திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

வேதம் ஓதிய பூனை!

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகன்

போகர் ஒரு மருத்துவர்; போகர் ஒரு யாத்ரீகர்; போகர் ஒரு தவசி; போகர் ஒரு நாடோடி...

மால்மருகன் முருகனுக்கு இந்தப் பூவுலகில் எத்தனையோ கோயில்கள். அவற்றில் பழநியம்பதி, பற்றற்ற ஆண்டிக்கோலத்தில் முருகன் அருளும் தலம்.

இதன் பெயரைச் சொன்னதுமே போகர் பிரான் நம் நினைவுக்கு வருவார். காரணம், மலைமேல் அருளும் முருகனின் திருமேனியை நவபாஷாணத்தில் சமைத்தவர் அவர். இதற்கு, விஞ்ஞானபூர்வமாகவும் பூகோள ரீதியாகவும் சில காரணங்கள் கூறப்படுகின்றன.

நவகோள்களில் ஒன்றான செவ்வாய் என்னும் சிவந்த கோளின் நேரான வீச்சு பழநிமலை மேல் பட்டுத் தெறிப்பதாகவும், அந்தக் கோளின் தலைவனான முருகன் அந்த மலைமேல் நின்ற நிலையில் அதன் வீச்சை தன்னுள் வாங்கி, பின்... ஆகம விதிப்படியாலான பூஜைகளால் அருள் அலைகளாக ஆக்கி, அவற்றைப் பக்தர்களுக்கு அன்றாடம் வழங்கிக்கொண்டிருப்பதாக ஒரு கருத்து உண்டு.

முருகன்
முருகன்

செவ்வாயின் வீச்சை ஒரு கற்சிலை உள்வாங்கு வதைவிட, பாஷாணம் உள்வாங்கி வெளியிடுவதில் பற்பல ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திட வாய்ப்பு இருக்கிறது. அதனாலேயே போகர் பிரான் நவ பாஷாணத்தால் முருகன் சிலையை உருவாக்கினார் என்பர். இந்தச் சித்தர் பிரானின் வாழ்வில் எவ்வளவோ அதிசயங்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது, அவர் ஒரு பூனைக்கு வேதம் உபதேசித்தது!

போகர் ஒரு மருத்துவர்; போகர் ஒரு யாத்ரீகர்; போகர் ஒரு தவசி; போகர் ஒரு நாடோடி... இப்படி, போகரை எல்லா நிலைப்பாட்டிலும் பொருத்திச் சொல்லலாம்.

நான்கு முழத்தில் ஒரு துவராடை, காலில் ஜாதிபத்திரி மரத்தால் ஆன பாதரட்சை, கையில் ஐம்பொன் கமண்டலம். தோளில் துணி மூட்டை - இதுதான் போகர். எங்கு வேண்டுமானாலும் கிளம்பி விடுவார். ஆகாய மார்க்கம், நீர் மார்க்கம், தரை மார்க்கம் என்று எதிலும் பயணிக்க வல்லவர். தூரம் இவருக்கு ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை. அப்படி ஒருமுறை யாத்திரை கிளம்பினார்.

ஓர் ஊருக்குள் நுழைந்தபோது, நடந்த களைப்பில் தாகமும் பசியும் மேலிட்டன. காடாக இருந்தால் மூலிகை உணவாகிவிடும். இருப்பதோ நாடு... பாலும் கனியும் கிடைக்காதா என்று தேடத் தொடங்கினார். அப்போது ஒரு வேதியர் வீடு குறுக்கிட்டது. அந்த வீட்டின் உள்ளே பெரிதாக ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அங்கே தன் தேவைக்கு உணவு கிடைக்கும் என்று கருதிய போகர், அந்த வேதியர் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார்.

வேதம் ஓதிய பூனை!

அலைந்து திரிந்து வந்தமையால் பார்ப்பதற்குப் பக்கிரி போல தென்பட்ட அவரை, வேதம் ஓதும் வேதியர்கள் பார்த்து முகம் சுளித்தனர். அவரது அருமை உணராது அவரை எழுந்து போகச் சொன்னார்கள். போகருக்குக் கோபம் வந்துவிட்டது.

‘`வேதியர்களே! என்னை ஏன் துரத்துகிறீர்கள்? நானும் உங்களைப் போல் ஒருவன்தானே?’’ என்று கேட்டார். அவர்கள் சிரித்து விட்டனர்.

‘`பார்க்கப் பரதேசி போல் இருக்கும் நீ எங்களைப் போன்றவனா?’’ என்று ஏகடியம் பேசினர்.

‘`தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். உங்களுக்கு நான் இளைத்தவனில்லை. சொல்லப் போனால், எனக்கு இணை உங்களில் ஒருவர்கூட இல்லை!’’ என்றார் போகர்.

‘`என்ன... பேச்சு தடம் மாறுகிறது. நாங்கள் வேதியர்கள். இங்கே நடப்பது புனிதமான மஹாமிருத்யுஞ்சய ஹோமம். அப்படி என்றால் என்ன என்றாவது உனக்குத் தெரியுமா?’’

‘`என்னைச் சோதிக்கிறீர்களா?’’

‘`இல்லை... சோதிப்பது என்பது, சந்தேகம் வரும்போது நடக்கும் ஒன்று. இங்கே உன் மேல் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உன்னோடு நாங்கள் இவ்வளவு பேசியதே அதிகம். நாங்கள் ஹோமம் செய்ய இடையூறு செய்யாமல் இடத்தைக் காலி செய்!’’ என்று கூறிவிட்டு அவர்கள் விலகிட... போகர் முகத்தில் கோபம் குடியேறத் தொடங்கியது.

பூனை
பூனை

அப்போது பூனை ஒன்று அவரைக் கடந்து ஹோமம் நடைபெறும் இடம் நோக்கிச் சென்றது. போகர் உடனே குனிந்து அதை எடுத்தார். அதன் நெற்றி மீது தன் கட்டை விரலை வைத்து தன் தவ சக்தியைச் சற்று அந்தப் பூனைக்குள் பாய்ச்சவும், அந்தப் பூனை பேச ஆரம்பித்தது. ‘முனிவர் பிரானுக்கு என் வணக்கம்’ என்றது.

‘`நான் முனிவனல்ல பூனையே... முனைந்து தவம்புரிபவனே முனிவன். அவனுக்கு வரசித்தி பெற வேண்டும் என்னும் நோக்கம் இருக்கும். நான் சித்தன். சகல ஸித்திகளையும் நான் என்னை வென்றே பெற்று விட்டவன்’’ என்று பூனைக்கு விளக்கமளித்தவர், அதன் காதில் வேதமந்திரங்களை உபதேசிக்கத் தொடங் கினார். அதேநேரம், ஹோம மந்திரம் ஜபித்தபடி இருந்த வேதியருக்கு, சொல்லி வந்த மந்திரத்தில் அடுத்த அடி மறந்துபோய், முதல் அடியையே திரும்பத் திரும்பச் சொல்லி, தன் தலையிலும் அடுத்த அடி நினைவு வருவதற்காகக் குட்டிக் கொண்டார்.

போகர் வெளியே இருந்தபடியே அதைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, அவர் பூனையைப் பார்க்க, அது அடுத்த அடியை எடுத்துக்கொடுத்தது. அதைக்கண்ட வேதியர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

கொழுந்துவிட்ட நெருப்பால் அவ்வளவு உலோக பாண்டங்களும் சிவப்பேறிப் பழுத்து நின்றன... அவ்வளவும் தங்கமாக மாறியிருந்தன.

இது ஏதும் மாயமா, ஸித்து வேலையா எனத் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள, பூனை மந்திரத்தை முடித்து ஓடத் தொடங்கியது.

இப்போது வேதியர்களிடம் ஒரு மாற்றம்.

‘`ஐயனே... தாங்கள் யார்? மன்னியுங்கள். நாங்கள் தோற்றத்தை வைத்துத் தவறாகக் கருதிவிட்டோம்.’’

‘`அது போகட்டும். இந்த ஹோமத்தின் நோக்கம்?’’

‘மழையில்லை. அதனால் கடும் வறட்சி. எனவே, இறையருளுக்காகவே இந்த வேள்வி.’’

‘`இதைப் போன்ற வேள்விகளின்போது மனத்தூய்மையும் பணிவும் மிக முக்கியம். அப்போதுதான் வேத மந்திரங்கள் வானில் முழுமையாகப் பரவி அதிர்வு உருவாகி, மழைக்கான கார்மேகங்கள் ஒன்று திரளும்...’’

‘`உண்மைதான். நாங்கள் தெளிந்தோம். தங்களைப் பற்றி தயவுசெய்து கூறுங்கள்.’’

‘`என் பெயர் போகன். நானோர் சித்தன்!’’

‘`போகர் பெருமானா... கேள்வியுற்றிருக்கி றோம். இன்று நேரிலும் பார்த்துவிட்டோம். மட்டற்ற மகிழ்ச்சி! ஒரு பூனைக்கே வேதத்தைப் புகட்டி தாங்கள் எங்களுக்குப் பாடம் கற்பித்து விட்டீர்கள்...’’

‘`வேதம் இறைவனின் மொழி. அதை மொழிவது வேதியர் கடமை. அப்போது சுயநலம் துளியும் கூடாது. அடுத்து, உச்சரிப்பு பிசகினாலும் அது ஆபத்து.’’

‘`தாங்கள் கூறுவதை ஏற்கிறோம். எங்கள் வேள்வி வெற்றி பெற்றிட, தாங்களும் உடனிருந்து அருளுங்கள்.’’

‘`கவலை வேண்டாம். உங்கள் வேள்வி வெற்றி காணும். உங்களின் வறுமையையும் நான் போக்குகிறேன். நான் எனில், என் சித்த ஞானம்!’’ என்ற போகர், அந்த வீட்டிலிருந்த அவ்வளவு அண்டா குண்டாக்களையும் கொண்டுவந்து தன் முன் போடச் சொன்னார். கடப்பாரை, மண்வெட்டியைக்கூட விடவில்லை.

பிறகு, அவற்றை வறட்டி எனப்படும் பசுஞ்சாணத் தட்டைகள் கொண்டு மூடி நெருப்பிட்டார் போகர். கொழுந்துவிட்ட நெருப்பால் அவ்வளவு உலோக பாண்டங்களும் சிவப்பேறிப் பழுத்து நின்றன. அப்போது அதன்மேல், தன் வசம் இருந்த ஆதிரசம் எனும் ரசவாத மூலிகைச் சாற்றைத் தெளித்தார். பின்பு அதைக் காற்றில் ஆறிய நிலையில் காண சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்தபோது அவ்வளவும் தங்கமாக மாறியிருந்தன.

‘இது உங்கள் வறுமையை வெல்ல உதவட்டும்; உங்கள் மனமும் பொன்போல மின்னட்டும்’’ என்று ஆசி கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டார் போகர். இந்த சம்பவம் போகர் வாழ்வில் ஒரு பாட்டாக காணக் கிடைக்கிறது.

குருவென்றே தாகத்துக்கு அமுதம் ஈந்தார்

கொண்டுமே வந்துவொரு சித்தி ஈந்தே

அருவென்றே பாத்திரங்கள் ஈந்து ஐயா

ஆயி அவன் உபதேசம் அனுகிரகித்து

தருவென்றே அவரவர் வீட்டில் உள்ள

தவலை செம்பு மண்வெட்டி உழவுப்பாறை

வெருவென்றே வெளிதனில் குவிக்கச் சொல்லி

விராட்டிப் போர் தனையடுக்கி நெருப்பிட்டேனே

இட்டுமே சிவந்த பின்பு கொணர்ந்த சூதம்

எள் அளவாய் எடுத்துமே திவலை வீசி

கட்டுமே கனகம்பத் தரையுமாச்சு

கணக்காக அவரவர்கள் எடுத்துக் கொண்டார்கள்!’

- எனும் இந்தப் பாடல், போகிற போக்கில் தங்கம் செய்ய முடிந்தவர் போகர் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

(5.2.13 சக்தி விகடன் இதழிலிருந்து...)

ரசவாத ரகசியம்!

சவாத ரசத்தை எப்படிச் செய்வது என்பது குறித்தும் போகர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக் கிறார். பொன்னாவரை மூலிகைச் செடியை வேரோடு பிடுங்கி எடுத்து, ஒரு களஞ்சு முப்புவைச் சேர்த்து (உப்பு, கந்தகம், பாதரசம் மூன்றும் சேர்ந்தது) தைலம் போல் காய்ச்ச வேண்டும். பிறகு அதை ரசமாக்க பிரிதொரு முறைகள் உள்ளன.

இதில், ‘எது பொன்னாவரைச் செடி, அந்த முப்புவின் அளவு எவ்வளவு, அதை எப்படிக் காய்ச்ச வேண்டும், எப்போது காய்ச்ச வேண்டும்’ என்பதுவரை அதனுள் நுட்பங்கள் உள்ளன. காய்ச்சப்படும் பாத்திரம் எத்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதில் முக்கியம். இதெல்லாம்தான் ரசவாத ரகசியம்!

வேதம் ஓதிய பூனை!

போகர் சீன தேசத்தவரா?

போகர் பிரானை சீனர் என்று கூறுவோரும் உண்டு; அதை வன்மையாக மறுப்போரும் உண்டு. அவர் ஒரு குயவர். அதற்கான சான்று அவர் பாடலிலேயே காணக்கிடைக்கிறது என்று அவர் பாடல் ஒன்றை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல; அவரின் சீடர்களாக புலிப்பாணி, கொங்கணர், கருவூரார், சுந்தரானந்தர், மச்சமுனி, இடைக்காடர், கமலமுனி, சட்டைமுனி என்று ஒரு சித்தர் கூட்டத்தையே காட்டுகின்றனர். போகரின் சீடர்கள் இவர்கள் என்றால், போகரோ அகத்தியரின் சீடர் என்கிறது அபிதான சிந்தாமணி.

இவர் எழுதிய நூல்களும் ஏராளமாக காணக் கிடைக்கின்றன. போகர் 12,000, சப்தகாண்டம், நிகண்டு 1,700, போகர் வைத்தியம் 1,000, போகர் சரக்கு வைப்பு, போகர் ஜனன சாகரம், போகர் கற்பம், போகர் உபதேசம், போகர் ரணவாகடம், போகர் கற்ப சூத்திரம், போகர் அட்டாங்க யோகம், போகர் பூஜாவிதி என்று போகரின் நூல்கள் விரிந்துகொண்டே செல்கின்றன. இதில், போகர் 12,000-மும் ரணவாகடமும் என்னாயிற்று என்று தெரியவில்லை. மற்ற நூல்கள் இன்று சான்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றன.