புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

திருவரங்க பாசுரங்கள்!

ஶ்ரீதிருமால் - ஶ்ரீமகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீதிருமால் - ஶ்ரீமகாலட்சுமி

தொகுப்பு: சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன்

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் தலம் ரங்கம். பெயர், கோயில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம், மற்றும் பலகாரங்கள் அனைத்தும் ‘பெரியது’ என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இத்தலத்துக்கு மட்டுமே உண்டு. மார்கழி வைபவங்கள், மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவால் ஏற்றம் பெற்ற இத்தலத்தைப் போற்றி ஆழ்வார் பெருமக்கள் அருளிய பாசுரங்கள், உன்னதமானவை.

புண்ணியம் தரும் மார்கழி மாதத்தில், வீட்டில் தீபங்கள் ஏற்றி வைத்து, பெருமாளுக்கு துளசி சமர்ப்பித்து அந்தப் பாசுரங்களைப் பாடி வழிபட்டால், சகல நன்மைகளும் உண்டாகும். அந்த அற்புத பாசுரங்களில் சில உங்களுக்காக...

திருவரங்க பாசுரங்கள்!

`வணங்கும் நாள்...’

இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத்

தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த

துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால்

தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த

மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ

மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென்

மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே.

- குலசேகரப்பெருமாள்

கருத்து: தும்புருவும் நாரதரும் இணையில் லாத இன்னிசை எழுப்பித் துதிக்க, ஒப்பற்ற தொன்மையான மறை தோத்திரங்களால் பிரம்மனும் இடைவிடாமல் தொழுது வணங்கிட, ரத்னமயமான மாடமாளிகைகளைக் கொண்டதும் ஐஸ்வர்யம் நிறைந்ததுமான திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கிறார் திருவரங்கநாதர். அவரை என் சிரம் பணிந்து வணங்கிடும் நாள் என்றோ?

சூழ்புனல் அரங்கத்தான்

மேம்பொருள் போக விட்டு

மெய்ம்மையை மிகவு ணர்ந்து,

ஆம்பரி சறிந்து கொண்டு

ஐம்புல னகத்த டக்கி,

காம்புறத் தலைசி ரைத்துன்

கடைத்தலை யிருந்து வாழும்

சோம்பரை உகத்தி போலும்

சூழ்புனல் அரங்கத் தானே.

- தொண்டரடிப் பொடியாழ்வார்

கருத்து: காவிரி சூழ்ந்த கோயிலிலே கண் வளர்ந்தருளும் பெருமாளே! லெளகிக விருப்பங்களை விலக்கி, மெய்ம்மையான ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து `ஆம் பரிசு’ இதுவே என உணர்ந்து, ஐம்புலன்களையும் அடக்கி, தலைக்குச் சுமையான கர்வம், அகங்காரம் முதலானவற்றைத் தொலைத்து, உமது திருவடி யைப் போற்றி, உம்முடைய ஆலயத் தலைவாயிலே கதியாகக் கிடக்கும் அடியார்களை உவந்து ரட்சிக்கும் இறைவன் நீங்களே.

திருமாலைப் பாசுரங்களில் விசேஷமான இதை, `ரத்தினம்’ எனப் போற்றுவார்கள். இந்தப் பாசுரத்தைப் பாடி வழிபட, வைகுந்த வாசம் கிட்டும் என்பது நம்பிக்கை.

குழலழகர் வாயழகர்

‘எழிலுடைய அம்மனைமீர்

என் அரங்கத்து இன்னமுதர்

குழலழகர் வாயழகர்

கண்ணழகர் கொப்பூழில்

எழுகமலப் பூவழகர்

எம்மானார் என்னுடைய

கழல்வளையைத் தாமும்

கழல்வளையே ஆக்கினரே!’

- ஆண்டாள்

கருத்து: அழகுமிக்க தாய்மார்களே! என் அரங்கத்தின் இனிமையான அமுதர், முடி அழகர் ஆவார். அதேபோல் அவர் வாய் அழகர்; கண் அழகரும்கூட. தமது நாபியிலிருந்து எழும் கமலப் பூவைக் கொண்ட அழகர். அப்படியானவர் என் கழல் வளையலை கழன்று விழும் வளையல் ஆக்கிவிட்டாரே!

ரங்கநாதரின் அழகே அழகு! அந்த திவ்ய ரூபத்தில் மயங்கி இளைத்து, `தன்னுடைய அழகான வளைகளும் கழன்று விழுமாறு செய்துவிட்டாரே’ என்று புலம்புகிறாள் கோதை. இந்தப் பாடலைப் பாட பெண்களுக்குத் திருமண வரம் கிட்டும் என்பர்.

திருவரங்க பாசுரங்கள்!

`ஆய்மகள் அன்பனே!’

‘என் திருமகள் சேர் மார்வனே!

என்னும் என்னுடை ஆவியே என்னும்,

நின் திரு எயிற்றால் இடந்து நீ

கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்,

அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட

ஆய்மகள் அன்பனே! என்னும்,

தென் திருவரங்கம் கோயில் கொண்டானே!

தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே!

- நம்மாழ்வார்

நம்மாழ்வார், தம்மைப் பெண்ணாகப் பாவித்து திருவரங்கன் மீது பக்தியும் காதலும் கொண்டு கசிந்துருகி அருளிய பாசுரம் இது.

கருத்து: திருமகளை வலது மார்பில் தரித்த மாதவனே, என் உயிரைப் போன்றவரே, வராஹ அவதாரம் எடுத்து ரட்சித்துப் பூமகளை மணந்த இறைவனே, வலிய ஏழு எருதுகளை அடக்கிய

தோடு - நீவிர் ஆட்கொண்ட நப்பின்னையின் அன்பனே, திருவரங்கத்தில் பள்ளி கொண்ட நாயகனே... இந்தப் பேதைக்கு என்னவாகும் அறியேனே!

`என்னுடைய திருவரங்கர்’

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள்

ஆகிலும் சிதகுரைககுமேல்,

என்னடியார் அது செய்யார்; செய்தாறேல் நன்று

செய்தார் என்பர் போலும்,

மன்னுடைய விபீடண ற்கா மதில் இலங்கை

திசை நோக்கி மலர் கண் வாய்த்த,

என்னுடைய திருவரங்கற்கன்றியும்,

மற்றொருவருக்கு ஆள் ஆவாரே!

- பெரியாழ்வார்

கருத்து: தன் அடியவர்கள் விஷயத்தில், பெரிய பிராட்டியாரே குற்றங்களைக் கணக்கிட்டுச் சொன்னாலும், `என் அடியார்கள் அக்குற்றங் களைச் செய்யமாட்டார்கள். நன்றே செய்பவர்கள்’ என்று கூறி ரட்சிப்பவரும், விபீஷணருக்காக கண்மலர்களால் இலங்கையை நோக்கிய வண்ணம் அருள்பவரும் ஆகிய பெரிய பெருமாளைத் தவிர வேறு எவருக்கும் ஆட்படுவோர் உண்டோ.

திருவரங்க பாசுரங்கள்!

`கடல் வண்ணர்’

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்

பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,

எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள்

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்

மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்

மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே

கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய்

கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே?

- திருமங்கை ஆழ்வார்

கருத்து: `பட்டு உடுத்திய அழகை இழக்கக் கூடாது எனும் எண்ணம் கொண்டு நாயகன் தன்னைக் காண வருவான்’ என்று பட்டு உடுத்திக் காத்திருந்த பெண், அவன் வராததால் தவித்தாள். அவள் உறங்கவில்லை. நொடிப்பொழுதும் தாயின் மடியில் படுக்கவில்லை. `எம்பெருமானின் திருவரங்கம் எங்கே இருக்கிறது’ எனக் கேட்கிறாள்.

பரகால திருத்தாயார் தன் மகளின் நிலை கண்டு கலங்கி `இதற்கு என்ன காரணம்?’ என குறி சொல்லும் பெண்ணிடம் கேட்க, அவள் `இது எம்பெருமான் படுத்தும்பாடு’ என்று சொல்லும் பாவனையில் அமைந்த பாடல் இது.

`மன்னுசீர் அரங்கமே’

‘வெண்திரைக் கருங்கடல் சிவந்துவேவ முன் ஒர் நாள்

திண்திறற் சிலைக்கைவாளி விட்டவீரர் சேரும் ஊர்

எண் திசைக் கணங்களும் இறைஞ்சிஆடு தீர்த்த நீர்

வண்டுஇரைத்த சோலை வேலி மன்னுசீர் அரங்கமே!

- திருமழிசை ஆழ்வார்

கருத்து: வெள்ளை நுரையைக் கொண்ட கரிய கடலானது, வானர சேனைகளால் தாக்குண்ட அசுரர்தம் குருதி கலந்ததால் சிவந்து போக, முன்பொரு நாள் திண்மையான வில்லைக் கொண்டு அம்பு தொடுத்த வீரர்களான ராமனும் லட்சுமணனும் வந்து சேரும் ஊர்; எண்திசை பூதங்களும் விரும்பி தீர்த்தமாடும் ஊர், வண்டுகள் ரீங்காரம் இடும் சோலைகள் நிறைந்த திருவரங்கம் ஆகும்.

திருவரங்க பாசுரங்கள்!

`சிவந்த ஆடையின்...’

‘உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற

நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை

கவர்ந்த வெங்கணைக்காகுத்தன்

கடியார்பொழில் அரங்கத்தம்மான் அரைச்

சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே!’

- திருப்பாணாழ்வார்

கருத்து: த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது, பேதமின்றி அனைவரின் சிரத்திலும் தம் திருவடி யைப் பதித்தருளி, மூவுலகையும் அளந்த இறைவனும், அசுரரையெல்லாம் வென்ற ராமனுமாய்... மணம் வீசும் சோலைகளைக் கொண்ட திருவரங்கத்தில் அருளும் எம்பெரு மானே... உம்முடைய இடுப்பில் சாற்றப்பட்டுள்ள திவ்யமான சிவந்த பீதாம்பரத்தின் மீது என் சிந்தை பதிந்தது!

`இன்று மறப்பேனோ’

‘ஒன்றும் மறந்தறியேன்

ஓதநீர் வண்ணனைநான்

இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று

கருவரங்கத் துட்கிடந்து

கைதொழுதேன் கண்டேன்

திருவரங்க மேயான் திசை!’

-பொய்கையாழ்வார்

கருத்து: எதையும் மறந்துவிடவில்லை; கடல்நீர் வண்ணம் கொண்ட இறைவனை இன்று நான் மறப்பேனோ. அன்று கருவில் இருக்கும்போதே கைதொழுதேன்; கண்டேன் திருவரங்கத்தில் உள்ள அவன் திசையை!