Published:Updated:

தெய்வப் பெண்ணே! - 11 - சிவபெருமானே ‘அம்மை’ என்றழைத்த காரைக்கால் அம்மையார்

தெய்வப் பெண்ணே
பிரீமியம் ஸ்டோரி
தெய்வப் பெண்ணே

ஓவியம்: ஜீவா

தெய்வப் பெண்ணே! - 11 - சிவபெருமானே ‘அம்மை’ என்றழைத்த காரைக்கால் அம்மையார்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
தெய்வப் பெண்ணே
பிரீமியம் ஸ்டோரி
தெய்வப் பெண்ணே
அனுசுயா எம்.எஸ்
அனுசுயா எம்.எஸ்

என்னப்பன், பொன்னப்பன், அம்மையப்பன் என்று அறியப்பட்ட சிவபெருமானே ‘அம்மையே...’ என்றழைத்தவர்தான்... இங்கு நாம் பார்க்கப்போகும் தெய்வப் பெண்!

பிற மதங்களின் செல்வாக்கால் மங்கிக் கிடந்த சைவ சமயத்தை மீட்டெடுத்தவரும், ஊர்தோறும் சென்று சிவபெருமானைப் பாடி பலரையும் சைவம் நோக்கி மீண்டும் திருப்பிய வரும், தனக்குப் பின் தோன்றிய பிற நாயன் மார்களும் சமயத்தொண்டு செய்வதற்கும், இறைவனைப் பாடுவதற்கும் முன்மாதிரியாக அமைந்தவர், காரைக்கால் அம்மையார். காரைக்காலை சொந்த ஊராகக் கொண்ட வராதலாலும், ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அம்மையப்பனால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டதாலும் ‘காரைக்கால் அம்மையார்’ என்ற பெயர் பெற்றார் அவர்.

மாம்பழமும் சிவனடியாரும்!

அம்மையார், தனதத்தர் எனும் வணிகரின் மகள். இயற்பெயர் புனிதவதி. பெயருக்கு ஏற்றாற்போல பால்யம் முதலில் பரமேஸ்வரன் மீது பக்தி கொண்டு வளர்ந்தார். தக்க வயது வந்ததும் பரமதத்தன் எனும் வணிகருக்கு மணம்முடித்துக் கொடுக்கப்பட்டார். சிவ பக்தியில் சிறந்து இருந்ததுடன் சிவனடியார் களை சிவனாக பாவிக்கும் மனதும் வாய்க்கப் பெற்றிருந்தார்.

இல்லறம் நல்லறமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள் பரமதத்தன் அவருக்குக் கிடைத்த இரண்டு மாம்பழங்களை வீட்டிலிருந்த புனிதவதிக்குக் கொடுத்தனுப்பி னார். அதே நேரத்தில் வீடு வந்த சிவனடியார் ஒருவர் பசி என்று யாசிக்க, தன்னிடமிருந்த இரண்டு மாம்பழங்களில் ஒன்றை அவருக்குக் கொடுத்தார் புனிதவதி.

பரமதத்தன் மிரண்டு போன பக்தி!

மதிய உணவுக்கு வீடு திரும்பிய பரமதத்தன் புனிதவதியிடம், ‘நான் கொடுத்தனுப்பிய மாம் பழங்களைக் கொண்டு வா’ என்று சொல்ல, புனிதவதி ஒரு பழத்தை பரிமாறினார். சுவை மிகுந்த மாங்கனியை உண்ட பரமதத்தன் மற்றொரு பழத்தையும் கேட்க, செய்வதறியாது விக்கித்து நின்றார் புனிதவதி. அடியவர்க்கு உணவிடலாம், ஆனால் கணவன் உடன் இல்லாதபோது மனைவி மட்டும் விருந்தின ருக்கு விருந்தோம்பல் செய்யும் வழக்கம் அக்காலத்தில் இல்லை.

பரமதத்தன் பொருள்சார் வாழ்க்கை வாழ்ந்தவர். இறையருள்சார் வாழ்வைப் பற்றிய அறிமுகம் இல்லாதவர். எனவே, அவர் கொடுத்து அனுப்பிய பழத்தை சிவனடி யாருக்குக் கொடுத்துவிட்டேன் என்று சொன்னால் தன்னை கோபிப்பாரோ என்று வருந்தி, கண்மூடி மனமுருகி சிவனை தியானித் தார் புனிதவதி. ஈசனருளால் உடனடியாக அவர் கையில் ஒரு மாங்கனி வந்தது. மனமகிழ்ந்தவர் அதை பரமதத்தனுக்கு பரிமாற, இரண்டாவது பழத்தின் சுவை, முதலில் சாப்பிட்ட பழத்தைவிடக் கூடுதலாக இருந்தது. ‘ஒரே மரத்தின் பழங்களில் ஒன்றை விட, மற்றொன்று கூடுதல் சுவையுடன் இருக்கிறதே!’ என்று பரமதத்தன் சிலாகிக்க, உண்மையை மறைக்க வேண்டாம் என்று எண்ணிய புனிதவதி நடந்தவற்றை பரம தத்தனிடம் கூறினார்.

பரமதத்தன் புனிதவதி கூறியதை நம்பாமல், ‘இது உனக்கு ஈசன் அருளால் கிடைத்திருந்தால் ஈசனிடமிருந்து மற்றுமொரு மாம்பழத்தை பெற்று வா’ என்றார். புனிதவதி மீண்டும் ஈசனை வேண்டிக்கொள்ள, மற்றொரு மாம் பழம் அவர் கையில் கிடைத்தது. இதைக்கண்ட பரமதத்தன் பயத்தில் உறைந்தார். ‘இத்தனை சிறப்புகொண்ட இவளுடன் இனியும் இல்லறத் தைத் தொடர்ந்து நடத்த முடியாது’ என்று முடிவெடுத்தவர், புனிதவதியைப் பிரிந்து பாண்டிய நாட்டுக்குச் சென்று வேறொரு மணம் புரிந்து புதுவாழ்வைத் தொடங்கினார்.

தெய்வப் பெண்ணே! - 11 - சிவபெருமானே ‘அம்மை’ என்றழைத்த காரைக்கால் அம்மையார்

வேண்டிப் பெற்ற பேயுரு!

‘தளிர் அடிமென் நகை மயிலே’ என்று சேக்கிழார் பாடிய அழகை உடையவர் புனிதவதி. இவ்வுடலழகினால் தனது பக்தி மார்க்கத்துக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்த அவர், இளமை யான தோற்றம் வேண்டாமென்று சொல்லி பேயுருவை வேண்டிப் பெற்றார். அப்பேயுரு வுடன் சிவாலயங்கள் அனைத்துக்கும் சென்று ஈசனை பாடினார். உலகமே அஞ்சி வெறுக்கும் பேயுருவை வேண்டி விரும்பிப் பெற்ற அம்மையாரின் உருவை, ‘பெருமைசேர் இவ்வடிவம்’ என்று சிலாகித்தார் சிவன்.

தலையால் ஏறினார் கயிலாயம்!

யாத்திரையாக கயிலாயம் சென்றடைந்தார் புனிதவதி. சிவ உருவான கயிலையின் மேல் தன் கால் பதித்து நடப்பது முறையல்ல என்று நினைத்த அவர் தன் தலையாலேயே கயிலாய மலை ஏறினார். தலையால் கயிலாயம் ஏறி வரும் இப்பேயூரு யார் என உமையவள் ஈசனிடம் கேட்க, ‘இவள் நம்மைப் பேணும் அம்மை’ என்று பதிலுரைத்தார் ஈசன். காரைக் கால் அம்மையின் பக்தியில் மனமகிழ்ந்து அவருக்கு என்ன வரம் வேண்டுமென்றதற்கு...

‘`பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண் டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுஉன் அடியின்கீழ் இருக்க’’ என்றார்.

அம்மையாரின் வேண்டுதலுக்கு இணங்க தன் தாண்டவக் காட்சியை அருள்வதாகச் சொன்ன ஈசன், அவரை திருவள்ளூர் மாவட் டம், திருவாலங்காடு செல்லப் பணித்தார். அங்குபோய் சிவதாண்டவத்தை கண்ட அம்மையார் முக்தி அடைந்தார்.

63 நாயன்மார்களில் இவர் ஒருவருக்கு மட்டுமே அந்தச் சிறப்பு!

63 நாயன்மார்களில் மூவர் மட்டுமே பெண்கள். அதில் முதலானவர் காரைக்கால் அம்மையார். மேலும், மீதமுள்ள 62 நாயன் மார்கள் நின்ற திருக்கோலத்தில் இருக்க, அம்மை மாத்திரமே அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

தேவாரம் தோன்றும் காலத்துக்கு முன்னரே காரைக்கால் அம்மையார் பதிகங்கள் இயற்றினார் என்பதால் இவரது பாடல்கள் ‘மூத்த திருப்பதிகம்’ என்று அழைக்கப்படுகிறது. இவரது பதிகங்கள் அனைத்தும் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. இவருக்குப் பின் வந்த நாயன்மார்கள் பல பதிகங்கள் பாடினர் என்றாலும் அவர்கள் அனைவருக்கும் முன்னோடி அம்மையார்தான். திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி மற்றும் திருவிரட்டை மணி மாலை முதலிய பாடல்கள் அனைத்துமே தமிழ் பக்தி இலக்கியத்தில் முக்கியமானவை.

பெண்களுக்கு முக்தி என்பதே கிடையாது என்று சில சமயங்கள் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது, அதைத் தகர்த்து, ஆழ்ந்த பக்தி செய்வதன் மூலம் ஆண், பெண் பேதமின்றி எவரும் சிவபதத்தை அடையலாம் என்பது காரைக்கால் அம்மையாரின் வாழ்க் கையின் மூலம் நாம் அறியும் செய்தி. போலவே அம்மையாரின் காலத்தில் பிற சமய ஆதிக்கத் தால் சிதிலமடைந்து இருந்த பல சிவத்தலங்கள் அவரால் சீராயின. அம்மையார் எழுதிய தமிழ்ப் பதிகங்கள் மக்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழ் பக்தி இலக்கியத் துக்கு அம்மையார் ஆற்றியது பெரும் பங்கு. அதனாலேயே இன்றளவும் காரைக்கால் அம்மையாரின் வாழ்வையும் அதிலிருந்த ஆழ்ந்த பக்தியையும் நினைவு கூறும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெற்று வருகிறது.

தெய்வப் பெண்களின் பக்தியும், தொண்டும், அருளிய பாக்களும் பூமியுள்ளவரை போற்றுதற் குரியவை.

நிறைவடைந்தது