திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

`மனம் மொழி மெய்யாலே...’

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகன்

திருப்புகழ் மதிவண்ணன்

ஜூன் - 4: வைகாசி விசாகம்

லியுக வரதனாக விளக்கும் கந்தப் பெருமானின் அவதார சுப தினமாக வைகாசி விசாக நன்னாள் ஆராதிக்கப்படுகிறது.

`ஞாலம் ஏற்றி வழிபடும் ஆறு பேர்க்கு மகவென நாணல் பூத்த படுகையில் வருவோனே’ என்று திருப்புகழும், `பூமிக்கோர் ஆறுதலையாய் வந்து சரவணப் பொய்கைதனில் விளையாடியும்’ என்று குமரேச சதகமும் சரவணத்தில் உதித்த முருகப் பெருமானைப் போற்றி மகிழ்கின்றன.

ஆறுமுகனைக் கொண்டாடும் பண்டிகைகளும் ஆறாகவே அமைந்திருப்பது அதிசயம்தானே. அவை: வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம். சரவணம் என்னும் தர்ப்பைக் காட்டிலே கார்த்திகை மாதர்கள் ஆறு பேர் கரங்களில் ஆறு மழலைகளாக உருப்பெற்றான் முருகன். பின்னர் பரமசிவனோடு வந்த பார்வதி ஆசை மீதூர ஆறு குழந்தைகளையும் ஒரு சேரத் தழுவியதால், ஓருடல் - ஆறுமுகம் என கந்தவேள் ஜனனம் நிகழ்ந்தது.

`மனம் மொழி மெய்யாலே...’

‘கையால் எடுத்தணைத்துக் கந்தன் எனப் பேர் புனைந்து மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்து’ என்று குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில் திருமுருகன் அவதார மகிமையை மொழிகின்றார்.

தந்தை தாய் பெயரைச் சொல்லி ‘இன்னாரின் புதல்வன்’ எனச் சொன்னால் பெற்றோர்களுக்குத் தான் பெருமை போய்ச் சேரும். ஆனால் குழந்தையைச் சுட்டிக்காட்டி அம்மா அப்பாவை அறிமுகப்படுத்தினால் புதல்வனுக்குத்தானே புகழ்போய்ச் சேரும்.

முருகப்பெருமான் அத்தகைய சிறப்பைப் பெற்றவன் என்பது திருமுறைப் பாடல்கள் மூலம் தெளிவாகின்றது.

‘செந்தூர்மேய நம் வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்!’ என்றும் ‘நம் கடம்பனைப் பெற்றவள்’ என்றும் பரமேஸ்வரன் - பார்வதியை தேவாரம் பாடுகிறது. இதன் மூலம் வேலனின் பெருமையை விளக்கமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

வேதம், சுப்ரமண்யனின் புகழ் பாடுகிறது. வேதகாலத்துக்குப் பின் பகவத்கீதையிலும் முருகன் புகழைப்பேசுகிறார் கிருஷ்ண பகவான். `சேனைத் தலைவர்களிலே நான் கந்தப் பெருமானாக விளங்குகிறேன்' என்கிறார்.

முருகன்
முருகன்

வேதம், கீதைக்குப் பிறகு ஆதிசங்கரர் வாழ்ந்த காலம். அவர், சுப்ரமண்ய புஜங்கம் பாடி ‘முருகப் பெருமானைப் போய் விரைவாக அருள் வழங்கும் மூர்த்தியை நான் அறிந்ததில்லை' என்றே அழுத்தம் திருத்தமாகப் பாடுகிறார்.

இங்ஙனம் வடமொழி ஞானநூல்கள் வடிவேலனைப் போற்றுகின்றன என்றால், தென்மொழியாம் செந்தமிழிலோ சங்கத் தமிழின் கடவுள் வணக்கமாகவே நக்கீரர் பாடி அருளிய திருமுருகாற்றுப்படை விளங்குகிறது.

பின், வடமொழி ஸ்காந்தத்தைக் கச்சியப்பர் ஆறு காண்டமாக ஸ்ரீகந்தபுராணம் என்றே 10,345 பாடல் பாடி காவியமாகத் தந்துள்ளார்.

கார்த்திகேயனின் புகழ் பாடுவதற்கென்றே காசினியில் 15-ம் நுாற்றாண்டில் அவதரித்த கந்த கவிராஜராக ஸ்ரீமத் அருணகிரிநாதர் போற்றப்படுகிறார். அவர் ஆறுமுகனைப் போற்றி மகாமந்திரத் திருப்புகழ் 16,000 வழங்கி உள்ளார். ஆனால், தற்போது கிடைத்துள்ளவை 1,300 பாடல்கள் மட்டுமே.

அருணகிரிநாதர் பதினாறாயிரம் என்றே

உரை செய் திருப்புகழை! ஓதீர் - பரகதிக்கு

அஃது ஏணி! அருட்கடலுக்கு ஏற்றம்!

மனத்தளர்ச்சிக்கு ஆணி! பிறவிக்கு அரம்!

வேதம் வேண்டாம்! சகலவித்தை வேண்டாம்!

கீத நாதம் வேண்டாம்! ஞானநுால் வேண்டாம் - ஆதி

குருப்புகழை மேகின்ற கொற்றவன் தான் போற்றும்

திருப்புகழைக் கேளீர் தினம்

என்று புலவர்கள் திருமுருகன் திருப்புகழை யும் அருணகிரியாரை யும் வியந்து போற்று கிறார்கள். நக்கீரர், கச்சியப்பர், அருணகிரி நாதருக்குப் பிறகு குமரகுருபரர், பகழிக் கூத்தர், இராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், கவிகுஞ்சர பாரதியார், தேவரா சுவாமிகள் என ஒருவரா... இருவரா... இன்று வரை விசாகனைப் போற்றி வியக்காத கவிஞர்களே இல்லை என்று கூறிவிடலாம்.

`மனம் மொழி மெய்யாலே...’

வாழ்த்துபவர்களை மட்டுமல்ல, தமிழ்த் தெய்வம் என்று போற்றப்படுகிற முருகன், ‘முத்தமிழாய் வைதாரையும் அங்கு வாழவைப் போன்’ என்று கந்தர் அலங்காரச் செய்யுளால் சிறப்பிக்கப்படுகிறார்.

பார்வதி ஆசை மீதூர ஆறு குழந்தைகளையும் ஒரு சேரத் தழுவியதால், ஓருடல் - ஆறுமுகம் என கந்தவேள் ஜனனம் நிகழ்ந்தது!

அவ்வாறே துதிக்கும் பக்தர்களுக்கு மட்டுமல்ல எதிர்க்கும் பகைவர்களுக்கும் வாழ்வளிக்கும் பண்பாளராக கருணா மூர்த்தியாக விளங்குகிறார். ஆலயங்களில் முருகவேளை நாம் வணங்கும்போது அவனது வாகனமான மயிலையும் அவனது கொடியாகிய சேவலையும் வணங்குகிறோம்.

`சேவலும் மயிலும் போற்றி ஆடும் பரிவேல் அணிசேவல் என பாடும் பணியா பணியாய் அருள்வாய்' என்று துதிக்கிறோம்.

`மனம் மொழி மெய்யாலே...’

தன்னை எதிர்த்த சூர பத்மனைத்தான் சேவலும், மயிலுமாக மாற்றி மறக்கருணை புரிந்து ஆட்கொண்டார் முருகன் என்கிறது கந்த புராணம். முத்தமிழால் வைதவர்க்கும் எதிர்த்து போரிட்டவர்க்குமே கருணைபுரிகிறார் கந்தவேள் என்றால் தினமும் வழிபாடு செய்யும் நம்மவர்களுக்கு அவர் புரியும் நலங்கள் எண்ணற்ற வையாக இருக்குமல்லவா... அதனால்தான் இராமலிங்க அடிகள் தெய்வ மணி மாலையில் பாடுகிறார்...

நீருண்டு பொழிகின்ற

காருண்டு விளைகின்ற

நிலன்உண்டு! பலனும் உண்டு!

நிதியுண்டு துதியுண்டு

மதியுண்டு கதி கொண்ட

நெறியுண்டு நிலையும் உண்டு

ஊருண்டு பேருண்டு

மணியுண்டு பணியுண்டு!

உடையுண்டு! கொடையும் உண்டு!

உண்டு உண்டு மகிழவே

உணவு உண்டு! சாக்தம் உறும்

ஊம் உண்டு! வளமும் உண்டு!

தேருண்டு! பரியுண்டு!

கரியுண்டு! மற்றுள்ள

செல்வங்கள் யாவும் உண்டு!

அள்ளிக்கொடுக்கின்ற வள்ளல் பெருமானாக கலியுக வரோதயாராக கந்தப் பெருமான் திகழ்கிறார்.

`அதனால்தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை. சுப்ரமண்யருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை' என்ற பழமொழி மூலமும் நம்மவர்கள் பாராட்டி மகிழ்கின்றனர். 27 ஆக இலங்குகிற நட்சத்திரக் கூட்டத்திலே ‘விசாகம்’ 16-வதாக அமைந்துள்ளது. எனவே, வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானை மனம் மொழி மெய்யால் ஒரு சேர வணங்கினால் 16 பேறுகளையும் 12 கரங்களாலும் பக்தர்களுக்கு வழங்குவான் வடிவேலன் என்பது நிச்சயம்.

அதனால்தான் பாம்பன் சுவாமிகள் இவ்வாறு பாடுகிறார்.

பக்தியும் ஞானமும்

பரவிடும் மார்க்கம்

எத்தனையோ வகை

இருக்கினும் அவற்றுள்

முக்தி தந்து அனுதினம்

முழுப்பலன் நல்க

சத்தியம் ஆவது

‘சரவண பவ’ வே

முருகனின் கண்கள்!

முருகனின் வலப்புறம் வள்ளிதேவி தாமரையுடனும் இடப்புறம்- தெய்வானை நீலோற்பல மலருடனும் காட்சி தருவார்கள். இதுகுறித்து சுவாரஸ்யமாக விளக்கம் சொல்வார் வாரியார்.

``எம்பெருமானின் வலக் கண்- சூரியன்; இடக் கண்- சந்திரன். சூரியனின் ஒளி பட்டு மலர்வது தாமரை; சந்திரனின் ஒளிபட்டு 60 நாழிகைகள் மலர்ந்திருப்பது நீலோற்பலம். ஆகவேதான் முருகனுக்கு வலப்புறம் நிற்கும் வள்ளியம்மை தாமரையுடனும், தெய்வானை நீலோற்பலமும் கொண்டு காட்சி தருகிறார்கள். சிலர், இரண்டு தேவியரும் தாமரை மலர்களையே வைத்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள். அது தவறு. தேவியரின் கரங்களில் இருக்கும் மலர்கள்- முருகனின் பார்வையால் அவன் அடியவர்களின் வாழ்க்கை மலரும் என்பதை உணர்த்தும்'' என்பாராம்.

- ஜெயலட்சுமி கோபாலன், சென்னை-64