக்கிறோம். மாயையின் கிரியைகளால் உருவாகும் நன்மை, தீமை என்று நடக்கும் யாவற்றையும் இறைவன் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

சாதாரண ஜீவராசிகள் ஜனன, மரணப் போராட்டத்திலிருந்து விடுதலை அடைய, மாயை நீங்க, தமக்கு ஏற்ற எளிய வாழ்க்கை நியதி மற்றும் ஆன்மிக வழித்தடங்களைப் பெற, இறைவன் மகான்களை அனுப்புகிறார். அவர்களே நமக்கு குருவாக அமைந்து நம்மை வழிநடத்துகிறார்கள்.

சத்குரு, நமக்குள் நிறைந்து, அல்லும் பகலும் நம் நலன்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பவர். தர்மம் குலைந்து, இருள் நிறைந்த காட்டில் தவிப்பவனுக்கு ஒளி நிறைந்த நிலவு குரு. ‘குரு’ என்றாலே ‘இருளை அழித்து ஒளியைத் தருபவர்’ என்றுதான் பொருள். நம் அறியாமை என்னும் இருளை அகற்றி, ஞானம் என்னும் ஒளியை ஏற்றுபவர் குரு. அவரின் நாமமே மனிதர்களுக்கு மாமருந்து.

புதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

அப்படி மாமருந்தாய் மகத்துவமாய் இன்று உலகம் முழுதும் உச்சரிக்கப்படும் நாமம் ‘பாபா.’

‘சாயிராம்’ என்று சொல்லும்போதே ஒரு சிலிர்ப்பு, நம்பிக்கை, துணிவு மனத்துள் ஏற்படுகின்றன. குரு - சிஷ்யன் உறவு, குருவின் கருணை, வழிகாட்டல் எப்படி இருக்க வேண்டும், சிஷ்யன் குருவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லாம் பாபாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அவர் வாழ்வே நமக்கு போதனை. அவர் எல்லா உயிர்களிடத்தும் கருணை, அன்பு, எளிமை கொண்டு ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்த எல்லையற்ற பேரின்ப வடிவம். அவர் வாழ்க்கையின் எல்லாச் செயல்களும் மனித வாழ்வின் உயர்வுக்கே நடைபெற்றன. உலகம் முழுதும் ஒன்றாக்கும் சக்தி வடிவம் அவர்.

மொத்தம் ஏழு வகையான குருக்களை வேதம் அறிமுகப்படுத்துகிறது. சூசகா, வாசகா, போதகா, நிஷித்தா, விஹிதா, காரண, பரமகுரு என்று. இதில் பரமகுருவே மெய்ப்பொருளை முற்றிலும் உணர்த்தி மோட்சத்துக்கு வழி காட்டுபவர்.

குரு அவசியமா என்ற கேள்வி நம் அனைவருக்கும் உள் எழலாம். அதற்கும் பாபாவே பதில் சொல்கிறார்.

ஒருமுறை ஷீர்டியில் காகா சாஹேப், ஹேமாத்பந்த் ஆகியோரிடம் ஒரு விவாதம் எழுந்தது.

“நாம் நம்முடைய கடமையைச் செய்கையில் ஏன் குரு? சோம்பேறியாகத் தூங்குபவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்?” என்றார் ஒருவர்.

“நடப்பது நடந்தே தீரும். மனிதன் ஒன்று நினைக்க, தெய்வம் வேறு ஒன்று நினைக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?” என்றார் இன்னொருவர்.

புதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

விவாதம் ஒருமணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

ஷீர்டிக்கு வந்து நீண்டநாள்கள் ஆகியிருந்த படியால், மறுநாள் காகாசாஹேப், பாபாவிடம் சென்று “நான் ஷீர்டியை விட்டுச் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு பாபா ‘ஆம்’ என்று கூறினார்.

ஆழம் காண முடியாத, அளவிட முடியாத சமுத்திரம் அவர். ஆத்ம அனுபவம், இறை அனுபவம் முழுதும் நிரம்பப் பெற்றவர்.

“எங்கே செல்ல வேண்டும்?”

“உயரே. மேலே.”- என்கிறார் பாபா.

“வழி எப்படிப்பட்டது?”

“அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன. . பாதை கடினமானது, புலிகள், ஓநாய்கள் வழியிலுள்ள காடுகளில் உள்ளன.’’

“ஒரு வழிகாட்டியை அழைத்துச் சென்றால் என்ன?”- காகா சாஹேப்.

அதற்கு பாபா, “அப்போது கடினம் இல்லை. அந்த வழிகாட்டி புலி, ஓநாய் மற்றும் படுகுழியிலிருந்து உன்னைக் காப்பாற்றி, குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார். வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல்போய்விடுவாய். இல்லையென்றால் படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது” என்றார்.

இதுவே ‘குரு அவசியம்’ என்பதற்கான பாபாவின் பதில். மனிதர்கள் மட்டுமல்ல, அவதாரங்களான ராமர், கிருஷ்ணர் போன்றோர்களும் தங்கள் குரு வசிஷ்டர், சாந்தீபனி முதலியோர்களையே சரணாகதி அடைந்தார்கள்.

அந்த வகையில் பரமகுருவாய், வழிகாட்டும் ஞானகுருவாய் விளங்குகிறார் பாபா. ஆழம் காண முடியாத, அளவிட முடியாத சமுத்திரம் அவர். ஆத்ம அனுபவம், இறை அனுபவம் முழுதும் நிரம்பப் பெற்றவர். அவரின் வரலாற்றை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டுக் கடந்து செல்ல முடியாது. அவரது வாழ்க்கை ஒரு பாற்கடல்.

ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் “நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும் நான் அறிவேன். ஆனால் என்னை அறிந்தவர் எவரும் இல்லை” என்கிறார். அதையே பாபாவும் கூறுகிறார்.

“கர்ம வாசனையாலேயே நீ என்னிடம் நெருங்குகிறாய். பல ஜென்மங்களாக நான் உன்னை அறிவேன். என்னை நம்பி நீ என்னிடம் நெருங்கினால் நான் உன் கர்மபலன்களைப் போக்கி அழியாத முக்தி இன்பத்தை அளிப்பேன்” என்கிறார் பாபா. ‘அனைத்துள்ளும் நிறைந்திருக்கும் பிரும்மம் நானே’ என்று அத்வைத சாரமாக வாழ்ந்தவர் பாபா.

‘உன்னில் இருக்கும் பிரம்மமே எனக்குள்ளும் உள்ளது’ என்ற அவரின் சொல்படி நடந்தால் நம்மால் யாரையும் வெறுக்க முடியாது. எங்கும் அன்பு நிலவி, அகந்தை, கர்வம், வெறுப்பு, பொறாமை, துவேஷம் விலகி, அன்பு, கருணை குருபக்தி, ஞானம் போன்ற உயரிய குணங்கள் வளர்ந்து உலகே அன்புமயமாக இருக்கும்.

“நான் ஷீர்டியில் மட்டும் இல்லை. பிரபஞ்சம் முழுதும் பரவி வியாபித்து இருக்கிறேன். ஷீர்டியில் மட்டுமே பாபா இருக்கிறார் என்று நினைப்பவன் என்னை முழுதாக அறியவில்லை” என்கிறார்.

“உங்களை ஆட்டுவிப்பவன் நான். எல்லாவற்றையும் படைத்து, காத்து, உலகின் ஆதாரமாய் விளங்குபவன் நானே. யார் என்னை மனதார நினைத்து நம்புகிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் துன்பம் நேராது” என்பது பாபாவின் உறுதிமொழி.

புதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

தன் பக்தர்களுக்கு பாபா, ‘நம்பிக்கையோடும் பொறுமையோடும் மனத்தில் இறைவனைப் பிரதிஷ்டை செய்து உன் எண்ணங்கள், செயல்களை அவருக்கு அர்ப்பணம் செய்’ என்கிறார்.

மகாபாரதத்தில் இந்த உறுதியான நம்பிக்கை அர்ஜுனனிடம் இருந்தது. கண்ணனுக்கு அர்ஜுனன் மிக நெருக்கமானவன். அதற்கு காரணம் அர்ஜுனன் அவர்மேல் வைத்திருந்த அளவில்லாத நம்பிக்கை. குருக்‌ஷேத்திரப் போரின்போது ‘நாளை அர்ஜுனனைக் கொல்வேன்’ என்று சபதம் செய்கிறார் பீஷ்மர். பாண்டவர் பக்கம் எல்லோரும் அஞ்சி நடுங்கு கிறார்கள். அன்று இரவு கிருஷ்ணனுக்கே தூக்கம் வரவில்லை. மறுநாள் எழுந்து வரும் கிருஷ்ணனுக்கு ஆச்சர்யம். அர்ஜுனன் குளித்து, புத்துணர்ச்சியுடன் அவர் எதிரில் வந்து நிற்கிறான்.

வியப்புடன் கேட்கிறான் கிருஷ்ணன். “அர்ஜுனா, உனக்குக் கவலை இல்லையா?”

அதற்கு அர்ஜுனன் “நான் என்னை உன்னிடம் ஒப்புவித்துவிட்டேன். என் கவலையெல்லாம் உன்னுடையது. எனவே நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்கிறான். அதன்பிறகு நடந்த அற்புதங்கள் நமக்குத் தெரியும்.

இந்த அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் பாபா நமக்கு உபதேசிப்பது. தன்னலமற்ற பக்தி, நம்பிக்கை, அவரின் கருணைக்குக் காத்திருக்கும் பொறுமை இருந்தால் போதும். பாபாவின் கருணை எல்லோருக்கும் சமமாகப் பொழியும் வான்மழை போன்றது. விழும் மண்ணுக்குத் தக்கவாறு அதன் சுவை, நிறம் மாறுகிறது.

“உங்களை ஆட்டுவிப்பவன் நான். எல்லாவற்றையும் படைத்து, காத்து, உலகின் ஆதாரமாய் விளங்குபவன் நானே.

நமக்கு அவர் யார் என்ற கேள்வியைவிட அவர் நமக்கு என்ன சொல்கிறார், அவர் வாழ்க்கை நமக்குக் கூறுவது என்ன என்பதே முக்கியம். அவருடைய நாமங்கள் மூச்சுக்காற்று போல். நீருக்குள் மூழ்கும் ஜீவனுக்கு பிராணவாயு போல. அந்த நாமத்தின் பலன், அதன் அர்த்தம் நமக்குச் சொல்லும் கதைகள், அவரின் நாமத்தையே சுவாசித்த பக்தர்கள் பற்றிய விவரங்கள் முக்கியம்.

‘பாபா என்பது உடல் அல்ல’ என்று அவரே கூறுகிறார். அவரை ஸ்தூல உடலாகப் பார்ப்பதை விட நாமத்தின் மூலம் தரிசிப்பதே சிறந்தது.

எல்லா வேத சாஸ்திரங்களுக்கும் மூலம் ஏதோ ஒரு நாமம்தான். அவரின் நாமத்தை உச்சரிக்கும்போது வேறு சிந்தனைகள் தோன்றாது.

ராமாயணத்தில் சேது பாலம் கட்டும்போது வானரங்கள் போடும் கற்கள் கடலில் மிதப்பதைப் பார்த்து ராமருக்கும் ஆசை. ஹனுமானிடம் கேட்டு தானும் ஒரு கல்லை எடுத்துப் பாலம் கட்டுவதற்குக் கடலில் போடுகிறார். ஆனால் கல் மூழ்கிவிடுகிறது. அப்போது அனுமன் அந்தக் கல்லில் ‘ராமா’ என்று எழுதிப் போடுகிறார். கல் மிதக்கிறது.

அப்போது அனுமன் “பிரபோ, உங்களைவிட உங்கள் நாமத்துக்கே மகிமை அதிகம்” என்கிறார்.

கலியுகத்தில் நாமம் கூறுவதே இறைவனை அடைய எளிய வழி என்கின்றன வேதங்களும்.

“எறும்பினால் ஒரு மலையைச் சுமக்கவும் முடியாது. மேலே தூக்கவும் முடியாது. ஆனால் அதன்மேல் ஏற முடியும். அதற்குக் காரணம் அதனிடம் உள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கையை என் நாம உச்சாடனையில் வைத்தால் அப்படிப்பட்ட மலையுச்சியில் உன்னை நான் உட்கார வைப்பேன்” என்கிறார் பாபா.

“எல்லா வேத சாஸ்திரங்களுக்கும் மூலம் ஏதோ ஒரு நாமம்தான். அவரின் நாமத்தை உச்சரிக்கும்போது வேறு சிந்தனைகள் தோன்றாது. என் நாம ஸ்மரனையினால் மாயை அகல்கிறது. என் வாழ்க்கைத் தத்துவம் உனக்குப் புரியும்” என்கிறார் சாயிராம்.

அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்து அவரின் நாமங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அதற்கான சின்ன முயற்சியே இந்தத் தொடர்.

பாவமெல்லாம் விலகியோட மனதார

நின் பதம் சரணமடைந்தோமே

அருள் செய்வாயே சாயிதாயே நீ

அடியார்க்கு அடைக்கலம் தந்தருள்வாய்.

சச்சிதானந்த சத்குரு சாயிநாத் மகராஜ்கீ ஜெய்

(தரிசனம் தொடரும்)

பாபாவும் நானும்...

முதன்முதலில் நாகார்ஜுனா நடித்த தெலுங்குப் படத்தில் கேமராமேனாக வேலை பார்த்தேன். அப்போது ஹைதராபாத்தில் உள்ள வெள்ளைக்கற்களால் கட்டப்பட்டிருந்த சாயிபாபா கோயிலுக்குப் போனேன். எனக்கு வழிகாட்ட ஒரு குரு கிடைத்துவிட்டார் என்கிற வைப்ரேஷன் எனக்குள் உண்டானது. அதன்பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாமல் கோயிலுக்குப் போய்விடுவேன். ‘பாபா, நான் சீக்கிரம் டைரக்டர் ஆகணும்' என்று பலமுறை மனமுருக வேண்டியிருக்கிறேன்.

இயக்குநர் சிவா
இயக்குநர் சிவா

இனிமேல் இயக்கம்தான் என் தொழில், அதுவரை கேமராவைத் தொடமாட்டேன் என்று சபதம் போட்டு ஒன்றரை வருஷம் கடுமையாகக் கஷ்டப்பட்டேன். மனச்சோர்வு, உடல்சோர்வால் அவதிப்பட்டேன். அப்போதெல்லாம் இரவு முழுவதும் அந்த பாபா கோயிலின் வாசலில் படுத்துக்கிடந்து விடியவிடிய பாபாவைத் துதித்தேன். இதோ இயக்குநராகி விட்டேன். இப்போதும் என்னை பாபாதான் வழிநடத்துகிறார். அஜித் சாருடன் `வீரம்' படத்தில் ஒப்பந்தம் ஆகும்வரை அவர் பாபா பக்தர் என்பதே எனக்குத் தெரியாது. படப்பிடிப்பில் ஒருநாள் ஆன்மிகம் பற்றிப் பேசிய பிறகுதான் தெரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் சந்தோஷம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி, பாபாவின் காலைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொள்வேன். அவரும் ஒருமுறைகூட என்னைக் கைவிட்டதே இல்லை.

எனக்குத் துன்பம் வரும்போதும், மனக்கலக்கம் ஏற்படும்போதும் பாபாவையே துதிப்பேன். 'என்னைக்குமே நான் உன்கூடவே இருக்கேன், கவலைப்படாதே' என ஆறுதல் சொன்னார், சொல்லிக்கொண்டிருக்கிறார். என் திருமணத்துக்கு முன்பிருந்தே என் மனைவி ராஜலட்சுமி தீவிரமான சாயிபாபா பக்தை. இப்போது என் வீட்டில் பூஜை அறையில் மட்டுமல்ல வீடு முழுவதுமே சாயிபாபாவின் போட்டோவையே மாட்டி வைத்திருக்கிறார் அவர். சாயி எனக்குப் பலமுறை வழிகாட்டியிருக்கிறார். ஒருவழியும் தெரியாமல் கவலையுடன் தூங்கினால், என் கனவில் வந்து என் கேள்விக்கு விடை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். என் மகன் பிறந்தபிறகு ஒரு ஹோட்டலில் குடும்பத்தினருக்கு மட்டும் சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தேன். கையில் என் குழந்தை. அப்போது மலேசியாவிலிருந்து வந்திருந்த ஒரு தம்பதி தங்கள் பையிலிருந்து பாபாவின் விபூதி பிரசாதத்தை எடுத்து என் மகன் நெற்றியில் பூசி ஆசீர்வாதம் செய்தனர். அந்தச்சமயம் எனக்கும் என் மனைவிக்கும் அப்படியே மெய்சிலிர்த்தது. ஒரு குடும்ப உறுப்பினர்போல உறுதுணையாக இருந்துவருகிறார் பாபா.”

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.

புதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!