
சிந்தனை விருந்து
ஓஷோவின் தாத்தா இறந்துபோனார். அப்போது ஓஷோவுக்கு இளம் வயது. ஊரிலிருக்கும் அத்தனை பேருக்கும் ஓஷோவும், அவருடைய தாத்தாவும் கலகக்காரர்கள். ஏன்? இருவரும் உண்மை பேசுபவர்கள்; எதையும் கேள்வி கேட்பவர்கள்.

ஓஷோவின் அப்பாவும், சித்தப்பாக்களும் சேர்ந்து ஒரு துணிக்கடையை நடத்திக் கொண்டிருந்தார்கள். யாருமில்லாத நேரத்தில் தாத்தா துணிக்கடைக்குப் போய்விட்டால் அன்று அதகளம்தான். ஒரு வாடிக்கையாளர் வந்து ஒரு புடவையைக் காட்டி, `என்ன விலை?’ என்று கேட்பார். `இது 8 ரூபாதான். ஆனா, 16 ரூபா விலை சொல்லு வாங்க. நம்பாதே...’ என்று உண்மையைப் போட்டு உடைப்பார் தாத்தா. அதனாலேயே அவரைக் கடைப் பக்கம் வரவிடாமல் பார்த்துக் கொள்வார்கள் பிள்ளைகள்.
தாத்தா இறந்த தினத்தன்று உடலுக்கு முன்பாக உறவினர் களும் ஊராரும் கூடி அழுது கொண்டிருந்தார்கள். ஓஷோ ஊரிலிருந்த பலகாரக்கடைக்குப் போனார். மொத்த இனிப்புகளையும் விலைக்குக் கேட்டார். கடைக்காரர் ஓஷோவை நன்கு அறிவார். எனவே, பதில் பேசாமல் இனிப்புகளைக் கொடுத்துவிட்டார். ஓஷோ வீட்டுக்கு வந்தார். துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்க ஆரம்பித்தார். குடும்பத்தினர் ஓடி வந்தார்கள். ஒரு சித்தப்பா கேட்டார்... ``என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?’’
``கொண்டாடிக்கிட்டு இருக்கேன்.’’
``தாத்தாவோட சாவு உனக்குக் கொண்டாட்டமா?’’
``ஆமாம். நீங்க எல்லாரும் போலி. உண்மையில கிழவன் செத்துட்டான்னு மனசுக்குள்ள சந்தோஷப்படுறீங்க. நான்தான் துக்கத்துல இருக்கேன்.’’
அதற்கு மேல் பேசினால் ஓஷோ வாதிட்டு அத்தனை பேரையும் ஜெயித்துவிடுவார் என்பது அவருடைய அப்பாவுக்குத் தெரியும். எனவே, எல்லோரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டார். ஆனால், வந்திருந்தவர்கள்சொல்லிக் கொண்டிருந்தார்கள்... ``இது இனிப்பு குடுக்கறதுக்கான நேரமில்லை தம்பி.’’
அன்று இரவு அப்பா ``ஏன் இப்பிடி செஞ்சே?’’ என்று கேட்டார்.
``தாத்தா எனக்கு நண்பரா இருந்தாருப்பா. அப்புறம் நீங்கல்லாம், `அவரு சொர்க்கத்துக்குப் போயிட்டாரு’ன்னுதானே வர்றவங்ககிட்டல்லாம் சொல்றீங்க... சொர்க்கத் துக்குப் போறது நல்ல விஷயம்தானே... அதை ஏன் கொண்டாடக் கூடாது? அவர் நரகத்துக்குப் போறதா இருந்தா நானும் உங்களோட சேர்ந்து அழுதுக்கிட்டிருப்பேன்.’’ அப்பா அதற்குப் பிறகு பதில் பேசவில்லை.
இந்தக் காலத்துப் பிள்ளைகள் பலே கேடிகள். ஒரு பழைய ஜோக். பூங்காவில் தாத்தாவும் பேரனும் உட்கார்ந்திருந்தார்கள். தாத்தா சொன்னார்... ``டேய்... சீக்கிரம் போய் எங்கேயாவது ஒளிஞ்சுக்கடா உங்க டீச்சர் வர்றாங்க. நீ ஸ்கூலுக்கு மட்டம் போட்டதைக் கண்டு பிடிச்சுருவாங்க.’’
``இல்லை தாத்தா. நீங்க போய் ஒளிஞ்சுக்கோங்க. நீங்க இறந்து போயிட்டீங்கன்னு சொல்லித்தான் நான் இன்னிக்கு லீவு போட்டுருக்கேன்!’’