ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

கந்தகோட்டம் அற்புதங்கள்!

கந்தகோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தகோட்டம்

பொழுது விடிந்தது. அங்குள்ள சர்வ சித்தி விநாயகர் கோயிலில் யாவரும் காண அத்திருவுருவச் சிலையை வைத்தனர்.

தென்மதுரை அங்கயற்கண்ணியின் திருவருள் பெற்று அவள் ஆணையின்படி யுத்தபுரி எனும் திருப்போரூரைத் தேடி வந்தார் சிதம்பரம் என்னும் அடியார். சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பனைமரக் காடாகத் திகழ்ந்த திருப்போரூரில், அந்த அடியாருக்குச் சுயம்பு மூர்த்தியாக காட்சி தந்தார் கந்தவேள்.

கந்தகோட்டம்
கந்தகோட்டம்


வேடமகள், வேழமகள் கூட அருள் புரியும் வேலவனை அகமகிழ தரிசித்தவர், அழகன் முருகனுக்கு அற்புதமாகக் கற்கோயில் கட்டி இன்புற்றார். திருப்போரூர் முருகனை வழிபட வரும் அன்பர்கள் பெருமான் சந்நிதியில் முறையிட்டுத் தொழ `திருப்போரூர்ச் சந்நிதி முறை’ என்னும் அற்புதப் பாமாலையையும் சூட்டிப் போற்றினார்.அந்த அடியவரே திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்னும் சேய்த் தொண்டர் ஆவார்.

கனவில் கிடைத்த உத்தரவு!

இப்படிப் புகழ்பெற்ற திருப்போரூர் கந்தன் திருக்கோயிலுக்கு மாதம்தோறும் கார்த்திகை அன்று சென்னையிலிருந்து பாத யாத்திரையாகச் சென்று தரிசித்து வருவார்கள் அன்பர்கள் இருவர். வேளூர் மாரி செட்டியார், கந்தப்ப ஆசாரியார் ஆகியோர்தான் அந்த முருகன் அடியார்கள்.

சாலிவாகன 1595-ம் ஆண்டு, பிரமாதி வருஷம் மார்கழி 13-ம் நாள் (இன்றைக்கு சரியாக 350 ஆண்டுகளுக்கு முன்பு) நடந்த அற்புதம் இது. இருவரும் திருப்போரூர் செல்லும் வழியில் செங்கண் மாலீசர் கோயிலுக்குத் தெற்கில் - கம்மாளன் சாவடிக்கும் வள்ளியம்மை மஞ்சள் ஓடைக்கும் அருகில் இருக்கும் தடாகக் கரையில் வேப்ப மரத்தடியில் தங்கினர். நடந்து வந்த களைப்பினால் சற்றுக் கண்ணயர்ந்தனர். அப்போது மாரி செட்டியார் மார்பின் மேல் ஒரு பாம்பு ஏறியது. அவர் உடல் முழுவதும் ஊர்ந்து ஓடி ஆடி விளையாடிச் சென்றது. அந்நிலையில் ஆறுமுக பரமன் அவரது கனவில் தோன்றினார்.

கந்தகோட்டம்
கந்தகோட்டம்


“மாரி! நீ என் அன்பன். இங்கே நான் புற்றுக்குள் இருக்கிறேன். என்னைச் சென்னைப் பட்டணம் கொண்டு செல்” என்று ஆக்ஞை வருகிறது. மாரி செட்டியாரின் திருமேனி சிலிர்த்தது. நண்பரை எழுப்பி நடந்ததை விவரித்தார். இருவரும் புற்றைக் கீண்டிப் பார்த்தனர். முருகப்பெருமான் அருள் உருவம் வெளிப்பட்டது. பின்னர், அந்தப் புற்றை இலைதழைகளால் மூடி வைத்துவிட்டுச் சென்றவர்கள், திருப்போரூர்க் கந்தனை வழிபட்டுவிட்டு மீண்டும் அந்த இடத்துக்குத் திரும்பினர். அன்று நள்ளிரவு வேம்படிப் புற்றிடத்தில் மண்ணைத் தோண்டி திருமுருகன் சிலையை வெளியே எடுத்தனர்.

மாரி செட்டியார் சுமக்க, கந்தப்ப ஆசாரியார் தொடர இரவு முழுவதும் நடந்து திருவான்மியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி ஆகிய இடங்களைக் கடந்து பெத்து நாயகன் பேட்டையை அடைந்தனர். பொழுது விடிந்தது. அங்குள்ள சர்வ சித்தி விநாயகர் கோயிலில் யாவரும் காண அத்திருவுருவச் சிலையை வைத்தனர்.

அழகு மிளிர ஆலயம் எழுந்தது!

வேளூர் மாரி செட்டியார், கந்த பெருமானுக் குக் கோயில் எழுப்ப வேண்டும் என்று பேரி செட்டிமாரின் உதவியை நாடினார். தம்பு செட்டியார், இலிங்கச் செட்டியார் இவர்கள் தலைமையில் கூடிய கூட்டத்தில் திருப்பணி தொடங்குவது என முடிவு செய்தனர்.

முத்துநாயகர் என்பவர் தனக்குச் சொந்தமான நந்தவனத்தைக் கோயில் கட்டுவதற்காக, தான சாசனம் செய்துகொடுத்தார். அந்த இடத்தில்தான் இப்போது உள்ள கந்தகோட்டம் அமைந்துள்ளது.

விரைவாக தொடங்க இருந்த திருப்பணி பொருள் முட்டுப்பாட்டி னால் தடைப்பட்டது. மாரி செட்டியார் மனம் வருந்தினார். அவருடைய மனைவி ஆதிலட்சுமி அம்மையார், தன் தாலியைத் தவிர அனைத்து அணிகலன்களையும் கொடுத்து ஆலயத்தின் திருப்பணியைச் செய்யுமாறு வேண்டினார்.

மனம் மகிழ்ந்த மாரி செட்டியார், கந்தப்ப ஆசாரியார், முத்துநாயகர் இவர்களின் துணைக் கொண்டு திருப்பணியைத் தொடங்கினார். தொடர்ந்து வணிகப் பெருமக்கள் உதவி செய்ய, இப்போதுள்ள கருங்கற் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

கோயிலின் வாயிலை கண்கவர் வனப்புடைய ராஜகோபுரம் அழகு செய்கிறது. கந்தபுராணம் முழுதும் சுதைச் சிற்பங்களாகத் திகழ, ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் வடதிசை நோக்கி காட்சியளிக்கிறது.

எதிரில் சித்தி கணபதி, வீரபாகுத் தேவர், உற்சவமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு நோக்கிய மூலஸ்தானத்தின் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். மூலஸ்தானத்தில் கந்தசாமி என வழங்கும் முத்துக்குமாரசுவாமி அருங்காட்சி வழங்குகிறார். இருபுறமும் தேவியர் திகழ திருப்போரூரில் உள்ளது போல சிறிய வடிவம். எதிரில் `பிணிமுகம்’ என்னும் யானை வாகனம் உள்ளது. மூலவருக்கு இடது புறம் மீனாட்சி சுந்தரேசர் சந்நிதிகளுடன், அருகில் ஆறுமுக பரமன் தேவியருடன் உற்சவ மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.

மூலஸ்தானத்திற்கு வலது புறம் தனிச் சந்நிதியில் வள்ளி, தேவசேனை சமேத உற்சவமூர்த்தியான முத்துக்குமாரசுவாமியின் சந்நிதி அமைந்துள்ளது. பின்புறம் திருக்குளம். அதன் கிழக்குப் பகுதியில் 130 அடி நீளத்தில் வடக்கு - தெற்காக சிற்ப அழகுடன் திகழும் நீண்ட மண்டபமும் உண்டு. அருகில் பள்ளியறை, ஞான தண்டாயுதபாணி சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மேலும் சுமித்ரேசர், துர்கை, வீரபத்ரர், சூரியன், வயிரவர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளையும் தரிசிக்க இயலும்.

கந்தகோட்டமும் ஞானநூல்களும்!

திருவருட்பிரகாச வள்ளலார் கந்தகோட்டத்து முருகனை தரிசித்துப் பாடியுள்ள தெய்வமணிமாலை 31 பாடல்களும், கந்தர் சரணப் பத்து பாடல்களும் பிரசித்திபெற்றவை. `ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்று தொடங்கும் பாடல் அவரவர் நாவில் அடிக்கடி ஒலிக்கும். இந்தப் பாடல் மனித வாழ்க்கையில் எவை வேண்டும், எவை வேண்டாம் என்பதை அழகாகக் காட்டியுள்ளது நோக்கத்தக்கது.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளைத்தமிழ், கலம்பகம், திரிபந்தாதி, சந்தத் திருப்புகழ், சண்முகர் வகுப்பு, வேல் வகுப்பு, திருவருள் வினோத வகுப்பு, பதிற்றுப்பத்தந்தாதி, விமான மிசை கண்ட பதிகம், சண்முக தரிசன பதிகம், சிவகுரு தரிசன பதிகம் மற்றும் சில பதிகங்களுடன் ஏறக்குறைய 750 பாடல்களைப் பாடியுள்ளார். (இவை அனைத்தையும் ஒரே நூலாக வெளியிட திருச்சி மருத்துவர் முரளீதரன் முயற்சி செய்து வருகிறார்.)

பாம்பன் மத் குமரகுருதாச சுவாமிகள்... கந்தசாமிப்பா, கந்தர் இரட்டை மணிமாலை, கந்தர் ஒருபா ஒரு பஃது, கந்தர் திரு அவதாரம், கந்தர் நான்மணிமாலை, கந்தவேள் வேட்கை, சென்னைசேய முதலான பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

குளத்தூர் வரகவி கிருஷ்ணப்ப செட்டியார்... செல்வக்கந்தர் தலப் புராணம், வேதாந்த விருத்தம், கந்தர் திருப்புகழ், கந்தர் கீர்த்தனை முதலானவற்றை இயற்றியுள்ளார்.


விழாக்கள் விசேஷங்கள்!

இந்தத் திருக்கோயிலில் மாதாந்திர கிருத்திகை, சஷ்டி வழிபாடுகள், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தை பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் ஆகிய விழாவைபவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

`கோட்டம்’ என்ற பெயரில் புகழ்பெற்ற இரண்டு திருமுருகன் திருக்கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. ஒன்று காஞ்சியில் உள்ள குமரக்கோட்டம். மற்றொன்று சென்னை கந்தகோட்டம். திருப்போரூர்க் கந்த பெருமான் அருளால் மாரி செட்டியார் மூலம் உருவான கந்தகோட்டத்தில், அன்னாரின் திருவுருவத்தை ஆலயத்தின் வயிரவர் சந்நிதியின் மேற்கு மண்டபத்தூணில் தரிசித்து மகிழலாம். அவர்தம் திரு மரபு நீடூழி வாழ்க!


உற்சவர் நிகழ்த்திய அற்புதம்!

கந்தகோட்டத்தில் அருளும் உற்சவர் விசேஷமானவர். இவரின் திருமேனி உருவானபோதே அற்புதம் நிகழ்த்தியவர்!

பயபக்தியோடு பணிகள் செய்த சிற்பி, முருகனின் உற்சவ விக்கிரகத்தை நல்லமுறையில் வார்ப்படத்தில் வார்த்து முடித்தார். வார்ப்படத்தைத் திறந்து விக்கிரகத்தை வெளியே எடுக்கும் நாள் வந்தது. சிற்பி மனதில் முருகனை வணங்கியபடியே வார்ப் படத்தைத் திறந்தார். விக்கிரகம் பொலிவுடன் திகழ்ந்தது. எனினும் ஆங்காங்கே உலோகப் பிசிறுகள் நீட்டிக்கொண்டிருந்தன. அவற்றை நீக்கும் எண்ணத்தோடு உளியுடன் சிற்பி நெருங்கியபோது, தூக்கியெறியப்பட்டு கீழே விழுந்தார்.

என்ன நிகழ்ந்தது என்று எவருக்கும் புரியவில்லை. சிற்பியோ `இந்த விக்கிரத்தின்மீது உளிபடக் கூடாது’ என்று கூறிச் சென்றார்.

பின்னர் ஒருநாள் வடக்கிலிருந்து வந்த வேத விற்பன்னர் ஒருவர் இந்தத் தகவலை அறிந்து விக்கிரகத்தைத் தரிசித்தார். சிற்பியின் கூற்று உண்மையே என்றவர், 48 நாள்கள் தினமும் உரிய காலஅளவில் வேதமந்திரங்களை ஜபித்து வழிபட்டாராம். மந்திரங்களின் அதிர்வால் பிசிறுகள் தாமாகவே உதிர்ந்தன. உற்சவரை எல்லோரும் வழிபட வழிபிறந்தது. இங்கே மூலவருக்கு என்ன சாந்நித்தியமோ, அது உற்சவருக்கும் உண்டு என்பது அற்புதம்தான்!