ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

பறவைகள் தேடி வரும்

துளித்துளிக் கடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
துளித்துளிக் கடல்கள்

துளித்துளிக் கடல்கள்

ஜென் துறவி ஒருவர் அடர்த்தியான காட்டுப் பகுதியில் நின்றபடி தவம் செய்துகொண்டிருந்தார். பல வகையான பறவைகள் அவரின் தலையிலும் தோளிலும் அமர்ந்து, எழுந்து பறந்து மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தன!

அவ்வழியே சென்ற சிலர் அந்தத் துறவியைப் பார்த்து வியந்தனர். ‘ஒரு மனிதரிடம் பறவைகள் பயமின்றி இவ்வளவு நெருக்கமாக பழகி விளையாடுமா என்ன? இது நம்ப முடியாத காட்சியாக இருக்கிறதே!’ என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

“பொதுவாக பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயந்து பறந்து ஓடிவிடும். ஆனால், இங்கே உங்கள் மீது உட்கார்ந்து விளையாடு கின்றன, மகிழ்ச்சியாக சிறகடிக்கின்றன. இது என்ன மாயம்?” என்று ஓர் இளைஞன் துறவியை நெருங்கிக் கேட்டான்.

அவர் அவனுக்குப் பதில் சொல்லவில்லை‌. ஒரு மென்மையான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு தவத்தைத் தொடர்ந்தார்‌. பறவைகளும் அவர் மேல் உட்கார்ந்தும் எழுந்து பறந்தும் மகிழ்ச்சியாக விளையாட்டைத் தொடர்ந்தன!

இளைஞன், ‘அவரைப் போலவே தானும் தவமிருந்தால் பறவைகள் தன் மேலும் வந்து அமரும், பறந்து விளையாடும்...’ என்று எண்ணி, சிறிது தூரம் தள்ளிச்சென்று அவரைப் போலவே நின்று கொண்டு தவம் செய்வதைப் போல் கண்களை மூடிக்கொண்டான்.

ஆனால் ஒரு பறவைகூட அவனருகில் வரவே இல்லை. இளைஞன் தான் நின்ற நிலையை மாற்றி உட்கார்ந்து பார்த்தான்; இடத்தை மாற்றி மீண்டும் நின்று பார்த்தான்; தவம் செய்யும் பாவனையில் நடித்தான். ஆனால் பறவைகள் அவன் இருந்த பக்கம் வரவே இல்லை. மீண்டும் துறவியிடம் சென்றான். “உங்களிடம் இயல்பாக வரும் பறவைகளில் ஒன்றுகூட, உங்களைப் போலவே நின்று தவம் செய்யும் என்னிடம் வரவில்லையே ஏன்?” என்று கேட்டான்.

ஜென் கதைகள்
ஜென் கதைகள்

துறவி மீண்டும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தவத்தைத் தொடர்ந்தார். மரத்தின் கிளைகளில் விளையாடுவதுபோன்று, பறவைகள் அவர்மீது விளையாடிக் கொண்டே இருந்தன.

இளைஞன் தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் பறவைகளை ஈர்க்க ஏதேதோ செய்து பார்த்தான். ஒரு பறவையும் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை!

ஒரு நாள் அதிகாலையில் மீண்டும் துறவியிடம் சென்றான். “உங்கள் மேல் அமரும் பறவைகள் என் மேல் ஏன் அமரவில்லை. இதற்கான காரணத்தை இப்போதே நீங்கள் சொல்லவில்லை எனில், இதோ இந்தக் காட்டாற்று வெள்ளத்தில் குதித்து செத்துப் போவேன். பறவைகள் நம் மீது வந்து அமர்வதற்கான மந்திரத்தை எனக்கும் சொல்லிக்கொடுங்கள்!” என்றான் கோபமாக.

சிரித்தபடியே துறவி பேசத் தொடங்கினார்: “வெள்ளத்தில் சிக்கிய படகு போல உன் மனம் தள்ளாடியபடியே இருக்கிறது. எப்போதும் உன்னை எதிர்மறை உணர்வுகள் சூழ்ந்து இருக்கின்றன. உன்னுடைய ஒவ்வோர் அசைவும் பதற்றமாக இருக்கிறது. மனம் அமைதியாக இருந்தால் உடல் அமைதியாக இருக்கும். மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தால் முகத்தில் ஒளி திகழும்.

நான் நதிக்கரையில் அமைதியாக... இலைகளால் இசை இசைத்தபடியும் பூக்களில் நறுமணம் உதிர்த்தும் திகழும் ஒரு மரம் போன்று நிற்கிறேன். அதனால் என்னிடம் பறவைகள் வருகின்றன. நீயும் நதிக்கரை மரமாக இருக்க முயற்சி செய். அமைதியின் இசையை உன் நரம்புகளில் மீட்டு. ஒளி தவழும் புன்னகையால் உன்னால் அப்போது பறவைகளை ஈர்க்க முடியும்!

உள்ளுக்குள் அமைதி இருந்தால், வெளியிலும் உன்னைச் சுற்றி அந்த அமைதி பரவசமாகப் பரவும். அப்போது பறவைகள் மகிழ்ச்சியோடு உன்னைத் தேடி வரும். எண்ணங்கள் அலைபாயாத சலனமற்ற மன நிலையே பறவைகள் நம்மைத் தேடி வருவதற்கான சூட்சுமம். வேறொன்றும் இல்லை முயற்சி செய்து பார்!”என்றார்.

அவர் பேசி முடித்ததும் இளைஞனின் உடலிலும் மனதிலும் இனமறியாத அமைதி பரவுவது போல் உணர்ந்தான். அவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்தபடி மீண்டும் மனம் குவித்து தியானிக்கத் தொடங்கினான்!

- பருகுவோம்...