Published:Updated:

தெய்வப் பெண்ணே! - 1 - பீபி நாச்சியார்

பீபி நாச்சியார்
பிரீமியம் ஸ்டோரி
பீபி நாச்சியார்

மெய்சிலிர்க்க வைக்கும் பெண் பக்தர்களின் தோரணத் தொடர் - புதிய பகுதி

தெய்வப் பெண்ணே! - 1 - பீபி நாச்சியார்

மெய்சிலிர்க்க வைக்கும் பெண் பக்தர்களின் தோரணத் தொடர் - புதிய பகுதி

Published:Updated:
பீபி நாச்சியார்
பிரீமியம் ஸ்டோரி
பீபி நாச்சியார்

ஓவியம்: ஜீவா

பொதுவாக கதாகாலட்சேபம் செய்பவர்கள், இறைக் கதைகளைக் கூறும் பெரியோர்கள் ருக்மணி யைக் காட்டிலும் ஆண்டாளை ஒருபடி உயர்வாகச் சொல்வார்கள். காரணம், ‘புவன சுந்தரா’ என விளித்து தன்னை வந்து அழைத்துக் கொள்ளும்படி காதல் கடிதம் எழுதிய ருக்மணி, கண்ணனின் சம காலத்தில், அதாவது துவாபர யுகத்தில் வாழ்ந்தவள். ஆனால் ஆண்டாளோ கலியுகத்தில் அவதரித்தவள். தன் திரு தகப்பனாரான பட்டர்பிரான் என்னும் விஷ்ணு சித்தரின் மூலமாகவே கண்ணனும் அவனது லீலைகளும் ஆண்டாளுக்கு அறிமுக மாகின. ஸ்ரீரங்கநாதனே எனது மணவாளன் எனும்படி வாழ்ந்து, அவனையே அடைந்தவள். ‘ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது’ என நாச்சியார் திருமொழி பாடிய கோதை நாச்சி யாரை நாமறிவோம். கோதை நாச்சியாரின் பக்திக்கு சற்றும் சளைக்காத பீபி நாச்சியார் பற்றி அறிவோமா...

அனுசுயா.எம்.எஸ்
அனுசுயா.எம்.எஸ்


கொண்டு செல்லப்பட்ட ரங்கன்!

சுல்தான் படையெடுப்புகளால் சீரழிந்த ஸ்ரீரங்கத்தை விட்டு பலரும் அகன்றார்கள். அவ்வேளையில் தென் தமிழகத்தில் புகுந்த மாலிக்காபூரின் படைகள், கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் என உட்புகுந்து சீரழித்தவையும் அள்ளிச் சென்றவையும் ஏராளம். சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த பல்வேறு கோயில்களைச் சூறையாடி தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம் என எடுத்துச் சென்றார்கள். அது மட்டுமா... கோயில்களில் இருந்த பல கடவுளின் சிலைகளையும், உற்சவர் திருமேனிகளையும்கூட விட்டு வைக்கவில்லை.

இவ்வாறாக, தென் தமிழகத்தைச் சேர்ந்த பல கோயில்களிலிருந்து களவாடப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட ஐம்பொன் சிலைகளும், பிற சிலைகளும் தில்லியில் சுல்தானின் அரண்மனை அறையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அப்படிக்கொண்டு செல்லப்பட்ட பல திருமேனிகளில், நம்பெருமாள் எனப்படும் ஸ்ரீரங்கநாதரின் உற்சவர் திருமேனியும் ஒன்று.

உற்சவர் ஸ்ரீரங்கநாதனுக்கு அழகிய மணவாளன், நம்பெருமாள் எனப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் பக்தர்களால் கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர்... பேசும் அரங்கன். ‘ஆம். இது வெறும் சிலையல்ல. என் தெய்வம், என் நாயகன், என்னப்பன்’ எனத் தன்னை நம்பினோர் உணரும் வகையில், அவர்களுடன் அன்றும் இன்றும் என்றும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதன். அதனால்தானோ என்னவோ டெல்லி சுல்தானின் இளையமகள் சுரதானிக்கு, குவித்து வைக்கப்பட்டிருந்த பல தெய்வத் திருமேனிகளுள் ஸ்ரீரங்கநாதன் திருமேனியைக் கண்டதும் பிடித்தது. சுல்தானான தன் தந்தை யிடம் சொல்லிவிட்டு, தனது பிரத்யேக அந்தப்புரத்தில் ஸ்ரீரங்கநாதனின் திருமேனியை வைத்து விளையாடத் தொடங்கினாள்.

தெய்வப் பெண்ணே! - 1 - பீபி நாச்சியார்

பீபியின் வாதை!

யே யதாமாம் பிரபத்யந்த்தே தாம் ததைவ பஜாம்யஹம் - அதாவது, ‘யார், யார் என்னை எப்படி அணுகுகிறார்களோ அவர்களுக்கு நான் அப்படியே கிடைப்பேன்’ என்பது கீதையில் கண்ணனின் வாக்கு. அதை மெய்ப்பிக்கும்படி, சுரதானி அரங்கனுடன் பேசி விளையாடத் தொடங்கினாள். வெளியிலிருந்து பார்ப்போருக்கு ஏதோ பொம்மையுடன் இளவரசி விளையாடுவதாகத் தோன்றும். ஆனால், பிரத்யட்சமாக தெய்வம் அவளுடன் பேசி சிரித்து விளையாடியதை அவள் மாத்திரமே அறிவாள்.

இந்த நிலையில், மாலிக்காபூரின் படைகளைப் பின்தொடர்ந்து டெல்லி வரை சென்ற `பின் சென்ற வல்லி' எனும் தேவதாசிப் பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டுப்போன சான்றோர்கள் ராஜாவை அணுகி, ஸ்ரீரங்கநாதனின் விக்ரஹத்தை திரும்பத் தரும்படி வேண்டினர். மனமிரங்கிய ராஜாவும் அனைத்து தெய்வத் திருமேனி களையும் குவித்து வைத்திருந்த அறையைத் திறந்து காட்ட, அதில் அரங்கனைக் காணவில்லை. சுல்தானின் மனைவி, ‘நம் மகள் பீபி அந்தப்புரத்தில் ஒரு சிலையை வைத்து அனுதினமும் ஆராதித்து வருகிறாளே, அதுவோ இவர்கள் தேடி வந்த சிலை?’ என்றதும் அங்கு சென்றவர்களுக்குக் கிடைத்தது, இவர்கள் தேடிப்போன சாக்ஷாத் ரங்கநாதரின் திருமேனிதான். இளவரசி அங்கில்லாத நேரமாக, உடனடியாகப் பெருமாளின் திருமேனியை எழப் பண்ணிக் கொண்டு விறுவிறுவெனக் கிளம் பினர். ஆனால், தன் அந்தப்புரத்தில் அரங்கனின் திருமுகத்தைக் காணாது வாடிய பீபியோ மெலிந்து நோயுற் றாள். இதைக் கண்டு கலங்கிய சுல் தான் அவளை பாதுகாப்பு ஏற்பாடு களுடன் பல்லக்கில் டெல்லியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைத்தார்.

டெல்லியிலிருந்து உற்சவரின் திருமேனியுடன் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டவர்களுக்கு, சுல்தான் தன் மகளை படையுடன் அனுப்பி வைத்த தகவல் எட்டியது. மீண்டும் நம்பெருமாளின் திருமேனியை எடுத்துக் கொள்ளத் தான் சுல்தான் படையை அனுப்பு கிறார் என்றெண்ணியவர்கள், திருவரங்கத்துக்குச் செல்லாமல் வழியை மாற்றி திருப்பதிக்குச் சென்றனர். இந்த விவரமறியாத ராஜா, சுரதானியை திருவரங்கத்துக்கு அனுப்பிவைக்க, திருவரங்கத்தை அடைந்த சுரதானி, அங்கு இன்னும் நம்பெருமாள் வந்து சேராததைக் கண்டு, இனி தன்னால் அவனை அடைய முடியாது என்றெண்ணி மனம் கலக்கமுற்றாள். பெரிய கோயில் எனும் ஸ்ரீரங்கம் கோயிலை அடைந்துமே உயிர் நீத்தாள்.

சுரதானிக்குக் கிடைத்த பேறு!

பிறப்பால், வளர்ப்பால், பேசும் மொழியால், உணவுப் பழக்கங்களால், மத நம்பிக்கையால் என எல்லா வற்றாலும் வேறுபட்டிருந்தாலும், அரங்கனின் மீது அவள் கொண்டிருந்த அப்பழுக்கற்ற பக்தியுடன்கூடிய காதலின் காரணமாக எவருக்குமே கிடைக்காத பெரும் பேறு பீபி நாச்சியாருக்குக் கிடைத்தது.

என்ன தெரியுமா... ஸ்ரீரங்கநாதரின் சந்நிதிக்கு பக்கத்திலேயே வடகிழக்கு மூலையில் பீபி நாச்சியாருக்கென தனி சந்நிதி ஏற்படுத்தப்பட்டது. இஸ்லாமிய வழக்கப்படி உருவ வழிபாடு கிடையாது என்பதால் அவளுக்கு விக்ரக ஆராதனை, அதாவது, சிலை வைத்து வழிபாடு இல்லை. மாறாக அவளின் சித்திரம் அங்கிருக்கும் சுவரில் வரையப்பட்டு தனி சந்நிதியொன்று அவளுக்காக எழுப்பப்பட்டது. அது மட்டுமா... அரங்கனும் சுரதானி தன்பால் கொண்ட காதலை மனமுவந்து ஏற்றுக்கொண்டதற்கு சாட்சியாக, இன்றளவும் திருமஞ்சனம் என்னும் அபிஷேக காலத்தில் கைலியை மாத்திரமே அணிந்து கொள்கிறார்.

