Published:Updated:

சரித்திர நினைவுகளில் திளைத்தோம்!

சோழர் உலா
பிரீமியம் ஸ்டோரி
சோழர் உலா

சோழர் உலா

சரித்திர நினைவுகளில் திளைத்தோம்!

சோழர் உலா

Published:Updated:
சோழர் உலா
பிரீமியம் ஸ்டோரி
சோழர் உலா

சிலிர்ப்பும் சிறப்புமாக நிறைவடைந்தது சோழர் உலா பயணம். வரலாற்றுத் தகவல்கள், ஆலயம்தோறும் சிறப்பு தரிசனம்- வழிபாடுகள், சிறப்பு விருந்தினர்களின் கலந்துரையாடல்கள் என சரித்திரமும் சமயமும் சங்கமிக்க இனிதே நடந்தது யாத்திரை. யாத்திரையில் கலந்துகொண்ட வாசகர்களின் அனுபவப் பகிர்வுகள் இங்கே உங்களுக்காக!

சோழர் உலா
சோழர் உலா


`கல் உருளை - சகஸ்ரலிங்கம் - தொல் வானியல்!’

சோழர் உலா யாத்திரை 21.5.22 அன்று காலை திருச்சி ஜே பி கிங் பேரடைஸ் ஹோட்டலிலிருந்து தொடங்கியது. முதல் நாள் இரவு சென்னை விகடன் அலுவலகத்திலிருந்து பேருந்தில் புறப்பட்டு, மே 21 அன்று அதிகாலையில் இந்த விடுதியை அடைந்தோம். சற்று ஓய்வுக்குப் பிறகு காலை 8:30 மணியளவில் தொடங்கியது எங்களின் பயணம்.

எஸ்.சிவக்குமார்
எஸ்.சிவக்குமார்


அறிமுக படலம் பேருந்திலேயே நடந்தது. ஆற்றுப்படை அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான பார்த்திபன், சரித்திர வழிகாட்டியாக எங்களுடன் இணைந்துகொண்டார். முதலில் சென்ற திருக்கோயில் லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயம். லால்குடியின் ஆதித் தமிழ்ப் பெயர் திருத்தவத்துறை. சப்த ரிஷிகள் சிவனை அடைக்கலம் அடைந்த தலம். சிவபெருமான் சுயம்புலிங்கம். வீணா தட்சிணா மூர்த்தி, பிடாரி, அர்த்தநாரீஸ்வரர் என பார்க்கும் இடமெல்லாம் அழகிய சிற்பங்கள். இங்குள்ள கட்டுவாங்க ஈஸ்வரர் வேறெங்கும் காண்பதற்கரிய சிற்பம் என்றார் பார்த்திபன்.

அடுத்து திருமங்கலம் சாம வேதீஸ்வரர் ஆலயம். அம்பாள் லோகநாயகி. பிரமாண்ட லிங்கம், பரசுராமர் வழிபட்ட தலம், சாம வேதத்துக்கான ஆலயம், அபய முத்திரையுடன் திகழும் தென்முக தெய்வம்... என ஆலயத்தின் அனைத்து சிறப்புகளையும் காட்டி, மகிமைகளை பார்த்திபன் விளக்க நாங்கள் சிலிர்த்துப்போனோம்.

அடுத்து தரிசித்தது திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில். நோய் தீர்க்கும் தலம். சுந்தரருக்கு சிவனருளால் கிடைத்த பொன், தரமானதுதானா என்று சிவனும் பெருமாளுமே வந்து சோதித்துத் தந்த தலமாம். திருஞானசம்பந்த பெருமான் பதிகம் பாடிட, கொல்லிமழவன் எனும் மன்னன் மகளின் பிணி தீர்ந்த தலம். முயலகனுக்குப் பதிலாக சர்ப்பத்தின் மீது நின்றருளும் நடராஜர் தரிசனமும் ஆதி சகஸ்ர லிங்க தரிசனமும் இத்தலத்துக்கே உரிய சிறப்பம்சங்கள். அரிகண்ட சிற்பம், தூண் மாடத்தில் உருளும் கல் என இங்கும் சிற்ப அற்புதங்கள் உண்டு!

அடுத்து சென்றது சோழமாதேவி - கயிலாயமுடையார் கோயில். வெட்டவெளியில் சுற்றுச்சுவர் ஏதுமின்றி நிற்கும் கற்றளி. அதிக மான கல்வெட்டுகளைக் கொண்ட கோயில். கோஷ்டத்தில் திகழும் பிட்சாடர் சிற்பம் மிக அற்புதம். ஆதிசங்கரரின் பாஷ்யம் ஒன்றைக் குறிக்கும் அபூர்வ கல்வெட்டு இக்கோயிலின் சிறப்பு. தஞ்சை பெரியகோயிலின் மெய்க்காவலுக்கு தேர்வுசெய்யப்பட்ட வீரர்கள் நால்வர் இவ்வூரிலிருந்து சென்றிருக்கிறார்கள் என்பது, பார்த்திபன் அளித்த கூடுதல் தகவல்.

அடுத்து திருநெடுங்களம் கருவறையில் ஈசன் சற்று விலகி அமர்ந்திருக்கிறார். காரணம் உமையாளுக்கு இடம் கொடுத்துத் தள்ளியிருக்கிறாராம். ஸ்வாமி அருளும் கருவறையிலேயே அம்பாள் அரூபமாக அருள்வதாக ஐதிகம். அதனால் கருவறைக்கு மேலே இரண்டு விமானங்கள்.

ஒருவழியாக முதல்நாள் பயணம் நிறைவுபெற விடுதியை அடைந்தோம். ஜே பி கிங் பேரடைஸ் எனும் இந்த விடுதியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். மிக அழகான தங்குமிடம்; தகுந்த உபசரிப்பு. சிறிது ஓய்வுக்குப் பிறகு இரவு 8 மணியளவில், திருச்சி அருங் காட்சியகத்தின் அலுவலர் சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

அருங்காட்சியகம் குறித்து அவர் அளித்த தகவல்கள் பிரமிக்க வைத்தன. அதேபோல், பண்டைய தமிழர்தம் வாழ்வியல், தொல் வானியல் அறிவு குறித்து பல அற்புத விவரங்களைப் பகிர்ந்து கொண்டார் வானியல் ஆய்வாளார் பாலபாரதி. குறிப்பாக ஆதிரை விண்மீனையும் நடராஜ உருவையும் ஒப்பிட்டு அவர் கூறிய தகவல்கள், அவசியம் அனைவரும் அறிய வேண்டிய பொக்கிஷங்கள்!


- எஸ்.சிவக்குமார், வழக்கறிஞர் - பழநி


`மாடக்கோயில் - வந்தியத் தேவன்’

எஸ்.மோகனா சுகதேவ்
எஸ்.மோகனா சுகதேவ்

ஞாயிற்றுக் கிழமை (22.5.22) காலையிலேயே தஞ்சைக் காவிரிக் கரை ஆலயங்களை தரிசிக்க புத்துணர்வோடு கிளம்பினோம்.

முதல் கோயில் பசுபதிகோயில். முற்கால சோழ மன்னனான கோச்செங்கண் அமைத்த மாடக்கோயில்களில் ஒன்று. நீண்ட வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் தொன்மையை வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் மிக அற்புதமாக விவரித்தார். செங்கணான் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில், முதலாம் பராந்தகன் காலத்தில் கற்றளியாக புனரமைக்கப்பட்டதாம்.

தொடர்ந்து அருகிலேயே உள்ள திருப்புள்ள மங்கையை அடைந்தோம். ஞான சம்பந்தப் பெருமானின் பாடல் பெற்ற தலம். ஈசன் பெயர் பிரம்மபுரீஸ்வரர். அம்பாள் அல்லியங்கோதை நாச்சியார்; கோஷ்டச் சிற்பங்கள் அனைத்தும் மிக அழகு. புன்னகை தவழும் நான்முகன், மகிஷாசுரமர்த்தி, பிட்சாடனர் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

வலம் வரும்போது ஓரிடத்தில் திகைத்து நின்றுவிட்டோம். ஆம்! கோஷ்டச் சிற்பத்தொகுப்புக்கு இடையே பொன்னியின்செல்வன் நாயகன் வந்தியத்தேவனும் அமர்ந்திருந்தான். ``இல்லையில்லை... பிட்சாடனர் திருவுருவம் அது. ஓவியர் மணியனை இந்தச் சிற்பம் வெகுவாக ஈர்த்தது போலும். இந்தத் திருவுருவை மனதில்வைத்தே வந்தியதேவனுக்கு உருவம் கொடுத்ததாகத் தகவல்’’ என்று பார்த்திபன் விளக்க, வியந்து நின்றோம்.

மதிய உணவு சிறிது களைப்பாறலுக்குப் பிறகு வலஞ்சுழிக்குப் பயணித்தோம். வலஞ்சுழி சுவேத விநாயகரின் மகிமை எல்லோரும் அறிந்ததே. அதேபோல், வலஞ்சுழியின் கருங்கல் பலகணியும் அவசியம் தரிசிக்க வேண்டிய சிற்பப் பொக்கிஷம்! இங்கே ஒரு க்ஷேத்திரபாலரைத் தரிசிக்கவைத்த பார்த்திபன், ``சோழர்களின் குலதெய்வம் இவர்’’ என்றார். அதே போல் இங்குள்ள ஏகவீரி எனப்படும் அஷ்டபுஜ காளியை போர் தெய்வமாகப் போற்றி வழிபட்டுள்ளனர் சோழர்கள்.

இந்த ஆலயத்தின் கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டினார் பார்த்திபன். அவை, ராஜராஜனின் மகள்கள், மகன்கள் தானமாய் அளித்த பொற் கழஞ்சியங்களைப் பற்றி விவரிக்கின்றன. ராஜேந்திரன் தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்த விவரத்தை ஒரு கல்வெட்டு விவரிக்கிறது.

அடுத்து, தாராசுரம் - இரண்டாம் ராஜராஜனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம். முன்பு ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டு பின்பு தாராசுரம் என்றானாதாம். சாபத்தின் காரணமாக இந்திரனின் ஐராவதம் எனும் வெள்ளை யானை கருமை நிறம் அடைந்தது. அது, இங்குள்ள இறைவனின் அருளால் விமோசனம் பெற்றதால், ஸ்வாமிக்கு ஐராவதீஸ்வரர் என்று திருப்பெயர். தாயார் பெயர் தெய்வநாயகி.

இங்கே, எங்களுக்காக சிறப்பாக ஈசனுக்கு விரிவான அபிஷேக ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்குளிர தரிசித்தோம்; எளிதில் கிடைக்காத பாக்கியம். அதைப் பெற்றுத் தந்த சக்திவிகடனுக்கு நன்றி.

யானைகள் இழுத்துச் செல்லும் தேர் வடிவிலான ஆலயம், 40,000-க்கும் அதிகமான சிற்பங்கள், நாயன்மார் வரலாற்றை விவரிக்கும் சிற்பத் தொகுப்பு... என கலையழகும் பிரமாண்டமும் சங்கமிக்கும் தாராசுரம் என்றென்றும் எங்கள் நினைவில் நிற்கும். இக்கோயிலின் அருகிலேயே ஒட்டக்கூத்தருக்கு அருளிய வீரபத்திர சுவாமி கோயிலை தரிசித்தது, நாங்கள் பெற்ற பேறு. இக்கோயிலில் ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை அமைந்துள்ளது. தாராசுரம் செல்வோர், அவசியம் இக்கோயிலையும் தரிசியுங்கள்.

அடுத்து நாங்கள் சென்றது திருபுவனம். மூன்று நாடுகளையும் வெற்றி கொண்ட திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கன் பெயரால் திரிபுவன வீரேச்சுரம் மற்றும் திரிபுவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் பின்னர் விஜயநகர ஆட்சியின் போது கம்பஹரேஸ்வரம் என்று மாறியது.

இறைவன் கம்பகரேஸ்வரர் அல்லது நடுக்கம் தீர்த்த ஈசன் என்று அழைக்கப்படுகிறார். இறைவி அறம் வளர்த்த நாயகி. இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி பிரசித்தமானது. அவர் சந்நிதி மண்டப விமானத்தில் சிற்பக் காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்தக் கோயிலோடு சரித்திர யாத்திரை நிறைவுற்றது.

மொத்தத்தில் `சோழர் உலா’ பயணம் முழுக்கவும் ஆன்மிகச் சிந்தையில் மட்டுமன்றி அரிய பல சரித்திரச் சுவடுகளைக் கண்டு வரலாற்று நினைவுகளிலும் நீந்தித் திளைக்கும் வாய்ப்பைத் தந்தது என்றே சொல்லலாம். வெகு ஆர்வமாகக் காத்திருக்கிறோம் சக்தி விகடனுக்கும் பயணிக்கப் போகும் அடுத்த யாத்திரைக்காக!

- எஸ்.மோகனா சுகதேவ், எழுத்தாளர் - சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism