Published:Updated:

தெய்வப் பெண்ணே! - பூமாலை சூடிக்கொடுத்தவள்... பாமாலை பாடியவள்... மார்கழி நாயகி ஆண்டாள்!

ஆண்டாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்டாள்!

ஓவியம்: ஜீவா

வடமொழியில் தன்வி புரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர். அதி காலை நேரம்… ஆடி வெள்ளிக்கிழமை… பூர நட்சத்திர நாளாம் அது. விஷ்ணுவை மனதில் வைத்திருப்பதாலும், சாட்சாத் மஹாவிஷ்ணுவே இவரைத் தன் மனதில் நினைக்கும் பேறு பெற்றதாலும் விஷ்ணுசித்தர் என்று அறியப்பட்ட பெரியாழ்வார் வழக்கம்போல பூக்களைப் பறித்து வடபத்ரசாயி பெருமாளுக்குச் சாற்றும் பொருட்டு தோட்டத்துக்குள் நுழைகிறார். அப்போது அங்கு ஓர் ஒளிப்பிழம்பு தோன்ற, அடுத்த நொடியில் அங்கிருந்த துளசி பாத்திக்கு அருகில் பார்த்தால்... ஒரு பெண் குழந்தை. பார்ப்பதற்கு ஜகன்மாதா மகாலட்சுமியே குழந்தையாக அவதரித்தது போல தீர்க்கமான கண்களும், கூர்நாசியும், செக்கச் சிவந்த உதடு களும், உருண்டையான கன்னங்களும், வட்ட முகமும், முன்நெற்றியில் வந்து விழுந்த சுருண்ட கேசமும் என்றிருந்த அந்தப் பெண் குழந்தைதான், ‘திருவாடிப்பூரத்து ஜெகத் துதித்தாள் வாழியே’ என்ற வாழித் திருநாமத்துக் குச் சொந்தக்காரியான கோதை நாச்சியார்.

அனுசுயா எம்.எஸ்
அனுசுயா எம்.எஸ்

கிருஷ்ணன் நிச்சயம் வருவான்!

கீதையில் கண்ணன், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்றுரைப்பதைக் கடந்து எப்படி மார்கழியை அணுக முடியாதோ, அதுபோல வைணவக் கொழுந் தான நாச்சியாரை விலக்கிவிட்டும் மார்கழியை அணுகமுடியாது. அயோநிஜையாகத் (தாய் கர்ப்பத்தில் அல்லாமல் அவதரிப்பது) தோன்றியவளை தந்தையாக இருந்து வளர்த் தவர் விஷ்ணுசித்தர் பெரியாழ்வார். அவர் ஸ்ரீகிருஷ்ண அவதார லீலைகளை அதிகளவில் சொல்லிக் குழந்தையை வளர்க்க, கோதை அவற்றையெல்லாம், இது என்றோ துவாபர யுகத்தில் நடந்த கதை என்று எண்ணாமல், உண்மையான பக்தியும், நம்பிக்கையும், விசு வாசமும் இருக்கும்பட்சத்தில் துவாபர யுகத் தில் மட்டுமல்ல, கலியுகத்திலும் கிருஷ்ணன் அருளுக்கு ஆட்பட்டு அவனை அடையலாம் என்பதை மிகத் தீர்க்கமாக நம்பினாள். கலியுகத்தில் அவதரித்த கோதை, அவன்பால் பக்தி செலுத்தும்பட்சத்தில் கண்ணன் வருவான், நம்முடன் பேசிப் பழகுவான், அர்ச்சாவதாரம் சத்தியம் என்று ஆணித்தரமாக நம்பினாள். ஆர்வத்துடன் கிருஷ்ண கதைகளை கேட்டபடியே வளர்ந்த கோதை இளம் பெண்ணான போதும் கிருஷ்ண சிந்தையிலேயே பரிபூர்ணமாக ஆழ்ந்தாள். ஆழ்ந்த பக்தி செய்த தாலேயே ஆண்டாள் என்றழைக்கப்பட்டாள்.

சிறு பிராயத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர் பாடியாகவும், அக்கோயிலில் குடியிருந்த வட பத்ரசாயி எம்பெருமானையே கண்ணனாகவும், தன்னையும் தன் வயதொத்த சிறுமிகளையும் கோகுலத்தில் வாழ்ந்த கோபிகைகளாகவும் நினைத்து கண்ணனை தங்களுடன் வருமாறு அழைப்பதற்காகவே அவள் அருளிச்செய்தது தான், திருப்பாவையின் 30 பாசுரங்களும், அத் துடன் அவள் கடைப்பிடித்த பாவை நோன்பும்.

சூடிக்கொடுத்தாள் சுடர்க்கொடி!

மேலே சொன்னது போல, தோட்டத்தில் இருக்கும் பூக்களை எல்லாம் பறித்து மாலையாக கட்டி வடபத்ரசாயி பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார் பெரியாழ்வார். கோதையோ அம்மாலையை பெருமாளுக்கு சாற்றுவதற்கு முன் தன் கழுத்தில் சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். இது பெரியாழ்வாருக்குத் தெரியாது. ஒருநாள் இதுபோல கோதை சூடிக்களைந்த மாலையை பெரியாழ்வார் கோயிலுக்கு எடுத்துச் செல்ல, மாலையில் சிக்கியிருந்த கோதையின் சுருள் சுருளான கேசத்தைப் பார்த்த அர்ச்சகர் பெரியாழ் வாரிடம் கடிந்துகொண்டார்.