அவ்வளவுதானா? இல்லை… இன்னும் உள்ளது. சுரதானியின் நினைவாகப் பெருமாளுக்குப் படைக்கப்படும் ஒருவேளை உணவாக ரொட்டியும் வெண்ணெயும்கூட உண்டு. அத்துடன் எல்லா வேளைகளிலும் அரங்கனுக்கு அமுது செய்த பிரசாதமானது பட்டமகிஷியான ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதிக்குக்கூட செல்லாது. ஆனால், அரங்கனின் சந்நிதி அருகிலேயே இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதிக்கும், சேரகுலவல்லி சந்நிதிக்குமே செல்லும்.

தெய்வப் பெண்ணே! - 1 - பீபி நாச்சியார்

அரங்கன் சுரதானியை அங்கீகரித்ததற்கான சடங்குகள் இத்துடன் முடியவில்லை. வெற்றிலைக் காம்பை கிள்ளிவிட்டு வெற்றிலை போடும் பழக்கம்தான் இந்து மதத்தில் உண்டு. ஆனால், இஸ்லாத்திலோ காம்பைக் களையும் வழக்கமில்லை. நம்பெருமாளுக்குப் படைக்கப்படும் வெற்றிலையில் காம்பானது களையப்படுவதில்லை. இவை அனைத் தையும்விட, சுரதானிக்கும் அரங்கனுக்கும் இடையிலான உறவைச் சிலாகித்துச் சொல்ல இன்னும் இரு விஷயங்கள் உள்ளன.

திருவாய்மொழித் திருநாள் எனப்படும் 21 நாள்கள் உற்சவத்தில் இராப் பத்தின் பொழுது திருமாமணி மண்டபத்திலிருந்து கிளம்பும் உற்சவர் ரங்கராஜன், இஸ்லாம் பெண்கள் பர்தா போட்டுக்கொள்வதைப் போல `சல்லா' (சாதரா) என்னும் வலை போன்ற துணியைத் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொள்வார். அத்துடன் குல்லாயும் அணிவார். இந்தப் புறப்பாட்டின்போது ஸ்ரீரங்கநாதனின் முகம் மாத்திரமே தெரியும். மற்றொன்று, பகல் பத்தின்போது கிளி மண்டபத்தைக் கடந்து அர்ஜுன மண்டபத் தில் எழுவதற்கு வரும் வழியில் பீபி நாச்சி யாரின் சந்நிதிக்கு முன்பாக அரங்கனை தோளில் சுமந்து வருபவர்கள் நின்று கொண்டிருக்க, திருக்கோயிலின் அரையர்கள் பெருமாளின் மேன்மையைக் கூறும் பல தமிழ்ச் சொற்றொடர்களை சொல்லுவர். இதற்குக் கொண்டாட்டம் என்று பெயர். அரையர்கள் இந்தக் கொண்டாட்டத்தைச் சொல்லி முடித்த பின்பு, அரங்கனை சுமந்து நிற்கும் கோயில் ஊழியர்கள் பெருமாளைத் தங்கள் தலைக்கு மேல் உயர்த்தி சில நொடிகள் காட்டுவர். அது பீபி நாச்சியாருக்கு அரங்கன் கொடுக்கும் க்ஷணநேர பிரத்யேக தரிசனம்.

‘ருக்மிணியைக் காட்டிலும் ஒரு படி உசத்தி’ என்று காலட்சேபம் செய்யும் பெரியவர்கள் கோதையைச் சொல்வதைப்போல, ஆண்டாளின் பக்திக்கு சற்றும் சளைத்ததல்ல பீபி நாச்சியாரின் பக்தி என்று சொல்லலாம். ஏனெனில், பட்டர் பிரான் கோதைக்கு அரங்கனை அடைவதற்கான தடைகள் எனப் பெரிதாக எதுவுமில்லை. ஆனால், வேற்று மதத்தில் பிறந்து, வேறு ஒரு மாநிலத்தில் வளர்ந்த சுரதானிக்கோ பல்வேறு தடைகள் இருந்தன. அவை அனைத்தையும் தூள் தூளாக்கியது அரங்கனின் பால் அவள் கொண்ட அப்பழுக்கற்ற பக்தி!

- சக்திகளின் பக்தி தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism