Published:Updated:

கோதை கதை சொல்கிறாள்

கோதை
பிரீமியம் ஸ்டோரி
கோதை

`சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன் படம்: காவல்கேணி வெங்கடகிருஷ்ணன்

கோதை கதை சொல்கிறாள்

`சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன் படம்: காவல்கேணி வெங்கடகிருஷ்ணன்

Published:Updated:
கோதை
பிரீமியம் ஸ்டோரி
கோதை

கோதை நாச்சியார் பூதேவியின் அம்சம். பூமியில் வாழும் மக்களின் மீது மாறாத அன்பு கொண்டவள். அவர்கள் பகவானை அடைவதற்கான சகல நல்வழிகளையும் காட்டியருள்பவள். திருப்பாவையாய், பாசுரங் களாய்ப் பாடி வழிகாட்டியவள்.

அவள் பாசுரங்கள் பகவானைப் போற்றும். அதே வேளையில் பக்தர்களாகிய நமக்குப் பின்பற்றவேண்டிய வழியைக்காட்டும். எப்படி ஒரு குழந்தைக்குத் தாயானவள் நற்கதைகளைச் சொல்லி வழிநடத்துவாளோ, அதேபோன்று புராண நிகழ்வுகளைச் சொல்லி பகவானின் கல்யாணக் குணங் களையும் காருண்யத்தையும் விளக்கு கிறாள் கோதை நாச்சியார்.

அவ்வாறு அவள் சொல்லும் ஒரு வரியில் ஓராயிரம் தத்துவங்கள் அடங்கும். நாம் அறிந்த பாசுரத்தில் ஆண்டாள் சுட்டிச்செல்லும் சம்பவங்களை அறிந்துகொள்வதன் மூலம் பகவானை அறியும் மார்க்கத் தையும் தெரிந்துகொள்ளலாம். இதோ கோதை கதை சொல்கிறாள் நமக்காக...

திருப்பாவையின் 24 வது பாசுரம் ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று தொடங்குவது.

இந்தப் பாசுரத்தின் முதல் ஆறு வரிகளும் ‘போற்றி,’ ‘போற்றி’ என்று முடிகின்றன.

கோதை கதை சொல்கிறாள்

இந்த ஆறு வரிகளிலும் ஆறு தத்துவங்கள் அடங்கியுள்ளன. அவற்றை ஆண்டாள் கதைகளாய்ச் சுட்டிக்காட்டுகிறாள்.

சுவாமி வாமன அவதாரம் எடுத்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். இந்தக் கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். நாராயண பட்டத்ரி, தான் எழுதிய நாராயணீயத்தில் இதில் என்ன விசேஷம் என்று விவரிக்கிறார்.

ஒருமுறை, மகாபலிச் சக்கரவர்த்தி இந்திர னோடு போரிட்டபோது இறந்துபோனான். உடனே அவனைச் சுக்கிராச்சாரியார் தன் மந்திர சக்தியால் உயிர்ப்பித்தார்.

விஸ்வஜித் என்னும் யாகம் செய்து மகாபலிச் சக்கரவர்த்திக்கு எல்லாவிதமான சக்தியையும் கொடுத்தார். சக்தி கிடைத்ததும் பலிச்சக்கரவத்தி தேவர்கள் அனைவரையும் அடித்துவிரட்டி அவர்களுக்கு இருக்க இடமில்லாமல் செய்துவிட்டான்.

இதை நாராயண பட்டத்ரி குறிப்பிடும்போது,

‘சக்ரேண ஸம்யதி ஹதோபி பலிர் மஹாத்மா

சுக்ரேண ஜீவித தனு; க்ரதுவர்திதோஷ்மா’ என்கிறார்.

இதன் பொருள், `சக்ரனால் போனது சுக்கிரனால் வந்தது' என்பதாகும். சக்ரன் என்றால் இந்திரனைக் குறிக்கும்.

தன் குருவான சுக்கிரனால் சகலமும் பெற்ற மகாபலி யாகம் செய்யும்போது பகவான் அவனை நோக்கித்தானே வருகிறார்.

`வந்திருப்பது யார்' என்று சுக்கிராச்சார்யர் மகாபலிக்குத் தெரிவிக்கிறார். மேலும் மகாபலி பிரகலாதாழ்வாருடைய பேரன் அல்லவா... அவனே பகவான் வந்திருப்பதை உள்ளூர உணர்ந்திருப்பான்தான்.

அப்படியிருந்தும் பகவான் அவனிடம், “என் காலினால் மூன்றடி நிலம் கொடுத்தால் போதும்” என்று கேட்கிறார். இதைக் கேட்டதும் மகாபலிக்கு ஆணவம் தலைக்கு ஏறிவிட்டது.

“விச்வேஷம் மாம் - கிம் யாசஸே பாலிசஸ்த்வம்” என்று பதில் சொல்கிறான் மகாபலி.

`சகல உலகுக்கும் அரசன் நான். என்னிடம் போய் என்ன கேட்கிறாய்...'' என்பது இதன் கருத்து. அதாவது, `பெரும் அரசன் ஒருவனிடம் இந்தச் சின்ன விஷயத்தையா தானம் கேட்பது முட்டாள்தனமாக இருக்கிறதே' என்பதாக இருந்தது அவன் எண்ணம். எனில், அவனுக்கு ஆணவம் எந்த அளவில் இருந்திருக்கும்.

யார் வேண்டுமானாலும் அப்படிக் கருதலாம். ஆனால் பிரகலாதாழ்வாரின் பேரன் அப்படிக் கருதலாமா... எண்ணலாமா?

பின்னர் என்ன நடந்தது. தானம் அளிக்க முன்வந்தான் மகாபலி.

சுக்கிரர் தடுத்தார். ஆனால் அவன் அவரின் வார்த்தைகளைச் செவிமடுக்கவில்லை. எனவே சுக்கிரர் கோபம் கொண்டு,

‘எவற்றையெல்லாம் நீ பெற்றாயோ அவற்றை யெல்லாம் இழக்கக் கடவாய்’ என்று சாபம் இட்டார்!

குருவின் சாபம் பலிக்காமல் இருக்குமா? சாபம் பலித்தது.

பலிச் சக்கரவர்த்தியின் வாழ்க்கை நமக்கெல் லாம் ஒரு பாடம். குருவருள் இருந்தால் இழந்தது எதுவானாலும் (அது உயிரே ஆனாலும்) பெற்று விடலாம். அதேவேளையில், ஆணவம் உண்டானால் குருவின் அருள் நீங்கும்; அதுவே சாபமாக மாறி அழித்துவிடும்.

பலியின் கதையில் பின்னர் நடந்த விஷயங்கள் அனைவருக்கும் தெரியும். பகவான் வாமனர் திரிவிக்ரமனாக மாறி, அன்றே இவ்வுலகை அளந்தார். இதையே கோதை நாச்சியாரும் பாடினாள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாசுரத்தின் அடுத்த வரி, ‘சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி’ என்பது.

அயோத்தியிலிருந்து இலங்கைக்கு நடந்தே சென்றான் இறைவன். ஏன் நடந்தே சென்றான்... குகனுக்கு அருள், சுக்கிரீவனுக்கு அருள், அனுமனுக்கு அருள், விபீடணனுக்கு அருள் என்று செல்லும் வழியெங்கும் அருள்மழை பொழிந்துகொண்டே அல்லவா அந்த கார்மேக வண்ணன் நடந்தார்.

கோதை கதை சொல்கிறாள்

ஆனால் இவற்றையெல்லாம் அறிந்திருந்தும், ‘முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா’ என்பதுபோல பிடிவாதமாய்ச் செயல்பட்டவன் ராவணன். அதனால்தான் ‘சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்’ என்கிறாள் கோதை ஆண்டாள்.

அரக்கனோ, மனிதனோ ஆணவம் கொண்டால் தெய்வம் அழிக்கும். ஆள்பவர்களிடத்தில் `நான்' என்கிற கர்வம் இருக்கக்கூடாது. ‘நான் என்று நினைக்காதே தெய்வம் தான் என்று காட்டிவிடும்’ எனும் கண்ணதாசன் வரிகளைப் போல, ராவணன் கர்வம் கொண்டபோது ராமன் அவனைப் போரிட்டு அழித்தார்!

ஆள்பவர்களுக்கு ஆணவம் கூடாது சரி. நமக்கு... இன்று மன்னராட்சி இல்லை. நாம் அனைவருமே இந்நாட்டு மன்னர் என்றுதானே சொல்லிக் கொள்கிறோம். அப்படிப் பார்த்தால் நாம் ஒவ்வொருவருமே ஆணவம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் சூட்சுமமான உண்மை.

`பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி’ என்று அடுத்த வரியில் பகவானைத் துதிக்கிறாள் ஆண்டாள்.

ஒரு மாட்டுவண்டி. அதன் இரண்டு சக்கரங்களுக்கு நடுவே ஒரு தூளி கட்டி, அதில் குழந்தைக் கண்ணனைப் போட்டு வைத்திருக்கிறார்கள். அப்போது சகடாசுரன் என்னும் அசுரன் கண்ணனைக் கொல்லத் திட்டமிட்டான்.

அந்த வண்டியின் சக்கரம் ஒன்றில் புகுந்து விட்டான். இந்தக் கபட வேலைகள் எல்லாம் கிருஷ்ணனிடம் நடக்குமா? தன் காலால் அந்தச் சக்கரத்தை உதைத்தார். அவர் கால்களே அந்தக் கணத்தில் சக்கராயுதம்போலானது. வண்டிச் சக்கரம் துண்டு துண்டானது. அசுரன் மாண்டான்.

இதில் ரகசியம் என்னவென்றால், அந்த சகடாசுரன் அதாவது சக்கரம் வேறு எதுவுமல்ல காலச்சக்கரமே. நாராயண பட்டத்ரி, ‘துர்வாரம் த்வாதஸ ஆரம்’ என்கிறார்.

இந்தக் காலச்சக்கரம் இருக்கிறதே அதற்குப் பன்னிரண்டு பகுதிகள், அதாவது பன்னிரு மாதங்கள் கொண்ட வட்டம்; மீண்டும் மீண்டும் வருவன. இந்தக் காலச்சக்கரத்துக்குள் சிக்கி இருப்பவர்கள் நாம். ஆனால் அதைத் தன் காலடியில் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன் பகவான் கிருஷ்ணன்.

அவன் காலடி பட்டால் நம் காலச்சுழல் உடைந்துவிடும் என்பது மறைபொருள். அதனால்தான் `சகடத்தை உதைத்த கிருஷ்ணா உன் புகழ் போற்றி' என்று பாடுகிறாள் கோதை.

‘கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி’ என்று அடுத்த வரியில் போற்றுகிறாள் ஆண்டாள். இந்த வரியில் அவள் கண்ணனின் கழல்களைப் போற்றுகிறாள்.

வத்ஸாசுரன் என்னும் அசுரன் குழந்தைக் கண்ணனைக் கொல்ல வருகிறான். அதுவும் ஒரு கன்றாக உருமாறிவருகிறான். ஆயர்கள் வாழும் இடத்தில் கன்றுகளுக்கா பஞ்சம். எனவே கன்றாக மாறினால் அடையாளம் தெரியாமல் சென்று கண்ணனை அழித்து விடலாம் என்று திட்டமிட்டான்.

அதே நேரம் கபித்தாசுரன் என்பவன் விளா மரமாக மாறி நின்றான். விளாமரம் கனிகள் நிறைந்து காணப்பட்டது. கண்ணனின் தோழர்கள் எல்லாம் அந்த மரத்தின் கனியைக் கண்டு ஆசைப்படுகிறார்கள்.

அப்போது அந்த இடத்துக்கு வத்ஸாசுரன் கன்று வடிவாக வருகிறான். கிருஷ்ணன் கன்றின் பின்னங் கால்களைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி விளா மரத்தின் மீது எறிந்தான். மரம் சாய்ந்தது. கன்றும் மாண்டது. இருவரும் அசுர வடிவுக்கு மாறி உயிர்துறந்தனர்.

இதில் தத்துவ ரகசியம் என்னவென்றால் பகவானைத் தோழனாக்கிக் கொண்டால் நம் நல்வினை தீவினை ஆகிய இருவினையும் நீங்கிப் போய்விடும். தன் அடியவர்களை பகவான் இரண்டு வினைகளிலிருந்து விலக்கிக் காப்பான் என்றும் பொருள் சொல்லலாம்.

அடுத்த வரியில் கண்ணனின் மற்றொரு லீலையான, கோவர்த்தன கிரியைத் தூக்கிய நிகழ்வைப் பாடுகிறாள் கோதை.

கோகுலத்தில் வழக்கமாக இந்திரனுக்குப் பூஜைகள் செய்வது வழக்கம். கிருஷ்ணன் அவர் களிடம், ``நம்மை அனுதினமும் காக்கும் இந்த கோவர்த்தன கிரியையே நாம் வழிபடலாம்'' என்கிறான். ``கிரியும் உங்கள் பூஜையை ஏற்கும்'' என்றும் சொல்கிறான்.

கோகுல வாசிகள் கோவர்த்தன கிரிக்குச் செய்த பூஜைகளை, அந்தக் கிரியில் அந்தர்யாமியாக நின்று அவனே ஏற்றுக்கொண்டான். தனக்குக் கிடைக்கவேண்டிய பூஜைகளை கிருஷ்ணன் தடுத்துவிட்டதை அறிந்த இந்திரன், ஏழு மழை மேகங்களை அனுப்பி கோகுலத்தையே வெள்ளத்தில் மூழ்கடித்துவிட உத்தரவிட்டான்.

கோகுலத்தில் பெருமழை பொழிந்தது. கோகுலவாசிகள் கிருஷ்ணனைச் சரண் அடைந்தனர். கிருஷ்ணனோ, கோவர்த்தன கிரியைத்தானே பூஜை செய்தோம், அதுவே நம்மைக் காக்கும் என்று சொல்லி, மலையைத் தூக்கித் தன் விரலின் நுனியில் குடை பிடிப்பதைப்போல நிறுத்தினான்.

ஆயர்குல மக்களும் விலங்குகளும் அந்த மலை நிழலில் ஒடுங்கித் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். ஏழு நாள்கள் மழைபெய்து மேகங்கள் எல்லாம் தீர்ந்துபோனபின்பு மலைக்குக் கீழ் தங்கியிருந்த உயிர்கள் எல்லாம் மலைக்குக் கீழிருந்து வெளியேறிப் போயின. பின்பு கண்ணன் மலையை இறக்கிவைத்தான்.

இதையெல்லாம் பார்த்தான் இந்திரன். சிறுவன் என்று நினைத்தோமே, இவனல்லவா அந்த வாசுதேவன் என்று உணர்ந்து ஓடிவந்து கண்ணனின் பாதங்களைப் பணிந்து, அவனுக் குப் பட்டாபிஷேகமும் செய்துவைத்தான். அதுவே கோவிந்த பட்டாபிஷேகம் என்று போற்றப்படுகிறது.

இன்றைக்கு நாமெல்லாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் அவற்றையெல்லாம் வழிபாடாக்கி வைத்துப் பாதுகாத்துவந்தனர்.

மலைகள், அருவிகள், ஆறுகள், மரங்கள் எல்லாவற்றையும் இறை சக்தியாக பாவிக்கும் தன்மையை உணர்த்தும் வைபவங்களே வழிபாடுகள். இவற்றை முறையாகப் பராமரித்தால் நம் சூழலை அவை பாதுகாக்கும். இல்லையேல் நமக்கு வேறு கதியில்லை.

தேவேந்திரன் என்பவன் நம் இந்திரியங்களின் அதிபதி. இந்திரியங்களால் ஆன நாமே தேவேந்திரர்கள். அவற்றின் விருப்பங்களுக்கு ஏற்ப நாம் நடந்துகொண்டால் உண்டாகும் தீய விளைவுகள்தான் மழை.

தீய விளைவுகளான பெருமழை நம்மை அழிக்காமல் இருக்கவேண்டும் என்றால் நாம் தெய்வத்தின் நிழலில் சரணடைய வேண்டும். அப்போது, தெய்வம் அருள்செய்து நம்மைக் காக்கும். இதில் சந்தேகமே கிடையாது.

இந்திரனின் அகங்காரம் போக்கியதால் உண்டான விழாவே போக்கிப் பண்டிகை என்று ஆகி, பின் போகிப் பண்டிகை ஆனது.

அடுத்த வரியில் நாச்சியார், ‘வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி’ என்று பாடுகிறாள்.

பகவானின் கை வேல் பகைவர்களை அழிப்பதற்காக அல்ல. பகையைக் கெடுப்பதற் காக. நியாயம் கேட்டு வந்திருப்பவன் இறைவன் என்று தெளிந்து, தன் பகையை மாற்றிக் கொண்டால் நல்லது.

அவ்வாறு இல்லாமல் எதிர்த்தால் முதலில் அவனுள் இருக்கும் பகைத் திறம் அழியுமாறு செய்வார். அதிலும் அவன் அகந்தை அழியாமல் எதிர்த்து நின்றால்தான் அவனை சம்ஹாரம் செய்வார்.

அப்படித்தான் மகாபலியும் ராவணனும், சகடாசுரனும், வத்ஸாசுரனும் அழிந்தனர். ஆணவத்தை விட்டுச் சரணடைந்த இந்திரன் பிழைத்தான். எனவே கிருஷ்ணரின் கை வேலின் வேலை பகை கெடுப்பதுதானே அன்றி, அழிப்பது அல்ல.

ஏன் இந்தப் பாசுரத்தில் ஆறு போற்றிகள்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆறு பகைகள் உள்ளன. ஆறில் ஒன்று இருந்தாலே நாம் கெடுவோம். ஆறும் இருந்தால்... என்னவாகும்?

சரி... அதென்ன ஆறு பகைகள்?

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகியவையே ஆறு பகைகள். இந்த ஆறு பகைகளும் கெட வேண்டும். இவை கெட்டுவிட்டால் இறைவனை அடைந்துவிடலாம். ஏதேனும் ஒன்று கெட மறுத்தாலும் பகவானின் கை வேல் அதைக் கெடுத்து, நம்மைக் காக்கும் வல்லமையுடையது.

எனவேதான் ஆண்டாள் நாச்சியார் நமக்காக இறைவனிடம், இந்த ஆறு பகைகளையும் நீக்கி உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வோம் என்று போற்றிப் பாடுகிறாள்.

“கிருஷ்ணா, நாங்கள் உன் சந்நிதிக்கு வந்து பாடி நிற்பதன் காரணம், உன் அருள் பெறுவ தற்காகவே. அதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் நாங்கள் செய்வோம். எங்களுக்கு இரக்கம் காட்டி அருள வேண்டியது உன் கடமை” என்று வேண்டுகிறாள் நாச்சியார்.

ஆண்டாள் நாச்சியார் நம் தாயார். நமக்காகவே இறைவனின் அருளை வேண்டி நிற்கிறாள். அவள் சொல்லும் கதைகளில் ஒழிந்திருப்பவை ஆயிரம் ஆயிரம் உள்ளர்த்தங்கள். அவற்றை உணர்ந்து இந்த மார்கழியில் அந்த மாயவனைச் சரணடைவோம்.

கண்ணா போற்றி!

அன்று இவ்வுலகம்

அளந்தாய் அடி போற்றி

சென்றங்குத் தென்னிலங்கை

செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடம்

உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய்

கழல் போற்றி

குன்று குடையாய்

எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகைகெடுக்கும்

நின்கையில் வேல் போற்றி

என்றுஎன்றுஉன் சேவகமே

ஏத்திப் பறை கொள்வாய்

இன்று யாம் வந்தோம்

இரங்கேலோர் எம்பாவாய்

ஆறு போற்றிகளால் பகவானைப் பாடும் இந்தப் பாசுரத்தை அனு தினமும் படித்து வழிபட்டால், நம் அறியாமைகள் நீங்கும்; அதனால் நம்முடைய வினைகள் யாவும் நீங்கி நம் வாழ்வு சிறக்கும்!