Published:Updated:

தெய்வப் பெண்ணே! - 7 - கவிபாடிய கைம்பெண் ஆவுடையக்காள்

ஆவுடையக்காள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆவுடையக்காள்

ஓவியம்: ஜீவா

அனுசுயா எம்.எஸ்
அனுசுயா எம்.எஸ்

அப்போதைய நெல்லை மாவட்டத்திலிருந்த செங்கோட்டை அக்ர ஹாரம் அன்று அதகளப் பட்டது. திருவிசலூரில் இருந்து மகான் ஒருவர் அங்கு வந்திருந்தார். பூர்ணகும்ப மரியாதை யுடன் கொடுக்கப்பட்ட வரவேற்பை ஏற்றபடி ஒவ்வொரு வீட்டையும் நடந்து கடந்து வந்தவர், ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன் திடீரென நகராமல் நின்றார். அவரை நிறுத் தியது அவ்வீட்டில் இருந்து வந்த அரற்றலுடன் கூடிய அழுகுரல்.

சுற்றியிருந்தோர் அங்கிருந்து நகரும்படி அந்த மகானிடம் எடுத்துச் சொல்லியும் அவர் அவ்வீட்டிலிருந்து வந்த குரலையே கூர்ந்து கவனித்தார். அப்போது பூட்டியிருந்த கதவைத் திறந்தபடி வெடித்துக் கிளம்பி வந்து அவர் காலில் விழுந்தாள், ஒரு சிறுமி. வெதும்பிக் கொண்டிருந்த ஜீவனின் குரலைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றவர், திருவிசலூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள். அவரது சரணத்தில் விழுந்த சிறுமி, ஆவுடை. அவளே பின்னாளில் செங்கோட்டை `ஸ்ரீ ஆவுடை அக்காள்' என்று அழைக்கப்பட்டாள். பால்யத்திலேயே விவாகம் நடந்து, பால்யத்திலேயே கைம் பெண்ணாகி, வாழத் தொடங்கும் முன்னே முடிந்துவிட்ட தன் வாழ்வை ஆவுடையக்காள், இறைக்கும் பக்தி மொழிக்கும் அர்ப்பணித்த கதை இது.

அழாத பிள்ளைக்குக் கிடைத்தது கல்வி!

சிறுமியாக இருந்தபோதே கணவனை இழந்த தன் மகளின் வாழ்க்கையை நினைத்து ஆவுடையின் தாயார் அழுதபோது ஆவுடை தைரியமாக, ‘யாரோ எதிர்வீட்டுப் பையன் இறந்து போய்விட்டான், அதற்கு நீ ஏன் அடித்துக்கொண்டு அழுகிறாய்?’ என அன்னை யிடம் கேட்டாளாம். அவள் அன்னைக்கு, இவள் மூடநம்பிக்கை சம்பிரதாயங்களுக்குப் பணிந்து போகும் சாதாரண பெண் குழந்தை அல்ல, பட்டை தீட்டப்படும்பட்சத்தில் ஜொலிக்கப் போகும் வைரம் என்பது புரிந்தது. எனவே, அவர் குடும்பத்திலும் சுற்றத்திலும் எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி, ஆவுடைக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் ஏற்பாட்டைச் செய்தார்.

இந்நிலையில்தான், திருவிசலூர் ஸ்ரீதர ஐயாவாள் சரணத்தில் ஆவுடை விழ, அவள் வாழ்க்கை மாறியது. தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூப மாக ஆவுடையின் கண்களுக்குத் தெரிந்த ஸ்ரீதர ஐயாவாள் அவளுக்கு ‘அஞ்சாதே, பயப்படாதே, அவன் இருக்கான்’ என்று சொல்லி, மகா வாக்கியத்தை உபதேசம் செய்தார். ஆவுடையக்காளே இதை,

‘அந்தகன் போலவே அலைந்து திரிந்த என்னை ஆண்டவனே குருநாதா
சிந்தை மகிழ்ந்திட சிவபதமே அருளிய தேசிகனே குருநாதா’

எனத் தன் பாடல் ஒன்றில் எழுதுவதன் மூலமாக அறியலாம்.

தெய்வப் பெண்ணே! - 7 - கவிபாடிய கைம்பெண் ஆவுடையக்காள்

சாதி விலக்கம்!

ஏறக்குறைய 300 வருடங்களுக்கு முன், கடுமையான விதி நியமனங்கள் இருந்த அக்ரஹாரத்தில், தலைமுடி மழிக்கப்பட்டு, கல்வியறிவும் பிறரைப் பார்த்து பேசிப் பழகும் வாய்ப்புகளும் இல்லாமல், வீட்டைவிட்டு வெளியேறும் உரிமைகூட முற்றிலுமாக மறுக்கப்பட்டு, கைம்பெண் என்று அழைக்கப் பட்ட ஒரு சிறுமிக்கு, இளம்பெண்ணுக்கு என்னென்ன துக்கங்கள் நேருமோ, அவை அனைத்தும் ஆவுடையக்காளுக்கும் நேர்ந்தன. இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிவனை மட்டுமே மனதில் நிறுத்தி, வணங்கி, போற்றுவதை தன் அனுதினக் கடமையாகச் செய்துவந்தாள். பக்தியை மனதில் மட்டும் வளர்க்காமல், ஆழ்ந்த வேதாந்த விஷயங்கள் நிறைந்த ஆச்சர்யமான பாடல்களைப் புனைவதிலும் கவனம் செலுத்தினாள். சதா சர்வ காலமும் அகண்ட சச்சிதானந்தத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதையே தன் வாழ்க்கையாக்கினாள்.

ஆச்சாரம், அனுஷ்டானம், நியமனங்கள், பூஜை புனஸ்காரங்கள் என அந்தக் கால கட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்த எவற்றை யும் ஆவுடையக்காள் சட்டை செய்யவில்லை. கைம்பெண் என்பவள் வீட்டு வாசல்படி தாண்டி வெளியே வரக்கூடாது, வீட்டிலும்கூட அடுப்படியில் அல்லது புழக்கடையிலேயே தங்க வேண்டும், வேற்று ஆடவர் முன் வரக்கூடாது, யாரிடமும் பேசக்கூடாது, கோயிலுக்கே சென்றாலும் பிறர் கண்ணில் படக் கூடாது என்றெல்லாம், கணவனை இழந்த பெண் ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்றிருந்த பல பிற்போக்குத்தனமான கட்டுப் பாடுகள் எவையுமே அவளைத் துளியும் கட்டுப்படுத்தவில்லை.

`பிரம்ம சத்ய... ஜெகத் மித்யா' என்று ஆதிசங்கரர் சொன்னது போல, `இவை அனைத்தும் பொய், ஈசன் மாத்திரமே மெய்' என்பதையே அவள் ஆழமாக, திடமாக நம்பினாள் என்பதை அவளுடைய பல பாடல்களில் பார்க்க முடிகிறது.

இப்படியாக, சமூகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் கோயிலுக்குப் போவதும், பாடல்கள் எழுதுவதும், இறை விஷயமாக இரைந்து பாடுவதுமாக அவள் இருந்தது ஊராரின் கண்களை உறுத்த, அவரின் செயல்பாடுகளால் ஒருகட்டத்தில் ஊராரால் சாதி விலக்கம் செய்யப்பட்டாள்.

பிரிந்து ஓடிய காவிரி!

ஆவுடையக்காளுக்கு எதிராகக் கிளம்பிய எதிர்ப்புகளையும், அவள் சாதி விலக்கம் செய்யப்பட்டதையும் கேள்விப்பட்ட அவளின் குருவான ஸ்ரீதர ஐயாவாள், அவளை சில காலம் செங்கோட்டையை விட்டு அகன்று புனித தலங்களுக்கு யாத்திரையாகச் செல்லும் படி பணித்தார். புண்ணிய பூமியாம் தமிழகத் தின் பல ஊர்களுக்கும், கோயில்களுக்கும் யாத்திரை கிளம்பினாள் ஆவுடையக்காள்.

ஒருமுறை அப்படி ஒரு யாத்திரை போயிருந்த நேரம், மாயவரத்தில் ஐப்பசி மாத துலா காவிரியில் குளிக்கும் பொருட்டு ஆற்றில் இறங்கியவள் ஜபத்தில் ஆழ்ந்து இருந்தாள். அவ்வேளையில் காவிரியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட சுற்றியிருந்த அனைவரும் மரண பயத்தில் கரை ஏறினர். ஆனால், ஆவுடையக்காளோ சிவனது சிந்தனைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, முற்றிலுமாகத் தன்னை மறந்த நிலையில் இருந்தாள்.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையும் சுற்றி இருந்தவர்கள் பயத்தில் ஓடியதையும் உணராமல் தியானத்தில் அமிழ்ந்திருந்தாள். அப்போதுதான் ஊர் மக்கள் பார்க்க அந்த ஆச்சர்யம் நடந்தது. பெருக்கெடுத்து வந்த நீர் ஆவுடையக்காளை இம்மியும் தொந்தரவு பண்ணாமல், அவள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி இரண்டாகப் பிரிந்து அவளைத் தழுவிய படி ஓடியதாம்.

பாரதி, ரமணருக்கும் அக்காள் இவள்!

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தென்தமிழகத்தின் பிற பகுதி களிலும் போற்றப்படும் ஆவுடையக்காளின் பாடல்களை, ஸ்ரீ ரமண மகரிஷியின் தாய் அழகம்மை ரமணரின் சிறு வயதில் அடிக்கடி பாடுவாராம். அதனாலேயே ஆவுடையக் காளின் பாடல்களில் இருக்கும் பல வார்த்தைப் பிரயோகங்களை பகவான் ஸ்ரீரமணரின் உபதேசங்களிலும் காணலாம். அதுபோலவே முண்டாசுக் கவிஞர் பாரதிக்கு ஆவுடையக் காளின் பல பாடல்கள் கவிதைகளை இயற்றுவதற்கு உந்துதலாக இருந்தன என்பதையும் அறிய முடிகிறது. குறிப்பாக, ‘அடா, அடி, ஆச்சே, போச்சே’ போன்ற மக்களின் இயல்பான பேச்சு வழக்கில் இருக்கும் சொல்லாடல்களை தனது பாடல் களில் முதன்முறையாகப் பயன்படுத்தியவர் பாரதியார் என்கிறது தமிழ்கூறும் நல்லுலகு. ஆனால், ஆவுடையக்காளின் ‘வேதாந்த ஆச்சே போச்சே’ என்ற பாடலிலோ இது போன்ற பதப்பிரயோகங்கள் அதிக அளவில் காணக் கிடைக்கின்றன. ஆதலால் பாரதிக்கு இவள் முன்னோடி என்றும் சொல்லலாம்.

தென்தமிழகத்தில் பரவலாக அறியப் பட்ட பெயராகயிருந்தாலும், ஆவுடையக் காள் பற்றி பொதுச் சமூகம் அதிகம் அறியவில்லை. என்றாலும், நம் தெய்வப் பெண்களின் வரிசையில் இவள் தவிர்க்க முடியாத ஆளுமையாக இடம்பெறக் காரணம், பக்திக்கு இணையான அவள் மொழியறிவு.

வேதங்கள் கற்பதற்கும் வேதாந்த ரசம் சொட்டும்படி பேசுவதற்குமான தகுதியும் உரிமையும், புத்திக்கூர்மையும் விஷய ஞானமும் ஆண்களுக்கு மாத்திரமே இருக்கிறது என்று நம்பப்பட்ட சமூகத்தில், எளிதில் புரியாத கடினமான வேதாந்த விஷயங்களை, உபநிஷத சாரங்களை எளிய தமிழ்ப் பாடல்களின் மூலம் அனைவருக்குமானதாக ஆக்கியவள் ஆவுடையக்காள். மேலும், விரக்தியின் ஸ்வரூப மாக வாழ்க்கையை வடிவமைக்கும் சாத்தியக் கூறுகள் நிறைந்து இருந்தபோதிலும் இறை பக்தியில் மனதைச் செலுத்தியதன் மூலம் வைராக்கிய ஸ்வரூபமாகத் தன்னை வடிவமைத் துக்கொண்ட ஆவுடையக்காளின் வாழ்வு பலருக் கும் பாடம். அவள் வாழ்ந்த காலம் 17-ம் நூற் றாண்டின் பிற்பகுதியிலும் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் என்று தோராயமாகக் சொல்ல லாம்.

மலை மீது முக்தி!

`அனைத்தும் பொய் அவனே மெய்' என்பதைத் தனது எல்லா பாடல்களின் அடிநாதமாகக் கொண்டிருந்த ஆவுடையக்காள், தான் இயற்றிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘வேங்கடேச’ என்ற தன் குருவின் பெயரை முத்திரையாகக் கையாள்கிறாள்.

வேதாந்த குறவஞ்சி நாடகம், வேதாந்த வித்யா ஸோபனம், வேதாந்த அம்மானை, வேதாந்தப் பள்ளு, வேதாந்த ஆண்டி, வேதாந்த வண்டு, வேதாந்த ஆச்சே போச்சே, ப்ரம்ம ஸ்வரூபம், வாலாம்பிகை பந்து, ப்ரும்ம மேகம், தக்ஷிணா மூர்த்தி படனம், வேதாந்த பல்லி, வேதாந்தக் கப்பல், பகவத் கீதா ஸார சங்கிரஹம் உள்ளிட்ட பல தமிழ்ப் பாடல்களை, கவிதைகளை, கும்மிப் பாடல்களை அருளிச் செய்துள்ளாள் ஆவுடையக் காள்.

ஆடி மாத அமாவாசை அன்று குற்றாலத்தில் குளித்து முடித்ததும், `ஸ்நானம் ஆச்சு தியானம் முடித்துவிட்டு வரேன்’ என்றபடி மலையேறிப் போன ஆவுடையக்காள் மீண்டும் இறங்கி வரவே இல்லை. வாழ்ந்த காலம் முழுக்க ஜீவன் முக்தையாக இருந்தவள் மலை மீது முக்தி யடைந்தாள் என்று சொல்லப்படுகிறது. புவியின் பெரும்பகுதி போக பூமி எனப் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்க, இது போக பூமி அல்ல ஞானபூமி என அழுந்தச் சொல்லிய பெண் தெய்வமான ஆவுடையக்காளைப் போற்றுவோம்!

- சக்திகளின் பக்தி தொடரும்...