பிரீமியம் ஸ்டோரி

அதிகாலை... கொல்கத்தா நகரின் கங்கை நதிக்கரை. ராமகிருஷ்ண பரம ஹம்சரின் பிரதான சீடர்களில் ஒருவரான சுவாமி பிரம்மானந்தர், புனித நதியான கங்கையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவரால் தீக்ஷை மறுக்கப் பட்ட மூன்று பேர், சற்றுத் தள்ளி நின்றிருந் தனர்.

அனுசுயா எம்.எஸ்
அனுசுயா எம்.எஸ்

ஒரு மனிதன் வந்து சரணடையும்போது, அந்த ஜீவன் செய்த அனைத்து வகையான முன்கர்ம வினைகளும் மெய்ஞானிகளின் மனக்கண்களில் ஓடும்.

அன்று, அம்மூவருக்கும் தீக்ஷை மறுக்கப் படுவதாகச் சொன்ன சுவாமி பிரம்மானந்தர், ‘`என்னால் இவர்களை ஏற்க முடியாது. வேண்டுமானால் ஜெயராம்பாடிக்குச் சென்று அன்னையிடம் கேட்டுப் பாருங்கள்’’ என்று வழிகாட்டினார்.

ஜெயராம்பாடி சென்றவர்களுக்கு, அங்கேயும் தீக்ஷை கிடைத்தபாடில்லை. பிரம்மானந்தரால் தீக்ஷை மறுக்கப்பட்ட போதுகூட தைரியமாக இருந்த அந்த மூவர், ஜெயராம்பாடியில் அன்னை ஏற்க மறுத்த வுடன் நொறுங்கி அழுதனர். சிறிது மௌனத் துக்குப் பிறகு, அன்னையால் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். “என்னைத் தேடி வந்த என் குழந்தை எவரையும் நான் கைவிடேன்” என்று சொன்னார் அன்னை.

மகாபாவி என்று ஊர் உலகமே ஒதுக்கிய வனையும்கூட, ‘இவனும் என் குழந்தைதான்’ என வாரி அணைக்கும் ஒப்பற்ற மனதுக்குச் சொந்தக்காரரான அந்த அன்னை... சாரதா மணி என்கிற இயற்பெயர் கொண்ட அன்னை சாரதா தேவி.

இதுவரை நாம் கண்ட தெய்வப் பெண்கள், ‘அவனே பரம்' என்று இறையைச் சரணடைந்த வர்கள். சாரதா தேவி, கணவருக்கான பணி யையே ஆன்மிகப் பணியாக முன்னெடுத்து, தன் தினசரி வாழ்வின் இன்னல்களுக்கும் பொறுப்புகளுக்கும் இடையிலும் இறையைக் கண்டடைந்து, தான் ஞானம் பெற்றது மட்டுமல்லாது மக்கள் பலரும் ஆன்மிக ஒளிபெற தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகமே உருவான தெய்வ மனுஷி.

சாரதா தேவி, அன்றைய வங்காளத்தின் (மேற்கு வங்கம்) ஜெயராம்பாடி என்ற கிராமத்தில், 1853 டிசம்பர் 22-ம் தேதியன்று ஏழைக் குடும்பமொன்றின் மூத்த மகளாகப் பிறந்தார். அப்போதிருந்த வழக்கப்படி சிறுவயதிலேயே, அவரைவிட ஏறக்குறைய 17 வயது மூத்தவரான ராமகிருஷ்ண பரமஹம்சருடன் திருமணமானது. இல்லறம் என்றாலும், அதிலும்கூட துறவறம் எனும் படியான மகத்தான வாழ்க்கையை ராம கிருஷ்ணரும் சாரதா தேவியும் வாழ்ந்த வாழ்க்கை, ஆன்மிகவாதிகள் பலருக்கும் பெரும்பாடம் என்று சொன்னால், அதில் மிகையில்லை.

ராமகிருஷ்ணர் கடுந்தவத்தில் ஈடுபட்டிருப் பதை அறியாதவர்கள், அவரைப் பித்தர் என்றனர். இதனால் ஜெயராம்பாடியிலிருந்த சாரதா தேவி, மனம் கலங்கி அவரைக் காண தட்சிணேஸ்வரம் புறப்பட்டார். அங்கு சென்று குருதேவரைக் கண்டபின்தான், ஊரார் உரைத்தவை உண்மையல்ல என்பதை உணர்ந்தார். கணவர் ராம கிருஷ்ணர், சராசரி மனிதர் அல்லர். ஒருபோதும் சம்சார வாழ்க்கையை நோக்கித் திரும்பமாட்டார் என்பதும் அவருக்குப் புரிந்தது. அதனால் கணவருடைய தெய்விக வாழ்க்கைக்கு உதவியாக இருப்பதே பெரிய கடமை என்று தீர்மானித்தது அவரது மனம்.

தெய்வப் பெண்ணே! - 6 - அன்னை எனும் ஓர் அருளொளி!

‘குருமஹராஜ்’ என்றழைக்கப்பட்ட பரமஹம்சரையும், இந்தியாவின் பக்தி மார்க்கத்தையும், அதன் ஆழமான கலாசாரத்தையும் மேற்கே சிகாகோ நகரில் முழங்கிய விவேகானந்தரையும் விட, அன்னையின் பக்திமார்க்கம் உயர்ந்தது மற்றும் பரிபூரணமானது என்றே சொல்ல வேண்டும். காரணம், ராமகிருஷ்ண பரம ஹம்சரும் விவேகானந்தரும் தங்களை முழு நேரமும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். அதனால், ஒரு நாளைத் தொடங்கி தொடர்ந்து முடிக்கும்வரை அவர்களின் சிந்தனை முழுவதும் இறைபணியில் மாத்திரமே இருந்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால், அன்னை சாரதா தேவிக்கு அப்படியில்லை.

காலை 4 மணிக்குத் தொடங்கும் அன்னையின் நாள், சதாசர்வகாலமும் பவதாரணி சிந்தனையிலேயே அமிழ்ந்து கிடக்கும் பரமஹம்சரைப் பார்த்துக் கொள்ள வேண்டும், ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களை கவனிக்க வேண்டும், குருவின் சீடர்களையும் தன்னை நாடிவரும் கதியற்ற மக்களையும் வரவேற்று உணவு சமைத்து பரிமாற வேண்டும், ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும்... இன்னும் பிற வேலைகள் அனைத்தையும் செய்தபடியே பக்தி சாதனைகளையும் தவறாமல் செய்ய வேண்டும். ஆகக்கூடி, அன்னை ஒருவரால் மட்டுமே முடியக்கூடிய சாதனை இது என்று எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு, தன் தெய்விகப் பணிகளையும் இல்லறப் பணிகளையும் மேற்கொண்டார் சாரதா தேவி. இதுமட்டுமா, தேள் கொட்டுவதுபோல் சதா சர்வகாலமும் தன்னைக் கொட்டிக் கொண்டேயிருந்த தன் அம்மாவழி குடும்பத்தினரையும் கவனித்தபடியே பக்தி மார்க்கத்தில் மேன்மேலும் உயரச் சென்று கொண்டிருந்தார் அன்னை.

ஒற்றை ஆளாக நின்று பல பொறுப்புகளையும் அனாயாசமாக செய்து காட்டிய ‘மல்டி டாஸ்க்கிங்’ தெய்வப் பெண், அன்னை சாரதா. பணவசதி இம்மியும் இல்லாத காலகட்டத்தில் மட்டுமல்ல, ராமகிருஷ்ண பரமஹம்சரின் புகழ் பரவத் தொடங்கிய பின்பு ஆசிரமத்துக்கு வருகின்ற பக்தர்களின் கூட்டமும் வருவாயும் கணிசமாக உயர்ந்தபோதும்கூட அன்னை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். பணம், பகட்டு, ஆடை, அலங்காரங்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் அன்னையின் மனம் செல்லவேயில்லை.

நம்மைப்போல, நம் வீட்டிலிருக்கும் அம்மாக்களைப் போல, பாட்டிகளைப் போல இல்வாழ்க்கையில் இருந்தபடி, சீடர்கள் சூழ் பரமஹம்ச குடும்பத்தை கவனித்தபடி, ஆன்மிக நிலையிலும் மேன்மேலும் ஒரு பெண்ணால் உயர முடியும், எவரும் எட்டாத உயரங்களை அடைய முடியும் என்பதை அன்னையின் வாழ்வியலால் அறியமுடிகிறது.