‘ஒருநாளும் தனது கைங்கர்யம் தடைபட்டது இல்லையே...’ என்று நினைத்து மனம் வருந்தி வீட்டுக்கு வந்த விஷ்ணுசித்தர், கோதையைக் திட்டி வேறு ஒரு மாலையை கட்டி மீண்டும் ஓட்ட மும் நடையுமாகக் கோயிலை அடைந்து வடபத்ரசாயி பெரு மாளுக்காக மாலையை சமர்ப்பித் தார். ‘கோதை சூடிக் கொடுத்த மாலையைத்தான் நாம் ஏற்போம்’ என்ற அசரீரி கேட்டது. மீண்டும் வீட்டுக்கு வந்து கோதை சூடிக் களைந்த மாலையை கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய் பெருமாள் கட்டளைக்கு இணங்க அவருக்குச் சாற்றப்பட்டது. இதன் காரணமாகவே இன்றளவும் வருடம்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை யானது, ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு சமர்ப்பிப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தெய்வப் பெண்ணே! - பூமாலை சூடிக்கொடுத்தவள்... பாமாலை பாடியவள்... மார்கழி நாயகி ஆண்டாள்!

‘ஆம் இது பேய்தான், நோய்தான்!’

விவேகத்துடன் கூடிய பக்தியை தூய தமிழ் வார்த்தைகளால் மிக அழகாக வெளிப்படுத்தும் அறிவும், ஆற்றலும் பெண்ணுக்கு எந்தளவுக் குக் கைவரும் என்பதற்குச் சான்று ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாசுரங்கள். வளரிளம் பெண்ணாக இருந்த கோதை யானவள்... கிளி, மேகம், மயில், பெருமான் பயன்படுத்தும் பாஞ்சஜன்யம் எனும் சங்கு ஆகிய அனைத்தையும் பார்த்து தூதுவிட்டு தனக்குப் பெருமாளின் மீது இருக்கும் காதலைச் சொல்லிக் கதறியதுதான் நாச்சியார் திருமொழி என்றழைக்கப்படும் 143 பாசுரங்கள்.

திருமண வயது வந்த பின்னும் ஸ்ரீரங்கநாதரை, ‘அவர் வந்து என்னை மனைவியாக வரிப்பார்’ என்று சொன்ன கோதையைப் பார்த்து ஊரார் பரிகாசம் செய்தனர். பேயோ, பூதமோ பிடித் திருக்கிறது என்றனர். ‘ஆமாம், உலகத்திலேயே பெரிய பூதமான ஏகோ விஷ்ணு மஹத்பூதம் என்னைப் பிடித்திருக்கிறது’ என்றாள் ஆண் டாள். ‘இவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றவர்களுக்கு, `ஆர்க்கு மென் நோயி தறியலாகா தம்மனை மீர்துழ திப்படாதே/ கார்க்கடல் வண்ணனென்பா னொருவன் கைகண்ட யோகம் தடவத்தீரும்' என்று சொல்லி, ‘உங்கள் யாருக்கும் என் நோய் பற்றி தெரியாது. கடல்வண்ணனாம் கண்ணன் வந்து என் கைப்பற்ற எனக்கு இருக்கும் இந்த நோய் முற்றிலுமாக என்னை விட்டு விலகும்’ என்று பாடல் இயற்றினாள்.

கிருஷ்ணபக்தியிலேயே வளர்ந்த கோதை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரே வந்து தன்னை மணம் முடிக்கும்படி வேண்டியதையும், அவளின் பக்தியால் பெருமாள் மகிழ்ந்திட, கோதை ஆண்டாள் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெரிய பெருமாளின் சரணங்களில் ஐக்கிய மானாள் எனும் மீதி சரித்திரத்தையும் நாம் அறிவோம்.

ஒரே பெண் ஆழ்வார்!

பன்னிரு ஆழ்வார்களில் பதின்மர் (11 பேர்) ஆண்களானாலும், தன் ஞானம், பக்தி, வைராக்கியத்தால் அதில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் ஒரே பெண் ஆழ்வார் கோதை.

கலியுகமேயானாலும் அர்ச்சா திருமேனி (விக்கிரக வழிபாடு) சத்தியம். ஞானம், பக்தி, வைராக்கியம், விசுவாசம் இவையெல்லாம் நமக்கு இருக்கும்பட்சத்தில் அவன் திருவடிகளை நிச்சயம் அடையலாம் என்பதை உலகுக்கு உரக்கச் சொன்ன தெய்வப் பெண் கோதை.

பூமாலையைச் சூடிக்கொடுத்ததுடன், பரந்தாமன் மேல் பக்தி ரசம் சொட்டும் பாமாலையைப் பாடியும் கொடுத்த ஆண்டாளின் திருவடிகளே சரணம்!

- சக்திகளின் பக்தி தொடரும்...