Published:Updated:

``திருவிழாவுல `வராரு அழகர்' பாட்டுப் போட்டுட்டா... ஆத்தி ஆட்டம் அடங்காதுய்யா!" - மதுரக்காரன் மனசு

தேரோட்டம்
News
தேரோட்டம்

மதுர, கோயில், திருவிழானாலே சந்தோஷம்தானே? வாங்க... மதுர சித்திரைத் திருவிழா அலப்பறைய வெளக்குறேன்.

தீயத் தவிர வேறெதுவும் தீண்டியிருக்க மாட்டாது, மதுரய. முன்னொரு காலத்துல, திருவிழாவுலேயே நெல் குதிரு மண்டபம் பத்திக்கிட்ட ஆபத்திலேருந்து அழகரைக் காப்பாத்தின அர்ச்சகர் வரலாறெல்லாம் உண்டே.

அப்போவும் இப்போவும், தீயால துன்பப்பட்டும் திருவிழாவுக்கு ஊறு வந்ததில்ல. இப்போ நோயால சிக்கல் வந்து நொந்துபோய் கெடக்கோம். விருந்தாளிகளா ஓரிரு நாளு வந்திருந்தவுகளுக்கும், தெற்குத் திருவிழா பத்தி படிச்சு மட்டும் தெரிஞ்சவுகளுக்கும் எப்பவும் புரியாது ஊர்த்திருவிழா, எங்க உசுருல கலந்த கதைன்னு.

சரி, சரி, சோகமெல்லாம் கெடக்கட்டும். மதுர, கோயில், திருவிழானாலே சந்தோஷம்தானே? வாங்க மதுர சித்திரைத் திருவிழா அலப்பறைய வெளக்குறேன்.

திருவிழாவுக்கு மதுர ரெடியாகுற அழகே தனி. அழுக்கும் கிழுக்குமாத் திரியுற வீட்டாம்பிளைங்க கல்யாணங் காட்சிக்குப் போறப்போ ஒரு மிடுக்கு வருமே, அப்படி. மீனாச்சி கோயில், மாசிவீதி, தேர்முட்டி, ஆத்தங்கரை... நாலும்தான் ஹைலைட். இந்த இடமெல்லாம் நாள் கணக்கா தயாராகும். திருவிழா பார்க்க மனுசமக்க மணிக்கணக்கா தயாராவாக. ஊர்வலத்துல ஆடுறதுக்கு வேஷம்கட்ட, பொண்ணு பிள்ளைங்க சேலைகட்ட, கோயில் கிழக்கு வாசல்ல பெரிய கோலம் போட... இப்படி எல்லாமே!

ஊர்வலத்துல பெரிய கொட்டுங்க, கொம்புங்க முழங்கும் பாருங்க, சிவவாத்தியம்னு பேரு. ஊரையே அள்ளும். பயலுக சும்மாவா, வீதியில விக்கிற 10 ரூவா பீப்பியை வாங்கிப் போட்டியா ஊதி வம்பிழுப்பானுங்க. ஒரண்ட இழுக்க இந்தப் பொடிசுகளுக்குச் சொல்லியா தரணும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விட்டுக்கொடுக்கிற மதுர மனசு இருக்கே, அந்தக் கூட்டத்துலதேன் பார்க்கணும். உச்சிவெயில்லேயே இடம்போட்டு பிளாட்பாரத்தில உட்கார்ந்திருந்தாலும் ஊர்வலம் பார்க்குறப்போகூட 'யக்கா, இப்படி நின்னுக்கிறோம்ங்கா'ன்னு கேட்டா, 'வாங்கய்யா'ன்னு சொல்லி ஒதுங்கி நிற்கிற வாஞ்சை!

வீட்டிலிருந்து வெறும் கையோட, வெறும் வயிரோட நடந்துபோயி நிக்கலாம். கோயில் சுத்துப்பட்டு சந்துபொந்து தெருவுன்னு எந்த வீட்டு வாசலுக்குப் போனாலும் சொம்பு நெறையத் தண்ணி டைக்கும். கூட்டமாப் போனாலும் சரி, குடும்பமாப் போனாலும் சரி, அண்டாத் தண்ணியை அசால்ட்டா அள்ளிக்கொடுப்பாக. ஊர்வலம் போனதும் சாமி கும்பிட்டு மிச்சர் பிளேட்ல மினி அன்னதானம் தருவாக.

அப்புறம்... பயலுகளுக்குச் சந்தோஷம் வேறெதுல புள்ளைங்கள லுக்கு விடுறதைவிட! ஊர்வலத்துல கரகம், பரதம் ஆடுற பிள்ளைகள அழகாப் பார்ப்போம்ன்னா, சாமி பார்க்க வர்றவைங்கள அசராம பார்ப்போம். ஊர்வலத்துலேயே இப்படின்னா, திருக்கல்யாணம் வருமே. சாமானியப்பட்ட குடும்பங்க ரெண்டும் நடத்துற கல்யாணத்திலேயே மண்டபம் முழுக்க அழகு பொண்ணுங்க நிறைஞ்சிருப்பாக. இது, சாமி கலியாணம். சொல்லவா வேணும்.

ஆனா, ஒண்ணு மட்டும். மதுர மனசு எந்தப் பொண்ணையும் தப்பா நெனைக்காது. பயலுக ரூட்டக் கொடுத்தாலும் கண்டிப்பா அதுல ஒரு கண்ணியம் இருக்கும். அதேன் மதுர மண்ணோட மகத்துவமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்யாணம்ன்னு சொன்னதும் ஞாபகம். திக்குவிஜயம் முடியுறதுக்கு நடுராத்திரி ஆகும். முடியும்போது சொக்கனும் மீனாச்சியும் எதிரெதிர லாலா சத்திரத்துக்கு முன்னாடி சந்திச்சுப்பாக. அப்போ யானையோட சேர்ந்து கம்பீரமா பொண்ணுவீட்டு சீதனவரிசை வருமே... யம்மாடி, நம்ம வீட்டுப்பொண்ணு கல்யாணம் மாதிரி ஒரு ஃபீல். அதென்னங்க மாதிரி, நம்ம வீட்டுப் பொண்ணுதானே மீனாச்சி!

பட்டம் வாங்கும்போது ஊருக்கு அரசியா, சீதனம் வரும்போதும், கல்யாணம் நடக்கும்போதும் ஊரோட பொண்ணா, தேரோட்டத்துல ஊருக்கே பெரிய மனுசியா... இப்படி பலமாதிரித் தெரிவா மீனாச்சி. அட, தேரோட்டம்ன்னு ஒண்ணு இருக்கே!

நடுராத்திரி தாண்டும்போதே எழுந்து கெளம்பி, ஜீன்ஸோ சாதாரண பேன்டோ போட்டுக்கிட்டு, செருப்பை வீட்டுலேயே கழட்டிவிட்டுட்டு, வெளக்குத்தூண் பக்கம் போனா... கூட்டத்துக்குள்ள போக முடியாதுன்னு தேருக்குப் பின்பக்கம் வழியா போயி 'குச்சி' லேசா தட்டுறதையும் வாங்கிக்கிட்டு ஒரே தவ்வுல கயித்துக்குள்ள நுழைஞ்சு வடத்துல இடம் பிடிச்சதும் கிடைக்கிற சந்தோஷம் பிசிறில்லாம முகத்துல தெரியும்.

அதென்னமோ, மீனாச்சி தேரையும் தாண்டிப்போய் பெரிய தேரைத்தான் பிடிக்கத் தோணும். தேருக்குக் கிட்டக்க நின்னிருப்போம். விடியும்போது தேரு தூரமாகத் தெரியும்.

வெளக்குத் தூணுல திரும்பி மீனாச்சித் தேருக்காகக் காத்திருப்போம். வெளிச்சம் வந்திருக்காது. கொடுக்குற தண்ணிப் பாக்கெட்டைப் பீச்சியடிச்சே தீர்த்திடுவோம். அடுத்தவேளை தாகத்துக்குத் தண்ணி கெடைக்கும். ஆனா, இப்போ சந்தோஷம் வேணும். அதை மிஸ் பண்ண மாட்டோம்.

தெற்குமாசி வீதி பாதி கடந்ததும் சாப்பிடக் கிடைக்கும். பக்கத்துல நிக்குற பய, எவன்னே தெரியாது, 'இந்தாண்ணே'ம்பான். ஊர்ப்பாசம், ஊருக்கே உண்டானதுல. ஆடி ஆடி வியர்வை வழியும், பெருமூச்சு எகிறும். ஒவ்வொரு வாய்ச்சோத்துக்கும் ஒரு சிரிப்பு, ஒரு குதி, ஒரு சவுண்டு. தேருல நிக்குற அண்ணன்களுக்கு, கேட்காமலேயே பொட்டலம் கேட்ச் தருவோம். 'போதும்ய்யா'வலாம் பொருட்படுத்த மாட்டோம்.

மேலமாசி வீதி வரை எங்களோட ஒரே பூஸ்ட்அப், குழாயில கேட்கிற 'ஹர ஹர சங்கர, மீனாட்சி சுந்தர' சத்தமும் தேர்க்கார அண்ணனோட ஜாலி கமென்ட்களும்தான். சரி, மேலமாசிவீதி வரை. அடுத்து... சொல்றேனே!

``திருவிழாவுல `வராரு அழகர்' பாட்டுப் போட்டுட்டா... ஆத்தி ஆட்டம் அடங்காதுய்யா!" - மதுரக்காரன் மனசு

ஒரே பிடியில தேரிழுத்துட்டுப் போக வைக்கத்தான் பார்ப்பாக. இழுக்குற பயலுக விடமாட்டானுகளே. 'பாட்டுப் போட்டாதான் இழுப்போம்'பானுங்க. வடக்குமாசி வீதியில போடச் சொல்றேன்னு சொல்லுவாரு. நம்பி இழுப்போம். பாட்டுச்சத்தம் கேட்காது. கடுப்பாவோம், ராசி பண்ணுவாரு. வடக்குமாசி வீதி பிள்ளையார் கோயில்வரை இந்தக் கதைதான். கோயில்ல போடுவாய்ங்க பாருங்க பாட்டு, 'பல்லாக்குக் குதிரையில...'னு... தேரு அப்புடியே நிக்கும். தேரோட்டம் எங்க ஆட்டம் ஆயிடும். தப்பித் தவறிகூட 'வாராரு அழகர் வாராரு...' பாட்டைப் போடவே மாட்டானுங்க. பெறகு, தேரு நிலைக்குப் போயிச் சேர வேணாமா?

ஜிம்மி ஜிப் கேமராவ பார்த்துக் கத்துறதும் குதிக்கிறதும் ஒவ்வொரு வருஷமும் புது சந்தோஷம். இதுல தேர்க்கார அண்ணன் வேற, 'மாசிவீதி முழுக்க வடம் பிடிச்சு வந்தா மீனாட்சிக் கோயிலை 365 நாளும் தரிசிச்சதுக்கு சமம்'ன்னு சொல்லிடுவாரா... அந்த ஸ்பீடுல வடம் வேகமெடுக்கும். தேரைச் சேர்க்காம நகரமாட்டோமே.

கூட்டத்துல... குட்டிப்பயலுகள தூக்கிப்போட்டுப் பிடிச்சு சிரிப்போம். அவன் மொகத்துல அப்படிச் சிரிப்பு. பயலுக பிடிச்சிருவாய்ங்கங்கிற நம்பிக்கைதானேய்யா அது. தேரிழுக்கிறப்போ கெடைக்கிற கேப்புல வடத்துல உட்கார்ந்து ஆட்டம் போடுறதெல்லாம் வரம்.

வடக்கு மாசிவீதியெல்லாம் வெயில் பிய்க்கும். தண்ணிப் பாக்கெட்ட வாயில கடிச்சு பிய்ச்சு அதே வேகத்துல தலையில பீய்ச்சி ஒரு குலுக்கு. கொஞ்ச நேரத்துக்கு வெயில் தாங்கும். சட்டையைக் கழட்டிப் பிழிஞ்சு இடுப்புல கட்டிக்கிட்டா வியர்வை தாங்கும். அப்பிடியே தேர்முட்டி. சரியாச் சேர்த்ததும் மொத்தமாக் கூடி ஒரு தவ்வு தவ்விக் குதிச்சு கைதட்டி சந்தோஷப்படுவோமே... அடடா.

குடும்பமா வந்தா, வெள்ளனே போயி வீடு, கடையின்னு பழகுனவுக கட்டடத்தில ஏறி நின்னுக்குவோம்; இல்லாட்டி ஏறி நிக்குற கட்டடத்துக்காரவுககிட்ட பழகிக்குவோம். மாசிவீதிகளைச் சுத்தியிருக்கிற ஏதாச்சும் ஒரு வீடு, உறவுக்காரவுக, சிநேகிதருங்க, தெரிஞ்சவங்க வீடாத்தான் இருக்கும். வீட்டுல போயி தங்கிக்கிட்டு விடிய தேரோட்டம் பார்ப்போம்.

ஆச்சு, அடுத்து நம்ம தலைவரு! வழக்கமா தேரோட்டம் அன்னைக்கி சாயந்திரம் கெளம்புவாரு. சில வருஷம் முந்தின நாளு, சில தடவை அடுத்த நாளுன்னு கெளம்புவாரு. எப்படி அமைஞ்சாலும் அத்தனையையும் விடமாட்டோம்.

தேரோட்டம் மதியம் முடிய, வீட்டுல ஒரு சின்ன ரெஸ்ட்டு. நெக்ஸ்டு, அழகர்மலை ரேஸ். அத்தாம் பெரிய ரோட்டுல, போறதுக்கு மட்டும்தான் இடம். சாரை சாரியா வண்டிங்க. பயலுகளோட பைக்குலயோ, குடும்பமா பஸ்ஸுலயோ, வண்டிகள்லயோ, கோயிலுக்குப் போறதே தனிசுகம்.

எந்தக் கிராமத்தைக் கடந்தாலும் வெறும் வயித்தோட அனுப்ப மாட்டாக. சர்க்கரைப்பொங்கல், கேசரி, புளியோதரை, தயிர், தக்காளி, சாம்பார், லெமன் சாதம், கொண்டைக்கடலை, நீர்மோர், பானகம், சர்பத், தண்ணின்னு திரும்புற பக்கம்பூராம் கிடைக்கும்.

ரெண்டு தொன்னைகள்ல பொங்கல் ததும்பத் ததும்ப வாங்கி பருக்கைகூடக் கீழ சிந்தாம ஒண்ணு மேல இன்னொண்ணை அப்புடியே கவுத்தி லேசா ஒரு அழுத்து, ராஜவிருந்து ரெடி! இப்போகூட அந்தப் புளிசாத வாசம் ஞாபகத்துல நிக்கிது. சர்க்கரை தீபம் ஏத்திக் கும்பிட்டு கொடுக்குற பிரசாதத்தில கெடைக்குற டேஸ்ட்ட அடிச்சுக்க முடியாது.

``திருவிழாவுல `வராரு அழகர்' பாட்டுப் போட்டுட்டா... ஆத்தி ஆட்டம் அடங்காதுய்யா!" - மதுரக்காரன் மனசு

தலைவரு கிளம்புற அந்த நைட்டுல மதுரை சிட்டி டு அழகர்கோயில் வரைக்கும் 18 கி.மீ நடந்துபோனா, திருவிழா பவுசு எப்படின்னு முழுசா அனுபவிக்கலாம். கோயிலுக்கு வந்தாச்சா... தலைவரு என்ட்ரியப் பார்க்கணுமே. மாஸ் ஸீன்!

வண்டி வாசலுக்குள்ள நுழைஞ்சு இடப்பக்கம் ஒய்யார திண்டுல கூட்டத்துக்கு முன்னமே இடம்பிடிச்சுட்டா சௌகர்யம். தலை மறைக்காம, தள்ளுமுள்ளு இல்லாம, தவிக்காம அழகா இருந்து அழகர் என்ட்ரிய பார்க்கலாம். உண்டியல், யானை, ஜமீன்லாம் முன்ன போனதும் வெளியே வருமே... அந்தப் பச்சைக்கொடி... அத்தனை பேருக்கும் மெய் சிலிர்க்கும்... 'இந்தா, வந்துட்டாருல!'

மெள்ள மெள்ள பல்லக்குக் கொம்பு, பல்லக்குத் துணி, கண்ணாடி, சடாரி ஒவ்வொண்ணும் கடந்து கொண்டையும் குத்தீட்டியுமா அழகரு தெரிவாரே! ஆத்தாடி, அதிர்வேட்டு தாண்டி மலை அதிரும் சனங்க சத்தத்துல!

உள்ள இந்த மினி கூட்டம் கடந்து, வெளிய கருப்பண்ணசாமிக்கிட்ட மெகா கூட்டம். அங்க ஒரு அட்டன்டன்ஸ போட்டுட்டு ஆரத்தி எடுத்துட்டு கிளம்பும்போது தலைவரை குலுக்கி எடுப்பாய்ங்க பாருங்க. அதுக்காகவே காத்துக்கிட்டிருப்போம். 'அழகரு ஹேப்பி' மொமென்ட் அது!

ஜர்னி ஸ்டார்ட்! வழியெல்லாம் கிராமத்து வயக்காடு, கரட்டு மேடு முழுக்க மக்க கூட்டம். அவிய்ங்களயெல்லாம் அசால்டா ஒய்யார பல்லக்கு வண்டியில கடந்து போவாரே. நைட்டு கலர் லைட்டுகளுக்குள்ள அழகர் பல்லக்கு க்ளீனா தெரியும்.

யாராச்சும் அண்ணனுக வந்து மயிலிறகு விசிறி, ஓலை விசிறியில ஒரு இழுப்பு இழுப்பாக. ஒடம்புல ஒழுகுற வேர்வைகூட ஐஸ் தண்ணி மாதிரி ஜில்லுன்னும். இப்போ நினைச்சாலும் உடம்பு குளிருது.

அடுத்தநாள் நைட்டு தல்லாகுளம் ரவுண்ட்ஸ். தண்ணி பீய்ச்சுற கூட்டம் அடிக்குற கூத்து, தரமா இருக்கும். எதிர்ல வர்ற இன்னொரு குரூப் மேல, முறைப் பொண்ணுங்க மேலன்னு தண்ணி மழைதான். எல்லோரும் சந்தோஷமா ஜாலியா சிரிப்பாக. மத்தவங்களை சந்தோஷப்படுத்திதான் நாம சந்தோஷப்படணும்ன்னு புரியவைக்குற கூத்து அது.

பெருமாள் கோயிலுக்குள்ள அழகர் போறதுதான் டைமிங். அடுத்த ஆட்டத்துக்குத் தயாராவோம். ஆத்துத் தண்ணிக்குள்ள, பெரியபாலத்துக்குக் கீழ, ஆத்தங்கரை செம்மண் மேட்டுல, கருப்பணசாமி கோயில்ல... இப்படி எங்க நின்னு குதிர வாகனம் பார்க்கிறதுன்னு முடிவு பண்ணிக்குவோம். ஏன்னா, விடிஞ்சா ஓரிடத்தில இருந்து வேற இடம் நகர முடியாதே.

ஆத்துக்குள்ள பெரியபாலத்துக் கீழ நின்னுக்கிட்டா ஒவ்வொரு நொடியவும் அனுபவிக்கலாம். ஒருமணி நேரத்துக்கு ஒருக்க போடுற அழகர் பாட்டும், ஆத்துக்குள்ள தண்ணி எடுத்துட்டு போற கொட்டுச்சத்தமும் காதுக்கும் கைகாலுக்கும் விருந்துன்னா, நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா இடம்பிடிக்கிற கூட்டம் கண்ணுக்கு விருந்து.

தண்ணி லாரி டாப், மொட்டை மாடி கைப்பிடி, பெரியபாலம் ஆர்ச்... இப்படி, ரிஸ்க்கான எரியாலயும் ரகளையா ஏறிப்பானுங்க. பளபள குதிரையில அழகரு பகுமானமா வருவாரு. ஏயாத்தே, என்னா சத்தம்... அனுபவிச்சா தெரியும்! மண்டகப்படி, வெயிட்டிங்ன்னு ஹைப் ஏத்துவாரு, ஆத்தங்கரையே அமைதியாயிருக்கும். குதிர, லேசா இப்படின்னு நகர்ந்ததும் போடுவாய்ங்க பாருங்க பாட்ட... அந்தக் கொலவைக்கும் கொம்புக்கும் அழுக வருமய்யா. அத்தனை பேருக்கும் ஆனந்தக் கண்ணீரு!

விடிஞ்சு வெயிலுவர ஆட்டம்தான். சுத்தியும் பாக்கணுமே... ஆத்துத் தண்ணி அகப்படாது. எந்த வாகனத்தைப் பார்க்கலைன்னாலும் குதிரை வாகனத்துக்கு நாளுபூராம் கூட்டம் வரும்.

அன்னைக்கும் அடுத்த நாளும் வண்டியூரு, அவரு ஊரு. அடுத்தநாள் திரும்ப பல்லக்குக்குத் தல்லாகுளம் வருவாரு. என்னன்னே சொல்லத் தெரியாது, நெஞ்சு கனக்கும். அதுக்குள்ள கிளம்பிட்டாரேன்னு கத்தத் தோணும். அழகர் மேஜிக், அது.

ஆனா, அந்தக் காலத்து அழகர் திருவிழா எப்படியிருந்திருக்கும்ன்னு பார்க்கணும்ன்னா, அழகர் திரும்பிப் போறப்போ பார்க்கலாம். அப்பன்திருப்பதி கிராமத்துக்கு அழகர் போனதும், விடிஞ்சிரும். கூட்டம் நெருக்காம, கட்டடங்கள் மறைக்காம தூரத்து ரோட்டுல, விடிஞ்ச வெளிச்சத்துல அழகாத் தெரியும் அழகர் ஊர்வலம்.

நல்லபடியா கோயில்ல சேர்த்துட்டு திரும்பும்போது, கேட்டதையெல்லாம் ஆசையா வாங்கித் தர்ற மாமனை விட்டுட்டுத் தனியாப் புறப்படுற மாதிரி வலிக்கும். 'சரி, சரி பத்திரமாப் போயிட்டு வா, எங்க போகப் போறேன். அடுத்த வருஷம் இதே மாசம் வந்துருவேன்'ன்னு ஆறுதல் சொல்லி அனுப்புற மாதிரி இருக்கும், பின்னாடி தெரியுற அழகர்மலை!