திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

ஆணவமே உன்னை அழித்தது...

 கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன்

கிருஷ்ணர் கொடுத்த சக்ராயுதத்தை மிகக் கம்பீரமாக ஏந்தியவன், அதைப் பிரயோகிக்க முனைந்தான். ஒரு சுழற்று சுழற்றினான்.

யதுகுல நாயகனாம் கண்ணனின் நண்பன் மாலிகன். மாலிகனுக்கு சகல கலைகளையும் கற்றுத் தந்தான் கண்ணன்.

கண்ணனிடமே கலை கற்றதால் உண்டான கர்வமும், அளவிலா ஆற்றல் பெற்று விட்டோம் என்ற அகந்தையும் அவனை ஆட்டிப் படைத்தன. மாலிகனின் வாழ்வில் விளையாடியது விதி. அது, விபரீத ஆசையாக அவனுள் புகுந்தது!

`கண்ணனிடம் சக்ராயுதம் பிரயோகிக்கவும் பயிற்சி பெற வேண்டும்' என்றும் ஆசை கொண்டான். அதை கண்ணனிடம் கேட்டும் விட்டான். உடனே கண்ணன் `சக்ராயுதப் பிரயோகம் என்பது அபாயகரமானது. எனவே, அந்த ஆசை உனக்கு வேண்டாம் மாலிகா'' என்று புத்திமதி கூறினார். ஆனால், கண்ணனது இந்த நல்லுரைகளை மாலிகன் ஏற்கத் தயாராக இல்லை. கற்றேயாக வேண்டும் என்று அடம்பிடித்தான். இனி, என்ன கூறினாலும் அதை ஏற்கும் மனோநிலையில் மாலிகன் இல்லை என்பதை கண்ணன் புரிந்துகொண்டார்.

வேறு வழியின்றி சக்ராயுதப் பிரயோகப் பயிற்சிக்கு சம்மதித் தார். கிருஷ்ண பகவான் சக்ராயுதத்தை விரலில் ஏந்தினார். தனது விரலால் ஒரு சுழற்று சுழற்றி, இலக்கை நோக்கி ஏவினார். சுழன்று மேலெழும்பிய அந்த வீரச் சக்கரம் காற்றில் விரைந்து பயணித்தது. மிகச் சரியாக இலக்கைத் தாக்கிய பிறகு, மறுபடியும் கிருஷ்ணரின் விரலை வந்தடைந்தது.

 கண்ணன்
கண்ணன்

சக்ராயுதத்தின் வேகத்தையும், கிருஷ்ணர் அதை ஏவிய லாகவத்தையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் மாலிகன். அடுத்து அவன் முறை!

கிருஷ்ணர் கொடுத்த சக்ராயுதத்தை மிகக் கம்பீரமாக ஏந்தியவன், அதைப் பிரயோகிக்க முனைந்தான். ஒரு சுழற்று சுழற்றினான். விண்ணில் எழும்பியது சக்கரம். குதூகலம் அடைந்தான் மாலிகன். `ஆஹா... சாதித்து விட்டோம். இனி, இரண்டு கண்ணன்கள். யது குலத்தை நானும் ரட்சிப்பேன்!' - ஆணவம் தலைதூக்க... தன்னிலை மறந்தான்.

திரும்பி வரும் சக்ராயுதத்தை ஏற்க, விரலைத் தயாராக வைத்திருக்க வேண்டியவன், நிலையிழந்து ஆச்சர்யத்தால் கரத்தை தனது முகவாயில் வைத்து நின்றிருந்தான்! இதனால், மாலிகனின் கரத்தை அடைய வேண்டிய சக்ராயுதம் அவன் கழுத்தை துண்டித்தது. தலை வேறு உடல் வேறாக மண்ணில் வீழ்ந்தான் மாலிகன். அவன் உடல் அருகே மண்டியிட்டு அமர்ந்தார் கிருஷ்ணர். கண்ணில் நீர் பெருக... `மாலிகா... உன்னை அழித்தது சக்ராயுதம் அல்ல. உனது ஆசையும் ஆணவமுமே உன் உயிரைக் குடித்தன!' என்றார்.

- ஆர்.அலமேலு, சென்னை-85