தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்!

அட்சய திருதியை
பிரீமியம் ஸ்டோரி
News
அட்சய திருதியை

ஏழ்மையில் வாடிய கண்ணனின் நண்பர் குசேலர், கண்ணனின் அருளால் குபேர சம்பத்து பெற்றதும் ஓர் அட்சய திரிதியை நாளில்தான்.

அட்சயம் என்றால், ‘வளருதல்’ என்று பொருள். சித்திரை மாதம், வளர்பிறையில் வரும் திரிதியை நாள், அட்சய திரிதியை. பிரம்ம தேவர் தனது சிருஷ்டித் தொழிலை ஆரம்பித்தது இந்த நாளில்தான்.

மிகவும் புண்ணியமான இந்த காலத்தில் புண்ணிய (கங்கை) நீராடுவது, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது, அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்கள், உப்பு, சத்து மாவு, பால், மோர், தயிர், பசு, தங்கம், பூமி, பானகம், நீர் மோர், விசிறி, செருப்பு, குடை போன்றவற்றை தானம் தருவது... அழியாத பலனைக் கொடுக்கும். அதனால் இது அட்சய (அழியாத, குறைவில்லாத) திரிதியை எனக் கூறப்பட்டது. இந்த புண்ணிய காலம் ரோகிணி நட்சத்திரத்துடனும் புதன் கிழமையுடனும் சேர்ந்து வந்தால் மிக விசேஷம் என்பார்கள்.

ஏழ்மையில் வாடிய கண்ணனின் நண்பர் குசேலர், கண்ணனின் அருளால் குபேர சம்பத்து பெற்றதும் ஓர் அட்சய திரிதியை நாளில்தான். ஶ்ரீபரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் இந்த அட்சய திரிதியை திருநாளில்தான்.

கண்ணபிரான் அட்சய திரிதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை: சாகல் என்ற நகரில் வசித்த தர்மன் என்ற ஏழை வணிகன், வருடந்தோறும் அட்சய திரிதியையின் போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தானாம்.

அட்சய திருதியை
அட்சய திருதியை

இந்த நன்னாளில் சிவ-பார்வதி, ஶ்ரீநாராயணன், ஶ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திரிதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள். அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஶ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதிகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

அட்சய திரிதியை அன்று ஏழைக்கு ஆடை தானம் அளித்தால் மறுபிறவியில் ராஜ வாழ்வு கிட்டும். இப்பிறவியில் சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும். தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருள்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள், அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

- ஆர்.பரிமளம், திருச்சி-21