பரமஹம்சர் சித்தியடைந்த பிறகு, தன் வாழ்க்கையை அன்னை மாற்றி அமைத்துக் கொண்ட விதம், அனைவருக்கும் அற்புதப் பாடம். சோர்ந்து போகாமல் பிரார்த்தனை நேரத்தை அதிகப்படுத்தினார். சீடர்களுடனும் பக்தர்களுடனும் அதிக நேரம் செலவிடத் தொடங்கினார். இடைவிடாத ஜபம், தியானம் மற்றும் சேவைகளில் ஈடுபட்டார். சாதி, மத பேதங்களைக் கடந்த கருணைக் கடலாக அவர் இருந்ததுடன், நாடி வந்த எவரிடமும் பேதம் பார்க்கவில்லை. வேதம் முதலிய சகல சாஸ்திரங்களையும் கற்று கரைகண்ட ஒருவரை எப்படி நடத்துவரோ... அதே போலத்தான் இவ்வுலகினரால் பாவி என்று பழிக்கப்பட்டவரையும் மதித்தார்.

ஒருபுறம், அந்த கொல்கத்தா காளியின் ஸ்வரூபமாக அன்னையைக் கொண்டாடி னார்கள் சிஷ்யர்கள்; மறுபுறம் பணத்தாசை பிடித்த அவரின் சகோதரர்கள் எப்போதும் அன்னையைப் பழித்துக்கொண்டே இருந்தனர். ‘அன்னை, இன்னமும் ஏன் அவர்களையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறார்?’ எனச் சீடரொருவர் கேட்டபோது, அதிகம் படித்திடாத சாரதா அம்மையார் சொன்னது: “இதுதான் இந்த உலகத்தின் இயல்பு. இதிலிருந்து கொண்டேதான் சாதிக்க வேண்டுமேயல்லாது, அனைத்தையும் ஒரேடியாக புரட்டிப் போடவோ, மாற்றிவிடவோ நம்மால் இயலாது. இந்த நிதர்சனத்தை உணர்ந்து கொண்டு காரியங்களைச் செய்தவாறே இறை பக்தியில் மேலும் மேலும் நம்மை ஆட்படுத்திக் கொள்ளும்போது, அசாதாரணமாகத் தோன்றிய காரியங்கள் சாதாரணமாக அரங்கேறுவதைக் காணலாம்.”

சுவாமி விவேகானந்தரால் ஸ்ரீராமகிருஷ்ண மடம் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் மொத்த நிர்வாகப் பொறுப்பும் அன்னையின் வசமேயிருந்தது. ஆகச்சிறந்த நிர்வாகியாகவும் அவரிருந்தார். கூடவே, படிப்பறிவு பெறாத அன்னை, பெண் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து அதற்கான முயற்சிகள் எடுத்த சமூக சீர்திருத்தவாதியும்கூட. 1898-லேயே, காளி பூஜை யன்று ஒரு வீட்டை பள்ளிக்கூடமாக திறந்து வைத்தார் அன்னை.

தெய்வப் பெண்ணே! - 6 - அன்னை எனும் ஓர் அருளொளி!

மூப்பின் காரணமாக, பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளான போதும் அதிகாலையில் எழுவதையும், இடைவிடாது ஜெபிப்பதையும் அன்னை குறைத்துக் கொள்ளவேயில்லை. அன்னையின் அணுக்க சீடராக இருந்த ஒருவர், ‘அந்த பவதாரிணியின் ஸ்வரூபமான நீங்கள் ஏன் தாயே இன்னமும் இத்தனை கடினமான ஜெபம் உள்ளிட்ட சாதனைகளைச் செய்ய வேண்டும்?’ என்றதற்கு அவர் சொன்ன பதில்: “எனக்கு ஓய் வென்பதே கிடையாது. என் பிள்ளைகள் அனை வருக்காகவும் நான் உழைத்துக் கொண்டே இருப்பேன்.”

‘உன்னை எப்போதெல்லாம் கவலைகள் சூழ்கின்றனவோ, அப்போதெல்லாம் எனக்கு ஓர் அம்மா இருக்கிறாள் என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்’ எனத் தன்னை நாடி வந்த அனைவரையும் அரவணைத்துக் கொண்ட அக்கருணா ரூபம், 1920, ஜூலை 20-ம் தேதி பூத உடலை உகுத்தது.

அன்னையின் உபதேசங்களும் வாழ்வியலும் அனைவரையும் அறவழி நடத்தட்டும்!

- சக்திகளின் பக்தி தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு