
ஆறுமுகக் கடவுளின் திருப்பெயர்களில் ஒன்று சிரவணன். கந்தனுக்குத் துணையாக ஈசன் இங்கு எழுந்தருளி இருப்பதால் இந்தப் பெயர் உருவானதாகவும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள சரவணம் பட்டி எனும் பகுதியில் சுயம்பு மூர்த்தியாகக் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீசிரவணமாபுரீஸ்வரர். இவ்வூரின் புராணப் பெயர் சிரவணபுரம். அறிவிற் சிறந்தவர்கள் நிறைந்த ஊர் என்பதால் `சிரவணபுரம்' என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஆறுமுகக் கடவுளின் திருப்பெயர்களில் ஒன்று சிரவணன். கந்தனுக்குத் துணையாக ஈசன் இங்கு எழுந்தருளி இருப்பதால் இந்தப் பெயர் உருவானதாகவும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள். ஆதியில் ஓடு வேயப்பட்ட ஆலயமாகத் திகழ்ந்ததாம். தற்போது புதுப் பொலிவுடன் மிளிர்கிறது. ஈசனின் கருவறைக்கு எதிரில் ஒன்று; முருகனின் கருவறைக்கு எதிரில் ஒன்று என இரண்டு நுழைவு வாயில்கள் இங்குள்ளன!
கருவறை, அர்த்த மண்டபம் எனத் திகழ்கிறது ஸ்வாமியின் சந்நிதி. கருவறையில் மூலவர் ருத்ராட்ச பந்தலின் கீழ் அருளுகிறார். வட்ட வடிவ ஆவுடையாருடன் நான்கடி உயரத்தில் திகழ்கிறது லிங்கத் திருமேனி. ஸ்வாமியின் முன்புறம் குவிந்தும் பின்புறத்தில் லிங்கபாணம் குழிந்தும் திகழ்வது விசேஷ அம்சம். இப்படியான வேலைப்பாடு, அபிஷேகத்தின்போது நன்கு புலப்படுமாம். மகா மண்டபத்தில் ஈசனுக்கு இடப்புறம் தெற்கு நோக்கி சிவகாமியம்மை சந்நிதி. வலக் கையில் கருங் குவளை மலரை ஏந்தியும், இடக்கையை கீழே தொங்கவிட்ட நிலையிலும் அருள்கிறாள் இந்த அம்பிகை.
ஈசன் சந்நிதிக்கு இடப்புறத்தில் பால தண்டாயுதபாணி சந்நிதி. வலக்கையில் வெற்றிவேல் ஏந்தியும், இடக்கையை இடுப்பில் வைத்தும் நின்ற கோலத்தில் அருள்கிறார் இந்த முருகப்பெருமான்.
பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம், பெளர்ணமி முதலான புண்ணிய தினங்களில் இங்கு வந்து வழிபட்டால் தொழில் விருத்தி உண்டாகும் என்பது, சுற்றுவட்டாரத்துப் பக்தர்களின் நம்பிக்கை.