Published:Updated:

`மஞ்சக்குடி, ரிஷிகேஷில் சிறப்பு பூஜைகள்’ - தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 90-வது ஜயந்தி விழா

தயானந்த சரஸ்வதி
தயானந்த சரஸ்வதி ( Anita )

பாரத தேசத்தில் கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் பெருமைகளை உலகறியச் செய்த மகான் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 90வது ஜயந்திவிழா வரும் 8, 9-ம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. சுவாமிகள் அவதரித்த கும்பகோணத்துக்கு அருகில் உள்ள மஞ்சக்குடி கிராமத்திலும் சுவாமிகள் மகாசமாதி அடைந்த ரிஷிகேஷிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற இருக்கின்றன. 

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள மஞ்சக்குடி கிராமத்தில் கோபாலய்யர்-வாலாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக 15.8.1930-ல் பிறந்தார். பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் நடராஜன். இளமையிலேயே உபநிடதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு ஆன்மிக வழியில், தன் வாழ்வை அமைத்துக்கொண்டார் நடராஜன். 1962-ம் ஆண்டு முறைப்படி சந்நியாசம் பெற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு இடப்பட்ட பெயரே சுவாமி தயானந்த சரஸ்வதி என்பதாகும். பின், ரிஷிகேஷ் சென்று சிறு குடிலில், தன் ஆன்மிக சாதனைகளைத் தொடர்ந்தார்.

 சுவாமி தயானந்த சரஸ்வதி!
சுவாமி தயானந்த சரஸ்வதி!

சம்ஸ்கிருத இலக்கணம் மற்றும் உபநிடதங்களின் முடிவாகிய ப்ரஹ்ம சூத்திரமும் பயின்றார். ஆன்மிக சாதகர்களுக்கு வேதாந்தக் கருத்துகளைக் கற்பித்தார். இவர் எழுதிய வீடுதோறும் கீதை நூல் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று பல கோடி மக்களால் படிக்கப்பட்டது. எய்ம் ஃபார் சேவா (Aim for Seva) என்னும் தொண்டு நிறுவனம் தொடங்கி சேவையாற்றிவந்த சுவாமிகள் 2015-ம் ஆண்டு மகாசமாதி அடைந்தார்.

தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 90-வது ஜயந்தி விழா வரும் 8, 9 ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. மஞ்சக்குடியிலும் ரிஷிகேஷிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை இணையம் மூலம் பக்தர்கள் கண்டு தரிசிக்கலாம். இதற்கு, www.aimforseva.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.

தயானந்த சரஸ்வதி
தயானந்த சரஸ்வதி

ஆகஸ்ட் 8, 9-ம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை நிகழ்வுகள் அமையும்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை அன்று, மஞ்சக்குடி கிராமத்திலும் ஆகஸ்ட் 9 ஞாயிறு அன்று, ரிஷிகேஷ் அதிஷ்டானத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இரு தினங்களும் புகைப்பட அஞ்சலியும், சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் நிகழ்த்திய மிக முக்கிய சொற்பொழிகளின் வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்படும். இந்நிகழ்வில் பக்தர்கள் தவறாது கலந்துகொள்ளுமாறு ‘எய்ம் ஃபார் சேவா’ அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு