மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாபாயணம் - 2

sai baba
பிரீமியம் ஸ்டோரி
News
sai baba

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

உண்மையில் நான் உங்களிடமிருந்து தூரமாகவோ

எங்கேயோ இல்லை. உங்களுடன், உங்களுக்குள்ளேயே

இருக்கிறேன்.

- பாபா.

ஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹா

ண்ணங்களின் குவியல்தான் மனம். தொடர்ந்து சிந்திக்கும்போதுதான் மனம் வலிமையடைகிறது. எண்ணங்களிலிருந்து மனம் விடுதலை பெறும்போது எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்கின்றன. அலைபாயும் மனதை ஒரு புள்ளியில் குவித்து சக்தியைச் சேமிக்க குரு, தெய்வம், லட்சியம், நாமம் ஆகிய ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. மனம் அமைதியானால் சரியான எண்ணங்கள் தோன்றும். மனதை நிலைநிறுத்த உதவும் கருவியே நாமம். ஸ்ரீசாயிராமின் நாமங்கள் அத்தகைய அற்புதத்தை நிகழ்த்துபவை.

பாபாயணம்
பாபாயணம்

‘ஸ்ரீ சாயிநாதாய நமஹா’ என்றால் ‘சாயிநாதனைப் பணிகிறேன்’ என்று பொருள். பணிதல் என்றால் முற்றும் முழுவதுமாகச் சரணடைதல். அதுவே நம்மை அவருக்கு அருகில் கொண்டுசேர்க்கும். எனவேதான் அவரை ‘ஸ்ரீ சாயிநாதாய நமஹா’ என்ற நாமம் சொல்லி முதலில் வணங்குகிறோம்.

“எந்நேரமும் சாயி, சாயி என்று என்னை ஜபம் செய்துகொண்டிருப்பவன் ஏழ்கடலுக்கு அப்பால் இருந்தாலும் சென்று காப்பேன். இதை நம்புபவர்களுக்கு நிச்சயம் எவ்விதத் துன்பமும் நேராது” என்று சாயி தன் பக்தர்களுக்கு உறுதியளித்திருக்கிறார். அவரின் பிறப்பு, பெற்றோர் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும் தன் குணாதிசயத்தாலும், அற்புத சக்தியாலும் அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்து நிற்பவர் சாயிராம்.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

சாயி, ஷீர்டிக்கு முதலில் தன் பதினாறாவது வயதில் வந்தார். 1900-ல் நானா சோப்தார் என்பவரின் தொண்டுக் கிழவியான தாயார், தான் சிறு வயதில் பாபாவை இளம் வயதினராக ஷீர்டியில் பார்த்ததாகக் கூறியிருக்கிறார்.

sai baba
sai baba

சாயி இளம் வயதிலேயே, உலகியல் விஷயங்களில் நாட்டம் இன்றி உயர்ந்த லட்சியத்தை அடையும் முயற்சியில் இருந்தார் என்றும், அடிக்கடி தனிமையை நாடி வேப்ப மரத்தினடியில் சென்று அமர்ந்துகொள்வார் என்றும் அவரைச் சிறுவயதில் கண்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள். யாராவது அவரின் பெற்றோர் குறித்துக் கேட்டால், அவர்களை ‘புருஷா, மாயா’ என்றே குறிப்பிடுவார். ஒரே ஒரு முறை வயதுமுதிர்ந்த காலத்தில், கண்டோபா கோயில் பூசாரியும் தன் தீவிர பக்தருமான மகல்சாபதியிடம், ‘தன் பெற்றோர்கள், நிஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த பர்வானி தாலுகாவில் உள்ள பத்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று குறிப்பிட்டார்.

அவரின் பெற்றோர் பெயரோ, அவர்கள் பாபாவுக்கு வைத்த பெயரோ எதுவும் தெரியவில்லை. சிறுவயதில் பாபாவை அவரது பெற்றோர்கள் ஒரு பக்கீரிடம் அளித்து வளர்க்கச் சொன்னார்கள். அந்த பக்கீர் காலமாகும் முன்பு தன் மனைவியிடம் பாபாவை ‘சேலூ’ என்ற ஊரிலுள்ள ‘கோபால்ராவ் தேஷ்முக்’ என்ற ஜமீன்தாரிடம் ஒப்புவிக்கும்படி கூற, அவரும் அவ்வாறே ஒப்படைக்கப் பட்டார். அங்குதான் பாபாவுக்கு ஆழமான கல்வியும் ஞானமும் கிடைத்தது.

நீதிநெறி தவறாமை, நற்பண்புகளின் இருப்பிடமான கோபால்ராவ் திருப்பதி பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டவர். கோபால்ராவ் அடிக்கடி புனிதத்தலங்களை தரிசிக்கச் செல்வார். அப்படி ஒருமுறை பயணம் மேற்கொண்டபோது ஒரு வீட்டில் தங்கினார். அப்போது பிரம்மராட்சசன் ஒருவன் அவரின் பூஜைகளுக்கு மிகுந்த இடையூறு கொடுத்தான். தன் மிரட்டலுக்கு அடங்காத அவனின் உபத்திரவங்களை அலட்சியப்படுத்திய கோபால்ராவ் தன் சாளக்கிராமப் பூஜையைத் தொடர்ந்தார்.

கோபால்ராவின் நற்பண்புகள், கீர்த்தி, குணாதிசயம் ஆகிய மூன்றுமே பாபாவை உருவாக்கியது!
கோபால்ராவின் நற்பண்புகள், கீர்த்தி, குணாதிசயம் ஆகிய மூன்றுமே பாபாவை உருவாக்கியது!

இதனால் கோபம்கொண்ட பிரம்ம ராட்சசன், அவரை விழுங்கிவிட ஆவேசத்துடன் வந்தான். கோபால்ராவ் அவன்மீது அபிஷேகத் தீர்த்தத்தைத் தெளிக்க அவன் அலறி நெருப்பில் விழுந்தது போல் துடித்து அவரின் கால்களில் விழுந்தான். தன் நிலையை மாற்றும்படி அவரிடம் கெஞ்சினான். கோபால்ராவ் அவனைக் காசிக்கு அழைத்துச் சென்று விமோசனம் ஏற்படுத்தினார்.

ஆன்மிக நெறிக்கே உரிய தூய வாழ்வும், மனமும் நிரம்பப் பெற்ற கோபால்ராவ், ஆன்மிகப்பெரியவர்களின் ஆத்மாவுடன் பேசும் பாக்கியம் பெற்றவர். ஒருமுறை அகமதாபாத்தில் ‘சுவாக் க்ஷா’வின் சமாதிக்குச் சென்றபோது, ‘முற்பிறவியில் நீ ராமானந்தராகப் பிறந்தாய்’ என்றும் ‘விரைவில் உம்மைத் தேடி கபீர் வருவார்’ என்றும் சமாதியிருந்து குரல் கேட்டது. ராமானந்தரின் பரம சீடராக விளங்கியவர் கபீர்தாசர். இந்த நிகழ்வுக்குப் பிறகே பாபா கோபால்ராவிடம் வந்து சேர்ந்தார். கோபால்ராவின் நற்பண்புகள், கீர்த்தி, குணாதிசயம் ஆகிய மூன்றுமே பாபாவை உருவாக்கியது.

சாய் பாபா
சாய் பாபா

தன் தவறுகளுக்காகத் தன்னைத் தண்டித்துக் கொள்ளும் உயரிய பண்பு கோபால்ராவிடம் இருந்தது. ஒருமுறை அந்தி சாயும் நேரம் அவர் கோட்டை முன் ஓர் இளம்பெண் வந்தாள். ‘யாரும் இல்லை, இருள் நேரம்’ என்ற நினைப்பில் அவள் தன் உடல் முழுதும் தெரியும்படி அங்கு அமர்ந்தாள். இதைக் கண்ட கோபால்ராவ், ‘வேறு யாராகவாவது இருந்தால் அந்தப் பெண்ணை இழுத்து வந்து தன் இச்சைக்கு ஆளாக்கியிருப்பார்கள்’ என்று எண்ணினார். ஆனால், இதுபோன்ற பாபகரமான எண்ணம் ஒரு நிமிடம் தன் மனதில் உதித்ததுக்கே வெட்கிக் குறுகிப்போனார்.

நேராக பூஜை அறைக்குச் சென்றார். அந்த ஒரு நிமிட சலனத்திற்காக இரு கூரிய ஊசிகளை எடுத்து தன் இரு கண்களையும் குத்திக்கொண்டார். அவர் பார்வை போனது. இதை அறிந்த கோபால்ராவின் குரு அவரைத் தேற்றி, இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்தார். இழந்த பார்வை கிடைத்தது. இதன் பிறகு கோபால் ராவ் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி உட்பட பல சக்திகள் அவருக்குக் கிடைத்தன. அதேநேரம், தான் இந்த உலகை விட்டுக் கிளம்பும் நேரமும் வந்து விட்டது என்பதையும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் அவர் உணர்ந்துகொண்டார்.

கோபால்ராவின் அன்புக்குப் பாத்திரமான பாபாவின்மேல் பொறாமை கொண்ட சிலர் அவர்மேல் கல்லெறிந்தனர். கோபால்ராவ் கற்களைத் தன்மேல் வாங்கிக்கொண்டார். அதன்பின் தன் சக்திகளை பாபாவுக்கு மாற்றிவிட முடிவுசெய்தார். அதுவரை கன்று ஈனாத ஒரு பசுவின் மடியைத் தடவிக் கொடுத்தார். அனைவரும் வியக்கும் வண்ணம் அதிசயமாக அது பால் சுரந்தது. அந்தப் பாலைக் கையில் ஏந்தித் தன் சக்திகள் முழுமையையும் பாபாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தார்.

பின்பு அமைதி கொண்டவராகப் பெருமாளுக்குப் பூஜை செய்தார். பூஜை முடிந்தது. பாபாவுக்கு விடைகொடுத்து மேற்கு நோக்கிச் செல்லுமாறு பணித்தார். பாபா கிளம்பியதும் தன் ஜீவனை அந்த வேங்கடவனின் திருவடியில் ஐக்கியமாக்கிக்கொண்டார்.

பிற்காலத்தில் கோபால்ராவ் பற்றிக் குறிப்பிடும் பாபா, ‘அதீதமான பக்தி மூலம் அவர் வேங்கடேசப் பெருமாளாகவே மாறிவிட்டார்’ என்று சொல்லி அவரை ‘வெங்கூசா’ என்றே குறிப்பிடுவார். குருவின் கட்டளையை ஏற்று சாயி வந்து சேர்ந்த இடம்தான் ஷீர்டி.

(தரிசனம் தொடரும்)

பாபாவும் நானும்...

“எங்கள் குடும்பத்தையே வழிநடத்தும் இயக்குநர் பாபாதான் என்போம். நாங்கள் நைவேத்தியம் செய்யும் பழங்கள், உணவுகளைக்கூட ஏற்றுக்கொள்பவர் பாபா. எல்லா உணவுகளும் அவருக்குப் படைத்தால் அது நிச்சயமாகக் குறைந்திருக்கும்.

வீரமணி ராஜு
வீரமணி ராஜு

ஒருமுறை ருத்ராட்சம் அணிந்த மாதிரியான ஒரு பாபா படம் எனக்கு அன்பளிப்பாக வந்தது. `நான் சித்திரம் வடிவில் இருந்தாலும் அங்கும் உயிர்ப்போடுதான் இருப்பேன்' என்பது பாபாவின் வாக்கு என்பதால் பாபாவிடம் அவர் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை வேண்டுமென்று வாய்விட்டே ஆசையோடு கேட்டேன். அருகில் இருந்த என் மனைவி சிரித்தபடி, ‘இதையெல்லாமா கேட்பார்கள்?’ என்றார். அன்று மைசூர் கிளம்பி கச்சேரிக்குச் சென்றுவிட்டேன். கச்சேரியில் என் மொபைலை சைலன்ட்டில் போட்டுவிட்டு கச்சேரியைத் தொடங்கினேன். கச்சேரி முடிய நள்ளிரவு 12 ஆனது. மொபைலைப் பார்த்தால் வீட்டிலிருந்து 13 மிஸ்டு கால். பதறிப்போய் கால் செய்தேன். எதிர்முனையில் என் மகள், “நான்தான் சொல்வேன்” என்று மொபைலைப் பிடுங்கி "பாபா படத்திலிருந்து ருத்ராட்ச மாலை விழுந்திருக்கிறது'’ என்று மகிழ்ச்சியில் கூவினாள். சிலிர்த்துப்போன நான் மறுநாள் கிளம்பி அந்த மாலையை பயபக்தியோடு எடுத்தேன். 108 ருத்ராட்சம் கொண்ட புனித மாலை அது. பாபாவின் பிரசாதம் இது, இதை எப்படி அணிவது என்று பெட்டியில் வைத்து பாபா காலடியில் வைத்து விட்டேன். அன்று இரவு கனவில் வந்த பாபா 'நீ அணிந்து கொள்ளத்தானே நான் கொடுத்தேன்' என்று செல்லமாகக் கடிந்துகொண்டு மறைந்தார். அன்றிலிருந்து அந்த மாலை என் நெஞ்சில் எப்போதும் கவசமாக இருந்து காத்துவருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதிலும் என்னோடு பாபா தொடர்பிலேயே இருக்கிறார். ஒருநாள் அவருக்குப் பிரசாதம் வைக்கவில்லை என்றாலும் எனக்குத் தெரியவைத்துவிடுவார். நமக்கு உயிர் இருக்கிறதா என்று யாரிடமாவது நாம் கேட்போமா... அப்படித்தான் பாபாவும்! நம்புபவர்களுக்கு எப்போதும் எங்கேயும் அருளிக்கொண்டே இருப்பார்”

- மு.ஹரிகாமராஜ்

மனக் கவலை மாற்றிய மகான்

எனக்கு 25 வயது ஆனபோது என் தாய் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். என்னால் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபடமுடியவில்லை. அந்த அளவிற்கு மனக்கஷ்டம். பெரும் நஷ்டம். வங்கிகள், கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தார்கள். தற்கொலை எண்ணம் அதிகரித்தது.

sai baba
sai baba

அப்போதுதான் நண்பன் ஒருவன் ஒரு சாய்பாபா கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். அந்தத் தருணத்தில் மனம் புத்துணர்ச்சி கொண்டது. புதிய உற்சாகமும் நம்பிக்கையும் பிறந்தது. இப்போது 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. வணிகம் மீண்டும் செழித்துவிட்டது. வாழ்க்கை வளமாகிவிட்டது. மனதில் கவலை என்ற எண்ணமே எழுவதில்லை. காரணம் அது முழுமையும் சாயியே நிறைந்திருக்கிறார்.

- கார்த்தி, பழநி

வாசகர்களே!

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.