Published:Updated:

அஞ்சனை மைந்தனே சரணம்!

ஆஞ்சநேயர்
பிரீமியம் ஸ்டோரி
ஆஞ்சநேயர்

எஸ்.புவனா கண்ணன்

அஞ்சனை மைந்தனே சரணம்!

எஸ்.புவனா கண்ணன்

Published:Updated:
ஆஞ்சநேயர்
பிரீமியம் ஸ்டோரி
ஆஞ்சநேயர்

கிமைமிகு மார்கழியில் மூல நட்சத்திரமும் அமாவாசையும் கூடிய தினத்தை அனுமன் ஜயந்தியாகக் கொண்டாடுகிறோம். தெய்வங்களில் கூப்பிய கரங்களுடன் - அஞ்சலி ஹஸ்தராக அருள்பவர் ஆஞ்சநேயர் மட்டுமே. அவர் சிரஞ்ஜீவி.

ராமபக்தியே அவர் பலத்தின் ரகசியம். அதனால் சதா சர்வ காலமும் ராம நாமத்தை ஜபித்தபடி, தன் மனத்துள் குடிகொண்டிருக்கும் சீதாராமரைக் கைகூப்பி வணங்கியபடியே இருக்கிறார்.

அஞ்சனை மைந்தனே சரணம்!

நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட ஆஞ்சநேயரே அருமருந்து. ஆஞ்சநேயரின் பக்தர்களைத் தீண்ட தீவினை யாவுமே அஞ்சும். வரும் ஜனவரி மாதம் 12-ம் நாள் (மார்கழி-28) செவ்வாய்க்கிழமை அன்று அனுமன் ஜயந்தி. இந்தத் திருநாளில் அனுமனைப் போற்றும்விதம் அவரின் அற்புதங்களைச் சொல்லும் சிறப்புத் தகவல்களை - தல மகிமைகளைத் அறிந்து மகிழ்வோம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனுமனின் பிறந்த நாள்!

நாம் மார்கழியில் அனுமனின் அவதார தினத்தைக் கொண்டாடு கிறோம். ஆந்திர மாநிலத்தில் சித்திரைப் பெளர்ணமியை அனுமன் ஜயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.

சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அனுமனின் பெற்றோரான கேசரியும், அஞ்சனையும் மலைச் சிகரம் ஒன்றில் அமர்ந்து உரையா டிக் கொண்டிருந்தனர். அந்த வேளையில், பிரம்மதேவனின் கட்டளைப்படி அஞ்சனையின் கர்ப்பத்தில் வாயு பகவான் பிரவேசித்தார் என்றும், வாயுவின் அவதாரமாக அனுமன் தோன்றினார் என்றும் புராணம் சொல்கிறது. இந்தக் கூற்றின்படி அனுமன் தோன்றிய நாள் சித்திரை பௌர் ணமி எனும் நம்பிக்கையின்படி ஆந்திர மாநிலத்தில் இந்த தினத் திலேயே அனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் வைசாக (வைகாசி) பௌர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க் கிழமையன்று அனுமத் ஜயந்தி கொண்டாடப் படுகிறது.

சூரியனுக்காக சுக்ரீவனின் துணையானார்!

அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்பித்தவர் சூரிய பகவான். ‘குரு தட்சணையாக என்ன தர வேண்டும்?’ என்று ஆஞ்சநேயர் தன் குருவான சூரியனிடம் கேட்டார். அதற்கு சூரிய பகவானோ, ‘என்னுடைய சுக்ரீவனுக்கு அமைச்சராக இருந்து, அவனுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவி னால் போதும்’ என்று கூறினார். குருவின் சொற்படியே சுக்ரீவனுக் குத் துணையாக இருந்தார் அனுமன்.

ராமதாஸர் சொல்லும் அருள்கதை!

சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாஸர். சிறந்த ஆஞ்சநேய பக்தர். அவரது கருத்துப்படி ஆஞ்சநேயர் பிறந்த கதை இதுதான்: ‘புத்திர காமேஷ்டி யாகத்தின்போது கிடைத்த தெய்விக பாயசத்தை, தன் மனைவியரான கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோருக்கு அளித்தார் தசரதன். அப்போது, சுமித்திரையின் கையிலிருந்த பாயசத்தை வாயுதேவன் எடுத்துச் சென்று, அஞ்சனையிடம் கொடுத்தான். அஞ்சனை அதைப் பருகி, ஆஞ்சநேயனைப் பெற்றாள்!’ என்று குறிப்பிடுகிறார். ஆக, அனுமனும் ஓர் அவதார புருஷனே!

அனுமனின் குண்டலங்கள்!

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது அஞ்சன் கிராம் (அஞ்சனை கிராமம்). ஊரைச் சுற்றி ஓடும் கட்வா நதியை, அனுமனின் அன்னையின் பெயரால் அஞ்சனை ஆறு என்றே அழைக்கின்றனர். ஆம், அஞ்சனாதேவி வாழ்ந்த இடம் இது என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!

இங்கே உள்ள குகைக்குள் (அஞ்சனை குகை என்கிறார்கள்), மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதன சிலையை தரிசிக்க முடிகிறது. இதை ‘பிராசீன் மூர்த்தி’ என்கின்றனர். பாலகன் அனுமனின் காதில் திகழும் குண்டலங்கள் நம் கருத்தைக் கவர்கின்றன.

வாலி, கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த காலம். அஞ்சனையின் கருவில் உதிக்கப் போகும் அனுமனும் தனது மரணத்துக்குக் காரணமாகப் போகிறான் என்பதை ஜோதிடர்கள் மூலம் அறிந்தான் வாலி. கருவிலேயே அனுமனை அழிக்க திட்டமிட்டான். தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, வெள்ளீயம் ஆகிய உலோகக் கலவையால் அஸ்திரம் ஒன்றை தயாரித்தான். அஞ்சனை தூங்கும் நேரத்தில், அவள் மீது அஸ்திரத்தை ஏவினான். ஆனால், ஆஞ்சநேயன் ருத்ராம்சம் அல்லவா? சிவனருளால் அந்த அஸ்திரம் உருகி, குண்டலங்களாக மாறின; கருவிலேயே அனுமனுக்கு வெற்றிப் பரிசாக அமைந்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன.

வால்மீகியை நெகிழவைத்த அனுமன்!

ஊரெல்லாம் கொண்டாட, பலரின் முன்னிலையில் தரப்படும் பரிசு; எந்த அபிப்ராய பேதமும் இல்லாமல் எல்லோரும் ஆமோதிக்க, உயர்ந்த சபையில் அளிக்கப்படும் பரிசு, மிக உன்னதமானது! அப்படிப்பட்ட பரிசைப் பெற்றவர் யார்?

வேறு யார்... `சொல்லின் செல்வன்’ என கம்பரால் போற்றப்பட்ட ஆஞ்சநேயர்தான்.

ராமருக்கு பட்டாபிஷேகம். ஊரே திரண்டு நிற்க, கோலாகலமாக இருக்கிறது சாகேதபுரி. சீதாதேவி, தன் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கையில் வைத்துக் கொண்டு யாருக்குத் தரலாம் என்று யோசித்தாள்!

‘தேஜஸ், தைரியம், புகழ், திறமை, வல்லமை, அடக்கம், நீதி, ஆண்மை, பராக்கிரமம், அறிவு ஆகியவை எவரிடம் விளங்குகிறதோ அவருக்கு இந்த மாலையைக் கொடு!’ என்றான் ராமபிரான். உடனே, முத்துமாலையை ஆஞ்சநேயனுக்கு வழங்கினாள் சீதாதேவி. பரமாத்மாவின் திருவுளமும் இதுவே!

ஆம்! ‘ராமோ நாந்யத்ர கச்சதி’ என்று ஸ்ரீராமனைத் தவிர, வேறு எவரையும் நினைக்காதவன் அனுமன். ராமாவதாரம் முடிந்து பரமாத்மா வைகுண்டத்துக்கு எழுந்தருளும் போது புல்- பூண்டு எல்லாவற்றுக்கும் மோட்சம் கொடுத்தான். ‘வைகுண்டத்துக்கு வருகிறாயா?’’ என்று அனுமனிடமும் கேட்டான்.

‘`வைகுண்டத்தில் ராமாயண உபந்யாசம் உண்டா?’’ என்று பதில் கேள்வி கேட்டான் அனுமன். ‘’இல்லை’’ என்று பரமாத்மா சொல்ல... ‘’அப்படியெனில், வைகுண்டம் எனக்கு வேண்டாம்’’ என்றவர் அல்லவா நம் ஆஞ்சநேயன். அவரின் மகிமைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அனுமனின் தியாகத்தைக் கண்டு வால்மீகி மாமுனிவரே நெகிழ்ந்த ஒரு தருணம் உண்டு.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர், ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தார் வால்மீகி. சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது.

அந்த வாசகங்கள் ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தன. அவை, தான் எழுதிய ராமாயணத்தைவிடக் கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி. இதை உருவாக்கியவர் யாராக இருப்பார் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிகரத்தை அவர் அடைந்தபோது, அங்கே மற்றோர் ஆச்சர்யம் காத்திருந்தது.

அங்கே அனுமன் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். சிறிதுநேரம் கழித்து கண்விழித்தவரிடம், பாறையில் தீட்டப்பட்ட ராமாயணம் குறித்து கேட்டார். அதை எழுதியது அனுமனே என்பதையும் அறிந்து சிலிர்த்தார். ``நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும் போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்’’ என்றார் வால்மீகி.

அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் முழுமையாக அழித்துவிட்டார்.

பின்னர் வால்மீகியை வணங்கி, ‘`தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்கியதுதான் ராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது’’ என்று அமைதியுடன் கூறினார்.

அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்து கொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனமார வாழ்த்தினார்.

‘`ஹனுமான்! நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்து விட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்’’ என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.

அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம்!

ஆஞ்சநேயருக்கு தாழம்பூ மாலை

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கோலாரில் ‘மூலு பாகுல்’ என்னும் ஓர் இடம் உள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஆஞ்சநேயருக்கு துளசி மாலைக்குப் பதில், தாழம்பூ அணிவிக்கிறார்கள்.

அஞ்சனை மைந்தனே சரணம்!

நீராழி மண்டபத்தில்...

காஞ்சியில் இருந்து கலவை செல்லும் வழியில் உள்ள ஊர் ஐயங்கார்குளம். இங்குள்ள ஸ்ரீஅனுமன் ஆலயம், லட்சுமி குமார தத்தாச்சார்யார் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இங்கு, சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் நீர் நிலை ஒன்று வெட்டப்பட்டு, அதன் தென்புறத்தில் ஒரு நீராழி மண்டபம் போல நிர்மாணிக்கப்பட்டுள்ளது ஸ்ரீஅனுமன் கோயில்.

அஞ்சனை மைந்தனே சரணம்!
அஞ்சனை மைந்தனே சரணம்!

அவல் நைவேத்தியம்

கேரள மாநிலம், தலைசேரி அருகில் திருவெண்காடு என்ற திருத்தலம் உண்டு. இங்கு அமைந்துள்ள ஸ்ரீராமசாமி கோயிலில், ஸ்ரீராமனும் அனுமனும் மட்டுமே அருள் பாலிக்கின்றனர். ஸ்ரீராமனின் எதிரில் வணங்கிய நிலையில் காட்சி தரும் ஸ்ரீஅனுமனுக்கு. ‘அவல்’ நைவேத்தியம் செய்யப் படுவது தனிச் சிறப்பு!

அஞ்சனை மைந்தனே சரணம்!

மூன்று கண்களுடன் ஆஞ்சநேயர்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ளது திருக்கடையூர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்.

இங்கே, ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார் சமேத ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், தனிச்சந்நிதியில் காட்சி தரும் இந்த அனுமனை தரிசிக்க, எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மூன்று கண்கள், பத்துக் கரங்களுடன்... சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் என ஏந்தியபடி கொள்ளை அழகுடன் திருக்காட்சி தந்தருளும் ஸ்ரீஆஞ்சநேயர், மிகுந்த வரப்பிரசாதியும் கூட!

மூன்று கண்கள், பத்துக் கரங்களுடன் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்!

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் மாதந்தோறும் வருகிற கேட்டை நட்சத்திர நாளிலும் இங்கு வந்து ஸ்ரீஅனுமனை சேவிப்பது கூடுதல் பலனைத் தரும் என்கின் றனர் பக்தர்கள். மார்கழி மூல நட்சத்திர நாளான, ஸ்ரீஅனுமன் ஜயந்தி நாளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து, வழிபட்டுச் செல்கின்றனர்.

வெற்றிலை மாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை, வடை மாலை, பூமாலை என பஞ்ச மாலைகளை (ஐந்து மாலைகள்) ஸ்ரீஅனுமனுக்கு அணிவித்து வணங்கினால், அனைத்து தோஷங்களும் நீங்கும். பாரிஜாதப் பூமாலை சார்த்தி, குங்குமத்தால் அர்ச்சனை செய்து, பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், வடை மாலை, சுண்டல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், வியாபாரம் சிறக்கும். திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம்!

உடல் நலம் குன்றியவர்கள், பில்லி, சூனியம் மற்றும் ஏவல் என பாதிக்கப்பட்ட வர்கள், நல்லெண்ணெயில் எள் தீபமேற்றி (ஒன்பது அகல் விளக்குகள்) ஸ்ரீஅனுமனை வழிபட்டால், தீராத நோயும் தீரும்; எதிரிகள் தொல்லை இனியில்லை; தீய சக்திகள் நம்மை அண்டாது என்கிறார் அனந்தமங்கலம் கோயிலின் மாதவன் பட்டாச்சார்யர்.

அஞ்சனை மைந்தனே சரணம்!

மகாவீர ஆஞ்சநேயர்

செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை ஏற்பட்டு வருந்துபவர்களும் சனி தோஷத்தால் சங்கடம் நேருமோ எனக் கலங்குபவர்களும் ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வந்தால், சங்கடங்கள் அனைத்தும் விலகும்; சந்தோஷம் பெருகும் என்கின்றனர் ஈரோடு வாழ் பக்தர்கள்!

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலை விலும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது வ.உ.சி.பூங்கா. இந்தப் பகுதியில்தான் கோயில் கொண்டுள் ளார், ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயர்.

பேச்சிப்பாறை எனும் பகுதியில், சுயம்புத் திருமேனியாகக் காட்சி தந்த அனுமன், இங்கே இந்த ஆலயத்தை நிறுவி, பிரதிஷ்டை செய்யப் பட்டார் என்கிறது ஸ்தல வரலாறு. ஸ்ரீமகா கணபதியும் ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயரும் தனித்தனிச் சந்நிதிகளில் கோயில் கொண்டிருக்கின்றனர், இங்கே! சனி பகவானால் பிடிக்கப்படாத ஸ்ரீவிநாயகரும் இங்கு அமைந் திருப்பதால், இதை சனிப் பரிகாரத் தலம் எனப் போற்றுகின்றனர். மேலும், இங்கு வந்து ஸ்ரீஅனுமனையும் ஸ்ரீவிநாயகரையும் வழிபட, செவ்வாய் தோஷமும் நீங்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை!

அஞ்சனை மைந்தனே சரணம்!

தொட்டில் கட்டினால் குழந்தை வரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அமராவதி ஆற்றில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகாடு ஹனுமந்தராய ஸ்வாமி ஆலயம். ஒருகாலத்தில் வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் கோயில் அமைந்ததால், ஸ்ரீஅனுமனுடன் ‘காடு’ என்கிற பெயரும் சேர்ந்து கொண்டதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

ஸ்ரீவியாசராயர், தீர்த்த யாத்திரையாகப் பல ஊர்களுக்குச் சென்று, அங்கே ஒவ்வொரு தலங்களிலும் ஸ்ரீஆஞ்சநேயரின் திருவிக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்! அந்த வகையில், சுமார் 732 ஆஞ்சநேய திருவிக்ரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள தாகவும் அதில், 83-வது மூர்த்தமாக, தாராபுரம் தலத்தில், ஸ்ரீகாடு அனுமந்தராய ஸ்வாமி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார் என்றும் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

மூலவர் ஸ்ரீஅனுமன், சுமார் ஏழு அடி உயரத்தில் இடுப்பில் மணி கட்டிக் கொண்டு, அபய ஹஸ்தத்துடன் அழகுறக் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீசீதாராமர் மற்றும் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

சனிக்கிழமை, அமாவாசை மற்றும் மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திரம் ஆகிய நாள்களில், ஸ்ரீஅனுமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தத் தலத்தில் வேண்டிக் கொண்டு கோ தானம் செய்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும்; லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் உள்ள கால்நடைகள் ஆரோக்கியமாகத் திகழும் என்கின்றனர் பக்தர்கள். பிள்ளை இல்லையே என வருந்துவோர், இந்தக் கோயிலின் அரச மரத்தில் தொட்டில் கட்டி, ஸ்ரீஅனுமனைப் பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!