Published:Updated:

பெங்களுருவில் குகைலிங்க தரிசனம்!

நித்ய கல்யாணி
பிரீமியம் ஸ்டோரி
News
நித்ய கல்யாணி

வாசகர் அனுபவம்

என் பெயர் நித்யகல்யாணி, பெங்களூருவில் வசிக்கிறேன். கொஞ்ச நாள்களுக்கு முன்பு என் நெருங்கிய தோழியின் தாயார் பெங்களூருவுக்கு வந்திருந்தார். அவரை ஏதேனும் விசேஷமான கோயிலுக்கு அழைத்துச் செல்லலாமே என்று விரும்பினேன்.

கவிபுரம் கோயில்
கவிபுரம் கோயில்

கவிபுரம் எனு பகுதியில் சிவனார் அருளும் பழைமையான குகைக்கோயில் ஒன்று உண்டு. நானும் அந்தக் கோயிலை தரிசித்தது இல்லை. ஆகவே அங்கேயே சென்று வரலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் பாருங்கள்... எதிர்பாராத விதமாக மழை ஆரம்பித்து வலுத்தது.

என் தோழியின் அம்மாவோ வயதானவர்; அவருக்கு மூட்டுவலி வேறு உள்ளது. ஆக, அவரை இந்தப் பெருமழையில் எப்படி அழைத்துச் செல்வது... `இறைவா! இது என்ன சோதனை... கருணை காட்டமாட்டாயா’ என மனதுக்குள் வேண்டிக்கொண்டு, ஆயத்த வேலைகளில் இறங்கினேன். என் பிரார்த்தனை பலித்தது. பெரிதாகத் தொடங்கிய மழை, நாங்கள் புறப்படும் நேரத்தில் நின்றுவிட்டது. மகிழ்ச்சியோடு புறப்பட்டோம்.

கோபுர தரிசனம்
கோபுர தரிசனம்
குகைப் பிரவேசம்
குகைப் பிரவேசம்
குகை
குகை
குகை கோயில்
குகை கோயில்


பெங்களூருவின் மையமாகத் திகழும் இடம் கவிபுரம். கோயில் ஒரே பாறையில் இயற்கையாக அமைந்துள்ளது. நுழைவாயிலில் வெளி மண்டபத்தில் திகழும் நான்கு தூண்கள் நம் கருத்தைக் கவர்ந்தன.

இரண்டு தூண்கள் அளவில் சிறியது; மற்ற இரண்டும் பெரியவை. விசாரித்தால்... எதிரெதிரில் அமைந்துள்ள பெரிய தூண்களை சூரிய பாணம், சந்திர பாணம் என்கிறார்கள். சிறிய தூண்கள் இரண்டும் சிவனாரின் அம்சமான உடுக்கையையும் திரிசூலத்தையும் கொண்டுள்ளன. நடுவில் கொடிமரமும் நந்தியும் உள்ளன. இங்கிருந்து நோக்கினால் மண்டபத்துக்கு நேர் எதிரில் சிவன் சந்நிதி.

இந்தத் தூண்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. கோடை காலத்தில் அந்திப் பொழுதில் மேற்குத் தூணின் நிழல் மிகச் சரியாக கிழக்குத் தூண் மீது விழும். குளிர் காலத்தில் உதயத்தில் கிழக்குத் தூணின் நிழல் மேற்குத் தூணில் விழுமாம். வானியல் ஆய்வாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அற்புதம் இது என்கிறார்கள்!

விநாயகர்
விநாயகர்


குகைக்குள் நுழையுமுன் புராண மகிமையைத் தெரிந்துகொள்வோம்.

திரேதா யுகத்தைச் சேர்ந்த கோயில் இது. லிங்கமும் நந்தியும் சுயம்புவாம். கெளதமர், பரத்வாஜர் ஆகிய மகரிஷிகளால் பூஜிக்கப் பட்டவை. மூலவர் கங்காதரேஸ்வரர்; அம்பாள் பர்வதவர்த்தினி.

கோயிலில் இரண்டு சுரங்கப் பாதைகள் உள்ளன. ஒன்று காசிக்கும் மற்றொன்று கர்நாடக மாநிலத்தில், தும்கூரில் உள்ள சிவகங்கை எனும் தலத்துக்கும் செல்வதாக நம்பிக்கை. கெளதமரும் பரத்வாஜரும் தினமும் காலையில் காசி தரிசனம் முடித்துவிட்டு சுரங்கம் வழியே வந்து உச்சிக்காலத்தில் கங்காதரேஸ்வரரை வழிபடுவார்களாம். பின்னர் மற்றொரு சுரங்கத்தின் மூலம் சிவகங்கை சென்று அங்கே மாலை வழிபாடு நடத்துவார்களாம். இப்படி திரிகால பூஜை முடித்ததும் மீண்டும் சுரங்கங்களின் வழியே காசிக்குத் திரும்புவார்களாம். இதற்குச் சான்றாக ஒரு பாடலும் உண்டு என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

குகைக்குள் ஈசனின் தரிசனத்தை கண்குளிர அகம் மலர தரிசித்தோம்.

அங்கே பூஜைகள் நடத்திவரும் குருக்கள் சிவனாரின் மகிமையைப் பகிர்ந்துகொண்டார். ‘மூன்று யுகங்களைக் கடந்த இந்த லிங்கம் சீதள லிங்கம் என்று சிறப்பிக்கப்படுகிறது. லிங்கத்துக்கு அடியில் விஸ்மய ஜல நீரோடை ஓடுவதால், லிங்கத் திருமேனி எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். ஸ்வாமியின் திருமேனியில் பூணூல் இயற்கையாகவே அமைந்திருப்பது வியப்பு.

இங்கு ஈசன் தெற்கு நோக்கி அருள்கிறார். அபூர்வமான அமைப்பு இது (தமிழகத்தில் ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறையில் மட்டுமே தெற்கு நோக்கி அருள்கிறார்). சுவாமிக்கு வலப்பக்கம் தட்சிணா மூர்த்தியை தரிசிக்கலாம். சிவாலயங்களில் பெரும்பாலும் அம்பாள் வலப்புறத்தில் இருப்பாள். இங்கே சுவாமிக்கு இடப்புறத்திலேயே அம்பாள் காட்சி தருகிறாள்.

இங்ஙனம் வலப்புறம் தட்சிணாமூர்த்தி இடப்புறம் அம்பாள் திகழ, ஆதிகுருவாகவும் செளம்ய ரூபத்தில் யோக நித்திரையிலும் இருக்கிறார் இந்த ஸ்வாமி. ஆகவே நம் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கும் கேட்கும் வரங்கள் உடனே கிடைக்கும்’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் குருக்கள்.

ஸ்வாமி சந்நிதியைக் கடந்து அம்பாள் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். அந்தப் பாதையில் குகையின் உள்ளளவு உயரம் 3 அடிகளே. குனிந்தபடியேதான் செல்லவேண்டும். அம்பாள் சந்நிதிக்கு முன் பலரும் தியானத்தில் இருந்தனர். நாமும் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து இறையதிர்வை உள்வாங்கினோம்.

அங்கிருந்து மேலும் நகர்ந்தால் பாதை குறுகலாகவும் ஏற்ற இறக்கமாகவும் வளைந்து நெளிந்தும் செல்கிறது. வெளிச்சத்துக்காக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. காலடியில் நீர்க்கசியும் தரை... வழுக்கிவிட்டு விடாமல் கவனமாகச் செல்ல வேண்டி இருந்தது. குகைக்குள் இப்படியான அனுபவம் புதுவிதமாக இருந்ததுடன், மூட்டுவலியுடன் வந்த தோழியின் அம்மா எனக்கும் முன்னதாக வேகமாகச் சென்றது வியப்புதான்.

மேலும் குகைக்குள் செல்லும் வழியில் அக்னிதேவன், விநாயகர், சாமுண்டி, இந்திராணி, தேவி, மகேஷ்வரி என கொள்ளை அழகுடன் திகழும் பல தெய்வ மூர்த்தங்களை தரிசித்தோம்.

பழைமையான இந்தக் கோயில் 16-ம் நூற்றாண்டில் பெங்களூரு ராஜா முதலாம் கெம்பேகௌடாவால் புனரமைக்கப்பட்டதாம். ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு மேல் அழகிய வேலைபாடுள்ள தங்க கோபுரங்கள் அமைந்துள்ளன. பக்தர்கள் குகைக்கு மேலே நடந்து சென்று கோபுர தரிசனம் செய்து, அவற்றை வலம் வரவும் வசதி உண்டு. நாமும் கோபுரங்களை சுற்றி வந்து தொழுதோம்.

நான் சுமார் முப்பது வருடங்கள் பெங்களூருவில் வாழ்ந்தும், இந்தக் கோயிலைப் பற்றி இதுவரை அறிந்திருக்கவில்லை. நம்மை எப்போது ஈசன் அழைக்கிறாரோ அப்போதுதானே நாம் அவரை தரிசிக்கச் செல்ல முடியும் என்பது நூற்றுக்குநூறு உண்மை! என்னுடன் வந்த அம்மையாருக்கும் இந்தக் கோயிலை தரிசித்தது மிகவும் மகிழ்ச்சி.

பெங்களூரு வருபவர்கள் கண்டிப்பாக கவிபுரம் குகைக்கோயிலையும் தரிசியுங்கள் அற்புதமான இறைசக்தியை உணர்ந்து சிலிர்க்கலாம். இந்தக் கோயிலை இங்கே பெங்களூருவில் `GG’ (Gavi Gangadhareshwara ) கோயில் என்பார்கள். பெங்களூரு மைய பேருந்து நிலையத்தில் இருந்து கவிபுரத்துக்கு நிறைய பேருந்துகளும் உண்டு.

சூரியனின் குகைப் பிரவேசம்!

ருடம்தோறும் ஜனவரி மாதம் 14-ம் தேதி, மகர சங்கராந்தி - பொங்கல் தினத்தன்று மாலையில் ஐந்தரை மணியளவில் சூரிய ஆராதனை நிகழ்கிறது. இந்த நேரத்தில் சூரியக் கதிர்கள் வெளிமண்டபத்தின் நந்தியின் கொம்புகளின் வழியாக மூலவரின் மேல் 10 நிமிடங்கள் விழுந்து இறைவனை ஒளிர வைக்கின்றன.

சூரியபகவான் தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயனத்துக்கு மாறும் நேரம் அது. ஆம்! தம்முடைய வடதிசை நோக்கிய பயணத்துக்கு இங்கே இந்த ஈசனிடம் அவர் அனுமதி வாங்கிச் செல்வதாக ஐதீகம். இதை நேரில் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்!