ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ராகு காலத்தில் தீபம் ஏற்றினால் கல்யாண வரம் கிடைக்கும்!

ராகு காலத்தில் தீபம் -
பிரீமியம் ஸ்டோரி
News
ராகு காலத்தில் தீபம் -

வக்கிரகாளியம்மன்!

திருக்கண்களில் அறக்கருணை பொழிய... வாள், கேடயம், கட்டாரி, பாசம், சக்கரம் ஆகிய ஆயுதங்களை ஏந்தி, மறக்கருணையை வெளிப்படுத்த லேசாகத் தலையைச் சாய்த்தபடி தரிசனம் தருகிறாள் அருள்மிகு வக்ரகாளி அம்மன்.

சாதாரணமாக, காளி கோயில் ஊர் எல்லையில் இருக்கும். ஆனால், இந்த அம்பிகையோ சிவாலயம் ஒன்றின் வளாகத்துக்குள் கோயில் கொண்டிருக்கிறாள். இந்த அம்மையும் அருகிலேயே சந்நிதி கொண்டிருக்கும் தீபலட்சுமியும் கல்யாண வரம் தரும் நாயகியராய் அருள்பாலிக்கிறார்கள்.

திண்டிவனம்-புதுச்சேரி பாதையில், மயிலம் தாண்டிச் சிறிது தூரம் சென்றால், பெரும்பாக்கம். அங்கிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருவக்கரை. இந்தத் திருவக்கரையில்தான் சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் வக்ர காளியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள்.

சிவபெருமானை எண்ணித் தவம் செய்து பூஜித்தான் வக்கிராசுரன். அதனால் பற்பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களின் விளைவாகப் பலருக்கும் கொடுமைகள் செய்தான். அவனது கொடுமைகள் தாங்க முடியாமல், பலரும் சிவனாரிடம் சென்று முறையிட்டனர். சிவனாரும் மகாவிஷ்ணுவை அழைத்து, வக்கிரனை வதம் செய்யச் சொன்னார். அதன்படி, வக்கிரன் இருந்த இடத்தை அடைந்த மகாவிஷ்ணு, பெரும் போருக்குப் பின் சக்கராயுதத்தைப் பிரயோகித்து அவனை வதம் செய்தார். வக்கிராசுரனுக்கு துன்முகி என்றொரு சகோதரி. அண்ணனின் அதிகாரம் தந்த ஆணவத்தால், துன்முகியும் பற்பல கொடுஞ் செயல்களைச் செய்தாள். சிவபெருமான், பார்வதி தேவியை நோக்கினார். திருக்கயிலையிலிருந்து புறப்பட்டாள் பார்வதிதேவி.

வக்கிரகாளியம்மன்!
வக்கிரகாளியம்மன்!


துன்முகி அப்போது கருவுற்றிருந்தாள். என்னதான் இருந்தாலும் கர்ப்பிணியாயிற்றே! அவள் தவறு செய்திருந்தாலும், அந்தச் சிசு என்ன பாவம் செய்தது? பார்த்தாள் பார்வதி. துன்முகியின் வயிற்றுச் சிசுவை பத்திரமாக எடுத்துத் தன் காதில் மாட்டிக் கொண்டு, துன்முகியை (இப்போது அவள் கர்ப்பிணி இல்லையல்லவா!) வதம் செய்தாளாம். வக்கிரன் வாழ்ந்த இடம் என்பதால், ‘வக்கரை’ ஆன இந்த இடத்தில், காளியாகி நின்று காட்சி கொடுப்பதால் அம்பாள், வக்கிரகாளி ஆனாள்.

அருள்மிகு சந்திரமெளலீஸ்வரர் கோயில் ஆதித்த சோழனால் நிர்மாணிக்கப்பட்டதாம். அவருக்குப் பிறகும் ராசாதித்தன், கண்டராதித்தன், செம்பியன்மாதேவி ஆகியோரும் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளார்கள் என்கிறது சரித்திரம்.

கோயிலின் ராஜ கோபுரம் தாண்டியதும், வடக்கு நோக்கியுள்ள வக்கிரகாளி அம்மன் சந்நிதியைக் காணலாம். இந்த அம்பிகையின் சந்நிதி வாயிலில் பக்கத்துக்கு இரண்டாக, நான்கு துவாரபாலகியர் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய உள்ளூர்க் கதை நெகிழ்ச்சி தருகிறது.

வக்கிரகாளியம்மன்!
வக்கிரகாளியம்மன்!


நான்கு பேரும் பால் வியாபாரம் செய்தவர்களாம். ஆனால், பாலில் அதிகமாகக் கலக்கப்பட்ட தண்ணீரைத்தான், பால் என்று வியாபாரம் செய்தனராம். மக்கள் முறையிட, மன்னன் வரைக்கும் புகார் சென்றது. மன்னன், நால்வருக்கும் தண்டனை வழங்கினான். மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நால்வருக்கும், இறுதித் தண்டனை சிரச்சேதம்.

தங்களின் கடைசி தருணத்தில் தவற்றை உணர்ந்து நால்வரும் அழுது புலம்பி அரற்றி, காளியை வழிபட்டார்கள். அவர்கள் மீது இரக்கம் கொண்ட காளி, நால்வரையும் தம்முடைய துவார பாலகியராக ஆக்கிக் கொண்டாள் என்கிறார்கள்.

வக்கிரகாளியம்மன்!
வக்கிரகாளியம்மன்!


வக்கிரகாளியம்மன் திருமேனி உள்ளத்தைச் சுண்டுகிறது. லேசாகச் சாய்த்த தலை. கிரீடத்தில் மண்டையோடு. வலக் காதில் சிசுக் குண்டலம். இடக் காதில் ஓலைச்சுருள். வதனத்தில் வசீகர மான புன்னகை. திருக்கரங்களில் ஆயுதங்கள், கபாலங்களையே கோத்து முப்புரி நூலாக அணிந்திருக்கிறாள். கோரைப் பற்கள். பெரிய விழிகள்! `தவறு செய்பவர்களுக்குத் தண்டனை நிச்சயம்’ என உணர்த்தும்விதமாய்த் திகழ்கிறது அன்னையின் உக்ரகோலம். `ஆயினும் கருணையுடன் வரம்பல அருள்பவள் இந்த அம்மன்’ என்று சிலிர்ப்புடன் பகிர்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

காளியின் சந்நிதியிலேயே ஒரு புறம் யோகேஸ்வர லிங்கம். இன்னொரு புறம் வலம்புரி விநாயகர். வக்கிரகாளியம்மனை வழிபட்டால் ராகு-கேது தோஷங்கள் விலகும். அதேபோல் தீவினைகள் நீங்கிடவும், வாழ்வில் தடைகள் நீங்கி வெற்றிபெறவும் இந்த அம்மனை மெய்யுருக வழிபட்டுச் செல்கிறார்கள்.

வக்கிரகாளியம்மன் திருக்கோயிலை அடுத்தாற் போல, தீப லட்சுமி கோயில் உள்ளது. திருமணத் தடை ஏற்பட்டுள்ளவர்கள், ராகு காலத்தில் வக்கிரகாளியம்மனை வழிபட்டு, தீபலட்சுமிக்கு விளக்கேற்றி, மாங்கல்யம் கட்டி வணங்கினால், உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை!