Published:Updated:

“பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக...” - கிறிஸ்மஸ் சொல்லும் நற்செய்தி! #Christmas

கிறிஸ்மஸ்
News
கிறிஸ்மஸ்

இறைவன் எளிமையின் வடிவானவன். எளியவர்களுக்கு மிக அருகில் இருக்கிறவன். எளியவர்களுக்காக வாழ்கிறவன். எளியவனாகவே இருப்பவன். இதைத்தான் அவரின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்த விரும்பியது.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

லூக்கா 11-14

பனி படர்ந்த முன்னிரவு. அது பண்டிகைக்காலமாக இருந்ததால் ஊரில் ஒரு சத்திரத்திலும் இடமில்லை. மரியாளுக்கோ நிறை மாத கர்ப்பம். எந்நேரமும் பிரசவம் ஆகிவிடும் சூழல். ஒரு தொழுவத்தில் ஒண்டிக்கொள்ள இடம் கிடைத்தது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த கர்த்தரின் ஒரே குமாரன் அந்தத் தொழுவத்தில் பிறப்பெடுத்தார்.

கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ்

அந்தக் காட்சியைக் கொஞ்சம் மனக்கண்ணில் நினைத்துப்பாருங்கள். இந்த உலகுக்கு நற்செய்தியைச் சொல்லவந்த அந்த இறைமகன் துணியில் சுற்றப்பட்டு எளிமையாகத் தொழுவத்தின் முன்னணையில் கிடத்தப் பட்டிருக்கிறார். இவரின் பிறப்பைத் தேடித்தான் கிழக்கு தேசங்களிலிருந்து சாஸ்திரிகள் வெகுமதிகளோடு வந்திருக்கிறார்கள். தேவதூதர்கள் அங்கிருக்கும் மேய்ப்பர்கள் முன்பு தோன்றி கிறிஸ்து பிறப்பை அறிக்கையிட்டு வாழ்த்துகிறார்கள். இந்த அற்புதத்தை முன்னறிவிக்கத்தான் நட்சத்திரம் வானில் தோன்றி வழி நடத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இயேசுகிறிஸ்து ஆண்டவனின் ஒரே குமாரன். அவரை தேவன் நினைத்திருந்தால் ஏதேனும் ஓர் அரண்மனையில் பிறக்க வைத்திருக்கலாம். ராஜாவாக வாழ வைத்திருக்கலாம். சகல ஜனங்களையும் அவருக்குக் கீழ்படியுமாறு செய்திருக்கலாம். இன்றைக்கு சிறு அதிகாரப் பதவியில் உள்ளவர்கூடத் தன் மகனை எப்படி வாழவைக்கவேண்டும் என்னும் பெருங்கனவோடு இருக்கிறார். குறுக்கு வழியின் மூலமேனும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அந்த இறைவன் தன் மகனை ஒரு தொழுவத்தில் பிறக்கவும், கந்தல் துணிகளால் சுற்றிக்கிடக்கவும் செய்தார். காரணம் இறைவன் தான் விரும்புவது எளிமையின் ரூபமே என்பதை உணர்த்த விரும்பினார். அந்த எளிமை அவர் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது.

இறைவன் எளிமையின் வடிவானவன். எளியவர்களுக்கு மிக அருகில் இருக்கிறவன். எளியவர்களுக்காக வாழ்கிறவன். எளியவனாகவே இருப்பவன். இதைத்தான் அவரின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்த விரும்பியது. இயேசு கிறிஸ்து தன் வாழ்க்கையைச் சொல்லும் சுவிசேஷங்களை வாசியுங்கள். அதில் அவர் எப்போதும் எளிய மக்களோடே இருந்தார். மீனவர்களும், கூலிவேலை செய்பவர்களும் நோயாளிகளும் எப்போதும் அவருக்கு அருகே இருந்தார்கள். அவரும் அவர்கள்மீது பிரியமாயிருந்தார்.

இயேசு
இயேசு

எளிமையாக இருந்தது மட்டுமல்ல... ஏழ்மையை உண்டு பண்ணுகிற அதிகாரத்துக்கு எதிரான தன் சொற்சாட்டைகளை எடுத்து வீசி ஆட்சியாளர்களை அதிரவும் செய்தார். ஆன்மிகம் என்பது சடங்கு அல்ல. ஆன்மிகம் என்பது வேண்டுதல்கள் அல்ல. ஆன்மிகம் என்பது பயப்படுவது அல்ல. ஆன்மிகம் என்பது யாரையும் அடக்கி ஒடுக்குவதல்ல என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரைப் பொறுத்த வரை ஆன்மிகம் என்பது அன்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்பையே அவர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களுக்கு போதனையாகச் செய்தார். இந்த உலகின் மக்களுக்கு அவர் இரண்டே எளிமையான கட்டளைகளை முன்வைத்தார்.

“இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை.

‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார்.

இயேசு
இயேசு

அவரின் எளிய போதனையைப் பாருங்கள். நீங்கள் இறைவனுக்கு பயப்பட வேண்டாம். வேண்டுதல் செய்ய வேண்டாம். சடங்களை நிறைவேற்ற வேண்டாம். செய்ய வேண்டியதெல்லாம் முழு இருதயத்தோடு அன்பு செய்வது மட்டும்.

சரி இறைவனிடம் அன்பு செய்து மனிதர்கள் மேல் வெறுப்பாய் இருந்தால் அது எப்படி சரியாகும்? அதனால்தான் ‘உங்களை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசியுங்கள்’ என்றார்.

மனிதர்களின் குணங்களில் தவிக்க முடியாதது சுயநலம். மனிதன் எதை இழந்ததாலும் தன் வாழ்வை, தன் சுகத்தை, தன் பொருளை இழக்க மட்டும் சம்மதிக்கவே மாட்டான். எனவேதான் இயேசு இந்த உலகுக்குச் சொல்லும்போது ‘நீங்கள் உங்களை எப்படி நேசிகிறீர்களோ...’ என்று குறிப்பிட்டுச் சொன்னார்.

நாம் தன்னைப்போல் பிறரையும் நேசிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் இந்த உலகில் என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது? இயேசு அதை வெறும் சொற்களாகப் பிரசங்கம் செய்தவர் அல்ல. தன் சொற்களின் படியே நடந்தவர். தன் சொந்த உடலை உலக உயிர்களின் மீட்புக்காக சிலுவையில் பலியிட்டவர். தன் சர்வ வல்லமையினால் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர். அப்படிப்பட்ட இறைமகனின் பிறப்பை அடையாளப்படுத்தும் விதமாக அல்லவா கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது...

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அபாயம் காரணமாகக் களையிழந்து காணப்பட்ட கிறிஸ்மஸ் இந்த ஆண்டு கொஞ்சம் புத்துணர்வைப் பூசிக்கொண்டிருக்கிறது. இந்த நாளில் நாமும் அந்தப் புத்துணர்வை நமக்குள் பூசிக்கொள்வோம். இயேசுவின் பிரியமான கட்டளையான அன்பை நமக்குள் மேலும் மேலும் பெருக்குவோம். சக மனிதர்களின் மீதான வெறுப்பைக் கைவிடுவோம். இன்னும் மனித குலத்துக்கு நம்மால் என்ன பங்களிப்பைச் செய்ய முடியும் என்று யோசிப்போம்.

இயேசு
இயேசு

கடந்த ஆண்டுகளில் எத்தனையோபேர் இந்தக் கொடுந்தொற்றுக்குத் தங்களின் பிரியமானவர்களை இழந்திருக்கக் கூடும். வாழ்க்கை செல்வது எப்படி என்று தவிப்போடு இருக்கலாம். ஆனால் அவர்களுக்கெல்லாம் நீங்கள் ஆறுதல் சொல்லுங்கள். யார் அருகில் இல்லாவிட்டாலும் அவர்கள் அருகில் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார். இயேசுவானவர் உடனிருந்து நடப்பவற்றை நல்லவையாக மாற்றித்தருவார் என்று நம்பிக்கையூட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். இந்த கிறிஸ்மஸ் அவர்களுக்குள் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்றட்டும் என்று மனதார ஜபம் செய்யுங்கள். நீங்கள் செய்யும் ஜபத்தைக் கேட்டு எல்லாம் நல்லபடியாக அருள் செய்ய இயேசு இன்று உங்கள் ஒவ்வொருவர் அருகில் இருந்து ஆசி வழங்குவார்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்.