அன்னையவள்
அணைக்க...
ஓராறு முகமும்
ஈராறு கரமுமாய்
பிள்ளைகள் ஆறும்
ஒன்றாயின
உருவில் திருவாயின!
கயிலையில் கந்தனின்
லீலைகள் தொடர்ந்தன...
நான்முகனால்
ஒரு கதை - அவன் மகன்
நாரதனால் ஒருகதை
நிகழ்ந்தன கயிலையில்!
தகப்பன் சுவாமி ஆனான்!
நான்முகன்!
அவனும்
கமலத்தில் பிறந்தவன்
ஆனால் கர்வத்தில்
சிறந்தவன். அதனால்,
அன்று அப்பனால்
தலை போனது;
இன்று சுப்பனால்
தலை கவிழ்ந்தது.
பிரணவப்
பொருளறியா
பிரம்மனைச்
சிரத்தில்
குட்டினான்
கந்தன்; சிறையில்
பூட்டினான்.
தத்துவப்
பொருளுரைத்து
தந்தைக்கே
குருவானான்...
சுவாமிமலையில்
தகப்பன்சுவாமி
ஆனான்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS கலக முனி வந்தான்...
நாரதன்
நான்முகன் மைந்தன்
உலகங்கள் சுற்றும்
முனிவன்
கலகங்கள் மூட்டுவதில்
தலைவன்!
இக் கலகமுனி
ஒருநாள்
கனியுடன்
வந்தான்.
ஞானப் பழமென்று
சொன்னான்.
பிளந்தாலோ
பகிர்ந்தாலோ
பழத்துக்கில்லை
பலன் என்றான்!
வினை விளைந்தது...
பழநிப் பெரும்பதியானது
அதன் பதியைத்
தொழுவதே உலகின்
கதியானது!
விதியோ வேறு
சதி செய்தது...
இந்திராணியின் சிவபூஜை
இந்திராணி!
இந்திரன் மனையாள்
தந்திரம் அறியாள்.
மந்திர முதல்வனாம்
கந்தனின் தந்தையைச்
சிந்தையில் ஏற்றி
வந்தனம் செய்வாள்.
ஒருநாள்...
சிவனின் திருநாள்!
முக்கனிச் சாறும்
பூச்சரம் பலவும்
அட்சரம் ஐந்தும்
பணிவிடை பதினாறுமாய்
அவள் பூசித்திருந்த
வேளையில்...
செய்வினைப்
பதுமையாய் வந்தாள்
தீவினைப் பதுமனின்
தங்கை!
அரக்கி
பற்றியது கையை
அமரர் தேவிக்கு
வற்றியது கண்ணீர்.
அழுதாள்
அரற்றினாள்
அபயம்
எழுப்பினாள்...
இமயம்
அசைந்தது!
சாத்தன் வந்தார்...
இடி முழங்க
மலை அதிர
திசை நடுங்க மண் அதிர
சாத்தன் வந்தார்
காத்து நின்றார்!
சாத்தனிடம்
உதை பட்டதால்
குறைப்பட்டது
அரக்கியின்
அவயம்
மட்டுமா...
அவுணர்தம்
பெருமையும்
அல்லவா?
சேதி சூரனின்
செவிக்கெட்டியது;
ஈரேழ் உலகுக்கும்
துன்பத்
தீ மூட்டியது!
அமர்கள்
கலங்கினர்.
அவுணரை வென்றாட
வேண்டுமென
கொன்றைவார்
சடையனை
மன்றாடி நின்றனர்.
அமரர்தம்
கொடுவேளை நீங்க
கந்தவேளை
அழைத்தார் ஈசன்!
அவுணரின்
போறாத காலம்
ஓராறு முகத்திலும்
தீராத சினத்துடன்
வந்தான் கந்தன்!
`சூரனை
அடக்கி வருக’
உலகின்
கொடுவிதி தீர
ஒருவரிக் கட்டளை
தந்தது சிவம்!
`செல்கிறேன்
வெல்கிறேன்
ஆசிபுரிக'வென
பெற்றோரின்
தாள் பற்றிய
கந்தனுக்கு,
வேல் பற்றும்
வரம் தந்தாள் அன்னை...
சக்தி வேல் தந்தாள்!
கூர்ந்த நுட்பமும்
அகன்ற ஞானமும்
ஆழ்ந்து நீன்ற
சிந்தையுமாய் - உருவில்
கந்தனையே காட்டியது
ஞானவேல்!
இந்திர மயில்
கந்தனைச் சுமக்க
வந்த வினையும் வருகின்ற
வல்வினையும்
கந்தனென்றால் விலகும்;
மந்திரவடிவேல்
விந்தைகள் புரியுமென
நகர்ந்தது கந்தனின் சேனை!
-கந்தன் வருவான்...