திருக்கதைகள்
Published:Updated:

சோம வார விரதம் வழிபடுவது எப்படி?

சோம வார விரதம்
பிரீமியம் ஸ்டோரி
News
சோம வார விரதம்

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

? சோமவார விரதத்தின் சிறப்புகள் என்ன?

விரதங்கள் நமக்கு ஒரு நிலையைத் தந்து அனைத்து காரியங்களிலும் நம்மை வெற்றியடையச் செய்யக்கூடியன. அப்படி, உன்னதபலன்கள் தரும் விரதங்களில் சோமவார விரதமும் ஒன்று. இந்த விரதம் மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது.

சோம வார விரதம்
சோம வார விரதம்


உலகில் நாம் அனுபவிக்கும் நன்மைகளும் தீமைகளும் நம்மு டைய முன்ஜன்ம வினைகளால்தான் ஏற்படுகின்றன. இதை அறிந்து கொண்டால், நாம் செய்யும் பூஜைகளால் நமக்கு வரக்கூடிய பயன் களை உயர்வாகவே கருதுவோம்.

ஏனெனில் நாம் முற்பிறவிகளில் என்ன செய்தோம், எப்படி இருந்தோம் என்ற விவரங்கள் எவருக்கும் தெரியாது. எவ்வளவு பிறவிகள், எந்தப் பிறவியில் என்ன செய்தோம் என்ற கணக்கு எல்லாம்வல்ல ஈஸ்வரனுக்கு மட்டுமே தெரியும். `ஈசான: ஸர்வ வித்யானாம் ஈஸ்வர: ஸர்வ பூதாநாம்’ என்று சிவபெருமானைப் போற்றுகிறது வேதம். ஆம், அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவன் அவர்தானே! அதுமட்டுமல்ல... உலகத்தில் உள்ள அனைத்து விதமான கலைகளுக்கும் அவரே தலைவர்.

`சிவம்’ - அனைத்துவிதமான நன்மைகளின் ஊற்று. நாம் அவரிடம் இருந்தே வந்திருக்கிறோம்; அவரிடமே செல்ல இருக் கிறோம். உலகத்திற்கு எல்லாம் காரணம் அவர்தான். ஆதலால் அவரைச் சரணடைந்து, அவரின் குழந்தைகளாகக் கருதி நம்மை அவரிடம் அர்ப்பணிப்போம் எனில், நம்மைப் பார்த்துக் கொள்வது அவரின் கடமை.

ஒரு பேருந்தில் ஏறி நாம் அமர்ந்தால் போதும். அந்தப் பேருந்து செல்லவேண்டிய இடத்துக்கு நம்மைக் கொண்டு சேர்த்து விடும். அப்படி, சிவபெருமானிடம் நம்மை அழைத்துச் சென்று அவரிடம் நம்மை நாம் அர்ப்பணிக்க உதவுவது சோமவார விரதத்தின் சிறப்பாகும்.

? சோம வாரம் - விரதத்தின் இந்தப் பெயருக்குக் காரணம் என்ன?

`வாரம்’ என்றால் கிழமை; சோம வாரம் என்பது திங்கள்கிழமை. ஒவ்வொரு கிரகத்துக்கு ஒரு நாள் எனும்படி வாரத்தின் 7 நாள்கள் சூரியன் முதல் சனி வரையிலும் 7 கிரகங்களுக்கு உரியதாகின்றன. ராகு, கேது எனும் சாயா கிரகங்கள் இரண்டுக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் எனும்படி அவற்றுக்கும் உரிய காலத்தை எல்லாம்வல்ல பரமேஸ்வரன் அருளியுள்ளார்.

சோமவாரம் என்பது திங்கள்கிழமை. சந்திரனுக்கு உரிய நாளாகக் குறிப்பிடப்படுகிறது. `சோம’ என்பது சந்திரனின் பெயர். நமது மனது நிலையானதாக இருந்தால்தான் நம்மால் அனைத்துக் காரியங்களையும் சரியாகச் செய்ய முடியும். அதற்குக் காரணமானவர் சந்திரன்.

`மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ: சுக துக்கயோ:’ என்று கூறுவார்கள். `மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்கவேண்டாம்’ என்றும் கூறுவார்கள். நம்முடைய இன்பத் திற்கும், துன்பத்திற்கும், மோக்ஷத்திற்கும் உரிய காரணம் நம் மனதுதான். அந்த மனதை நாம் சரியாக வைத்திருந்தோமானால், இந்த உலகத்தில் நம்மால் சாதிக்க முடியாதது என்று ஒன்றுமில்லை. அவ்வகையில் மனத்தை இயக்கும் மகத்தான ஆற்றலைத் தரக்கூடியது இந்தச் சோமவார விரதம்.

? சோம வாரத்தில் சிவபெருமானை வழிபடுவது ஏன்?

`சோமன்’ என்று சிவபெருமானையும் குறிப்பிடுவார்கள். ஆம்! சிவபெருமான் தன் தலையில் சந்திரனைச் சூடிக்கொண்டிருக்கிறார். ஆகவே அவர் சோமசேகரர், சந்திரசேகரர் என்றெல்லாம் போற் றப்படுகிறார். அதுமட்டுமன்றி `சோமாஸ்கந்தர்’ என்ற ரூபத்தில் - சிவனும் சக்தியும் கந்தனும் சேர்ந்து திகழும் வடிவிலும் நாம் அவரை வழிபடுகிறோம். ஆதலால் சிவ-சக்தியைக் குறிக்கக்கூடிய சொல்லாகவும் இது விளங்குகிறது. `உமயா ஸஹ’ என்றால் உமையு டன் கூடிய சிவபெருமான் என்று அர்த்தம். `ஸோமா’ எனில் ஓம்காரத்தையே குறிப்பது ஆகும்.

ஆம், இவ்வுலகம் முழுவதும் சிவனும் சக்தியுமாகவே விரிந்திருக் கிறது. அவை இரண்டும் பிரிக்க முடியாதவை. அவற்றை நாம் உணர்வதால் நம்முடைய ஆற்றல் பெருகும்.

சிவனும் சக்தியும்
சிவனும் சக்தியும்


? இந்த விரத நாளில் நாம் எப்படி வழிபட வேண்டும்?

திங்கள்கிழமை அவரவர் தங்களுக்கு இயன்றபடி உணவைக் குறைத்துக்கொண்டு, வீண் வார்த்தைகளைப் பேசாமல், பொழுது போக்கு நிகழ்வுகளில் எல்லாம் மனதைச் செலுத்தாமல், சிந்தை முழுக்க சிவபெருமானை நினைத்துக் கொண்டிருப்பதுதான் இந்த விரதத்தின் சிறப்பம்சம்.

மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்ளலாம். உடல்நலம் குன்றியவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள், மருந்து உட் கொள்பவர்கள் தங்களின் தேகநலனைப் பார்த்துக்கொள்வது முக்கியம். அவர்கள் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இந்து மதம் எந்தக் காரணத்தைக் கொண்டும் உடலை வருத்திக்கொண்டு எந்தக் காரியத்தையும் செய்ய அனுமதிப்பதில்லை. ஆகவே, தங்களால் இயன்றளவு விரத நியதி களைக் கடைப்பிடிக்கலாம்.

சிவபெருமானின் பன்னிரு திருமுறைகள், துதிகளைப் பாரா யணம் செய்தும், சிவபெருமானின் பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டும் அவரையே நினைத்துக்கொண்டு அந்த நன்னாளைக் கழிக்கவேண்டும்.

சிலர் சிறப்பாக `சாம்ப பரமேஸ்வரர் பூஜை’ எனப்படும் சிவபெருமானையும் சக்தியையும் இணைத்துப் பூஜிக்கும் வழிபாட் டைச் செய்யும் வழக்கமும் உண்டு. மற்றவர்கள் அவரவர் வழக்கப் படி சிவனாரை வணங்கினால் போதுமானது. அவருக்கு உரிய மந்திரங்களை - 108 அர்ச்சனைகளைச் சொல்லி மலர்களைச் சமர்ப்பித்துப் பூஜை செய்யலாம்.

விரிவான வழிபாடுகள் செய்ய இயல வில்லையா, கவலையே வேண்டாம் மனதார `சிவ சிவா’ என்று கூறினாலே போதுமானது. `சிவ’ என்பது சிவபெருமானையும், `சிவா’ என்பது பார்வதியையும் குறிக்கும். ஆக, இருவரின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்.

? இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்தச் சோமவார வழிபாட்டில், நாம் விரதமிருந்து, சிவ பெருமானை தரிசித்து, பிறகு உணவு உட்கொள்ளும்போது, நம் மனம் செம்மைப்படும். மட்டுமன்றி, நமக்குள் ஒரு வைராக்கியமும் ஏற்படும். ஆம், வேண்டிய பொருள்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுதான் வைராக்கியம். பலநேரம் நாம் தவறு செய்கிறோம். காரணம், வேண்டிய பொருள்கள் என நினைத்து மற்றவர்களின் உடமைமீது ஆசைப்படுகிறோம்.இத்தகைய ஆசையை நாம் மறுத்துவிட்டோம் எனில், இன்பம் நிலையானதாக இருக்கும் அல்லவா? ஆக, வைராக்கியத்தை நமக்குள் விதைத்துத் தேவையற்ற ஆசை களை விலக்கி, நிலையான இன்பத்தை வரமாக அளிக்கவல்லது சோமவார விரதம்.

இந்த வழிபாட்டின் மூலம் நம் மனம் ஒருநிலைப்படும்; சிந்தனை சிறக்கும்; செயல்கள் வெற்றிபெறும். இகபர சுகங்களை அளிக்கும். பிரிந்தவர்கள் மனத் தடைகள் நீங்கி ஒன்றுசேர்வார்கள். ஆகவே, நாமும் இந்த சோமவார விரதத்தை கடைபிடித்து அனைத்து நன்மைகளையும் அடைவோமாக!

- பதில்கள் தொடரும்...