Published:Updated:

தீபங்கள் ஒளிரட்டும்!

நதி நீரில் மிதக்கவிடப்படுவது ஜல தீபம்.

பிரீமியம் ஸ்டோரி

தீபத்தில் தீபலட்சுமி உறைவதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது நல்லது. அதேபோல் ஞானநூல்கள் தீப வகைகள் குறித்தும் விளக்குகின்றன.

சித்திர தீபம்: வண்ணப் பொடிகளால் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம்.

மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம்.

ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தின் உச்சத்தில் அல்லது மாடியின் உச்சத்தில் ஏற்றிவைக்கப்படுவது. இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், அச்சம் விலகும் என்பார்கள்.

தீபங்கள் ஒளிரட்டும்!

ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படுவது ஜல தீபம்.

படகு தீபம்: நதி தீரங்களில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை மிதக்கவிடுவர். படகு போன்று செல்லும் இந்த தீபமே நெளகா தீபம் எனப்படும். சம்ஸ்கிருதத்தில் `நௌகா’ என்றால் `படகு’ என்று பொருள்.

சர்வ தீபம்: வீட்டில் தொடர்ந்து வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபம்.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமியில், மாலை வேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது.

சொக்கப்பனை தீபம்: கார்த்திகை மாத பௌர்ணமி தீப நாளில் சிவாலயங்களுக்கு முன்பாக பனை ஓலைகளால் கூடு போல பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சொக்கப்பனை தீபம்.

அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம். திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், பழநி, திருப்பரங்குன்றம் போன்ற தலங்களில், அகண்ட தீபத்தை தரிசிக்கலாம்.

லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் முழு ஆலயத்தை அலங்கரிப்பது லட்ச தீபம். திருமயிலை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) போன்ற பல ஆலயங்களில் லட்ச தீபம் ஏற்றுவார்கள்.

தீபங்கள் ஒளிரட்டும்!

மாவிளக்கு தீபம்: அம்மன் ஆலயங்களில் வேண்டுதலின் பொருட்டு ஏற்றி வழிபடுவது மாவிளக்கு தீபம். கார்த்திகை தீப நாளில் வீட்டுக்கு வீடு பூஜையறையிலும் விசேஷமாக மாவிளக்கு ஏற்றி வழிபடுவார்கள். காஞ்சி அருள்மிகு கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை,`மண்டை விளக்குப் பிரார்த்தனை’ என்கிறார்கள். சமயபுரத்தில் இந்த விளக்கை நெற்றி, வயிறு போன்ற இடத்தில் வைத்துக்கொண்டு படுத்தவாறே நேர்த்திக்கடன் செய்வதையும் பார்த்திருக்கலாம்.

விருட்ச தீபம்: ஒரு மரத்தைப்போன்று அடுக்கடுக்கான கிளைகளுடன் கூடிய கோயில் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றி வைப்பார்கள். பெரும்பாலும் கேரள ஆலயங்களில் இது விசேஷம். சிதம்பரம், திருவண்ணாமலை ஆலயங்களிலும் விருட்ச தீபத்தைக் காணலாம்.

- அருள்மொழி சதாசிவம், திருநெல்வேலி-3

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எத்தனை தீபங்கள்?

தீப ஒளித் திருநாளில் வீடெங்கும் தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன விருத்தி, நல்ல புத்தி ஆகியவை பெருகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. நம் வீட்டில் எங்கெங்கு எத்தனை விளக்குகள் ஏற்றவேண்டும் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

கோலமிடப்பட்ட வீட்டு வாசலில்: ஐந்து விளக்குகள் ஏற்ற லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

திண்ணைகளில்: நான்கு விளக்குகள் ஏற்ற பித்ருக்களின் ஆசி உண்டாகும்.

மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள் ஏற்ற அஸ்வினி தேவதைகளின் ஆசி கிடைக்கும்.

நிலைப்படியில்: இரண்டு விளக்குகள் ஏற்ற குலதெய்வ கடாட்சம் கிட்டும்.

நடைகளில்: இரண்டு விளக்குகள் ஏற்ற கிரக லட்சுமி அருள் கிட்டும்.

முற்றத்தில்: நான்கு விளக்குகள் ஏற்ற நல்லோர்களின் தொடர்பு கிட்டும்.

பூஜையறையில்: இரண்டு விளக்குகள் ஏற்ற அம்பிக்கையின் அருளால் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.

சமையல் அறையில்: ஒரு விளக்கு ஏற்ற தன, தான்ய வளம் சேரும்.

தோட்டம் முதலான பின்பகுதிகளில்: யம தீபம் என்ற ஒற்றை விளக்கு ஏற்றவேண்டும். இதனால் வீண் அச்சங்கள் அகலும்!

பின் வாசலில்: நான்கு விளக்குகளை ஏற்றவேண்டும். இதனால் எதிர்மறை எண்ணங்கள் மாறி அமைதி நிலவும்.

இப்படி 27 தீபங்களை நியமப்படி ஏற்றிவைத்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினால் நலமும் வளமும் சேரும் என்கின்றன புராணங்கள். ஒருவேளை 27 தீபங்களை ஏற்றும் அளவுக்கு இத்தனை அறைகளும் வாசல்களும் இல்லை என்றால் உங்கள் வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றி வழிபடலாம்.

- ஜி. மகாலட்சுமி, சென்னை-5

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு