பிரீமியம் ஸ்டோரி

ந்தனின் கதையை எப்போது கேட்டாலும் செவிக்கு இனிக்கும். அறம், பொருள், இன்பம் மூன்றும் அருளும் ஒப்பற்ற காவியம் அது; இம்மைக்கும் மறுமைக்கும் அருள் சேர்ப்பது. நம் சிந்தைக்கு விருந்தும் வாழ்வுக்கு மருந்துமான கந்த காவியத்தை எளிய வடிவில் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் சிறு முயற்சியே இந்தத் தொடர்.

முதல் வணக்கம்...

தத்துவப் பொருளே

வித்தகக் கணபதி...

பாரதக் கதை அருள

தந்தம் உடைத்த நாயகனே

கந்தனின் கதை பகர

வந்தெமக்கு அருள்வீர்!

தட்ச யாகம்

மறை போற்றும்

இறை தவிர்த்து

அறம் கூறும்

விதி விடுத்து

யாகம் ஒன்று

நிகழ்ந்தது

அதனால்

சாபம் ஒன்று

விளைந்தது

தட்ச யாகம் அழிவுபட

அமரர்குலம் சிதறுபட

உயர்ந்தது

அவுணர் குலம்;

உலகம் இருண்டது

உயிர்கள் மருண்டன!

கந்தன் வந்தான்!

காம தகனம்!

புவி காக்க சிவம்

தவம் விடுக்க மலர்க்

கணை தொடுக்க

வேண்டுமென

அமரர் மனு விடுக்க...

மதன் மயங்கினான்

மனம் கலங்கினான் பின்

நிலை தெளிந்து

கரும்பு வில்லெடுத்தான்

மலர்க் கணை தொடுத்தான்!

விதி சிரித்தது

சிவம் விழித்தது

விழி எரித்தது

மனம் பதைத்தது;

அமரர் மனம்

பதைத்தது.

வெவ்வினை தீரவே

இவ்வினை நேர்ந்தது

எம்வினை தீரவே

இன்னருள் புரிகவென

காமினி

கண் கசிந்தாள்;

கயிலையான்

மனம் கனிந்தார்.

கந்தன் வந்தான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதனவள் வசப்பட

இன்னருள் புரிந்தார்

அமரர்கள் இசைபட

தண்ணருள் பொழிந்தார்...

விரைவில் சிவசக்தி

கூடுமென்றார்.

விலகும்

துயரமென்றார்.

கந்தன் உதித்தான்!

காலம் கனிந்தது

வைகாசி வந்தது

விசாகம் பிறந்தது.

விழியாறு திறந்தன

பொறியாறு பிறந்தன!

இமை விழிப்பில்

உடல் தகிக்க

உமை தவிக்க

பதறின ஐம்புலன்கள்

சிதறின அவள்

சிலம்பின் பரல்கள்!

சிவச் சித்தம்

கூடினால்

மண்ணும்

பொன்னாகுமே;

இங்கு பரல்கள்

பெண்ணாகின!

அவரிடத்து

சிவவித்து

நவமுத்தைத்

தந்தது.

வீரவாகு

வீரகேசரி

வீரமகேந்திரன்

வீரமகேசன்

வீரபுரந்திரன்

வீரராட்சசன்

வீரமார்த்தாண்டன்

வீரராந்தகன்

வீரதீரன் - ஆகிய

முத்துக்கள் ஒன்பதும்

முருகெனும் அணி சேர

வேண்டாமா;

அமரர்தம் பிணிதீர

வேண்டாமா?

சிவன் ஆணை பிறந்தது!

 தவழ்ந்தன குழந்தைகள் ஆறு!

சிவன் ஆணை ஏற்று

இருபூதம் இணைந்து

பொறியாறைச் சுமந்து

பொய்கையில் சேர்த்தன.

சரவணப்

பொய்கையில்

பூக்களில் பொறிகள்

குழந்தையாய்த் தவழ்ந்தன.

தாமரைப் பூக்கள்

தாலாட்ட

தாரகைப் பெண்கள்

பாலூட்ட

வளர்ந்தன குழந்தைகள்

நகர்ந்தன நாள்கள்.

வந்தாள் அன்னை

அழைத்தாள் அருகில்

அணைத்தாள் அன்புடன்

ஓராறு முகமும்

ஈராறு கரமுமாய்

ஆறும் ஒன்றானது

உருவில் திருவானது

`கந்தா’ என்றாள் அன்னை

`கடம்பா’ என்றார் தந்தை

`மருகா’ என்றார் மாயோன்

`முருகா’ என்றது தமிழ்!

இன்னும்...

குகன்

குமரன்

குருபரன்

சரவணன்

கார்த்திகேயன்

அழகன்

அறுமுகன்

வேலவன்

உமைபாலன்

படையப்பன்

சிவமைந்தன்

என கந்தனுக்கு

எத்தனையோ

பெயர்ப்பதங்கள்...

அத்தனையும்

அற்புதங்கள்!

அகிலங்கள்

மகிழ்ந்தன

கயிலையில்

கந்தனின்

லீலைகள்

தொடர்ந்தன!

- கந்தன் வருவான்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு