Published:Updated:

தெய்வப்பெண்ணே - 3 - குருவாயூரப்பனின் இரவு பூஜை... குரூரம்மாவின் பக்தி!

குருவாயூரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
குருவாயூரப்பன்

ஓவியம்: ஜீவா

தெய்வப்பெண்ணே - 3 - குருவாயூரப்பனின் இரவு பூஜை... குரூரம்மாவின் பக்தி!

ஓவியம்: ஜீவா

Published:Updated:
குருவாயூரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
குருவாயூரப்பன்

‘அன்னப்பிராசனம்’ (இதை அன்னப்ரசன்னம் என்றும் சிலர் அழைக் கிறார்கள்) என்று சொல்லப்படும் முதன் முதலாகக் குழந்தைக்கு சோறு ஊட்டும் வைபவம், சைவ, வைணவ நம்பிக்கை கொண்டவர்களையும் தாண்டி, பல தரப்பட்டவர்களாலும் இன்றளவும் அந்த வைபவம் நடைபெறும் கோயில், கேரள குருவாயூரப்பன் கோயில். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறினால் வெண்ணெய், இளநீர், பழங்கள், வெல்லம், பூக்கள், அரிசி, எள் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றைத் தங்களது எடைக்கு நிகராகத் துலாபாரமாகக் கொடுக்கும் வழக்கமும் குருவாயூரில் உண்டு என்பதையும் அறிவோம். இதுபோன்ற துலாபாரக் காணிக்கையாக குருவாயூரப்பனுக்கு வரும் வருமானம் பல கோடிகளைத் தாண்டும். இத்துணை செல்வச் செழிப்புடன் இருந்தாலும், பல்வேறு விதமாக அலங்கரிக்கப்படும் அலங்காரப் பிரியனாக இருந்தாலும், தரிசனம் முடிந்து இரவு நடை சாற்றப்படுவதற்கு முன்னான திருப்புக்கா பூஜையில் அலங்காரங்கள் அனைத்தும் களையப்பட்டு, சிவப்புக் கோவணத் துணி மாத்திரமே அவனுக்கு அணிவிக்கப்படும் என்பதை அறிவீர்களா?

தெய்வப்பெண்ணே - 3 - குருவாயூரப்பனின் இரவு பூஜை... குரூரம்மாவின் பக்தி!

சிவப்புக் கோவணம்!

தினமும் குருவாயூரப்பன் கோயிலில் மொத்தம் ஐந்து கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகை அலங்காரம். ஆகமப்படி இந்த நேரத்தில் இந்த பூஜை என்று இருப்பவற்றுள், இரவு நேர திருப்புக்கா பூஜையும் அதிகாலை நிர்மால்ய பூஜையும் வெகு பிரசித்தம். இரவு 9 மணி அளவில் நடக்கும் திருப்புக்கா பூஜையே, ஒவ்வொரு நாளின் முடிவிலும் குருவாயூரப் பனுக்கு நடக்கும் கடைசி பூஜை. இப்பூஜை முடிந்ததும், அத்துணை நேரம் அவன் அணிந் திருந்த அலங்காரங்களைக் களைந்து, `கௌபீனம்' எனப்படும் சிவப்பு நிறக் கோவ ணத்துடன், ஒன்றிரண்டு மலர் மாலைகள் மாத்திரம் அவனுக்கு அணிவித்தபடிதான் குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் நடை சாற்றப்படுகிறது. அதன் பின்னுள்ள கதையின் நாயகி, குரூரம்மா.

கைம்பெண் குரூரம்மா!

குருவாயூருக்கு சற்றுத் தள்ளியிருந்த வேங்கிலசேரியில் வாழ்ந்தவள், பக்தை குரூரம்மா. இளம் வயதில் கைம்பெண் ஆன அவளுக்கு உறவு என எவருமில்லை. ‘உறவு மற்றொருவர் இல்லை' எனத் தொண்டரடிப் பொடியாழ்வார் சொன்னதைப்போல, சரீர பந்துவாக எவருமில்லாவிட்டாலும் அவளுக்கு ஆத்ம பந்துவாக குருவாயூரப்பன் இருந்தான். கண்ணன் மேல் மாறாத பக்தி கொண்டவள். ஒவ்வொரு நாளும் காலையில் நடக்கும் நிர்மால்ய தரிசனத்தையும், இரவு நேர திருப்புக்கா தரிசனத்தையும் தவறாமல் பார்க்க பொடிநடையாக குருவாயூர் வந்து, உன்னிக்குட்டன் தரிசனம் முடித்து, பின் வீடு திரும்புவது அவள் வழக்கம்.

ஒருநாள் இரவு, திருப்புக்கா பூஜை முடிந்து குரூரம்மா வீட்டுக்குக் கிளம்பியபோது பெருமழை பிடித்துக்கொண்டது. அவள் கோயிலை விட்டு அதிக தூரம் கடந்திருந்தாள். ஆனால், வீடடைய இன்னும் போக வேண்டியிருந்தது. கடும் மழையில் அவள் நடந்துகொண்டிருந்தது ஊருக்கு வெளியிலிருக்கும் காட்டை ஒட்டியிருந்த பாதை. பாதை மாறினால் வழி தவறி காட்டுக்குள் போய்விட வேண்டியதுதான். கும்மிருட்டு, காட்டுப்பாதை, மிரட்டும் பேய் மழை, இடியும் பளிச் பளிச்சென்று மின்னலுமாக அச்சூழலே அவளை அச்சுறுத்தியது. துணையில்லாத தனிமை என்ற தன் நிலை குறித்த கழிவிரக்கமும் பயமும் அவளுள் எட்டிப் பார்க்கத் தொடங் கியது. அப்போது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் கையில் கம்பு ஒன்றுடன் மழையில் நனைந்தபடி வந்தான்.

‘என்ன பாட்டி மழையில் மாட்டிக் கொண்டாயா... சரி வா, நான் உன்னைக் கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்துப் போய் விடுகிறேன்’ என்று குரூரம்மாவைக் கூட்டிச் சென்றான் அந்தச் சிறுவன். அப்போது அவளிடம் பேச்சுக் கொடுத்தவன், ‘நீ ஏன் பாட்டி வயதான காலத்தில் கோயிலுக்கு வருகிறாய்? பேசாமல் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியதுதானே...’ எனக் கேட்க, ‘கண் படைத்த பலன் அவனைப் பார்ப்பதே அல்லாது வேறென்ன சிறுவனே... அவனது நிர்மால்ய தரிசனம் மற்றும் திருப்புக்கா தரிசனம் பார்க்காமல், நான் இருந்ததேயில்லை தெரியுமா?’ என்றாள் குரூரம்மா. அவளுடன் மேலும் பேசியபடியே அவளை அழைத்துச் சென்று பத்திரமாக அவளது வீட்டில் கொண்டு விட்ட சிறுவன், அவள் உடை மாற்றி ஆசுவாசப்படும் வரை அவளுடன் இருந்தான்.

தெய்வப்பெண்ணே - 3 - குருவாயூரப்பனின் இரவு பூஜை... குரூரம்மாவின் பக்தி!

பிரேமையுடன் ஒரு துண்டுத் துணி!

குரூரம்மா பெருந்தனக்காரியல்ல, ஏழைக்கிழவிதான். ஆனாலும் அகாலத்தில் வந்து தனக்கு உதவிய அச்சிறுவனுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள். பெரிய அளவில் அவனுக்குக் கொடுப்பதற்கு அவளிடம் எதுவு மில்லைதான் என்றாலும் பிரேமை பொங்க, ‘என்னை பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்த்தாயே குட்டா… உனக்கு என்ன வேண்டும்?’ எனக் கேட்டாள். ‘அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம் பாட்டி’ என்றான் சிறுவன். ‘இல்லை உனக்கு ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று தோன்றுகிறது... கேள் பையனே’ என்றாள் மீண்டும்.

‘உன்னை மழையில் கொண்டு வந்து விடுவதற்குள் நான் கட்டிக் கொண்டிருந்த என் கோவணத் துணி நனைந்துவிட்டது. உன்னிடம் இருந்தால், கட்டிக்கொள்ள எனக்கு ஒரு துண்டுத் துணி தாயேன்’ என்று கேட்டான் சிறுவன். மனம் நெகிழ்ந்த குரூரம்மா, அப்போது அவள் கட்டியிருந்த சிவப்புப் புடவையில் இருந்து ஒரு பகுதியைக் கிழித்து அச்சிறுவனுக்குக் கொடுத்தாள். வாங்கிய துண்டுத் துணியை இடுப்பில் சுற்றிக்கொண்ட சிறுவனும் கிளம்பிவிட்டான்.

வெளிப்பட்டது மாயவனின் நாடகம்!

மறுநாள் காலை நிர்மால்ய தரிசனம். இன்று வரையிலும் குருவாயூரில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து காத்துக் கிடந்து காணும் தரிசனம் இது. அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்படும். அதைக் காண 2 மணியிலிருந்தே மக்கள் வந்து வரிசையில் நிற்கத்தொடங்குவர். அன்றும் அவ்விதமே.

உன்னிக்கண்ணனின் சுப்ரபாத சேவை. அந்த நாளுக்கான முதல் தரிசனம். `நாராயண… நாராயண' என நாமம் முழங்க மேல்சாந்தி எனப்படும் பூஜை செய்யும் பட்டர் குருவாயூரப்பனின் சந்நிதி நடையைத் திறக்க, இருட்டைத் துளைத்த விளக்கொளியில் தெரிந்தார் குருவாயூரப்பன்.

தலையில் அசையும் மயில் பீலி, முன் நெற்றியில் வந்து விழுந்த சுருள் சுருளான கேசம், நெற்றியில் இருந்த கஸ்தூரி திலகம், தீர்க்கமான கண்கள், குண்டலம் குலுங்கிய காதுகள், எடுப்பான மூக்கு, கோவைப்பழம் போன்ற உதடு, உருண்டு திரண்டிருந்த கன்னங்கள், சங்கு சக்கரங்கள் கொண்ட பின் கரங்கள், வலது முன் கையில் தாமரை, இடது முன் கையில் கதாயுதம், உப்பிய தொப்பை, உருண்டு திரண்டிருந்த தொடைகள், காலில் தண்டை, சலங்கை நிறைந்த கொலுசு, முத்து முத்தான நகங்கள், பிஞ்சு பிஞ்சான விரல்கள், பட்டுப் போன்ற மென் பாதம்… இவற்றுடன் முதல் நாள் இரவு குரூரம்மா கொடுத்த சிவப்பு கௌபீனத்தைத் (கோவணத்தை) தன் இடுப்பில் கட்டிக்கொண்டிருந்தானாம் குருவாயூரப்பன்.

கண்ணனுக்கு பூஜை செய்த நம்பூதிரிக்கோ, நேற்று இரவு நடை சாத்திய பொழுது இந்தச் சிவப்புத் துணி அவன் உடம்பில் இல்லையே என்ற யோசனை வந்தது. சந்நிதியை விட்டு வெளியே வந்து அதை அங்கிருந்த வர்களிடம், பகிர்ந்துகொண்டார். அப்போது அங்கு நிர்மால்ய தரிசனத் துக்கு வந்திருந்த குரூரம்மாவின் காதில் அவர்கள் பேசிக்கொண்டது விழுந்தது. குருவாயூரப்பனின் உடலில் இருப்பது தனது புடவையில் இருந்து கிழித்துக் கொடுக்கப்பட்ட ஒரு பகுதி என்பது அவளுக்குத் தெரிந்தது. கூடவே, முதல் நாள் இரவு தன்னை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்தது யார் என்பதும் புரிய, மேனி சிலிர்த்து அங்கிருந்தவர்களிடம் முதல் நாள் இரவு நடந்ததைக் கூறி அவளது புடவையையும் காட்டினாள்.

அன்று முதல் இன்று வரை எல்லா கால பூஜைகளும் முடிந்த பின், சிவப்புக் கோவணத்துணியை குருவாயூரப்பன் மேனியில் விட்டு அவனது சந்நிதியின் இரவு நடை அடைக்கப்படுவதன் காரணம் இதுதான்.

வீட்டில் ஒரு கோயில்!

தொடர்ந்து குருவாயூரப்பனின் மேல் மாறா பக்தி செலுத்திய குரூரம்மா, அவனது நாமத்தை ஜெபித்தபடியே வாழ்ந்து, அவனுடனேயே கலந்ததாகச் சொல்லப்படுகிறது. குருவாயூரிலிருந்து சில கி.மீ தள்ளி வேங்கிலசேரியில் இருக்கும் அவள் வசித்த இல்லம் காலப்போக்கில் மண்ணில் புதைய, பல நூறு வருடங்களுக்குப் பின்னர், தேவப்ரசன்னம் (ஜோதிடம் பார்ப்பது) மூலம் அவள் வாழ்ந்த வீடு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இன்றும் அது பாதுகாக்கப்படுகிறது. அவ் வீட்டினுள்ளேயே கண்ணனுக்குச் சிறு கோயிலும் உள்ளது.

தன் எளிய அடியார்களின் பக்தியை அங்கீகரிக்க மாயவன் என்றுமே தயங்கியதில்லை என்பதற்கு குரூரம்மாவின் பக்தியும், அவளுக்காகக் கண்ணன் இன்று வரை இரவு நேரத்தில் சாற்றிக்கொள்ளும் சிவப்புக் கோவணமும் சாட்சி!

- சக்திகளின் பக்தி தொடரும்