தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? எத்திசை நோக்கி இருக்கவேண்டும்? #DoubtOfCommonMan

விக்ரகங்களை வைத்து வழிபடுவதில் நிறைய நியமங்கள் இருக்கின்றன. ஆனால், சுவாமியின் படங்களை வைத்து வழிபடுவதில், பெரும் நியமங்கள் இல்லை. தூய்மையான மனத்துடன் சில மலர்களை சுவாமி படங்களுக்குச் சாத்தி, நாம் உண்ணும் உணவையே நிவேதனம் செய்து வழிபடலாம்.
இறைவன் எங்கும் இருக்கிறான். ஆனாலும், அனைவராலும் அந்த மாபெரும் தத்துவத்தை உணர்ந்து வழிபட இயலாது. அதற்காகத்தான், நம் முன்னோர்கள் கோயில்களை ஏற்படுத்தினார்கள். கோயில்களில் உள்ளதைப்போன்ற விக்ரகங்களை வீட்டிலும் வைத்து சிலர் பூஜைகள் செய்து வழிபடுவபதுண்டு.

விக்ரகங்களை வைத்து வழிபடுவதில் நிறைய நியமங்கள் இருக்கின்றன. ஆனால், சுவாமியின் படங்களை வைத்து வழிபடுவதில், பெரும் நியமங்கள் இல்லை. தூய்மையான மனத்துடன் சில மலர்களை சுவாமி படங்களுக்கு சாத்தி, நாம் உண்ணும் உணவையே நிவேதனம்செய்து இறைவனை வழிபடலாம்.
வீட்டில் எல்லா வகை சுவாமி படங்களும் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உள்ளது. உக்கிரமான காளி படம், குழல் ஊதும் கண்ணன் ஆகிய படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற கேள்விகளைப் பலரும் கேட்பதுண்டு.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பி.சுவாமிநாதன் என்கிற வாசகர், "தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? வணங்கலாம் என்றால் படம் எத்திசை நோக்கி இருக்க வேண்டும்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்வியை கோட்டீஸ்வர சிவாச்சாரியார் முன் வைத்தோம்.
" 'குரு' என்றால் நமக்கு தட்சிணாமூர்த்தியின் திருவடிவமே நினைவுக்கு வரும். இவரை 'ஜகத்குரு' என்று அழைக்கிறோம். இங்கு, 'ஜகத்' என்பது உலகம் என்ற பொருளில் வராமல் பிரபஞ்சம் முழுமையையும் குறிக்கும். தட்சிணாமூர்த்தி, சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர். சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் உரைத்தவர். ஞானத்தின் வடிவமாக போற்றப்படுபவர். குருக்களுக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர்.
நவகிரகங்களில் ஒருவர், 'பிரகஸ்பதி'. இவரையும் 'குரு பகவான்' என்றே அழைக்கிறோம். இவர், தேவர்களின் குருவாக விளங்குபவர். அதேபோல, அசுரர்களின் குருவாக விளங்குபவர் 'சுக்கிரன்'. இவர்கள் இருவருமே நவகிரகங்களில் அடக்கம். ஜாதக ரீதியாக நமக்கு ஏற்படும் இடர்கள் நீங்க, நாம் பரிகாரமாக வணங்கவேண்டியது இந்த குருபகவானைத்தான்.
அதேவேளை, தட்சிணாமூர்த்தி என்பவர் நவகிரகங்களுக்கும் தேவர்களுக்கும் அனைத்து உலகிற்கும் அதிபதியாகத் திகழ்பவர். எனவே, நாம் சிவபெருமானின் வடிவமாகத் திகழும் தட்சிணாமூர்த்தியைச் சரணடைந்தால், நமக்கு ஞானம் சித்திப்பதோடு, கிரகங்களால் உண்டாகும் தோஷங்களும் அண்டாமல் இருக்கும். இதை சிவனடியார்களுக்கு, 'நவகிரகங்கள் நல்ல நல்ல' என்று திருஞானசம்பந்தர் தன் கோளறுபதிகத்தில் பாடி உணர்த்தியுள்ளார்.
வீடுகளில் சுவாமிபடங்களை வைத்து வழிபடுவதில் தவறில்லை. இஷ்ட தெய்வம், குல தெய்வம் என அனைத்து சுவாமி படங்களையும் வீட்டில் வைத்து வழிபடலாம். அதனால் தட்சிணாமூர்த்தியின் படத்தை வைத்து வழிபடுவதில் தவறில்லை.

வீடுகளில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி பூஜை அறை அமைந்திருப்பது சிறப்பு. எல்லா கடவுள்களின் படத்தையும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி வைத்து வழிபடலாம். வடக்குத் திசை நோக்கி வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
'தட்சிணம்' என்பதற்கு தெற்கு என்ற பொருள் உண்டு. அதேபோல் ஞானம் என்ற பொருளும் கொள்ளலாம். கோயில்களில் தட்சிணாமூர்த்தி விக்கிரகம் தென்திசை நோக்கியே காணப்படும். அதனாலேயே, தட்சிணாமூர்த்தியை 'தென்திசைக் கடவுள்' என்று பழந்தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. எனவே, தட்சிணாமூர்த்தியின் படத்தைத் தென்திசை நோக்கி வைத்து வழிபடுவது விசேஷம். அவ்வாறு வைத்துவழிபட வசதியில்லை என்றால், கிழக்கு நோக்கி வைத்து வழிபடலாம், தோஷம் இல்லை.

வீட்டில் தட்சிணாமூர்த்தியின் படம் வைத்து வழிபட்டால் ஒவ்வொரு வியாழன் அன்றும் விளக்கேற்றி, மலர்கள் சாத்தி வழிபடுவது சிறப்பு. கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. 'சிவனே தட்சிணாமூர்த்தி, தட்சிணாமூர்த்தியே சிவன்.' எனவே, நிச்சயம் தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.
