Published:Updated:

லட்சுமி கடாட்சம்!

லட்சுமி கடாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி கடாட்டம்!

பூசை ச.அருணவசந்தன்

ஜூலை- 31: ஸ்ரீவரலட்சுமி விரதம்

திருமகளான லட்சுமிதேவியைப் போற்றும் விரதங்கள் பல உண்டு. அவற்றில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். இது, ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுவது.

கலசத்தில் முறைப்படி மகாலட்சுமியை எழுந்தருளச் செய்து, உரிய நியதிகளோடு விரதம் இருந்து பெண்கள் கடைப்பிடிக்கும் வழிபாடு இது. இந்த வழிபாட்டின் மூலம் ஆயுளும் செளபாக்கியமும் பெருகும். வீட்டில் செல்வகடாட்சம் நீங்காதிருக்கும். இந்த ஆண்டு வரும் ஜூலை - 31 (ஆடி-16) அன்று வரலட்சுமி விரதம் வருகிறது.

அற்புதமான இந்த நாளைக் கொண்டாடும் விதம், அலைமகளின் மகிமைகளையும், லட்சுமிகடாட்சத்தை அருளும் எளிய வழிபாட்டு முறைகளையும் அறிந்து மகிழ்வோம்.

கெட்ட கனவுகள் நீங்க...

அரச மரம், தீர்த்தக்குளம், மலை ஆகியவற்றில் ஒன்றை வலம் வந்து வழிபடுவதன் மூலம் தூக்கத்தில் கெட்ட கனவுகள் தோன்றாது. அதேபோல் லட்சுமி பஞ்சகம், லட்சுமி அஷ்டகம் முதலான தோத்திர நூல்களைப் பாராயணம் செய்து வந்தால், வீட்டில் தரித்திரம் நீங்கும்; தீமைகள் விலகி மங்கல காரியங்கள் கூடிவரும்.

வெள்ளிக் கிண்ணத்தில்...

வெள்ளிக் கிண்ணத்தில் காசுகளை நிறைத்து, அதையே தனலட்சுமியாக பாவித்து வழிபடலாம். இதை தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடுவதால் வியாபாரம் செழிக்கும்; லாபம் பெருகும். அதேபோல், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமிக்கு பால் நிவேதனம் செய்து, அதை ஏழைக் குழந்தைகளுக்குத் தானம் செய்வது விசேஷம். இதனால் வீட்டில் குழந்தைச் செல்வம் உண்டாகும். குழந்தைகளை நோய்கள் அண்டாது.

லட்சுமி வாசம்

வில்வ மரம் மகாலட்சுமியுடன் தோன்றியது. அந்த மரத்தில் லட்சுமி வசிப்பதால் அதற்கு லட்சுமி வாசம் என்று பெயர் உண்டு. வில்வ மரத்தடியில், தாமரைத் தண்டு திரியை இட்டு, நெய் ஊற்றி தீபமேற்றி வழிபட்டால், செல்வகடாட்சம் பெருகும். வில்வக் கனியை பூஜை அறையில் வைத்து வழிபட்டால், பொருளாதாரம் செழிக்கும்.

அஷ்ட லட்சுமிகள்

திருமகள் குபேரனுடன் தொடர்புடைய எட்டு கருவூலங்களுக்குத் தலைமை தெய்வமாகத் திகழ்கிறாள் என்று மார்க்கண்டேய புராணம் சொல்கிறது. இந்த எட்டு கருவூலங்களையும் எட்டு திருவுருவங்கள் கொண்டு காத்து வருகிறாள். அவையே அஷ்டலட்சுமி வடிவங்கள்.

தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, விஜய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகிய இந்த எட்டு வடிவங்களையும் மனத்தில் தியானித்து வழிபட வாழ்வில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும்.

லட்சுமி கடாட்சம்!

பஞ்ச லட்சுமியின் அம்சங்கள்

பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் பஞ்ச லட்சுமியின் அடையாளங்கள். குழந்தைகளுக்குப் பாலும் ஆலயங்களுக்குத் தாமரையும், பெண்களுக்குத் தேனையும், ஆடவர்க்கு நாணயங்களையும், பறவைகளுக்குத் தானியக் கதிரையும் தானம் அளிப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

ஒன்பது தீபங்கள்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவோர், வெள்ளிக் கிழமைகளில் நடுவில் பெரிய தீபம் ஒன்றையும் சுற்றிலும் எட்டு தீபங்களையும் ஏற்றிவைத்து வழிபடவேண்டும். நடுவில் உள்ள தீபத்தை மகாலட்சுமியாகவும் சுற்றிலுமுள்ள தீபங்களை அஷ்ட லட்சுமிகளாகவும் கருதி தூப-தீபம் காட்டி வெல்லம் சமர்ப்பித்து வழிபடுவதால், முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.