Published:Updated:

தெய்வப் பெண்ணே! - 5 - தெய்வமே பெண்ணாக வந்தாள்... தீபாவளி நன்னாளைத் தந்தாள்!

தெய்வப் பெண்ணே
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வப் பெண்ணே

ஓவியம்: ஜீவா

தெய்வத்தின் மேல் மாறா பற்றும் தீராக் காதலும் கொண்டு பித்தாக வாழ்ந்த தெய்வப்பெண்களைப் பற்றி பார்த்து வருகிறோம். இந்த தீபாவளி சிறப் பிதழில், தெய்வமே ஒரு பெண்ணாய் தோன்றி, உலகில் வாழும் ஜீவராசிகளின் வயிற்றுப் பசியை போக்குவதுடன், அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தைத் தரும் பெண்ணருள் பற்றி பார்ப்போமா?

தெய்வப் பெண்ணே! - 5 - தெய்வமே பெண்ணாக வந்தாள்... தீபாவளி நன்னாளைத் தந்தாள்!

பிரம்மனின் தலை கொய்த சிவன்!

முக்தி தரும் முக்கிய தலம், காசி. உடம்பில் திருநீற்றை பூசிக்கொண்டு அலையும் அகோரிகள், இங்கு உயிரைவிட்ட மாத்திரத்தில் தங்களுக்கு மோட்சம் கிட்டும் என நம்பி இறப்பை நோக்கிக் காத்துக்கிடக்கும் மக்கள், தங்கள் மூதாதையர்களின் நினைவாக பிண்டம் கொடுக்க குவிந்திருக்கும் பிள்ளைகள் எனப் பலதரப்பட்ட காட்சிகள் நிறைந்த நகரம். இங்குதான், அன்னமிடுவதற்காகவே அன்னை பெண்ணாய் அவதரித்தாள்.

நான்முகனாக அறியப்படும் பிரம்மா, ஐந்து தலைகளுடனும், கூடவே தலைகனத்துடனும் இருந்த நேரம். ஐந்தில் ஒரு தலையை சிவன் கொய்தார். சிரசைக் கொய்த சிவனின் சினம் தணிந்தது. பிரம்மனின் அகந்தையும் மறைந்தது. ஆனால், சிவனை பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. கூடவே, கொய்யப்பட்ட பிரம்மனின் கபாலமும் அவரின் வலது கையிலேயே ஒட்டிக்கொண்டது. பசி தீராத பிக்ஷாண்டராக சிவன் வலம் வந்தார். எத்தனையோ பேரிடம் பிச்சையெடுத்தாலும் சிவனின் கையில் இருந்த, பிரம்மனின் கபாலமான ஓடு நிறைய வில்லை.

பூமிக்குப் பெண்ணாய் வந்தாள் அன்னை!

சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வந்த வுடனேயே கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்த பார்வதி காசி நகரில் தவமிருக்கத் தொடங்கினாள். அந்த வேளையில் காசி நகரை பெரும் பஞ்சம் சூழ்ந்துகொண்டது. மக்கள் மாண்டு வந்த நிலையில், காசியை ஆண்ட காசிராஜன் கவலைகொண்டான்.

இந்நிலையில், காசி நகரில் தன் சக்தியால் ஒரு மாளிகை அமைத்து, அவ்வூரில் இருந்த மக்களுக்கு அன்னமிட்டு வந்தாள் அன்னை பார்வதி. காசிராஜனின் மந்திரிகளில் ஒருவர் அவனிடம் சென்று, ‘இந்த ஊரில் இருக்கும் ஒரு பெண், தன்னிடம் பசி என்று வருவோர் அனைவருக்கும் பசியாற்றி அனுப்புகிறாள். நாட்டை ஆளும் நம்மாலேயே முடியாதபோது, அப்பெண்ணால் மாத்திரம் அது சாத்திய மாவது ஆச்சர்யமே’ என்று சொல்ல, பக்தியில் மேம்பட்டவனான காசிராஜனும் அன்ன பூரணியை சென்று வணங்கினான். காசி நகரில் மட்டுமல்லாது, தன்னுடைய ஒட்டு மொத்த நாட்டு மக்களின் பசியையும் போக்க வேண்டினான். அவனது பக்தியையும் வினையத்தையும் கண்ட அன்னபூரணி மனமுவந்து, ‘இனி உன் நாட்டில் எவருக்கும் பசிக்கொடுமை இருக்காது’ என்றுரைத்து, அன்று முதல் இன்று வரை அனைத்து ஜீவன் களின் பசியைப் போக்க அருள்பாலித்து வருகிறாள்.

சிவனுக்கு மோட்சமும், தீபாவளியும்!

இன்னொரு பக்கம், பிரம்மஹத்தி தோஷத் தால் பீடிக்கப்பட்ட சிவன், கால பைரவராக நரக சதுர்த்தசியன்று அதிகாலையில் காசி நகருக்குள் பிரவேசித்தவர், ஒவ்வொரு வீடாகப் பிச்சை எடுத்தார். எத்தனையோ வீடுகளில் பிச்சை எடுத்தும் அவரது திருவோடு நிறையவில்லை. அப்போது அவர் வந்து சேர்ந்த வீடு, அவ்வூரில் அனைவருக்கும் படியளக்கும் அன்னபூரணியின் மாளிகை.

‘தாயே பிச்சையிடு’ என்றபடி வாசலில், பூட்டப்பட்டிருந்த கதவுகளின் முன் நின்று பிச்சைக்காக வேண்டினார் இறைவன். அப்போது, பட்டுடுத்தி, சர்வாலங்கார பூஷணியாக கதவைத் திறந்து வந்த அன்ன பூரணி, தன் கைகளில் இருந்த தங்கக் கரண்டி யால் ஈசனின் கையிலிருந்த ஓட்டில் அன்னம் இட்டதும், ஈசனின் கையில் இருந்த பிரம்மனின் மண்டை ஓடு பூரணமாகி நிறைந்து வழிந்தது. அன்று அவ்வோட்டை நிரப்பிய அன்னபூரணி தான், இன்று வரையிலும் அகிலத்துக்கு அன்னமிட்டு வருகிறாள். அவள் பிச்சை இட்டதுமே முக்கண்ணனான ஈசனின் பிரம்மஹத்தி தோஷம் தீர்ந்த நாள்தான்... தீபாவளி. தீர்த்தவள், அன்னபூரணி.

தெய்வப் பெண்ணே! - 5 - தெய்வமே பெண்ணாக வந்தாள்... தீபாவளி நன்னாளைத் தந்தாள்!

தீபாவளியன்று அன்னக்கூடம்!

தன் இடக்கையில் பாத்திரத்தையும், வலது கையில் கரண்டியையும் வைத்திருக்கும் அன்னபூரணி தன்னை நாடி வருவோருக்கு அவர்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல, ஆன்மப் பசியையும் போக்கி அருள்பாலிக்கிறாள். அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதார சக்தியாக இருப்பது உணவு. உணவுக்கான ஆதார சக்தியாக விளங்குபவள், அன்னபூரணி தாய். அங்க மெல்லாம் அணிகலன்கள் ஜொலிக்க, நவ ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத் தில் அமர்ந்து சகல ஜீவராசிகளின் பசியைத் தீர்க்கும் தயாளு அவள். தீபாவளியன்று காசியில், ஒரு கரத்தில் தங்கக் கரண்டியும், இன்னொரு கரத்தில் தங்கக் கிண்ணமும் ஏந்தி பிரகாசத்துடன் காட்சி தருவாள் அன்ன பூரணி. அதுபோல், தங்கத்தாலான கால பைரவர் உற்சவர் விக்கிரகம், தீபாவளி நாளன்று மட்டும் இக்கோயிலில் பவனி வருவது சிறப்பு. காசியில் தீபாவளி தினத்தன்று பிறர் பசியாற உணவளிப்பதற்காகவே பூமியில் அவதரித்த தேவிக்கு, பலவித உணவுகள், பலகாரங்கள், விதவிதமான இனிப்புகளை படைத்து பூஜை செய்யப்பட்டு, பின்னர் பொது மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். அத்துடன், எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் ஊர்வலம் வருவாள் அன்னபூரணி. அந்த லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வும் கொடுப்பார்கள்.

ஞானப்பசியையும் போக்குவாள் தேவி!

`அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே... ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதி.’

அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்ற ஆதிசங்கரர், அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். ஆதி சங்கரர் அன்னபூரணாஷ்டகத்தில் சொன்னதை போல, அன்னபூரணி இடும் அன்னம் போக்குவது வயிற்றுப் பசியை மாத்திரமல்ல, அஞ்ஞானத்தை அகற்றி மோக்ஷத்தை அடைவதற்கான ஞானத்தையும், வைராக்கியத் தையும்தான். தெய்வத்தின்பால் ஈர்க்கப்பட்ட பெண்களின் வரிசையில், தெய்வமே பெண்ணாய் அவதரித்து வந்து, உலகனைத் துக்கும் உண்டி கொடுத்து காக்கும் அன்ன பூரணியை மனதில் நிறுத்தி, வீடு பேறு பெறும் நாளாக இத்தீபத் திருநாள் அமைய வாழ்த்துகள்!

- சக்திகளின் பக்தி தொடரும்...