Published:Updated:

இறைத்தூதரின் தியாகங்களை நினைவூட்டும் பக்ரீத் பெருநாள்! #Bakrid

பக்ரீத் பெருநாள்
பக்ரீத் பெருநாள் ( freepik )

இறைத்தூதரின் தன்னலமற்ற தூயவாழ்வைப் போற்றும் தியாகத் திருநாள் பக்ரீத்! #Bakrid

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹஜ்ஜுப் பெருநாள் (பக்ரீத்) எனப்படும் இந்தப் பண்டிகையின் இன்னொரு பெயர் தியாகத் திருநாள். மகத்தான ஓர் இறைத்தூதரின் மறக்க முடியாத தியாகங்களை நினைவூட்டும் திருநாள். அந்த மகத்தான இறைத்தூதரின் பெயர் இப்ராஹீம் (அலை) என்பதாகும். அவர் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிலுள்ள ‘உர்’ எனும் ஊரில் பிறந்தார்.

பக்ரீத்
பக்ரீத்
freepik

இளம்வயதிலேயே இறைஞானம் வழங்கப்பட்ட குழந்தையாகத் திகழ்ந்தார். அவரின் குடும்பம் உருவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்தது. அவரின் தந்தை ஆஸர் ஊரின் தலைமைக் குருவாக இருந்தார். ஆனால், ஞானக்குழந்தை இப்ராஹீமின் இதயமோ இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் படைத்த ஆதி அந்தமில்லா ஏக இறைவனைப் பற்றி அறியத் துடித்தது.

மனிதர்கள் உருவாக்கும் உருவங்கள் எப்படி இறைவனாக முடியும்? இறைவனுக்குக் குறிப்பிட்ட உருவத்தை உருவாக்க முடியுமா என்றெல்லாம் சிந்தித்துக் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். இதையடுத்து தந்தைக்கும் மகனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது, `இப்ராஹீமே... குடும்பம், முன்னோரின் வழிபாடுகளை நீ எதிர்ப்பதாக இருந்தால் இனி இங்கே உனக்கு இடமில்லை, கல்லால் அடித்துக் கொல்வேன்' என்றார் தந்தை.

பக்ரீத் பெருநாள்
பக்ரீத் பெருநாள்
freepik

`தந்தையே உங்களுக்கு ஸலாம். தங்களுக்காக நான் இறைவனிடம் இறைஞ்சுவேன்' என்று சொல்லிய இப்ராஹீம் வீட்டை விட்டு வெளியேறினார். அன்று தொடங்கியது இப்ராஹீமின் இணையற்ற தியாக வாழ்வு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘பேரண்டத்தைப் படைத்த இறைவனையே வழிபடுங்கள்... அவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள்' எனும் பரப்புரையை அவர் முன்னெடுத்ததால் தந்தை எதிர்த்தார். அத்துடன் ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்த்தது, சமுதாயமும் எதிர்த்தது. இதற்கு அடுத்ததாக நாடாளும் மன்னரின் கோபத்துக்கும் ஆளானார் இப்ராஹீம். ஆனாலும், தம் கொள்கையில் உறுதியாக நின்றார்.

பக்ரீத் பெருநாள்
பக்ரீத் பெருநாள்
freepik

இதனால்`தீக்குண்டம் ஒன்றைத் தயார் செய்து இப்ராஹீமை அதில் தூக்கி எறியுங்கள்' என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்ராஹீம் நெருப்பில் வீசப்பட்டார். ஆனால், இறைவனின் அருளால் காப்பாற்றப்பட்டார். இந்தச் சோதனைகள், துயரங்கள் போதாதென்று இன்னொரு பெரும் சோதனை அவருக்குக் காத்திருந்தது. திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தள்ளாத வயதில் ‘இஸ்மாயீல்’ எனும் திருமகனை அருளினான் இறைவன்.

தள்ளாத வயதில் மகன் பிறந்தானே எனும் இப்ராஹீமின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தம் அன்பு மகனை, ஆசை மகனை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதுபோல் கனவு கண்டார். அதையும் நிறைவேற்றத் தயாராகிவிட்டார். ஆம், இறைவனுக்காகத் தம் மகனையே அறுத்துப் பலியிட முன்வந்தார். இறைவன் 'நரபலி வேண்டாம்' என்று அவரைத் தடுத்து நிறுத்தினார். (அதன் நினைவாகத்தான் இன்று கால்நடைகளை அறுத்துப் பலியிடுகிறார்கள். இறைச்சியை ஏழை எளிய மக்களுக்குத் தானமாக வழங்குகிறார்கள்.)

பக்ரீத் பெருநாள்
பக்ரீத் பெருநாள்
freepik

இதையடுத்து இறைவனின் கட்டளைக்கு ஏற்ப தம் மனைவியையும் மகனையும் ஆள் நடமாட்டமில்லாத மக்கா நகரில் தனியே விட்டுவிட்டு வந்தார். ஏகத்துவக் கொள்கையைப் பரப்புவதற்காக பல நாடுகளைச் சுற்றி வந்தார். மக்காவில் தம் மகன் இஸ்மாயீலுடன் இணைந்து கஅபா ஆலயத்தைக் கட்டினார்.

அந்த இறையில்லத்தை தரிசிக்க வரும்படி உலக மாந்தர்களுக்கு அழைப்பு கொடுத்தார். வழிபாட்டுக்காக வரும் மக்களுக்காக அந்த ஆலயத்தைத் தூய்மையுடன் பராமரித்து வந்தார். அவர் அந்த ஆலயத்தில் நின்று தொழுத இடத்தை `மகாமே இப்ராஹீம்' என்பார்கள். அந்த இடத்தை இன்றைக்கும் ஹாஜிகள் தரிசிக்கின்றனர். அங்கு நின்று தொழுகின்றனர்.

பக்ரீத் பெருநாள்
பக்ரீத் பெருநாள்
freepik

இவ்வாறு இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) தம் வாழ்க்கை முழுவதையும் இறைவனுக்காகவே அர்ப்பணித்தார்.

திருமறை குர்ஆனில், `இப்ராஹீமை அவருடைய இறைவன் சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். அவர் அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்துவிட்டார்' (குர்ஆன் 2:124) என்று கூறப்பட்டுள்ளது. இறைத்தூதர் இப்ராஹீமின் தன்னலமற்ற தியாகங்கள் நிறைந்த தூய வாழ்வை நினைவுகூரும் வகையில்தான் உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் இந்தப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

பக்ரீத் பெருநாள்
பக்ரீத் பெருநாள்
Vikatan

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

- சிராஜுல்ஹஸன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு