Published:Updated:

மீனவர்கள் போற்றும் மச்சாவதார பெருமாள்!

மச்சாவதார பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
மச்சாவதார பெருமாள்

புரட்டாசி புண்ணிய தரிசனம் - சக்திதர்

மீனவர்கள் போற்றும் மச்சாவதார பெருமாள்!

புரட்டாசி புண்ணிய தரிசனம் - சக்திதர்

Published:Updated:
மச்சாவதார பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
மச்சாவதார பெருமாள்

அவதாரங்களில் முதன்மையானதும் இந்த உலகத்துக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்ததுமான அவதாரம் மச்ச அவதாரம். கோமுகன் என்னும் அசுரன் நான்கு வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து கவர்ந்து சென்று கடலுக்கு அடியில் ஒளிந்து வைத்தான். சிருஷ்டி ரகசியமும் ஞான ரகசியமுமான வேதங்கள் இன்றி பிரபஞ்ச இயக்கம் ஏது? பிரம்மன் ஓடிச் சென்று பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்.

மச்ச நாராயணர்
மச்ச நாராயணர்

சகல லோகங்களையும் காக்கும் நாயகனான ஸ்ரீமந் நாராயணன் மச்சமாக உருவெடுத்துச் சென்று அசுரனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டார். வேதங்கள் மீண்டதும் உலக இயக்கமும் சீரானது. ஸ்ரீமந் நாராயணருக்கு மச்ச நாராயணப் பெருமாள் என்றும் வேதங்களை மீட்டதால் வேத நாராயணப்பெருமாள் என்றும் திருநாமம் உண்டானது. மச்ச நாராயணரை வணங்கி வழிபட்டால் ஞானமும் கல்வியும் பெருகும் என்பது ஐதிகம்.

 இந்தப் பெருமாளுக்கு ஆந்திரமாநிலம் நாகலாபுரத்தில் ஒரு திருக்கோயில் உள்ளது. தமிழகத்தில், சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூரிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உத்தண்டி யில் ஸ்ரீமச்சநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சின்மயா மிஷன் சார்பில் நிறுவப்பட்ட கோயில் இது.

 சுவாமி சின்மயானந்தர் நம் தேசத்தில் ஆன்மிக ஒளி பரவத் தொண்டாற்றியவர். எப்படி ஸ்ரீமந்நாராயணர் வேதங்களை மீட்டெடுத்து உலகுக்கு வழங்கினாரோ அதேபோன்று, வேதங்களின் உண்மைப் பொருளை அனைத்து மக்களும் அறியும் வகையில் எளிய முறையில் பொருள் உணர்த்தி, சகலரையும் நம் மரபார்ந்த வழிபாடுகளை நோக்கித் திருப்பியவர் சுவாமி சின்மயானந்தர்.

 அந்த மகானின் நூற்றாண்டுவிழாவை ஒட்டி அவருக்குச் செய்யும் குரு காணிக்கையாக, சின்மயா மிஷன் சார்பில் மச்ச நாராயணப்பெருமாள் கோயில் கட்டப் பட்டு, 2015-ம் ஆண்டு மே 24-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாராயணப் பெருமாள்
நாராயணப் பெருமாள்

உத்தண்டியில் கடற்கரையில் திறந்தவெளி ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய பிரமாண்டத் திருமேனியராக அருள்கிறார் ஸ்ரீமச்சநாராயணப் பெருமாள்.

 இங்கு பெருமாளைச் சுற்றி 108 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும் விஷ்ணுவின் சகஸ்ர நாமங்களில் பத்து பத்து நாமங்களை எழுதப்பட்டுள்ளன. இவை தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள் ளன. ஒருமுறை மச்ச நாராயணப் பெருமாளைப் பிரதட்சணம் வந்தால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை பிரதட்சணம் வருவதாகவும் அதைப் பாராயணம் செய்வதாகவும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு!

மச்ச நாராயணப் பெருமாள் கோயில்
மச்ச நாராயணப் பெருமாள் கோயில்

இந்த ஆலயத்தின் அமைப்பே பிரமாண்டமானது. பரந்து விரிந்து கிடக்கும் வங்கக் கடலுக்கு எதிரே இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்துக்கு மேற்கூரை இல்லை. எனவே ஆலயத்தின் தோற்றமும் பிரமாண்டதாகத் தெரிகிறது. ஆலய வளாகத்துக்குள் நாம் பிரவேசிக்கிறபோது நம் மனதின் எல்லையும் விரிவடைகிறது. பரந்துவிரிந்த வானம் போல மனமும் மலரும் அதிசயம் நடக்கிறது.

 இந்த ஆலயத்தில் லட்சுமி நாராயணர், முக்தி விநாயகர், விக்ரம ஹனுமான், மிருத்யு ஜெய சிவா, நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களும் உள்ளன. இங்குள்ள குரு பரம்பரை ரதம் நம் கருத்தைக் கவரும். ஸ்ரீகிருஷ்ணர், வியாச பகவான், சங்கரர், சின்மயானந்தர் ஆகியோர் இந்த ரதத்தில் அருள்கிறார்கள்.

 இந்த ஆலயத்துக்கு அருகில் இரண்டு மீனவக் குப்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நயினார்குப்பம். இந்தக் குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள், இந்த ஆலயத்தைத் தம் சொந்த ஆலயமாக பாவிக்கிறார்கள். சின்மயா மிஷன் இந்தக் குப்பத்தைச் சார்ந்த மீனவர்கள் வாழ்க்கை செழிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 நயினார் குப்பத்தில் ஓர் அழகான முத்துமாரியம்மன் ஆலயம் உண்டு. அதன் உருவாக்கத்திலும் பராமரிப்பிலும் சின்மயா மிஷனின் பங்களிப்பு முக்கியமானது. இங்கே தேவி குரூப் என்னும் பெண்கள் குழு ஒன்றை உண்டாகி பல வழிபாடுகள் நடைபெற ஏற்பாடு செய்கிறார்கள். குறிப்பாக நவராத்திரியில் ஒன்பது நாள்களும் சிறப்பு விளக்கு பூஜை வழிபாடுகள் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுகின்றன.

 இந்த ஆலயம் 2015-ம் ஆண்டு மே 24 - ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த நாளில் அருகில் உள்ள குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து மச்ச நாராயணருக்குத் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பம்சம்.

 இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை ஆறு மணிக்கு சமுத்திர ஹாரத்தி நடைபெறுகிறது. பௌர்ணமி நாளன்று நடைபெறும் விசேஷ சமுத்திர ஹாரத்தி காண்பவர்கள் கண்ணைக் கவரும். மட்டுமன்றி இங்கு வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜயந்தி ஆகிய பண்டிகைகளும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

மொத்தத்தில், யாவரும் குடும்பத்துடன் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயம் இது!குட்டீஸ் கோயில்!

குட்டீஸ் கோயில்
குட்டீஸ் கோயில்

மச்ச நாராயணப் பெருமாள் கோயிலில், `குட்டீஸ் கோயில்' எனும் குழந்தைகளுக்கான பிரத்யேகக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம் என்பது குழந்தைப் பருவம் முதலே அறியவேண்டிய ஒன்று. இறைவனின் மீது பக்தி உண்டாவதுபோல பாசமும் உண்டாக வேண்டும். அதற்கேற்ப, குழந்தைகள் விளையாட்டோடு விளையாட்டாய் சுவாமியை தரிசித்து வணங்கி இறைத் தத்துவங்களை உள்வாங்கி வழிபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குட்டீஸ் கோயில். இதில் விநாயகர், கோவர்த்தன் கிருஷ்ணன், முருகப்பெருமான், மும்மூர்த்திகள், ராம் பரிவார் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. குழந்தை களுக்கு வித்தியாசமான ஆன்மிக அனுபவத்தைத் தருவதாகக் குட்டீஸ் கோயில் வழிபாடு அமையும்!

- சக்திதர்