Published:Updated:

மகாநவமியில் அருளும் நவராத்திரி நாயகி... அன்னை சரஸ்வதியின் திருவடிவங்கள் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

சரஸ்வதி
சரஸ்வதி

சில தலங்களில், சரஸ்வதிதேவி சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றிருக்கிறாள். இந்தத் தலங்கள் அனைத்திலுமே சரஸ்வதி தேவியை வழிபட்டு அருள் பெறலாம். அந்தத் தலங்களைப் பற்றி காண்போம்...

அன்னை சரஸ்வதி தேவியின் அற்புதத் திருக்கோலங்கள்... அருள்மழை பொழியும் திருவருட்தலங்கள்! மகாநவமியில் அருளும் நவராத்திரி நாயகி... அன்னை சரஸ்வதியின் திருவடிவங்கள் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்! வாணி, வாகீஸ்வரி, ஆகமச்செல்வி... சரஸ்வதி பூஜை சிறப்புத் தொகுப்பு!

Saraswathi Poojai
Saraswathi Poojai

பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாகத் திகழ்பவள், அம்பிகை. அவளே அனைத்து ஜீவராசிகளையும் படைத்துக் காத்தருள்புரிபவள். அவளிடமிருந்தே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், சகல தேவர்களும் தோன்றினர். பிரபஞ்சத்தின் ஆதி சக்தியான அம்பிகையை வழிபடுவதற்கு உகந்த காலம், நவராத்திரி.

அன்னையை நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்கையாகவும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமியாகவும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகிறோம். நவராத்திரி விரதமிருந்து சக்திதேவியை வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதிகம். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள், சரஸ்வதி பூஜை எனப்படும் ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.

Saraswathi Poojai
Saraswathi Poojai

கல்விக் கடவுளாகப் போற்றப்படும் சரஸ்வதி தேவியை வழிபடும் நாளாகவும், நம் தொழிலுக்கும் உணவுக்கும் துணைபுரியும் கருவிகளுக்கு நன்றி செலுத்திப் போற்றும் விதமாகவும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை திருவிழா கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவிக்கு வாகீஸ்வரி, வித்யா, சாரதா, நீலசரஸ்வதி, ஆகமசுந்தரி, ஆகமச்செல்வி, ஞானசரஸ்வதி என்று பல்வேறு திருநாமங்கள் உண்டு.

சரஸ்வதி தேவிக்கு, இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே கோயில்கள் உள்ளன. மற்ற இடங்களில் அவள் கோஷ்ட தெய்வங்களாக வழிபடப்படுகிறாள். சில தலங்களில் சரஸ்வதி தேவி சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றிருக்கிறாள். இந்தத் தலங்கள் அனைத்திலுமே சரஸ்வதி தேவியை வழிபட்டு அருள் பெறலாம். அந்தத் தலங்களைப் பற்றி காண்போம்...

ஜம்மு-காஷ்மீரில் அமைந்திருக்கும் ‘சாரதா பீடம்’, சரஸ்வதி தேவிக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் முக்கியமான கோயிலாகும். இது, 18 சக்தி பீடங்களுள் ஒன்று. இந்தத் தலத்தின் மூலவரான சாரதா தேவியின் திருவுருவம், சந்தன மரத்தால் செய்யப்பட்டது.

சரஸ்வதி அருள்புரியும் கோயில்களில் தனிச்சிறப்பு மிக்கது தெலங்கானா, அடிலாபாத் மாவட்டத்தில் பஸாரா என்கிற கிராமத்தில், குன்றின்மேல் அமைந்துள்ள ஞான சரஸ்வதி கோயில். இந்தத் தலத்தில் சரஸ்வதி தேவி ஞானத்தின் வடிவமாகக் காட்சிதருகிறாள். அதனால், விஜயதசமியன்று இந்தத் தலத்தில் வித்யாரம்பம் சிறப்பாக நடைபெறும்.

தமிழகத்தில், கல்வித் தெய்வம் சரஸ்வதிக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களில் முதன்மையானது, கூத்தனூர் சரஸ்வதி கோயில். கவிபாடும் திறன் வேண்டி ஒட்டக்கூத்தர் கலைமகளுக்கு எழுப்பிய கோயில் இதுவாகும். பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ‘ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய’ என்று பரணி பாடியுள்ளார், ஒட்டக்கூத்தர். கூத்தனூர் சரஸ்வதியை வணங்கினால், ஒட்டக்கூத்தருக்கு அருள்புரிந்ததைப் போலவே நமக்கும் பேரருள் புரிவாள்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள ஞான சரஸ்வதியின் உருவம் தனிச்சிறப்புமிக்கதாகும். மேற்கரங்களில் ஜெப மாலையும், நீர்க் கரத்தையும் ஏந்தி கீழ்க் கரங்களில் சூசி முத்திரையையும் புத்தகத்தையும் ஏந்தி, 14 இதழ்கொண்ட தாமரை மலர்மீது அமர்ந்திருக்கிறாள்.

வேதங்களே ஈசனை வணங்கிய தலம், வேதாரண்யம். இந்தக் கோயிலின் பிராகாரத்தில், மிகப்பெரிய சரஸ்வதி தேவி வீற்றிருக்கிறாள். இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், சரஸ்வதி வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் ‘யாழைப் பழித்த மொழியம்மை’ என்பதாகும். கும்பகோணம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் வீணை ஏந்தியபடி அருளும் கலைவாணி, தன் நாயகனைப் போன்றே நான்கு முகங்களுடன் தரிசனம் தருகிறாள்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், பரவூர் என்ற இடத்தில், வெண்தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் சதுர வடிவமான ஒரு குளத்தின் மையத்தில் அமைந்துள்ளது, கோம்பிகா எனும் சரஸ்வதி கோயில். இந்த சரஸ்வதி தேவி ‘தட்சிண மூகாம்பிகை’ என்று அழைக்கப்படுகிறாள்.

கர்நாடகா மாநிலம் சிருங்கேரியில், துங்கபத்திரா நதிக்கரையில் ‘சாரதா தேவி பீடம்’ அமைந்துள்ளது. ஆதி சங்கரர் உருவாக்கிய இந்த சாரதா பீடத்தில், அன்னை சரஸ்வதிக்கு கோயில் கொண்டுள்ளாள்.

முனிவர் ஒருவரின் சாபத்தினால் பேசும் தன்மையை இழந்த சரஸ்வதி தேவி, ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம் திருக்காளத்தி. பேச்சுக் குறைபாடுள்ளவர்கள் இந்தத் தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வணங்கினால், குறைகள் நீங்கப் பெறலாம் என்பது ஐதிகம்.

Saraswathi Poojai
Saraswathi Poojai

திருமறைக்காட்டில், சரஸ்வதி தேவி கலைகளின் வடிவமாக நின்று சிவனை வழிபட்டாள். அதானை நாவரசர், 'கலைகள் வந்திறைஞ்சும் கழல்' என்று பாடியிருக்கிறார். இங்கு, அன்னை வேத சரஸ்வதியாகவே வீற்றிருந்து அருள்செய்கிறாள்.

குருகாவூரில் பிரம்மதேவன் சிவலிங்கத்தை வழிபட்டபோது, அவனுடன் சரஸ்வதியும் இணைந்து பூஜை செய்தாள். அங்கு அன்னை உண்டாக்கிய தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தமாகும்.

சரஸ்வதி தேவி சிவபூஜை செய்து பேறு பெற்ற தலங்களில், காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆலயமும் ஒன்று. இங்கு, சரஸ்வதி தேவி தனி சந்நிதியில் அருள்புரிகிறாள். இங்கு செய்யப்படும் குழந்தைகளுக்கான கல்வித் தொடக்கம், தொழிற்சாலைகளுக்கான பூஜைகள் ஆகியவை பல மடங்கு பலன் தரும் என்பது ஐதிகம். இங்கு அருள்புரிவது ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரியின் படைத்தலைவிகளுள் ஒருத்தியான சியாமளாதேவியின் திருவுருவமாகும். இவள், ‘மகா சரஸ்வதி’ என்று போற்றப்படுகிறாள்.

இதே மகா சரஸ்வதி தேவி, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், தாமரை, நீலோற்பலம், மலரம்பு, கரும்புவில் ஆகியவற்றை ஏந்தி அருள்புரிகிறாள்.

திருச்சி, பிச்சாண்டார் கோயிலில், பிரம்மனைப் போலவே சரஸ்வதிக்கும் தனிச் சந்நிதி உள்ளது. ஞான சரஸ்வதியாக அன்னை வீணை இல்லாமல், கையில் ஓலைச் சுவடியோடும் ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.

வாக்தேவி காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று மூன்று வடிவங்களைக்கொள்கிறாள். இந்த மூன்று வடிவங்களுடன் அவள் வழிபட்ட தலம், திருவீழிமிழலையாகும். இங்குள்ள மூன்று லிங்கங்கள் காயத்ரீசுவரர், சாவித்திரீசுவரர், சரஸ்வதீசுவரர் என்று அழைக்கப்படுகின்றன.

Saraswathi Poojai
Saraswathi Poojai

சரஸ்வதி தேவியின் வடிவங்களுள் ஒன்று ‘வேத சரஸ்வதி’. வேதங்களில் சரஸ்வதி தேவி உருத்திரர்களோடு வருவதாகக் கூறப்பட்டுள்ளதால், வேத சரஸ்வதி சடாமகுடம் தரித்து, அபய முத்திரையுடன் விளங்குகிறாள். அவள், நதியின் வடிவமாகவும் அமுதத்தை அளிப்பவளாகவும் போற்றப்படுவதால், பூரண கும்பத்துடன் காட்சியளிக்கிறாள். எல்லோரா கயிலாசநாதர் கோயிலில் சரஸ்வதி தேவி கங்கை, யமுனையுடன் அருள்புரிகிறாள்.

பிரம்மதேவனின் வலப்புறம் அவள் வாணியாகவும் இடப்புறம் சரஸ்வதியாகவும் வீற்றிருக்கிறாள். இந்த இரண்டு வடிவத்துடனும் அவள் சிவபெருமானை பெருவேளூரில் வழிபட்டாள். அதனால் அந்த சிவலிங்கம் வாணிசரஸ்வதீசுவரர் என்றழைக்கப்படுகிறது.

Saraswathi Poojai
Saraswathi Poojai

ஞான சரஸ்வதி, சிவபெருமானிடமிருந்து வெளிப்படும் ஞானப் பெண்ணாதலின் அவரைப் போலவே ஜடாமகுடம் தரித்து அதில் பிறைச்சந்திரனைச் சூடியுள்ளாள். ஸ்ரீ தத்துவநிதி நூலானது 'சரஸ்வதி சந்திரனைச் சூடி அமுத கலசத்தை ஏந்தினாள்' என்று கூறுகிறது. கடலங்குடியில் கிடைத்து, இந்நாளில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்திலுள்ள சரஸ்வதி, முடியில் சந்திரன் தரித்த கோலத்தோடு காட்சிகொடுக்கிறார்.

பின் செல்ல