திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

‘அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்’

ஐயப்பன் துணை
பிரீமியம் ஸ்டோரி
News
ஐயப்பன் துணை

`ஐயப்பன் துணை நிற்பான்’ நெகிழ்ந்து உருகும்... பாடகர் வீரமணி தாசன்

`தன்னை வணங்கும் அடியார்களை மாலை அணியவைத்து, விரதம் இருக்கவைத்து, `சாமி மார்கள்’ என்று அவர்களைத் தன்னிலைக்கு உயர்த்தும் ஒரே கருணை தெய்வம், மணிகண்ட மூர்த்தி தான். அவரின் கருணைக்கும் அருளுக்கும் அளவே இல்லை’’ என்று நெகிழ்ந்து உருகுகிறார் இறை இசைப் பாடகர் வீரமணிதாசன்.

கார்த்திகை மாதம் தொடங்கினால் போதும் பட்டிதொட்டியெங் கும் ஒலிக்கும் இவருடைய ஐயப்பப் பாடல்கள். ஆம்! விரதமிருக்கும் ஐயப்பமார்களை நெகிழவும் உருகவும் வைக்கும் தெய்விகக் குரலுக்குச் சொந்தக்காரர் வீரமணிதாசன். இதோ மண்டலகாலம் தொடங்கிவிட்டது. ஐயன் ஐயப்பனின் மகிமைகளைப் பகிர்ந்துகொள்ளும்படிக் கேட்டோம்.

`‘கடையேனான என்னை ஆட்கொண்டு அருள்செய்து, மக்களிடம் கொண்டு வந்ததெல்லாம் ஐயனின் கருணையே. எதைச் சொல்வது, எப்படி பேசுவது என்றே தெரியவில்லை. தெரிந்த தைச் சொல்கிறேன்... இதுவும் மணிகண்டன் அருளே’ என்றபடியே சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார், வீரமணி தாசன். ``தர்மசாஸ்தாவின் எட்டு அவதாரங்களில் முக்கியமானது மணிகண்டன் அவதாரம். அந்தக் கருணாமூர்த்தியை - ஐயன் ஐயப்பனை வணங்கும் சாமிமார்கள், தங்களின் துதியில் நிறைவாகச் சொல்வது, ‘அறிந்தும் அறியாமலும்... தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் மன்னித்து காத்தருள வேண்டும்!’ என்பதாக இருக்கும்.

‘அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்’

அனிச்சையாகச் செயல்படும் நாம் விரத காலங்களில் நம்மையும் அறியாமல் சில தவறுகளை மனத்தாலோ, வாக்காலோ, செயலாலோ செய்துவிட நேரிடலாம். அவை அனைத்தையும் கருணையோடு மன்னித்து ஏற்பவன் மணிகண்டன். இதற்கு நானே உதாரணம்.

1992-ம் ஆண்டு என்னுடைய முதல் ஐயப்பன் பாடல் ஆல்பம் வெளியானது. அதில் கவிஞர் வே. ராம் எழுதிய ‘ஆளரவம் இல்லா பனிக்காட்டில்...’ என்ற பாடலில் ஒரு வரி. ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற வார்த்தை பொய்யடா... பக்தியோடு போகும் வழியில் கல்லும் முள்ளும் ஏதடா!’ என்று இருந்தது. அதை அப்படியே பாடி முடித்தேன். அந்தப் பாடலும் பிரபலமானது. அதே ஆண்டு சபரிமலை யாத்திரைக்குச் சென்றேன். பெரிய பாதையில் செல்வதற்காக எரிமேலியில் பேட்டை துள்ளிக் கொண்டிருந்தேன். அப்போது, சிறிய கல் ஒன்று தடுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். பயங்கர வலி, காலை நீட்டவோ மடக்கவோ கூட முடியவில்லை. கண்ணீர் மல்க மனத்துக்குள் அழுதேன்.

உடன்வந்த சாமிமார்கள் என்னை அமரவைத்து என் காலை நீவி விட்டார்கள்; தைலம் தேய்த்தார்கள். ஆனால் என்ன செய்தும் வலி தீரவே இல்லை. மனதுக்குள் பயம் வந்தது. `என் சுவாமியை நான் தரிசிக்க முடியாதோ... இத்தனை நாள் விரதமிருந்தது வீணோ... என்னால் மற்ற சாமிமார்களின் தரிசனத்துக்கும் இடையூறு விளைந்துவிடக் கூடாதே...’ என்றெலாம் மருகித் தவித்தேன்.`ஐயப்பா உன் பிள்ளையை மன்னித்துவிடு. என் கையைப் பிடித்து எழுப்பி, உன் சந்நிதிக்கு அழைத்துச் செல்’ என்று மன்றாடினேன்.

‘அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்’

அந்த வேளையில்தான் நினைவுக்கு வந்தது அந்தப் பாடல். ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற வார்த்தை பொய்யடா...’ என்று பாடியிருக்கக் கூடாதோ. பல லட்சம் பக்தர்கள் சரண கோஷமாக பாடும் அந்தப் பாடலை மறுத்துப் பாடுவதுபோல் பாடியது தவறோ என்று பயந்தேன். ஐயனிடம் அங்கேயே மன்னிப்பு கேட்டு மனத்துக்குள் கதறினேன். மணிகண்ட தெய்வம் மனம் இறங்கியது. என் குருசாமி வடிவில் வந்தது.

‘எல்லோரும் பெரிய பாதையில் போங்க. இவரை நான் சின்ன பாதை வழியில் கூட்டிட்டு வர்றேன்’ என்று மற்றவர்களை அனுப்பி வைத்தார். ஐயப்பனை தியானித்து எனக்கு விபூதி பூசி விட்டார். அதன் பிறகு மெள்ள எழுந்த எனக்கு ஓரளவு நடக்கவும் முடிந்தது. என்னைக் கைத்தாங்கலாக நடத்தி வேனில் ஏற்றி பம்பாவுக்கு அழைத்துச் சென்றார் குருசாமி.

அங்கு ஒரு விரியில் தங்கி ஓய்வெடுத்தேன். பெரிய பாதை வழியாக பயணித்தவர்கள் பம்பா வந்துசேர்ந்தார்கள். அப்போதும் எனக்கு வீக்கம் குறையவில்லை; வலியும் இருந்தது. ஐயப்பமார்கள் எல்லோரும் என்னை டோலியில் வரும்படி பணித்தார்கள். நானோ வேகமாக மறுத்தேன்.

‘என் ஐயப்பன் என்னை நடத்தியே கூட்டிப் போவார் பாருங்கள்’ என்று கூறிவிட்டு, `காலே முறிந்தாலும் சரி இனி தேங்கக் கூடாது’ என்று ஆன்ம வைராக்கியத்துடன் நடக்க ஆரம்பித்தேன். சுற்றிலும் சரண கோஷம் சூழச் சூழ ஓர் ஆவேசமே வந்துவிட்டது எனக்கு. விடாமல் நடந்துகொண்டே இருந்தேன்.

‘அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்’

கடினமான நீலிமலையையும் கடந்தேன்; ஐயப்பனை கண்ணார தரிசித்தேன்; மனதார கோஷம் போட்டு வணங்கினேன். என் தெய்வம் என்னை கைவிடவில்லை. மலையை விட்டு கீழே இறங்க இறங்க வீக்கம் குறைந்தது. வலியும் மட்டுப்பட்டது. சென்னைக்குத் திரும்பியதும் ஸ்கேன் செய்து பார்த்தோம். எந்தவித பாதிப்பும் இல்லை என்றார்கள். எல்லாம் ஐயப்பனின் கருணை. மன்னிப்பு கேட்டால் மனமிறங்கும் ஞான வடிவம் அல்லவா ஐயப்பன்’’ என்றவர் சற்றுநேரம் கண்ணைமூடி அமைதியில் ஆழ்ந்தவர் தொடர்ந்து பேசினார்.

``எல்லா தெய்வங்களுக்குமாக 6000 பாடல்கள் பாடிவிட்டேன். மிகவும் அமைதியான வாழ்வைத் தந்து என்னைச் சுகமாக வைத்திருக்கிறார் ஐயன் ஐயப்பன். முறையான இசைப்பயிற்சி ஏதும் எனக்குக் கிடையாது. குருசாமி வீரமணி ஐயாவிடம் சில பாடல்களைக் கற்றிருக்கிறேன். அவரின் ஆசியும் ஐயனின் திருவருளும் என்னை உயர்த்தின என்றே சொல்லவேண்டும்’’ என்றவரிடம், புகழ்பெற்ற அவருடைய `எங்க கருப்ப சாமி...’ பாடலைப் பற்றிக் கேட்டதும் மிக உற்சாகத்துடன் அதுபற்றி பகிர்ந்துகொண்டார்.

``ஐயனைப் போலவே அவரின் காவல் சாமியான கருப்பண்ண சாமியும் எனக்குப் பலமுறை வழிகாட்டி காத்தருளி இருக்கிறார்.

2005-ல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் என்னைப் பிரபலமாக்கியது ‘எங்க கருப்பசாமி...’ பாடல். தென்மாவட்டங்களில் பஜனைப் பாடலாக இருந்த இந்தப் பாடலை, அம்பை குருசாமி அவர்கள் எனக்கு எழுதிக்கொடுத்து பாட வைத்தார். அன்றிலிருந்து ஐயப்பமார்களின் விருப்பப் பாடலாக இதுவும் மாறிவிட்டது.

1995-ம் ஆண்டு இருமுடி ஆல்பம் ஒன்று தயாரிக்க கவிஞர் முகிலன், இசையமைப்பாளர் கண்மணி ராஜா எல்லோரும் கூடினோம். அப்போது நான் ‘ஏழைக்கு எளியோனான ஐயப்பனை வியந்து, நாடோடி இன மக்கள் பாடுவது போல ஒரு பாடல் போடலாமே’ என்றேன். தயாரிப்பாளரோ ‘தெம்மாங்கு, டப்பாங் குத்து பாடல்கள் எல்லாம் சாமிமார்களிடம் எடுபடாது, வேண்டாம்’ என்றார். நானோ `நிச்சயம் வெற்றி பெறும்’ என்று விடாமல் வலியுறுத்தினேன். அதன்படியே, ‘ஐயா சாமிமாரே, சபரிமலை போறவரே...’ என்ற அந்த பாடலும் பெரிதும் வெற்றி பெற்றது. எல்லாம் ஐயனின் பெருங்கருணை’’ என்றார் வீரமணி தாசன்.

‘அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்’

தற்போது, திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள தீர்த்தமலை எனும் பகுதியில் ஆசிரமம் உருவாக்கி, தான் அனுதினமும் வழிபட்டு வந்த ஐயப்பனை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார் வீரமணிதாசன். ``நியாயமான வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி தருபவன் ஐயன் ஐயப்பன். நான் அனுதினமும் வழிபடும் பஞ்சலோக ஐயப்ப விக்கிரகம் ஒன்று என்னிடம் உண்டு. நான் பாடி நடிக்கும் தருணங்களில் என் ஐயனை படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கும் கொண்டு செல்வது வழக்கம். ஒருமுறை படப்பிடிப்பின்போது ஏதோ எனக்கு உணர்த்தப்பட, ஐயப்பனிடம் மன்றாடினேன்.

‘ஐயா ஐயனே! ஓர் இடத்தில் நிலையாக வைத்து வழிபட வேண்டிய உன்னை, ஒரு காட்சி பொருள் போல பயன்படுத்துகிறேனே... இது தவறல்லவா. என்னை மன்னித்துவிடு. உனக்கான இடத்தை நீயே தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்’ என்று வேண்டினேன். சில மாதங்களிலேயே முன்பின் அறிந்திராத, கோவில்பட்டியைச் சேர்ந்த அன்பர் ஒருவர், தீர்த்தமலை என்ற இடத்தில் எனக்கு அரை ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளித்தார். இப்போது அந்த இடத்தில் ஓர் ஆஸ்ரமம் உருவாகி, அங்கே நிலையாக, சத்திய சொரூபனாக, சர்வலோக ரட்சகனாக அமர்ந்துவிட்டார் என் ஐயப்பன்.

சத்தியமாகச் சொல்கிறேன்... உங்கள் நியாயமான எந்த வேண்டு தலையும் அவரிடம் சமர்ப்பணம் செய்துவிடுங்கள். அதை அவர் நிச்சயம் நிறைவேற்றித் தருவார். அதற்கு நானே சாட்சி’’ என்று நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்தார் வீரமணி தாசன். அந்தச் சொல்லில் இருந்த சத்தியத்தை ஆமோதிப்பதைப் போல், அவர் வீட்டுத் தீபம் அசைந்தாடி ஆசிபுரிந்தது; பூஜையறையில் படத்தில் தெய்விகமாய்ப் புன்னகைத்துக்கொண்டிருந்தார் ஐயன் ஐயப்பன்!