Published:Updated:

அர்ஜுனனுக்கு மட்டும் கீதோபதேசம் ஏன்?

‘அர்ஜுனா! என்னிடம் அன்பு கொண்டவன் என்பதால், உனக்கு கீதையை உபதேசிக்கவில்லை.

பிரீமியம் ஸ்டோரி

`பகவான் வாசுதேவ கிருஷ்ணர், கீதை மூலம் நுட்பமான அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்?’ என்பது அர்ஜுனனின் சந்தேகம்.

‘கிருஷ்ணர் இதை பிதாமகன் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். அண்ணன் தருமனிடம் சொல்லி இருக்கலாம். இன்னோர் அண்ணன் பீமன் பக்திமானும்கூட. இவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் நாட்டமுள்ள, ஆத்திரக்காரனான என்னை, கீதோபதேசம் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியது எந்த வகையில் நியாயம்?’ - இதைக் கேட்டே விட்டான் அர்ஜுனன். சந்தேகத்தை கிருஷ்ணரே போக்கினார்:

அர்ஜுனனுக்கு மட்டும் கீதோபதேசம் ஏன்?

‘‘அர்ஜுனா! என்னிடம் அன்பு கொண்டவன் என்பதால், உனக்கு கீதையை உபதேசிக்கவில்லை. கௌரவர்கள் தர்ம முறைப்படி நடந்து கொள்ளவில்லை. இருந்தும், பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.

அடுத்தவர் தருமன். நல்லவர்; ஆனால், முன்யோசனை இல்லாதவர். தவறு செய்த பின் வருந்துவது அவர் இயல்பு. பீமன் பலசாலி; பக்திமான். ஆனால், அவனிடம் மனோபலமோ, புத்திபலமோ இல்லை.

அர்ஜுனா! நீ மாவீரன். அதிநுட்பமாக அஸ்திர வித்தை கற்றவன். முன்யோசனை உள்ளவன். இப்போது, உன்னைவிட வயதிலும், அறிவிலும் பெரியவர்களான பலர் குறித்து, மதிப்புடன் என்னிடம் விவாதித்தாய். ‘எல்லோரையும் இழந்துவிட்டு ஓர் அரசாட்சியை அடைவதில் என்ன பெருமை இருக்க முடியும்?’ என்று கலங்கினாய். பகைவரைப் பழிவாங்க நினைத்தாலும், போர்க்களத்தில் அவர்களை மன்னித்து... போரே வேண்டாம் என்று கருதும் உள்ளம் உன்னிடம் உள்ளது.

நீதி - அநீதி குறித்துச் சிந்திக்கிறாய். நேர்மையான வழியில் செல்ல, தியாகம் செய்யும் மன வலிமை தேவை. பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவனுக்கே அது சாத்தியம். உன்னிடம் அது இருக்கிறது. இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்!’’

கிருஷ்ணரின் இந்த விளக்கத்தைக் கேட்ட பிறகு அடக்கத்தோடு அந்த தெய்வுருவை வணங்கி நின்றான் அர்ஜுனன்.

-கே.என்.மகாலிங்கம், பாண்டிச்சேரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு