Published:Updated:

சர்வமும் சாயி!

சாயி
பிரீமியம் ஸ்டோரி
சாயி

இந்த உலக வாழ்வின் பற்றைவிட்டு சாயியின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

சர்வமும் சாயி!

இந்த உலக வாழ்வின் பற்றைவிட்டு சாயியின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

Published:Updated:
சாயி
பிரீமியம் ஸ்டோரி
சாயி

தாமரை மொட்டு ஒன்று மலர்வதை ஹனுமந்தையா பார்த்துக்கொண்டேயிருந்தார். ஒரு கணத்தில் அது விசிறியை விரிப்பதைப் போல விரிந்தது. ஹனுமந்தையா பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்த மலரில் ஒரு பாதம் தோன்றியது. பளிங்கால் ஆன அந்தப் பாதத்தை ஹனுமந்தையா நன்கு அறிவார். அவர் மேனி சிலிர்த்தது. கால்மடிய அமர்ந்து அந்தப் பாதத்தைப் பற்றிக்கொண்டு அவர், ‘சாயிநாதா’ என்று குரல்கொடுத்தபோது தூக்கம் கலைந்துவிட்டது.

ஹனுமந்தையாவின் அலுவலக நண்பர் ஒருவர் அவரை ஒரு முறை ஷீர்டி அழைத்துச்சென்றார். ஒரு சுற்றுலாவாக நினைத்துச் சென்ற ஹனுமந்தையாவின் வாழ்க்கை அந்தப் பயணத்தோடு முற்றிலும் மாறிவிட்டது. சாயியை தரிசனம் செய்த கணத்திலிருந்து அவர் மனம் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்துவிட்டது. அன்றிலிருந்து அவர் பாபாவைப் பற்றிக்கொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த உலக வாழ்வின் பற்றைவிட்டு சாயியின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். வீட்டுக்கு அருகிலேயே கைவசம் இருந்த பணத்தைக் கொண்டு இடம் வாங்கினார். கட்டாய ஓய்வு வாங்கிக் கொண்டு அதில் கிடைத்த பணத்தில் சாயிக்கு ஒரு கோயிலை எழுப்பினார். இப்போது அந்தப் பகுதியின் அடையாளமாக ஆகிவிட்டது அந்தக் கோயில். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஒருத்தி பொன்னம்மா. ஹனுமந்தையா அவளைத் தன் மகளாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்.

பொன்னம்மா ஏழை. அவளுக்கு இரண்டு பிள்ளைகள். சாயிமேல் அவளுக்கு அவ்வளவு பக்தி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவள் கோயிலைத் துடைத்துப்பெருக்கி சுத்தம் செய்துதருவாள். வேண்டாம் என்றாலும் கேட்கமாட்டாள்.

இப்போது புதிதாக ஒரு செயலையும் செய்கிறாள். சொன்னால் கேட்பதில்லை. மாதம் ஒன்றானால் 200, 500 என ஏதோ ஒரு தொகையைக் கவரில் போட்டு காணிக்கையாகக் கொடுக்க ஆரம்பித்துவிட்டாள். பொன்னம்மா போன்ற சாதாரணப் பெண் பொருளுதவி செய்ய வேண்டிய அவசியம் என்ன? மேலும், அந்தப் பணம் அவள் குடும்பத்து ஓரிரு நாள் உணவாக மாறலாம். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு உடையாக மாறலாம். ஆனால், என்ன சொன்னாலும் அவள் மறுத்து, ‘எல்லாம் சாயி பார்த்துக்குவார்’ என்று சொல்லி வணங்கிச் செல்வாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்று, சாயியின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு பொன்னம்மா திரும்பியபோது ஹனுமந்தையாவைப் பார்த்துவிட்டாள். வேகமாக ஓடிவந்து ஒரு கவரை கொடுத்தாள். வாங்கிக்கொண்டார். அடுத்த கணம் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது. கவர் வழக்கத்தைவிடவும் கனமாக இருந்தது.

“என்னம்மா இது...” என்று சொல்லிக்கொண்டே அதைப் பிரித்தார். உள்ளிருந்து 500 ரூபாய் கட்டு ஒன்று எட்டிப் பார்த்தது. ஹனுமந்தையாவுக்கு படபடப்பானது. “ஏம்மா இவ்வளவு பணம்...”

பொன்னம்மா சிரித்தபடி, “கோயில்ல நிறைய வேலைகள் முடிக்க வேண்டியதிருக்குன்னு சொன்னீங்களேய்யா” என்றாள்.

“அது சரிம்மா. அதுக்கெல்லாம் சாயி ஏற்பாடு பண்ணுவார். நீ ஏற்கெனவே சரீரத்தால சேவை செய்யுற. இந்தப் பணத்துல ரொம்ப நாளா உன் வீட்டுக்காரருக்கு மொபெட் வாங்கிக்கொடுக்கணும்னு சொன்னாயே, அதைச் செய்யலாமே?”

“ஐயா, உங்களுக்கே தெரியும், என் புருஷன் எப்படி குடிச்சிட்டு ஊதாரியா இருந்தாருன்னு. எப்போ நான் சாயி கால்ல வந்து விழுந்தனோ, அப்பவே என் கஷ்டம் எல்லாம் காணாமப் போச்சு. அவரு குடிய விட்டுட்டு ஒழுங்கா வேலைக்குப் போறாரு. சம்பாதிக்கிறாரு. இதுக்கெல்லாம் காரணம், அந்த சாயிதான். அவர் இருக்கும்போது எனக்கென்ன கவலை...”

“இதோ பாரும்மா, என்னால இதை ஏத்துக்க முடியல. இவ்ளோ பணம் எதுக்கும்மா? சரி ஒண்ணு செய்வோம். பாபா காலடில சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்ப்போம். அவர் வாங்கிக்கோன்னு சொன்னா வாங்கிக்கிறேன். இல்லைன்னா, நீ கோவிச்சுக்கக் கூடாது” என்று சொல்லி, இரண்டு துண்டுச் சீட்டுகளில் `வாங்கிக்கொள்', `வேண்டாம்' என்று எழுதி சுருட்டினார். அவற்றை பாபாவின் காலடியில் போட்டு அர்ச்சகரைக் கூப்பிட்டு எடுக்கச் சொன்னார்.

பாபாவின் லீலைகளை யார் புரிந்துகொள்ளமுடியும்... எடுக்கப்பட்ட சீட்டில், `வாங்கிக்கொள்ளலாம்’ என்று இருந்தது. பொன்னம்மாள் மகிழ்ந்தாள்!

நாள்கள் நகர்ந்தன. ஒரு வியாழக்கிழமை... அன்று கூட்டம் அதிகம் வரும். வியாழக்கிழமைகளில் பொன்னம்மா மாலை சீக்கிரமே வந்து தாமதமாகத்தான் போவாள். ஆனால் அன்று அவள் தாமதமாகவே வந்து சீக்கிரம் கிளம்பிவிட்டாள். அவளிடம் காரணத்தை விசாரித்தறிய முடியவில்லை. ஆரத்திக்குப் பின் சாயிக்கு முன்பாகவே ஹனுமந்தையா உட்கார்ந்துவிட்டார். அவரின் நெருங்கிய நண்பர்களும் சில பக்தர்களும் அவரோடு அமர்ந்துகொண்டனர்.சாயியின் சந்நிதானத் திலிருந்து விலக ஹனுமந்தையாவுக்கு மனமே வருவதில்லை. அன்றும் அப்படித்தான். திடுமென, ஹனுமந்தையாவுக்கு ஏனோ பொன்னம்மா குறித்த நினைவு வந்தது.

“பொன்னம்மா இன்னிக்கு லேட்டாதான் வந்தா, ஆனா சீக்கிரம் கிளம்பிட்டா... முகம் வேற வாட்டமா இருந்தது... என்னன்னு தெரியலையே...” என்றார் கவலையோடு.

சாயி
சாயி

உடன் அமர்ந்திருந்த பக்தர் ஒருவர், “வேலைக்காக வெளியூருக்குப் போயிருந்த அவ வூட்டுக்காரருக்குப் போனவாரம் ஏதோ ஆக்ஸிடெண்ட்டாம். சாயி புண்ணியத்துல பெருசா ஒண்ணுமில்ல. ஆனா, கால்ல ஏதோ ஆபரேஷன் ஒண்ணு செய்யணுமாம். காசு இல்லாம தவிக்குது. 50,000 வரைக்கும் ஆகும். யார்கிட்ட கேக்குறதுன்னு தெரியல. அதான் சாயியிடம் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்னு சொல்லிச்சு” என்றார். ஹனுமந்தையா எழுந்து சாயியிடம் போய் சில நிமிடங்கள் நின்றார். பின்பு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.

ஹனுமந்தையாவுக்கு அன்றிரவு உறக்கம் பிடிக்கவேயில்லை. விடிந்தது. சாயி, கண்களில் புன்னகை மிளிர புகைப்படத்திலிருந்து தரிசனம் கொடுத்தார். ‘சாயி நான் என்ன செய்ய வேண்டும்? ஏன் என் மனம் இப்படி உறக்கம் கொள்ளாமல் தவிக்கிறது. சொல் சாயி’ என்று வேண்டிக்கொண்டார். சில நொடிகளில் அலைபேசி சிணுங்கியது. அது ஒரு குறுஞ்செய்தி. திறந்துபார்த்தார். வங்கியிலிருந்து மீதம் இருக்கும் பணம் குறித்த குறுஞ்செய்தி. மீதமுள்ள தொகை ரூ 50,000 என்றிருந்தது. அடுத்த கணம் அவருக்கு பொன்னம்மாவின் நினைவு வந்தது. உடனே சாயி புகைப்படத்தைப் பார்த்தார். படத்தில் தலையில்வைத்திருந்த ரோஜா கீழே இருந்த மலர்க்கிண்ணத்தில் விழுந்தது.

ஹனுமந்தையாவுக்கு விளங்கிவிட்டது. வங்கிக்குச் சென்று மீதமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டார். ஆட்டோ பிடித்து பொன்னம்மாவின் வீட்டுக்கு ஓடினார்.அவரைக் கண்டதும் பொன்னம்மாவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

“சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே...'' என்றாள் பொன்னம்மா.

“சரிதான். ஆனால், பாபா என்னை போய்ப் பார்க்க சொல்லி அல்லவா இரவு முழுவதும் தொல்லை செய்தார். கூடவே இந்தப் பணத்தையும் உன்னிடம் தரச் சொன்னார்'' என்று சொல்லி கொண்டுவந்திருந்த 50,000 பணத்தை அவள் கையில் திணித்தார்.

அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. கண்ணீர் மல்கியது. ஓடிப்போய் அங்கிருந்த சிறிய சாயி விக்ரகத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு கதறினாள். சாயி சிரித்தபடி இருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism