பிரீமியம் ஸ்டோரி
ஜனகனின் அரண்மனை. அவைக்குள் நுழைந்த நாரதரை ஆசனத்தில் அமர்ந்தபடியே வரவேற்றார் ஜனகர். ``நீ விரும்பிய அனைத்தையும் இறைவன் உனக்கு அருள்வான்’’ என்று ஜனகரை ஆசீர்வதித்தார் நாரதர்.

இதைக் கேட்டதும் ஜனகர், ‘`நாரதரே... இறைவன் வேறு; நாம் வேறா. நானே பிரம்மமாக இருக்கிறேன்’’ என்றார்.

ஆணவமான இந்தப் பதிலைக் கேட்டு கலங்கிய நாரதர், கனத்த மனதுடன் வெளியேறினார். வழியில் தென்பட்ட விநாயகரின் முன் ‘`பெருமானே! ஜனகன், தானே பரப்பிரம்மம் என கர்வத்துடன் பேசுகிறான். அவனுக்கு நல்லறிவு புகட்டுங்கள்!’’ என்று வேண்டிச் சென்றார்.

அதேநேரம்... ஜனகரின் அரண் மனை வாசலில் அந்தணர் ஒருவர் நின்றார். காவலர்கள் தகவல் தர... அவரை அழைத்து வரப் பணித்தார் ஜனகர். அதன்படி, அந்தணர் உள்ளே வந்ததும், ‘`என்ன வேண்டும்?’’ என்று கேட்டார் ஜனகர்.

‘`கடும் பசி. உணவு வேண்டும்!’’- என்றார் அந்தணர்.

‘`அட... இவ்வளவுதானா?’’ என்ற ஜனகர், பசி தீரும் வரை அந்தணருக்கு உணவு கொடுக்குமாறு தன் மகனைப் பணித்தார்.

அதன்படி அந்தணருக்கு உணவு பரிமாறப்பட்டது. அந்தணர் இலையில் கை வைத்ததும் மொத்த உணவும் காணாமல் போனது. அனைவரும் அதிர்ந்தனர். மீண்டும் உணவு பரிமாற... அதுவும் அந்த நிமிடமே காணாமல் போனது. இப்படியாக அரண்மனையில் இருந்த அனைத்து வகை உணவுகளும் காலியாயின. இறுதியாக அரசின் தானியக் களஞ்சியமும் காலியானது. தகவல் அறிந்த ஜனகர் அதிர்ச்சி அடைந்தார்.

ஐந்துகரத்தான்
ஐந்துகரத்தான்

‘இனியும் இவருக்கு உணவு வழங்க இயலாது.

என எண்ணிய ஜனகர், ‘`உணவு கேட்டீர்கள்; கொடுத்தேன். ஆனால், உங்களது பசி ஒழிந்த பாடில்லை. எனவே, தீராத பசியைத் தீர்க்கும் இடத்துக்கு தாங்கள் செல்லலாம்’’ என்றார்.

உடனே அந்தணர், ‘`வள்ளல் எனப் பேரெடுத்த நீ, என் பசியைப் போக்குவாய் என்றுதானே உன்னிடம் வந்தேன்? கொஞ்சமே கொஞ்சம் உணவைத் தந்து, எனது பசியை அதிகரிக்கச் செய்துவிட்டு, வேறு இடத்துக்குப் போ என்கிறாயே?

‘நானே பரப்பிரம்மம்... கொடுப்பதும் வாங்குவதும் நானேதான’ என்று அகம்பாவமாகப் பேசும் உனக்கு, என் பசியைப் போக்கும் சக்தி இல்லையா? உனது அர்த்தமற்ற பிரம்மத்துவத்தை நெருப்பில் போடு’ என்று கூறிவிட்டு, விறுவிறுவென வெளியேறினார்!

ஜனகர் திடுக்கிட்டார். ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று அகங்காரத்துடன் அலைந்தது தவறுதான். அந்தணர் எனக்குச் சரியான பாடம் புகட்டி விட்டார் என்று தனது தவற்றை உணர்ந்து திருந்தினார்.

திரிசிரன் என்பவரது குடிசைக்கு வந்து சேர்ந்தார் அந்தணர். அப்போதுதான், திரிசிரனும் அவரின் மனைவி விரோசனையும் விநாயக வழிபாட்டை முடித்திருந்தனர். அங்கு அவர்கள் அளித்த கைப்பிடி அறுகம்புல்லை உண்டு பசி தீர்ந்தார் அந்தணர். மறுகணம்... திரிசிரனின் குடிசை மாளிகையானது. தானியங்களாலும் பொன்- பொருளாலும் மாளிகை நிரம்பி வழிந்தது.

ஸ்ரீவிநாயகராகக் காட்சி தந்தார் அந்தணர். ஆணவத்தை அடக்கிய ஆனைமுகன் சிரித்தபடி ஜனகனையும் ஆசிர்வதித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு