Published:Updated:

`தலைக்காவிரி டு பூம்புகார் ரதயாத்திரை!’ - காவிரி படித்துறையில் நடந்த சிறப்பு அபிஷேகம்

காவிரி நதியைக் காப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் ரதயாத்திரை இன்று கும்பகோணம் வந்தடைந்தது. பின்னர் காவிரி படித்துறையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ரதயாத்திரை
ரதயாத்திரை

நம்மை காக்கும் நதிகளுக்கு நன்றி சொல்லி வணங்குவதுடன், காவிரி நதியைக் காப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ரதயாத்திரை திருவையாறு மற்றும் கும்பகோணம் வந்தது. இதைத் தொடர்ந்து காவிரி படித்துறையில் காவிரித் தாய்க்கு அபிஷேக ஆராதனை மற்றும் கங்கா ஆரத்தி நடத்தி வழிபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

ரதயாத்திரை
ரதயாத்திரை

காவிரி நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் இணைந்து காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை நடத்திவருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் துலா மாதத்தில் காவிரி உற்பத்தியாகும் இடத்திலிருந்து பூம்புகார் வரை இப்படியான ரதயாத்திரை நடத்தப்படும். 9-ம் ஆண்டு ரதயாத்திரை கடந்த மாதம் 21-ம் தேதி தலைக் காவிரியான குடகில் இருந்து தொடங்கியது.

இதைத் தொடர்ந்து காவிரி ஆற்றின் கரைகளில் உள்ள முக்கிய ஊர்கள் வழியாக இந்த ரதயாத்திரை பயணம் சென்று கொண்டிருக்கிறது. நேற்று இரவு திருவையாறு வந்த ரதயாத்திரை பின்னர் காவிரி புஷ்பமண்டப படித்துறைக்கு வந்தது. அங்கு காவிரித் தாயின் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

`தலைக்காவிரி டு பூம்புகார் ரதயாத்திரை!’ - காவிரி படித்துறையில் நடந்த சிறப்பு அபிஷேகம்

அதன் பிறகு, மஹா தீபம் காட்டப்பட்டது. முன்னதாக காவிரி ஆற்றின் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து இன்று கபிஸ்தலம் வழியாகக் கும்பகோணம் சென்றடைந்தது ரதயாத்திரை. அங்கு தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை சார்பில் காவிரி ரதத்துக்கு விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டது.

`தலைக்காவிரி டு பூம்புகார் ரதயாத்திரை!’ - காவிரி படித்துறையில் நடந்த சிறப்பு அபிஷேகம்

சுமார் 800 கிலோ மீட்டர் தூரத்தை 20 நாள்களில் கடந்து, கடைமுழுக்குட் தினமான வரும் 8-ம் தேதி பூம்புகாரில் காவிரி சங்கமத்தில் நிறைவடையவிருக்கிறது இந்த ரதயாத்திரை.