Published:Updated:

தெய்வப் பெண்ணே - 2 - வண்ணமில்லா வெள்ளைக்கோபுரமும்... வெள்ளையம்மாளின் பக்தியின் வீரமும்!

தெய்வப் பெண்ணே
பிரீமியம் ஸ்டோரி
தெய்வப் பெண்ணே

ஓவியம்: ஜீவா

தெய்வப் பெண்ணே - 2 - வண்ணமில்லா வெள்ளைக்கோபுரமும்... வெள்ளையம்மாளின் பக்தியின் வீரமும்!

ஓவியம்: ஜீவா

Published:Updated:
தெய்வப் பெண்ணே
பிரீமியம் ஸ்டோரி
தெய்வப் பெண்ணே

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அவற்றில், வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஸ்ரீரங்கத்தை நோக்கி வரும் பக்தர்களுக்கப் பெரும் பிரமிப்பையூட்டுவது, 236 அடி உயர தெற்கு ராஜகோபுரம். தென்கிழக்கு ஆசியாவின் உயர்ந்த கோபுரம் இது. இக்கோபுரம் கட்டப்படுவதற்கு முன் ஸ்ரீரங்கத்தின் ராஜ கோபுரமாக இருந்தது, கோயிலின் கிழக்குப் பகுதியில் இருக்கும் வெள்ளைக்கோபுரம்.

தெய்வப் பெண்ணே - 2 - வண்ணமில்லா வெள்ளைக்கோபுரமும்... வெள்ளையம்மாளின் பக்தியின் வீரமும்!

அரங்கன் கோயிலில் இருக்கும் 21 கோபுரங் களில், 20 கோபுரங்கள் காண்போரை கவரும்படி வண்ணமயமானதாகயிருக்க, இக்கிழக்குப் பகுதி கோபுரம் மட்டும் எவ்வித பூச்சுகளுமின்றி வெள்ளையாகவே இருப்பது ஏன் தெரியுமா... இதன் பின்னணியில் வெள்ளையம்மாள் என்ற தேவதாசி பெண் ஒருத்தியின் பக்தியும், வீரமும், ரத்தமும், சமயோசிதமும் கலந்த தியாக சரித்திரம் இருக்கிறது.

ஊரைச் சூழ்ந்த இருள்!

முகமதியர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் சின்னாபின்னமாக்கப்பட்டது. கோயிலுக்குச் சொந்தமான சகல செல்வங்களும், ஸ்ரீரங்கத்து மக்களுக்குச் சொந்தமான செல்வங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. இவை அனைத்துக்கும் காரணம், முகமதிய படையின் கொலைவெறி ஆட்டம். ஸ்ரீரங்க வீதிகளில் இருந்த வீடுகளில் நுழைந்த முகமதி யர்களின் படைகள் மக்களைக் கொன்றனர், பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்.

பலவற்றையும் கொள்ளையடித்தாலும், விலைமதிப்பிடவே முடியாத பொருள்கள் ஸ்ரீரங்கத்தின் பெரியகோயிலில் ஏதோ ஓர் இடத்தில் இன்னும் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளதாக முகமதிய படைத்தளபதி நம்பினான். கூடவே நம்பெருமாளின் விக்ரகத்தை அரங்கத்தில் காணவில்லை என்பதால், அதையும், மறைத்து வைக்கப் பட்டிருக்கும் மீதி செல்வங்கள் அனைத்தையும் வழித்து எடுத்த பின்தான் இவ்வூரை விட்டு அகல வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்தான். கோயில் அருகிலேயே தன் படைகளுடன் முகாமிட்டு தனது தேடலை துரிதப்படுத்தியிருந்தான்.

எங்கும் மரண ஓலம். எந்நேரமும் மக்கள் அச்ச உணர்வுடனே வாழ்ந்தனர். சுதந்திரமாக வீதியில் நடமாடும் உரிமையைக்கூட இழந்திருந் தனர். தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி யிருந்த படைத்தளபதி, பெருமாள் திருமேனியை (விக்ரகம்) கண்டுபிடிக்கும் வெறியில் சுற்றி னான். அது இல்லாமல் இந்த நகரத்தை விட்டுப்போவதை அவமானமாகக் கருதினான். ஆனால், உற்சவரான நம்பெருமாள் திருமேனி அப்போது அரங்கத்தை விட்டு பிள்ளை லோகாச்சாரியர் மற்றும் அவரின் சீடர்களால் திருமாலிருஞ்சோலை எனும் அழகர் கோயிலுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.

மனம் வெதும்பிய வெள்ளையம்மாள்

மக்கள் அனைவரும் தங்களால் ஏதும் செய்ய முடியவில்லை என்ற கையறு நிலையுடனும், குற்ற உணர்வுடனும் நடை பிணம் போல வாழ்ந்து வந்தனர். ஊரின் இந்நிலை கண்ட, அரங்கன் கோயிலில் ஊழியம் செய்து வந்த வெள்ளையம்மாள் என்ற தேவதாசிப் பெண் மனம் வெதும்பினாள். என்ன செய்தால் சீர்குலைந்த ஸ்ரீரங்கம் பழைய படி அதன் இயல்பு நிலைக்குத் திரும்பும் என் றெண்ணியபடியே நாள்களைக் கடத்தினாள்.

இந்த நிலையில் வெள்ளையம்மாள், ஒருநாள் யாருமறியா வண்ணம் முகமதிய படைத் தளபதியை நேருக்கு நேர் சந்தித்தாள். அவனிடம் நைச்சியமாகப் பேசி, தன் வழிக்குக் கொண்டுவந்தாள். பிறகு, ‘நீ தேடிக் கொண்டிருக்கும் பெரியகோயிலின் பெரும் தனம் எங்கிருக்கிறது என்பதை நான் அறிவேன்’ என்று சொல்லி, தன்னுடன் தனியாக வரும்பட்சத்தில் அதைக் காட்டிக் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினாள். தளபதியும் சம்மதிக்க, படை வீரர்கள் எவருமறியாவண்ணம் அவனை அழைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாள் வெள்ளையம்மாள். அவள் தளபதியைக் கூட்டிச் சென்று நிறுத்திய இடம், கோயிலின் கிழக்குக் கோபுரப் பகுதி.

வெள்ளைக்கோபுரம்
வெள்ளைக்கோபுரம்

ஒரு பெண்ணின் தைரியம் என்ன செய்யும்?!

அரங்கத்தின் கிழக்குக் கோபுரம், ஒன்பது நிலைகளை உடையது. தளபதியை அக்கோபுரத்தின் உள்ளே இருக்கும் படிகளின் வழியாக தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு சொல்லிவிட்டுப் படியேறத் தொடங்கினாள் வெள்ளையம்மாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் இல்லை. ஓங்கி உயர்ந்து நின்ற கோபுரம். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், ஒவ்வொரு படி ஏறும்போதும் தான் செய்யப்போகும் காரியம் கைகூட வேண்டுமென்றும், அரங்கத்தில் மீண்டும் ரங்க ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்றும், பல்வேறு சிந்தனைகளுடனேயே ஒவ்வொரு படியிலும் காலெடுத்து வைத்தாள் வெள்ளையம்மாள்.

சில நூறு படிகளைத் தாண்டி கோபுரத்தின் உச்சியை அடைந்ததும், பொறுமையிழந்தான் தளபதி. ‘கோயிலின் உற்சவர் திருமேனி மற்றும் பிற செல்வங்கள் பெரும் புதையலாக எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டப் போகிறாயா, இல்லையா?’ என்று வெள்ளையம்மாளிடம் கர்ஜிக்க, அவள் கை காட்டியது... சற்றுத் தள்ளி தெரிந்த பிரண வாகார விமானத்தையும், அதிலிருந்த பரவாசுதேவனையும்.

ஓம் எனும் பிரணவ ரூபத்தின் வடிவமாக இருக்கும் அந்த பிரணவாகார விமானமானது, பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திரு மங்கையாழ்வாரால் தங்கம் வேயப்பட்டது. அத்துணை உயரத்தில் நின்றிருந்தவர்களுக்கு, ஆதவனின் கதிர்களால் அவ்விமானம் ஜொலிப்பது தெரிந்தது. ஸ்ரீரங்கத்துக்கு மட்டுமல்ல, இவ்வுலகத்துக்கே கிடைப்பதற் கரிய விலைமதிப்பில்லா பெருஞ்செல்வம் அப்பிரணவாகார விமானத்தின் தங்கக் கூரையின் கீழே பள்ளிகொண்டிருக்கும் அரங்கனே என்று பொருள்படும் படி, ஒப்பற்ற அவ்விமானத்தை நோக்கிக் கை காட்டி, அவன் தேடி வந்த நம்பெருமாள் திருமேனி அங்குதான் இருப்பதாகச் சொன்னாள் வெள்ளையம்மாள். ஆர்வமிகுதியில் தளபதி எட்டிப் பார்க்க, எதிர்பாரா நொடியொன்றில் படைத் தளபதியை அக்கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டாள்.

ரத்தத்தில் வழிந்த பக்தி!

144 அடி உயர கோபுரத்தில் இருந்து கீழே தள்ளப்பட்ட படைத்தளபதி தலை சிதறி மாண்டான். கோயில் அருகில் முகாமிட்டிருந்த படை வீரர்கள் அப்பெரும் ஓலம் கேட்டு ஓடோடி வந்தனர். கோபுரத்தின் உச்சியை அடைய வெறியுடன் அவர்கள் வருவதைக் கண்டாள் வெள்ளையம்மாள். எவ்விதமான பதற்றமுமின்றி, பிரணவாகார விமானத்திலிருந்த பரவாசுதேவனை நோக்கித் தன்னிரு கைகளையும் குவித்து சிரசின் மேல் உயர்த்தினாள். அவ்விமானத்தின் கீழ் சயனித்திருக்கும் அரங்கனை வணங்கினவள் நொடியும் தாமதிக்காமல் அந்த வெள்ளை கோபுர உச்சியிலிருந்து கீழே குதித்தாள். பதறி ஓடி வந்த ஸ்ரீரங்கத்து மக்கள் மாண்டு கிடந்த படைத் தளபதியின் சடலத்தையும், ரத்த வெள்ளத்தில் இறக்கும் தறுவாயிலிருந்த வெள்ளையம்மாளையும் கண்டனர். என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டனர். அரங்கனின்பால் அவள் கொண்டிருந்த பக்தியையும், எத்துணை பெரிய காரியத்தை தனி மனுஷி யாக அவள் செய்திருக்கிறாள் என்பதையும் நினைத்துக் கண்ணீர் சிந்தினர்.

வெள்ளையம்மாள் வேண்டியது என்ன..?!

‘எத்தனை வருடங்களானாலும் திருவரங்க பெரிய கோயில் வரலாற்றில் நீ செய்த இத்தியாகம் நினைவுகூரப்படும்’ எனக் கலங்கிய மக்களிடம் வெள்ளையம்மாள், தனக்காகவும், தன்னைப் போன்ற பிற தேவதாசிகளுக்காகவும் கேட்டதுதான் மனதை உருக்கும் விஷயம். ‘இனி வரும் காலங்களில் அரங்கனின் கோயிலில் ஊழியம் செய்யும் என்னைப் போன்ற தேவதாசிகள் மரணமடையும்போது அவர்களின் ஈமக்கிரியைக்கான நெருப்பு கோயில் திருமடப்பள்ளியில் இருந்தும், வாய்க்கரிசி திருக்கொட்டாரத்திலிருந்தும், போலவே அரங்கனிடமிருந்து தீர்த்தம், மாலை, திருப்பரிவட்டம் ஆகியவையும் கொடுத்தனுப்பப்பட வேண்டும்’ என்று கோரினாள். அன்று தொடங்கி, 1953-ம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் வருவதற்கு முன்புவரை இக்கோயிலில் இருந்த தேவதாசிப் பெண்கள் அனைவருக்கும், வெள்ளையம்மாளுக்குக் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் வண்ணம் அவர்களின் ஈமக்கிரியை செய்யும்போது மேற்சொன்ன அனைத்தும் கோயிலிலிருந்து கொடுக்கப்பட்டன.

தங்களின் படைத்தளபதியை திடீரென இழந்த முகமதியர்களின் படை வீரர்கள், தங்களை வழிநடத்தத் தக்க தலைவன் இல்லாததாலும், ஏற்கெனவே அங்கிருந்த உட்பூசலினாலும் சிதறினார்கள். பல்வேறு மன்னர்களின் பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் திருவரங்கம் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இவை அனைத்துக்கும் மூலகாரணமாக இருந்தது, வெள்ளையம்மாள் தன் உயிரை துச்சமென நினைத்து செய்த உயிர்த்தியாகம்தான். அவளின் நினைவாகவே இன்றளவும் கோயிலின் கிழக்குப் பகுதியில் இருக்கும் இக்கோபுரத்துக்கு மாத்திரம் வண்ணப்பூச்சுகள் கிடையாது. வெள்ளைநிற சுண்ணாம்புப்பூச்சு மாத்திரமே. அதனாலேயே இக்கோபுரத்துக்கு வெள்ளைக்கோபுரம் என்று பெயர்.

கோயிலின் கிழக்குப் பகுதியில் கம்பீரமாக நிற்பது வெள்ளைக்கோபுரம் மாத்திரமல்ல... வெள்ளையம்மாளின் சமயோசிதமும், மனோதிடமும், தியாகமும், இவையனைத்தைக் காட்டிலும் அரங்கனின் மீது அவளுக்கிருந்த அப்பழுக்கற்ற காதலும் பக்தியும்தான்!

- சக்திகளின் பக்தி தொடரும்..

தெய்வப் பெண்ணே - 2 - வண்ணமில்லா வெள்ளைக்கோபுரமும்... வெள்ளையம்மாளின் பக்தியின் வீரமும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism