Published:Updated:

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

பன்னெடுங்காலத்துக்கு முன்பு, இந்தத் தெருவில்தான் காவிரியின் கரைப் பகுதி இருந்ததாம்.

பிரீமியம் ஸ்டோரி

சோழ மண்டலத்தின் கோயில் நகரமாம் கும்பகோணத்தில், காவிரி ஆற்றின் கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், மடத்துத் தெருவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீபகவத் விநாயர் திருக்கோயில். தேடி வருவோருக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வள்ளல் இந்த பிள்ளையார்.

விநாயகர் எட்டுகோடி அவதாரங்கள் எடுத்ததாகத் தகவல் உண்டு. அவற்றில் அடங்காத திருக்கோலம் ஸ்ரீபகவத் விநாயகர் கோலம் எனும் சிறப்பு உண்டு.

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

பன்னெடுங்காலத்துக்கு முன்பு, இந்தத் தெருவில்தான் காவிரியின் கரைப் பகுதி இருந்ததாம். பிறகு அகண்ட காவிரி, தனது அகலத்தைக் குறைத்து ஓடத் துவங்கியதாகச் சொல்வர். தற்போது இங்கே கோயில் தனியாகவும், பகவத் படித்துறை என்பது தனியாகவும் அமைந்துள்ளது.

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

அஸ்தி, பூக்களாய் மாறிய அற்புதம்!

வேதாரண்யம் எனும் ஊரைச் சேர்ந்தவர் பகவர் முனிவர். இவரின் தாயார் இறக்கும் தருணத்தில், ‘நான் இறந்த பிறகு, என்னுடைய அஸ்தியை ஒவ்வொரு தலத்துக்கும் எடுத்துச் செல்வாயாக! எந்தத் தலத்தில் அஸ்தி புஷ்பமாக மாறுகிறதோ, அங்கே கரைத்துவிடு! இதுவே என் கடைசி விருப்பம்’ என்று சொல்லி மறைந்தார்.

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

அன்னையின் ஆணைப்படி அவரின் அஸ்தியைச் சிறு பானையில் எடுத்துக்கொண்டு யாத்திரை் புறப்பட்ட பகவர் முனிவர், திருக் குடந்தைக்கு வந்தபோது அஸ்தி பூக்களாய் மாறியதாம். அங்கே பானையைத் திறந்துபார்த்த சீடன் ஒருவன் உள்ளே பூக்கள் இருப்பதைப் பார்த்து வியந்தான். எனினும் `பானையை ஏன் திறந்து பார்த்தாய்' என்று குருநாதர் திட்டுவாரோ என்ற அச்சத்தில், விஷயத்தை அவரிடம் அவன் கூறவில்லை.

பகவர் காசிக்குச் சென்று பானையைத் திறந்து பார்த்தபோது, அதில் அஸ்தியே இருந்தது. அதைக் கண்டு சீடர் அதிர்ந்தார். திருக் குடந்தையில் தான் கண்ட அதிசயத்தைப் பகிர்ந்தார். அதைக் கேட்ட முனிவர், உடனே திருக்குடந்தைக்குத் திரும்பினார். காவிரி ஆற்றங்கரையில் இருந்த விநாயகரின் சந்நிதிக்கு முன்னே அஸ்தியை வைத்து, மனமுருக வேண்டினார். பிறகு அஸ்திப் பானையைத் திறந்து பார்க்க... உள்ளே பூக்கள் நிரம்பியிருந்தன!

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

இதனால், ‘காசியைவிட அதிகம் வீசம் கொண்ட க்ஷேத்திரம்’ என்பதை உணர்ந்து, சிலிர்ப்புடன் வழிபட்டாராம் முனிவர். அதையடுத்து காவிரியில் நீராடி, உரிய கிரியைகளைச் செய்து முடித்தார்.

அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக் கரையே பகவத் படித்துறை என்றும், பகவர் முனிவர் வழிபட்டதால் இந்தக் கணபதிக்கு `பகவர் விநாயகர்' என்றும் பெயர் அமைந்ததாம்.

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

தந்தங்கள் சமர்ப்பணம்...

காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் வரும்போதெல்லாம், இந்த விநாயகரை வணங்கிச் செல்வாராம். 1952-ம் வருடம், காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான சந்திரமௌலீஸ்வரன் எனும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகா பெரியவா, யானையின் இரண்டு தந்தங்களையும் ஸ்ரீபகவத் விநாய கருக்கு அளித்து வழிபட்டார். சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி முதலான வைபவங்களில் ஸ்ரீபகவத் விநாயகருக்கு, அந்தத் தந்தங்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கமாம்!

திருமேனியில் நவகிரகங்கள்

திருவுருவிலும் மிக விசேஷமானவர் இந்தப் பிள்ளையார். நெற்றியில் சூரியன், நாபியில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ் கையில் புதன், சிரசில் குரு, இடது கீழ் கையில் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் ராகு மற்றும் இடது தொடையில் கேது என நவகிரங்கள் அனைத்தையும் தன் உடலிலேயே கொண்டு விளங்குகிறார். ஆகவே, இவரை ஒருமுறை தரிசித்தாலே போதும், கிரக தோஷங்கள் யாவும் விலகும்; சந்தோஷம் பொங்கிப் பெருகும் என்பது ஐதிகம்.

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

அன்னாஜிராவ் கட்டிய ஆலயம்

சரபோஜி மன்னர் காலத்தில் கோனப்படுகை தொண்டைமான் என்ற மன்னரின் அமைச்சரவையில் தலைமை அமைச்சராக இருந்தவர், அன்னாஜிராவ். ஒருமுறை தீராத கஷ்டத்தில் தவித்த அன்னாஜி ராவ், பகவத் விநாயகரை தரிசித்து மனமுருகி வேண்டிக்கொண்டாராம். விரைவில் அவரின் வேண்டுதல்கள் பலித்து கஷ்டமும் விலகியதாம். ஆகவே அந்த இடத்தில் பிள்ளையாருக்குக் கோயில் கட்டினாராம் அன்னாஜிராவ்.

வரம் அருளும் வழிபாடுகள்

விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாள்கள் விமர்சையாக நடை பெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்வார் பிள்ளையார். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா சங்கடமும் விலகும்.

``இங்கு கணபதி ஹோமம் செய்து ஒரு காரியத்தைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் அத்துடன் சகல செளக்கியத்தையும் தருவார்.

குழந்தையின்மை, திருமணத் தடை, கடன் பிரச்னை, தீராத நோய், கடுமையான கஷ்டங்கள் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும், இங்கு வந்து இவரை வழிபட்டால் போதும்; அனைத்துப் பிரச்னை களும் நீங்கும். காலை 6.30 முதல் 11 மணி வரையிலும் மாலை 5 முதல் 8.30 மணி வரையும் இந்தக் கோயில் திறந்திருக்கும்.’’ என்கிறார், திருக்கோயிலின் சுரேஷ் குருக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு