திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

கர்மமே காரணம்!

கர்மம்
பிரீமியம் ஸ்டோரி
News
கர்மம்

பி.சந்திரமெளலி

குருக்ஷேத்திர போரில் பீஷ்மர் வீழ்த்தப் பட்டார். அம்புப் படுக்கையில் கிடந்த அவரை தரிசிக்க வந்த தருமர் மிகவும் கலங்கினார்.

“எங்களுக்கெல்லாம் மேலானவரே! நல்லவேளை... துரியோதனன், இந்த நிலையில் உங்களைப் பார்க்கவில்லை. இதைக் காணும் நான்தான் பாவி. இதற்குப் பதில், போரில் நானும் கொல்லப்பட்டிருக்கலாம். மறு உலகிலேனும் பாவத்தில் இருந்து நாங்கள் விடுபடும் வழியை உபதேசியுங்கள்” என்று பீஷ்மரிடம் தன் மனக் குறையைக் கொட்டினார் தர்மபுத்திரர்.

“தர்மபுத்திரா! கர்மத்தின் வசம் உள்ள நீ, இவற்றுக்குக் காரணமாக உன்னை நினைத்துக் கொள்கிறாய். கர்மத்தின் வடிவம் புலன்களுக்கு எட்டாதது; மிகவும் நுட்பமானது. இதுகுறித்து பழங்கதை ஒன்றைச் சொல்கிறேன் கேள்!” என்று கதையை விவரிக்கத் தொடங்கினார் பீஷ்மர்.

கௌதமி என்பவளின் பிள்ளை, பாம்பு தீண்டிமாண்டான். அந்தப் பாம்பை அர்ஜுனகன் எனும் வேடன், நரம்புக் கயிற்றால் கட்டி, கௌதமியிடம் கொண்டு வந்து, ``இதுவே உன் பிள்ளையைக் கொன்ற பாம்பு. இதை துண்டு துண்டாக வெட்டலாமா... தீயிலிட்டு எரிக்கலாமா” என்று கேட்டான்.

அர்ஜுனகனுக்குப் பதில் அளித்தாள் கௌதமி, ‘`அறிவில்லாதவனே! பாம்பைக் கொல்லாதே. விட்டு விடு. பாம்பைக் கொன்றால் என் பிள்ளை உயிருடன் வந்து விடுவானா அல்லது இது உயிருடன் இருப்பதில் உனக்கு நஷ்டமா...’' என்றாள்.

ஆனால் வேடன், தன் நிலையில் இருந்து மாறவே இல்லை. ‘`நீ இப்படிப் பேசுவாய் என்று எனக்குத் தெரியும். அமைதியை விரும்புபவர்கள் சந்தர்ப்பத்தை நழுவவிடுவர். ஆனால், காரியத்தை விரும்புபவர்கள் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, அதனால் ஏற்படும் துயரத்திலிருந்தும் விடுபடுவர். எனவே, இப்போதே பாம்பைக் கொன்றுவிடுகிறேன்'’ என்றான்.

வேடனின் விளக்கத்தை கௌதமி ஏற்க வில்லை. ‘`நல்லவர்களுக்கு தர்மமே உயிர். அறிவற்றவரே அனுதினமும் துயரப்படுவர். பாம்பின் மீது எந்தக் கோபமும் இல்லை. பகைவனைக் கொல்வதைவிட உயிரோடு விடுவதே மகிழ்ச்சி'' என்றாள் அமைதியாக!

வேடனும் சளைக்கவில்லை. தன் கருத்தில் உறுதியாகவே இருந்தான். ‘`இந்தப் பாம்பைக் கொன்றால் எனக்குப் புண்ணியமே! பல தர்மங்கள் செய்து, காலக்கிரமத்தில் கிடைக்கும் புண்ணியத்தைவிட, தீய உயிரைக்கொன்றால் உடனே புண்ணியம். மேலும் பாம்பைக் கொன்று, பலரைக் காப்பாற்றலாம். இதை உயிரோடுவிட்டால், பலரையும் கொன்று விடும்’' என்று தர்க்கம் செய்தான் வேடன்.

இருவரும் தங்களது கருத்தில் விடாப்பிடியாக இருந்தனர். அப்போது வேடனால் கட்டப்பட்டு, குற்றுயிராக இருந்த பாம்பு, திடீரென பேசியது.

கர்மம்
கர்மம்

‘`வேடனே! சிறுவனைத் தீண்டியதால் எனக்கு என்ன லாபம்... உணவு மற்றும் பகைமை காரணமாக இதைச் செய்யவில்லை. என்னை ஏவியது எமன். இந்த பாவம், எமனையே சேரும்” என்று நழுவப் பார்த்தது பாம்பு.

தன் கைப்பிடியில் இருந்த பாம்பை மேலும் இறுக்கிய வேடன், “செய்தது நீ; பழியை எமன் மீது போடுகிறாயே! சொன்னது எமனாகவே இருந்தாலும், காரியம் செய்த நீயும் குற்றவாளியே! உன்னை விடக்கூடாது” என்று கத்தினான்.

அப்போது அங்கே எமன் வந்தார்.

“சர்ப்பமே! சகலமும் தெரிந்ததுபோல், என் மீது பழி போடுகிறாயே... என்னை காலம் ஏவியது; நான் உன்னை ஏவினேன். சிறுவனின் மரணத்துக்குக் காலமே காரணம். உலகில் உள்ள அசையா - அசையும்பொருள்கள் அனைத்தும் காலத்துக்கே கட்டுப்பட்டவை. ஆக்கம் - அழிவு இரண்டுக்கும் காலமே காரணம். நான் குற்றவாளி எனில் நீயும் குற்றவாளியே!'’ என்றார்.

பதறிய பாம்பு, “காலத்தைக் குற்றம் சொல்கிறீர்களே... காலத்தை ஆராய நமக்கென்ன அதிகாரம்? நம் மீதான பழியை விலக்க முயற்சி செய்வோம்” என்றது.

குறுக்கிட்ட வேடன், “சிறுவனின் மரணத்துக்கு நீங்களே காரணம். பாம்பைக் கொல்ல வேண்டும். எமனை இகழ வேண்டும்” என்றான்.

“தவறு வேடனே! உலகின் அனைத்துச் செயல்களும் காலத்தால் தான் நடைபெறுகின்றன. காலத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் நாங்கள், அவ்வளவே!” என்றான் எமன்.

குழப்பம் அங்கே குடிகொண்டது. அப்போது அங்கு வந்தான் கால புருஷன்.

“சிறுவனின் மரணத்துக்குக் காலமாகிய நான், எமன், பாம்பு என்று எவரும் எதுவும் காரணம் இல்லை. இவளின் மகன் தன் கர்மம் அதாவது செயல்களாலேயே இறந்தான். நாங்கள் கர்மத்துக்குக் கட்டுப்பட்ட வர்கள். அவரவர் செய்யக்கூடிய கர்மங்களே எங்களை ஏவுகின்றன. நாங்கள் ஒருவரை ஒருவர் ஏவுகிறோம்” என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் தெரிவித்தான் காலபுருஷன்.

கௌதமி நிம்மதிப் பெருமூச்சுடன், “வேடனே! புரிந்துகொண்டாயா... பாம்பை விட்டுவிடு!” என்றாள். வேடனும் பாம்பை விடுவித்தான். இருவரும் துயரம் நீங்கியவர்களாக ஆனார்கள்.

கதையை விரிவாகச் சொல்லி முடித்தார் பீஷ்மர்.

“தர்மபுத்திரா! கர்மத்தைச் சார்ந்தே உலகம் உள்ளது என்பதைப் புரிந்து கொள். இந்த யுத்தத்தில் ஏராளமானோர் இறந்ததற்கு நீயோ துரியோதனனோ காரணம் அல்லர். அவரவர் கர்மங்களுக்கு, அதாவது செயல்களுக்கு உரிய பலனைக் காலம் தந்துள்ளது” என்று தர்மபுத்திரருக்கு ஆறுதல் அளித்தார்.