Published:Updated:

தெய்வப் பெண்ணே - 4 - ஆடை துறந்த திகம்பரி... அக்கமகாதேவி பக்தியின் பூரணம்!

அக்கமகாதேவி
பிரீமியம் ஸ்டோரி
அக்கமகாதேவி

ஓவியம்: ஜீவா

தெய்வப் பெண்ணே - 4 - ஆடை துறந்த திகம்பரி... அக்கமகாதேவி பக்தியின் பூரணம்!

ஓவியம்: ஜீவா

Published:Updated:
அக்கமகாதேவி
பிரீமியம் ஸ்டோரி
அக்கமகாதேவி

“ஊனிடை ஆழி சங்கு உத்த மர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள், மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழ கில்லேன் கண்டாய் மன் மதனே (என் உடம்பு சங்கு சக்கரம் கொண்ட உத்தமனுக்கென்றே விம்மி எழுந்த என் பெரிய முலைகள் சாதாரண மனிதர்களுக்கு என்ற பேச்சு வந்தால் வாழவே மாட்டேன் பார்மன் மதனே)’’ என்று முழங்கிய வைணவக் கொழுந் தாகிய கோதை நாச்சியார் பற்றியும் அவளின் பக்தி பற்றியும் பரவலாக எல்லோருக்கும் தெரியும். இதே போல் பக்திக்கு உதாரணமாகச் சொல்ல வீர சைவத்தில் உள்ள ஒருவர்தான், இந்த தெய்வப் பெண்.

அனுசுயா.எம்.எஸ்
அனுசுயா.எம்.எஸ்

ஸ்ரீசென்ன மல்லிகார்ஜுனாவின் மீது மையல்!

கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள உடுதாடி என்ற ஊரில் 12-ம் நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்தவர் மகாதேவி. சைவ நெறியைப் பின்பற்றிய குடும்பத்தில் பிறந்ததால் இயல்பிலேயே சிவபெருமான் மீது பக்தியும், பிரேமையும் ஈர்ப்பும் கொண்டு வளர்ந்தார். சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே எனச் சொல்லும்படி சிறுவயது முதலே சிவன் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக சிறுவயதிலேயே அவருக்கு லிங்க தீட்சையும் வழங்கப்பட்டது.

மகாதேவிக்கு ஸ்ரீசைலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசென்ன மல்லிகார்ஜுனா என்ற மூர்த்தியின் மீது அளவு கடந்த பக்தி. கல்வி, கேள்விகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மகாதேவிக்கு கவிதை இயற்றும் புலமையும் ஆற்றலும் அபாரமாக இருந்தது. பல நூற்றுக் கணக்கான வசனங்களை (கவிதைகளை) சிறு வயது முதலே சிவன் மீது அருளிச் செய்தவர் மகாதேவி. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மகாதேவியின் அகமும் புறமும், சிவனின் சிந்தையால் நிரம்பி வழிந்தது. முகத்தில் தெய்வாம்சம் குடி கொண்டது.

குறுக்கிட்ட கௌசிகன்!

இந்நிலையில், சமண சமயத்தைச் சேர்ந்த கௌசிகன் என்னும் அரசன் அப்பகுதியை ஆண்டு வந்தான். எதேச்சையாக ஒரு நாள் அவன் மகாதேவியைக் காண நேரிட்டது. மகாதேவியின் தெறித்த அழகிலும் ஜொலித்த தேஜசிலும் மயங்கிய அரசன், அவரை மணக்க விரும்பினான். மனதளவில் மல்லிகார்ஜுனனே மணாளன் என வாழ்ந்தாலும், தன்னை மணக்கக் கேட்பவன் இந்நாட்டை ஆளும் அரசன் என்பதால், இதை மறுக்கும்பட்சத்தில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் வரவிருக்கும் பேராபத்தை எண்ணிப்பார்த்த மகாதேவி திருமணத்துக்குச் சம்மதித்தார். ஆனால், அரசனை மணக்க சில நிபந்தனைகளை விதித் தார். அந்த நிபந்தனைகளை அரசன் மீறும் பட்சத்தில் கௌசிகனின் வாழ்க்கையை விட்டு தான் விலகிச் சென்றுவிடுவதாகவும் கூறினார்.

மகாதேவியின் மேல் இருந்த ஈர்ப்பால் கௌசிகனும் அவரது நிபந்தனைகளுக்குச் சம்மதித்தான். பெரியோர்களும் சம்மதிக்க, திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இவ்வுலகை ஆளும் மல்லிகார்ஜுனனை மணந்ததாக மான சீகமாக நினைத்திருந்த மகாதேவியால், மக்களை ஆளும் ஓர் அரசனுக்குத் தான் மனைவி என்பதை ஏற்று இயல்பான இல்லற வாழ்க்கையை வாழ முடியவில்லை. சமண சமயத்தையும் சமய நெறிகளையும் திடமாக நம்பிய கௌசிகனால், ஒரு கட்டத்தில் மகாதேவியின் சிவ வழிபாட்டுக்கு அவ்வப் போது சிறு தடைகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பிட்ட காலம் வரையிலும் அவையனைத் தையும் பொறுத்துக் கொண்ட மகாதேவியால், ஒரு கட்டத்துக்குப் பிறகு, அரசனின் கெடுபிடி களை, கட்டுப்பாடுகளை, சிவ வழிபாட்டுக்கு அவன் விதித்த தடைகளைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

திகம்பரியானாள் தெய்வப்பெண்!

‘நான் உன்னை மனைவியாக வரித்துக் கொண்ட கணவன். எனக்கு உன் மேலும், உன் உடல் மேலும் எல்லா ஆதிக்கமும் உண்டு’ என்று கௌசிகன் கூற, தன்னைத் திருமணம் செய்துகொள்வதை முன்னிட்டுதான் இட்ட நிபந்தனைகளை அரசன் மீறுவதாக மகாதேவி பதிலுரைத்தார். மேலும், இத்திருமணத்துக்கு தான் விதித்த முக்கிய நிபந்தனையான, ‘நான் உன்னை விட்டு விலகிவிடுவேன்’ என்பதை அரசனுக்கு நினைவூட்டினார்.

இதைக் கேட்டு வெகுண்ட கௌசிகன், ‘நீ உடுத்தியிருக்கும் உடை, அணிந்திருக்கும் அணிகலன்கள், விலையுயர்ந்த நகைகள், வசிக்கும் அரண்மனை என உன் உடலும், உடலில் இருக்கும் அனைத்தும் எனக்குச் சொந்தம்’ என்று சினத்தில் சீற, ஒரு நொடிப் பொழுதும் யோசிக்காமல் தன் உடலில் இருந்த ஆடை, அணிகலன்கள் என அனைத்தையும் விறுவிறுவென அச்சபையில் வைத்தே ஒவ்வொன்றாகக் களைந்து வீசத் தொடங்கினார் மகாதேவி. தனது உடலில் இருந்த, ‘இது என்னுடைமை’ என்று கௌசிகன் சொன்ன அனைத்தையும் துறந்தார். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

திகம்பரியாக (உடலில் ஆடையற்றவராக) மகாதேவி மாறத் தொடங்கிய அந்த கணத்தில், அவளது தலையிலிருந்த அடர்த்தியான கேசம் கிடுகிடுவென வளர்ந்து, அவளது உடலின் எந்தவொரு பாகமும் பிறர் கண்ணுக்குத் தெரியா வண்ணம் முழு உடலையும் மூடி தரையைத் தொட்டது. இவை அனைத்தையும் கண்டு அங்கு கூடியிருந்த சபையினர் விக்கித்தனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, மகாதேவி கௌசிகனுடனான வாழ்வைத் துறந்து, அரண்மனையைவிட்டு மகிழ்வுடன் வெளியேறினாள்.

தெய்வப் பெண்ணே - 4 - ஆடை துறந்த திகம்பரி... அக்கமகாதேவி பக்தியின் பூரணம்!

அக்கமகாதேவியின் பக்திப் பயணம்!

ஆடை, அணிகலன்கள் என எதுவும் இல்லாமல் திகம்பரியாக சஞ்சாரம் செய்த மகாதேவி, தனது நீண்ட கூந்தலால் தன்னுடலை மறைத்து வாழ்ந்து வந்தார். ஒருமுறை, மகாதேவியின் இக்கோலம் கண்ட அல்லமா பிரபு என்பவர் மகாதேவியிடம், ‘உனக்கு உன் உடல் மீது இம்மியும் பற்றில்லையெனில் எதற்காக அதை நீ மூடி பாதுகாத்து வைத்திருக் கிறாய்?’ என்று கேட்டார். அந்தக் கேள்விக்குச் சிறிதும் கலங்காத மகாதேவி, ‘நான் என் வெற்றுடலை எனது கூந்தலால் மறைப்பது எனக்கு மனத்தடுமாற்றம் வரும் என்பதற்காக அல்ல, என் உடலைப் பார்த்து மற்றவர்களின் சிந்தனை சஞ்சலப்படக் கூடாது என்பதற்காகத் தான்’ என்று கூறினார். அப்பதிலைக் கேட்டவுடன் அல்லமா பிரபு மகாதேவியின் பாதம் தொட்டு வணங்கினார். கூடவே மகா தேவியின் புனிதத்தைப் போற்றும் வகையில் அன்று முதல் அவரை, ‘அக்க’ (அக்கா) என்று அழைத்தார். அன்று முதல் மகாதேவி, அக்க மகாதேவி என்று அழைக்கப்பட்டார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஸ்ரீசென்ன மல்லிகார்ஜுனாவுக்கே என்ற வீர சைவ நெறியில் அமிழ்ந்து பக்தியில் திளைத்துக் கிடந்தார். ‘சென்ன மல்லிகார்ஜுனர் தவிர எஞ்சியிருக்கும் ஆடவர் அனைவரும் என் உடன் பிறந்தோர்’ என்று அவரே தனது ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

‘வெறும் பூஜைகளும் சடங்குகளும், வெற்று சம்பிரதாயங்களும் மாத்திரம் தெய்வத்தை திருப்திப்படுத்தாது’ என்பதை அக்கமகாதேவி அறிந்திருந்தார். அதனாலேயே மக்களுக்கு தொண்டு செய்யும் எண்ணத்துடன் வீர சைவத்தைத் தோற்றுவித்த பசவண்ணர் சிஷ்யையாகவும் அவர் மாறினார்.

மகாதேவியின் வசனங்களில், `மனிதனை மனிதனாகக் காண வேண்டும். மனிதரிடையே எவ்வித வேறுபாடும் இல்லை. துறவு நிலை என்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல, அது பெண்களுக்கும் உரியது' என்று கூறியதுடன் அதற்குச் சான்றாகவும் திகழ்ந்தார். சிவபக்தியை எந்த அளவுக்கு வலியுறுத்தினாரோ அதே அளவுக்கு தனிமனித முன்னேற்றத்தையும், தொண்டையும் அவர் வலியுறுத்தினார். சாமான்ய மக்களின் தினப்படி வாழ்க்கை பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டிய அவசியமான பல நல்ல உபதேசங்களையும் வழங்கினார்.

பக்தி இலக்கியத்தில் பாவையின் மொழி!

ஆண்டாளின் பாசுரங்கள் எப்படி இங்கு பிரசித்தி பெற்றதோ, அதுபோல அக்க மகா தேவியின் வசனங்கள் கர்நாடக தேசத்தில் மிகவும் பிரசித்திபெற்றவை. ஸ்ரீசென்ன மல்லிகார்ஜுனாவின்பால் தனக்கிருந்த பக்தி, காதல் உள்ளிட்ட இச்சைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் தைரியம் அவருக்கு நிறைந்திருந்ததை அவரது வசனங்களின் மூலமாக அறிய முடியும். அத்துடன், கன்னட பக்தி இலக்கிய உலகில் அவரது வசனங்கள் வாயிலாக அவர் செய்த பங்களிப்பு முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கூடவே கன்னட இலக்கிய உலகில் வசனங்கள் எழுதிய முதல் பெண் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.

‘உடல் உழைப்பு மிகவும் இன்றியமையாதது, மக்களுக்குள் வேறுபாடுகள் இல்லை’ உள்ளிட்ட வீர சைவ நெறியின் கோட்பாடுகள் மற்றும் தனி மனித ஒழுக்க மேம்பாடு பற்றிய விஷயங்கள் அக்கமகாதேவியின் வசனங்களில் மிகவும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. பக்தி, ஞானம், சீர்திருத்தம், தத்துவம் போன்ற பல முகங்களைப் பெற்ற வீரசைவ நெறியின் கோட்பாடுகள் அனைத்தையும் மிகவும் அழகாக விவரிக்கும்படி அவரது வசனங்கள் அமைந்திருக்கின்றன. எப்படி ஆண்டாளின் பாசுரங்களின் முடிவில் ‘பட்டர் பிரான் கோதை சொன்ன' என்று அவளது முத்திரை இருக்குமோ, அதுபோல அக்காவின் ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் ‘சென்ன மல்லிகார் ஜுனா’ என்ற முத்திரை இருக்கும். அவரது பாடல்கள், ‘அக்கமகாதேவி வசனங்கள்’

என்று தொகுக்கப்பட்டுள்ளன. போலவே, ‘யோகாவிங்கா திரிவிதி’, ‘ஸ்ருஷ்டிய வசன’, ‘அக்ககள பித்திகியே’ போன்ற சில சமய நூல்களையும் அவர் இயற்றினார்.

முக்தி அடைந்தார் சக்தி!

தன் கடைசிக் காலத்தில் ஸ்ரீசைல மல்லிகார் ஜுனர் கோயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு குகையில் கடும் தவமியற்றி ஒரு யோகியைப் போல வாழ்ந்து வந்தார் அக்கமகா தேவி. வாழும் நாள்கள் முழுக்க சிவனது சிந்தையி லேயே, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று சொல்லும்படி அவனுக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்து வந்த அக்கமகா தேவி, கி.பி 1166-ம் ஆண்டு தனக்கு எல்லாமும் அவனே என்று தான் நம்பிய மல்லிகார்ஜுனர் உடன் ஒன்றாகக் கலந்து முக்தி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது!

- சக்திகளின் பக்தி தொடரும்...