தானங்களில் உயர்ந்தது அன்னதானம். இதை மீண்டும் மீண்டும் பகவான் மக்களுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு லீலைகளை நிகழ்த்தி வந்தார். அப்படி ஒரு லீலைதான் சம்பரனின் கதை. மகாவிஷ்ணு பூவராகப் பெருமாளாகக் கோயில்கொண்டு அருள்புரியும் தலம் ஸ்ரீமுஷ்ணம். அங்கு வாழ்ந்துவந்தான் சம்பரன் என்னும் பக்தன்.
சம்பரன் மிகவும் பக்தியுள்ளவனாகவும் பிறருக்கு உதவும் குணமுடையவனாகவும் விளங்கினான். தினமும் பசியோடு வருபவர்களுக்கு அன்னதானம் செய்வதை கடமையாகக்கொண்டு வாழ்ந்தான். இவன் செயலை உலகுக்கு உணர்த்தத் திருவுளம் கொண்டார் வராஹ சுவாமி.
ஒருநாள் இரவு அந்தண உருவம் எடுத்து அவன் வீட்டுக்கு வந்து, ‘மிகவும் பசியாய் இருக்கிறது. உணவு வேண்டும்’ என்று கேட்டார்.
சம்பரன், அவரை வரவேற்று உபசரித்து இருந்த உணவை அளித்தான். சாப்பிட்டு முடித்த அந்தணர், “எனக்கு இன்னும் பசி தீரவில்லை” என்று சொல்ல உடனே தன் மனைவியைப் புதியதாக சமைக்கச் சொன்னார். அவளும் கணவன் சொல்லைத் தட்டாமல் மிகுந்த உற்சாகத்தோடு சமைக்கத் தொடங்கினாள். அந்த நேரத்தில் தொழுவத்திலிருந்து பசுவின் அபயக்குரல் கேட்டது. அங்கு ஓடினான் சம்பரன்.
அங்கே ஒரு சிங்கம் பசுவைத் தின்னக் காத்திருந்தது. உடனே சம்பரன் அந்த சிங்கத்தின் முன் கைகூப்பி, “பசுவைக் கொல்ல வேண்டாம்” என்று வேண்டிக்கொண்டான். அதிசயிக்கும் விதமாக சிங்கம் அவனோடு பேசியது.

“உணவு உயிர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்தவன் நீ. மனிதர்களின் பசியைப் போக்குகிறவன். அப்படிப்பட்ட நீயே என் உணவை நான் உண்ணவிடாமல் தடுக்கலாமா?” என்று கேட்டது.
இதைக் கேட்ட சம்பரன் திகைத்தான். ஆனால் அடுத்த கணம், “நீ சொல்வது சரிதான். நீ அந்தப் பசுவை விட்டுவிடு. அதற்குப் பதிலாக என்னை உணவாக்கிக்கொள்” என்று அதன் முன் மண்டியிட்டுத் தலைகுனிந்து நின்றான்.
உடனே அங்கிருந்த சிங்கம் மறைந்து வராஹ சுவாமி தேவியுடன் காட்சியளித்து அவனுக்கும் அவன் மனைவிக்கும் முக்தி அருளினார்.
அன்னதானத்தால் கிடைத்த அற்புதப்பேறல்லவா இது!