Published:Updated:

காளிகாம்பாளுக்கு லட்சார்ச்சனை!

வஸந்த நவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
வஸந்த நவராத்திரி

வஸந்த நவராத்திரி வைபவம்

காளிகாம்பாளுக்கு லட்சார்ச்சனை!

வஸந்த நவராத்திரி வைபவம்

Published:Updated:
வஸந்த நவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
வஸந்த நவராத்திரி

`கலையாத கல்வியும் குறையாத வயதும்

ஓர் கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும்

அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும்

ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும்

உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே!

காளிகாம்பாள்
காளிகாம்பாள்அபிராமி அம்மைப் பதிகத்தில் அபிராமிபட்டர் பதினாறு செல்வங்களைக் குறிப்பிட்டு, அவற்றை அளிக்கவேண்டி அம்பிகையின் பாதக் கமலங்களைப் பணிய வேண்டும் என்கிறார். இதை, ‘துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி’ எனும் வரியால் உணர்த்துகிறார்.

சங்கர பகவத் பாதர் ஆபத்து காலத்தில் அம்பிகையின் பாதக் கமலங்களை நினைக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இதை, `ஆபதீ கிம் கரணீயம் ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா:’ என்று விளக்குகிறார்.

காளிகாம்பாள்
காளிகாம்பாள்

எப்படி நமது குரலை ஒலிபெருக்கியின் மூலம் பலரும் கேட்கும்படிச் செய்ய முடியுமோ, அப்படித்தான் நம் பிரார்த்தனையை அன்னையிடம் சமர்ப்பித்து அவளின் அருளால் சகல தேவைகளும் பூர்த்தியாகும் பேற்றினைப் பெறலாம். நம் பக்தியும் வழிபாடும் சிறியளவில் இருந்தாலும்... நாம் செய்யும் அனைத்தையும் அம்பிகையின் பாதக் கமலங்களில் சமர்ப்பித்துவிட்டோமானால், இவ்வுலகில் நமக்கு வேண்டிய தேவைகள் எவையோ, அவை அனைத்தும் கிடைக்கப்பெறும்; நிறைவில் மோக்ஷம் கிடைக்கப் பெறுவோம் என்று நம் சாஸ்திரங்கள் விளக்குகின்றன.

சக்தியானவள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறாள். இதை தேவிபாகவதத்தில் உள்ள `ஸர்வம் கலு இதம் ஏவ அஹம் ந அன்யத் அஸ்தி ஸநாதனம்’ என்ற வரிகள் மூலம் அறியலாம். அந்த அன்னையை வழிபட உகந்த நாள்களில் வஸந்த நவராத்திரியும் ஒன்று.

ஜனமேஜய மகாராஜா மகரிஷி வியாசரிடம் `நவராத்திரி காலத்தில் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

அமைதியும் தபோ பலமும் நிறைந்த வியாசர் ‘ச்ருணு ராஜன்...’ என்று தொடங்கி... அதாவது `கேட்பாயாக நவராத்திரியின் மகிமையைக் கூறுகிறேன்’ என்று ஆரம்பித்து விளக்கியுள்ளார். நாமும் அந்த மகிமையை அறிந்துகொள்வோம்.

சரத் காலத்தில் (புரட்டாசி - ஐப்பசி) கடைப்பிடிக்கப்படுவது சரத் நவராத்திரி என்றும், வஸந்த ருதுவில் (சித்திரை - வைகாசி) உபாசிக்கும் தேவியின் விரதம் சைத்ர நவராத்திரி- வஸந்த நவராத்திரி என்றும் அறிய வேண்டும். `த்வௌ ருதௌ யம தம்ட்ராக்யௌ’ - இந்தக் காலங்கள் யமதர்ம ராஜனின் கோரப் பற்கள். வியாதியும் இறப்புகளும் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ள இந்தக் காலங்களில், அம்பிகையை துதிக்கவேண்டும். நம்மையும் உலகையும் ரட்சிக்கவேண்டும் என்று வேண்டி வழிபட வேண்டும். `ஸர்வ சக்தி ஸமாயுக்தம்’ எனும்படி அனைத்து சக்திகளின் வடிவமான பராசக்தியை, பிரதமை முதல் நவமி வரை 9 ராத்திரிகள் பூஜிக்க வேண்டும்.

ராமநவமி என்று போற்றக்கூடிய ராமபிரானின் பிறந்தநாளில் பராசக்தியின் வஸந்த நவராத்திரி உத்ஸவமானது பூர்த்தி ஆவது நமக்கு உயர்ந்த நன்மைகளை அளிக்கக் கூடியது. `சாந்த: ஸமாஹிதமனா’ என்றபடி நாம் இந்த விரத நாள்களில், அமைதி நிறைந்த மனதுடன் இருப்பது அவசியம். இறையுருவங்களிம் மட்டுமன்றி அனைத்திலும் அன்னையைக் காண்பதே பூஜையின் பலன்.

ஜபம், த்யானம், ஹோமம், தபஸ், தானம் என்று அவரவருக்கு எது முடியுமோ, அதை அர்ப்பணித்து மகிழலாம். முக்கியமாக கன்னியகா மற்றும் சுவாஸினி பூஜை செய்வது சிறப்பானது.

சென்னை அருள்மிகு காளிகாம்பாள் ஆலயத்தில் வஸந்த நவராத்திரியை முன்னிட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக அம்பிகைக்கு மிகவும் பிரியமானதும், வாக் தேவதைகளினால் அருளப் பட்டதுமான லலிதா சஹஸ்ர நாமம் அர்ச்சனை வைபவம் சிறப்பாக நடந்தேறும்.

சிறப்பான அலங்காரத்துடன் மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதியுடன் கூடியவளாக அம்பிகை எழுந்தருள, மண்டபத்தில் லட்சார்ச்சனை நிகழும். ஆயிரம் நாமங்களையும் நூறுமுறை குங்குமத்தால் அர்ச்சனை செய்து, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடைய வேண்டி இந்த வைபவம் நடைபெறும். இந்த அற்புத வைபவம் பலகாலமாக சென்னை அருள்மிகு காளிகாம்பாள் ஆலயத்தில் நடைபெறுகிறது.

ஆலயங்களை வழிபாடு செய்யும் இடமாக மட்டுமே நாம் கருதக்கூடாது. அறமும் ஆற்றலும் சுரக்கும் - பொங்கிப் பெருகும் புண்ணிய க்ஷேத்ரமாக ஆலயங்களைச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.

அவ்வகையில் காளிகாம்பாள் ஆலயத்தில் உத்ஸவர் அம்பிகை, பெரியநாயகி என்று போற்றப்படுகிறாள். அன்னை காளிகாம்பாள், நம்மை நல்வழியில் நடத்தி கல்விச் செல்வமும், அனைத்து விதமான ஐச்வர்யமும் அளித்து அருளும் தாயாக விளங்குகிறாள். அவள் கொலு வீற்றிருக்கும் மண்டபம் மேருவை போன்று அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.

இந்த வருடம் 2.4.22 முதல் 10.4.22 வரையிலும் (58-ம் ஆண்டு) குங்கும லட்சார்ச்சனை விழா சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் அனைவரும் கலந்துகொண்டு அம்பிகையின் திருவருளைப் பரிபூரணமாக பெற்று மகிழலாம்.

`யா தேவீ ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:’


என்ற படி அனைத்து உயிர்களிலும் பொருள்களிலும் பராசக்தி உள்ளிருந்து இயக்குகிறாள். அனைத்துக்கும் ஆதாரமான அந்த அன்னையைச் சிறப்பு வாய்ந்த வஸந்த நவராத்திரி காலத்தில் வழிபட்டு புண்ணியம் பெறுவோம். ஓம் சக்தி!

தீப வழிபாடு விசேஷம்!

காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் ஆலயம் பாரிமுனை தம்புச்செட்டித் தெருவில் எழிலுற அமைந்துள்ளது. `காளி’ என்றாலே சகலத்தையும் அருளும் தேவி என்றே பொருள். இந்த அற்புத ஆலயத்தில் அன்னை மந்திர ரூபிணியாக, மாமணி தேவியாக, ஒளஷதப் பொருளாக வீற்றிருந்து சகல ஜீவன்களுக்கும் நல்லருள் புரிந்து வருகிறாள்.

திருக்கரங்களில் பாசம், அங்குசம், நீலோற்பலம் ஏந்தியும் வரத முத்திரை காட்டியபடியும் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பாள், மேற்குப் பார்த்து எழுந்தருளி இருப்பது, இந்த கோயிலின் விசேஷம். கிண்ணித்தேர் அசைந்து செல்லும் அற்புத ஆலயம் இது.

செவ்வாய்க் கிழமைகளில் மாலையில் ராகுகால வேளையில் அன்னையை தரிசித்து தீபமேற்றி வழிபடுவதும், அன்னைக்கு எலுமிச்சை மாலை சமர்ப்பித்து வழிபடுவதும் விசேஷம். இதனால் தீராத பிரச்னைகள் யாவும் தீரும். அதேபோல், இங்கு அருளும் பிரத்யங்கரா தேவி பெரும் துடியான சக்தி கொண்டவள். இவளை வேண்டிக்கொண்டு புனித ரக்ஷையை கட்டிக்கொண்டால், உங்களை வாட்டும் கவலைகள், அச்சங்கள் யாவும் ஓடும்; தீமைகள் விலகும் என்பது நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism